பத்துமலை பந்தம் | 19 | காலச்சக்கரம் நரசிம்மா
19. நவத்தைத் தேடி நவவியூகங்கள்!
பால்கனியில் இருந்து தான் கீழே பார்த்தபோது, போதினியும், சுபாகரும் இவர் கண்களுக்கு கந்தகோவும், காதம்பரியுமாகத் தெரிய, அதிர்ச்சியுடன் கீழே வந்து பார்த்தபோது, அவர்கள் போதினியாகவும், சுபாகராகவுமே கண்களுக்கு புலப்பட்டதைக் கண்டு வெலவெலத்துப் போயிருந்தார், நல்லமுத்து. இருப்பினும், கனிஷ்கா செய்த ஆர்ப்பாட்டத்தில், அவரது அச்சங்களும் குழப்பங்களும், பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. ஆனால் இப்போது மயூரி கேட்ட கேள்வி, அவருக்கு மறந்திருந்த அம்சங்களை மீண்டும் தலைதூக்கச்செய்தது.
“தாத்தா..! உண்மையிலேயே நாங்க உங்கள் வாரிசுகள் தானே..! இல்லே, வெளியே நின்று கொண்டிருக்கும்,உண்மையான நல்லமுத்துவின் வாரிசுகளா..? எவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சிட்டு, இன்னைக்கு எதோ உங்க மூக்குக்கண்ணாடி காணும்னு சொல்லறா மாதிரி கூலாச் சொல்றீங்க. ! கடைசியில, நமக்குக் கிடைச்சிருக்கிற ஸ்ரேயசும், செல்வாக்கும், பணமும், ஒரு களவாடிய சிலையால ஏற்பட்டதுதானா..? ஒரு குடும்பத்தையே அழிச்சிட்டோமே..! இப்பவும் இத்தனை செல்வமும், வெளியே நிக்கிற அந்த அப்பாவி அஞ்சையா… சாரி, உண்மையான நல்லமுத்துவுக்குக் கிடைச்சிருக்கணும். ஆனா அவங்களை வேலைக்காரர்களை விடக் கேவலமா நடத்திக்கிட்டு இருக்கோம்.” –என்று ஓரக்கண்ணால் கனிஷ்காவை நோக்கினாள்.
“இது என் அப்பா செல்வேந்திரன் செஞ்ச பிழை..! நான் அதுல ஒரு கருவிதான், மயூரி ” — என்றார், நல்லமுத்து.
“இருக்கலாம்..! ஆனா இப்ப உங்க அப்பா செஞ்ச திருட்டுத்தனத்துக்கு, நம்ம குடும்பமே பொறுப்புதான். இந்த லட்சணத்துல, மூன்றாவது நவபாஷாணச் சிலையை வேற தேடிக் கண்டுபிடிக்கணும்னு சொல்றீங்களே..! இதுவரைக்கும் செஞ்ச பாவம் எல்லாம் போதாதா..?” –மயூரி கேட்க, தேஜஸ் எரிச்சலுடன் அவளைப் பார்த்தான்.
“இப்ப என்ன சொல்ல வர்றே..? நம்ம எல்லா சொத்தையும் வெளியில நிக்கிற அஞ்சையாவுக்கும், சமையலறையில இருக்கிற ராஜகாந்தம் பேருலயும் எழுதி வைக்கச் சொல்றியா..? அப்ப உனக்குப் பதிலா, கிழவி ராஜகாந்தத்தை ஏர் ஹோஸ்ட்ஸா பறக்க வைக்கப் போறியா..?” –நக்கலாக தேஜஸ் கூற, கனிஷ்கா, பெரிய ஜோக் ஒன்றைக் கேட்டது போல விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினாள்.
மயூரி பதில் சொல்லவில்லை. ‘பிங்’ என்று அவளது ஐ போனில் மீண்டும் மெசேஜ் வந்ததற்கான சமிக்ஞை கிடைக்க, செல்போனை மேலே உயர்த்தாமல், மேஜை அடியிலேயே வைத்துக்கொண்டு குறிப்பைப் பார்த்தாள்.
“வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்..! அவர்களது மனதை மாற்றப்பார்”
அதிர்ந்து போனாள் மயூரி…! இவளையே சுற்றி வருவதோடு மட்டுமல்லாமல், இவளைச் சுற்றி நடப்பதையும் குகன்மணி கவனித்துக் கொண்டிருக்கிறான். இவள் உபயோகிக்கும் பொருட்கள் எதிலாவது மைக்ரோ மைக் வைத்திருக்கிறானா..?
சிரித்துக்கொண்டிருந்த கனிஷ்காவைக் கையசைத்து அடக்கிய நல்லமுத்து, மயூரியை ஆழமாக உறுத்துப்பார்த்தார்..!
“மயூரி..! உனது கேள்விங்க எனக்குப் புதுசு இல்லே. சஷ்டி சாமி சொன்னதைத்தான் நீ சொல்றே..! அவருக்குக் கூட என்மேல சந்தேகம், நான் மூணாவது சிலையைத் தேடி எடுத்துடுவேனோன்னு..! அப்படிச் செய்யக் கூடாதுன்னு எனக்கு எச்சரிக்கை செஞ்சிருக்காரு..! ஆனா போகரோட சீடர் குடும்பத்தில் ஓராண் வழியா பூஜித்து வரப்பட்ட நவபாஷாணச் சிலை என் அப்பா கிட்ட வந்ததுன்னா, அதுவும் முருகன் திருவுள்ளம்தானே… கண்ணு தெரியாத கந்தகோவால போகர் பாசறைக்குப் போய் எப்படி பூஜை செய்ய முடியும்..? மேலும், எங்கப்பாதான் கந்தகோவையும் காதம்பரியையும் மலையிலே இருந்து தள்ளிவிட்டார்ங்கிறதுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் சொன்னதை நான் உங்களுக்குச் சொன்னேன். அதனால, களவாடினோம், திருடினோம்னு எல்லாம் சொல்லாம, நடக்க வேண்டியதைத்தான் நாம பார்க்கணும்.” –நல்லமுத்து சொன்னார்.
“இல்லை தாத்தா..! இந்த விஷயத்துல சஷ்டி சாமி சொல்றதைத்தான் நாம கேட்கணும். அவரு ஒண்ணும் திடீர் சாமியார் இல்லே. மெத்தப் படிச்சு, ரஷ்யாவுல ரசாயன சயன்டிஸ்ட்டா இருந்து, அப்புறம் ஒருநாள் சாமியாரா வந்தவர். நவபாஷாணச் சிலையைப் பத்தி நல்லாத் தெரிஞ்சவர். தயவுசெஞ்சு, இந்த மூணாவது சிலையைத் தேடறேன் அப்படின்னு வம்பை விலைக்கு வாங்காதீங்க.! நாம செய்யற பாவங்களுக்குச் சேர்த்து வச்சு வாங்கப் போறோம்..! பயங்கரமான தண்டனைகள் கிடைக்கும்..!” –மயூரி சொல்ல, தனது பாப் தலையை ஒரு கையால் அளைந்து கொண்டே, அவளை நக்கலாக நோக்கினாள், குணசுந்தரி.
“எமதர்மன் எண்ணெய்க் கொப்பறையில வாட்டி எடுப்பான்னு சொல்லப் போறியா..? I am tired of this cock and bull stories. நம்ம பிரச்சனைகளுக்கு மூன்றாவது சிலைதான் தீர்வுன்னா நாம அதைத் தேடி எடுக்கிறதுல தப்பு இல்லே..!” –குணசுந்தரி சொல்ல, தனது நாத்திக்கு ஆதரவாக மயூரியின் தாயார் சத்தியதேவியே பேசினாள்.
“எஸ் மயூரி..! எல்லாத்தையும் நெகட்டிவாப் பார்க்காதே..! தாத்தா சொல்றபடி செய்யறதுதான் உத்தமம்..!” –சத்தியவதி சொல்ல, திகைத்துப்போனாள் மயூரி.
‘யூ டு புரூட்டஸ்’ என்பது போல அம்மாவைப் பார்த்தாள்.
சஷ்டி சாமியின் மீது ஏற்கனவே கடும் கோபத்தில் இருந்த கனிஷ்கா, அவரைப் பற்றி துஷ்பிரச்சாரம் செய்ய அந்தத் தருணத்தைத் தேர்ந்தெடுத்தாள்..!
“தாத்தா..! அந்த சஷ்டி சாமியை நம்பாதீங்க..! You know what.. என்னோட லவ்வர் மிதுன் ரெட்டிக்கும், அவன் அத்தை பெண்ணுக்கும், கல்யாணம் செஞ்சு வைக்கப் பார்த்தான். நான் விடுவேனா..? சரியான சமயத்துல உள்ளே புகுந்து சுளுக்கு எடுத்துட்டேன். என்னை வேற மாப்பிள்ளை பார்த்துக்க-ன்னு சொன்னான்..! உங்களை உறவாடியே கெடுக்கிறான், அந்தப் போலிச்சாமி..! அவனை வைக்கிற இடத்துல வைக்கணும்..!” –என்றவுடன் நல்லமுத்து குழப்பத்துடன் ஒருமுறை அவளைப் பார்த்தார்.
“எது எப்படியோ… நான் தீர்மானம் செஞ்சுட்டேன். நம்ம கையில இருக்குற நவபாஷாணச் சிலை, அதனோட வீர்யத்தை இழந்துடுச்சு. அதனாலேதான் நமக்குச் சோதனைகள் மேல சோதனைகள் வருது. மூணாவது சிலையைக் கண்டுபிடிச்சு, நம்ம போகர் பாசறையில் வச்சு பூஜை ஆரம்பிச்சா, பழைய மாதிரி நாம அமோகமா இருக்கலாம். அதனால, சஷ்டி சாமி என்ன… யாரு வேண்டாம்னு சொன்னாலும், நான் அந்த மூணாவது சிலையைத் தேடிக் கண்டுபிடிச்சுதான் தீருவேன். என்கூட யாராரு இருக்கீங்க..?” –மெதுவாக வார்த்தைகளைத் தேடி எடுத்துப் பேசினார், நல்லமுத்து.
கனிஷ்கா, தேஜஸின் கைகள் முதலில் உயர்ந்தன. பிறகு அவர்களது பெற்றோர்கள் சரவணப்பெருமாளும், குணசுந்தரியும் உயர்த்த, மயூரியின் அப்பா பாண்டிமுத்துவும் கையை உயர்த்தினார். அதன்பிறகு தயக்கத்துடனே மகளைப் பார்த்தபடி கையை உயர்த்தினாள் சத்தியவதி அனைவரும் அங்கே அமர்ந்திருந்த நல்லமுத்துவின் தங்கை தேவசேனாவின் மகன் கார்த்திக்கை நோக்கினர்.
கார்த்திக் புன்னகைத்தபடி தனது இரு கைகளையும் தூக்கினான்.
“இதைப் பத்தி ஏற்கனவே நானும் அம்மா தேவசேனாவும் நிறையப் பேசியிருக்கோம். அம்மாகூடச் சொல்லியிருக்காங்க. அண்ணா நல்லமுத்துக்கு ஒரு சிலை இருக்கு. நம்ம ரெண்டு பேருக்கும் தனியா ஒரு சிலை இருக்கட்டுமே. மூணாவது சிலையைத் தேடிக் கண்டுபிடிடான்னு பலமுறை சொல்லியிருக்காங்க. அம்மா ஆஸ்பிடல்ல இருக்கிறதால, அவங்களுக்கும் சேர்த்து நான் கையைத் தூக்குறேன். இடது கை எனக்கு, வலது கை என் அம்மா தேவசேனைக்கு..!” –என்று இளித்தான், கார்த்திக்.
“தேவசேனை இல்லே..! உண்மையான ராஜகாந்தம்..!” –மயூரி எரிச்சலுடன் கூறினாள்.
நல்லமுத்து உயர்த்தப்பட்ட கைகளை எண்ணத் தொடங்கினார். தேஜஸ், கனிஷ்கா, சரவணப்பெருமாள், குணசுந்தரி, பாண்டிமுத்து, சத்தியவதி, கார்த்திக், மற்றும் தேவசேனை என்றவர், தனது கையை உயர்த்தி, “மொத்தம் ஒன்பது பேர்” என்றார்.
“மூன்றாவது நவபாஷாணத்தை நாடி நவ மனிதர்கள் செல்லப் போகிறோம்..!” — என்றவர், ஓரக்கண்ணால் மயூரியைப் பார்த்தார்.
கடைசிவரையிலும் மயூரி தனது கையை உயர்த்தவேயில்லை.
நல்லமுத்து அனைவரையும் ஒருமுறை பார்த்தார். “நாம் ஒன்பது பேரும் மூன்றாவது சிலையைத் தேடிக் கண்டுபிடிப்போம். ” என்றதும் தேஜஸ் அவரைக் கேள்வியுடன் பார்த்தான். “நாம ஏன் ஏதாவது ப்ரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸிய எம்ப்ளாய் பண்ணக்கூடாது தாத்தா..?”
நல்லமுத்து அவனை எச்சரிக்கையுடன் பார்த்தார். “இந்த விஷயம் நம்ம ஒன்பது பேருக்கு மட்டும்தான் தெரிஞ்சிருக்கணும். மயூரி, நீ எங்களுக்கு உதவல்லேன்னாலும் பரவாயில்ல. இந்த விஷயத்த நீ வெளியில சொல்லக் கூடாது. நம்ம குடும்பத்தின் நன்மை கருதித்தான் நாங்கள் இதைச் செய்கிறோம். அதனால, நீ இந்த விஷயத்தை வெளியில விடக் கூடாது.” என்றார்.
மயூரி, அவரை ஆழமாகப் பார்த்தாள். “தாத்தா, இந்த விஷயத்துல நான் உங்களுக்கு உதவ முடியாது. ஆனால் அதே சமயம் நானும் நம்ம குடும்பத்தோட கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படுவேன். உங்களை யாரையும் காண்பித்துக் கொடுக்க மாட்டேன். ஆனா, எதையும் யோசிச்சுச் செய்ங்க. இதனால பெரிய பிரச்சனைகள் வரலாம். அதையெல்லாம் எதிர்கொள்ளத் தயாராக இருங்க…” என்றாள்.
3 Comments
சூப்பர்!வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் எபிஸோட்
Good going
Excellent… Suspense overloaded