படைத்திறல் பல்லவர் கோன் | 13 | பத்மா சந்திரசேகர்
13. தொடங்கியது தாக்குதல்
எப்போதும் போல தான் நாள் தொடங்கியது. எப்போதும் போல தான் சுக்கிரன் விடை பெற்றான். எப்போதும் போல் தான் ஆதவன் விழித்தான். ஆனால், அன்று சுக்கிரன் காண அஞ்சி ஒளிந்துக் கொள்ளக் காரணமான போரை, ஆதவன் கண்டே ஆகக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டான்.
ஆதவன் வெளிப்பட்ட போதே, தெள்ளாற்றில் இருபுறமும் வரிசை கட்டி அணிவகுத்து நின்றன படைகள். ஒரு புறம் பல்லவப்படை நிற்க, எதிர்த் திசையில் பாண்டியப்படை தயாராக நின்றிருந்தது.
கதிரவனின் இளம் கதிர்கள் வீரர்கள் மேல் பட்டதும் அனைவருக்குள்ளும் ஒருவித வெறி பரவியது. எதிரிலிருக்கும் படையை துவம்சம் செய்துவிட வேண்டுமென ஒவ்வொருவருக்குள்ளும் வெறி பெருகியது.
பல்லவ வீரர்கள் இழந்த தங்கள் பிரதேசங்களை மீட்க எண்ணிப் போருக்கு வந்திருந்தனர். பாண்டியர்களோ தாங்கள் கைப்பற்றிய பல்லவப் பிரதேசங்களை அவர்களுக்கு விட்டுக்கொடுத்து விடக்கூடாதென்ற எண்ணத்தில் மதுரையிலிருந்து தெள்ளாறு வரை வந்திருந்தனர். இருவருக்கும் அவரவர் நியாயங்கள் சரியாக இருந்தன.
இரு படைகளும் எதிரெதிராக இருந்த போதும் சில விஷயங்களில் பாண்டியப் படைக்கும், பல்லவப் படைக்கும் ஒற்றுமை இருந்தது. இரு படைகளிலும் அந்த காலை நேரத்தில், ஆயுதங்களை ஏந்திய காலாட்படை வீரர்கள் தங்கள் ஆயுதங்களுடன் அணிவகுத்து நின்றிருந்தனர். அணிவகுத்திருந்த அனைத்து வீரர்களுக்கும் காலை உணவாகக் கஞ்சி, மோர், கூழ் ஆகியவைக் கொடுக்கப்பட்டன.
புரவிப்படை வீரர்கள் உணவுண்டு, தங்கள் ஆயுதங்களுடன் தத்தமது புரவியின் அருகில் நிற்க, அனைத்து புரவிகளுக்கும் உணவும், நீரும் அளிக்கப்பட்டது.
புரவிகளுக்கு மட்டுமா நீர் தேவை? உருவத்தில் பெரியதாகவும், உள்ளத்தில் குழந்தையாகவும் இருக்கும் யானைகளுக்கும் உணவு தேவையல்லவா? யானையின் பானை வயிறு தென்னம் ஓலைகளாலும், இலைகளாலும் நிரப்பப்பட்டதோடன்றி, அரிசி, வெல்லம், கரும்பு ஆகியனவும் கொடுக்கப்பட்டு பசியாற்றப்பட்டன.
ஆதவன் சற்று மேலேறி வந்ததும், பல்லவ மன்னர் நந்திவர்மர் சேனாதிபதி கோட்புலியை நோக்கி சமிக்ஞை காட்டினார். உடனே சேனாதிபதி வீரர்களை நோக்கி கையசைக்க, அவர்கள் உணவருந்துவதையும், யானைகளுக்கும், புரவிகளுக்கும் உணவளிப்பதையும் விட்டு, தத்தம் இடத்திற்கு திரும்பினர். கோட்புலியார் நந்திவர்மரிடம் சென்றார்.
“படை தயாராக உள்ளது மன்னரே”
“பாண்டியர்களிடம் தெரியப்படுத்துங்கள்” ஒரே வார்த்தையில் உத்தரவு வந்தது நந்திவர்மரிடமிருந்து.
அடுத்த கணம், தனது கரத்திலிருந்த முரசை ஒலிக்க செய்தார் கோட்புலியார். தனது படை தயாராக இருப்பதை முரசொலித்து பாண்டியப்படைக்கு தெரியப்படுத்தினர்.
பல்லவப்படையின் முரசொலி கேட்டதும் பாண்டியப்படை தத்தமது வேலைகளை நிறுத்திக் கொண்டு, அணிவகுத்து நிற்கத் தொடங்கியது. பாண்டிய இளவரசர் வரகுணவர்மர் தந்தை ஸ்ரீவல்லபரிடம் சென்றார்.
“பல்லவப்படை தாக்குதலுக்குத் தயாராக உள்ளதென சமிக்ஞை தருகின்றனர்”
“நமது படை தயாராக உள்ளதா?”
“தாங்கள் உத்தரவிட்டால் தாக்குவதற்குத் தயாராக உள்ளது”
“எனில், நாமும் தயாரென தெரிவித்து விடு”
பல்லவ வீரர்களின் சமிக்ஞைக்கு பதில் கூறும் விதமாக பாண்டிய வீரர்களின் முரசு ஓங்கி ஒலித்தது. எதிர்காலத்தில் வரலாற்றில் இடம்பெறப்போகும், வெற்றி பெறப்போகும் அரசனுக்குப் புகழை எட்டித்தரவிருக்கும் தெள்ளாற்றுப்போர் தொடங்கியது.
காலாட்படை வீரர்கள் ஒருவருக்கொருவர் வாள் கொண்டும், வேல் கொண்டும், ஈட்டி கொண்டும் போரிட்டனர். புரவி மீது அமர்ந்திருந்த வீரர்கள் வாள், வேல், ஈட்டி கொண்டு எதிரிலிருந்த வீரர்களைத் தாக்கினர். இரதத்தின் மீதிருந்த வீரர்கள் வில் கொண்டு போரிட்டு வந்தனர். யானையின் மீது அமைக்கப்பட்டிருந்த அம்பாரியில் அமர்ந்திருந்த வீரர்கள் வில், அம்பு கொண்டு போரிட்டனர். சிலர் யானையின் மீதிருந்தபடி வாள், வேல் போன்ற ஆயுதங்கள் கொண்டு போரிட்டனர்.
பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர், பல்லவ மன்னர் நந்திவர்மரைக் குறிவைத்து தனது புரவியைச் செலுத்தினார். இளவரசர் வரகுணவர்மர் பல்லவ சேனாதிபதி கோட்புலியாரை நோக்கி விரைந்து சென்றார்.
ஆதவன் சற்று மேலேறிப் பார்த்த நேரத்தில், தெள்ளாற்றின் அந்தத் திடலில் இரு தரப்பு வீரர்களும் இறந்தும், காயப்பட்டும் விழுந்து கிடந்தனர். கரத்தை இழந்தும், கால்களை இழந்தும் விழுந்து கிடந்த வீரர்களின் வலி மிகுந்த ஓசை கேட்பவர் இதயத்தை உருக்கியது.
வெய்யோன் உச்சிக்கு வந்த போது, இரு படையினரும் சம பலத்துடன் இருந்தனர். இரு பக்கமும் உயிர்ச்சேதம் சம அளவினதாக இருந்தது. ஆதவன் போரைக் காண அஞ்சி மேகத்திற்குள் ஒளிந்து கொள்ள எண்ணிய நேரத்தில், அந்த தருணம் வந்தே விட்டது.
பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபரின் முன்பு நின்றிந்தார் பல்லவ மன்னர் நந்திவர்மர். இருவரும் ஒருவரை ஒருவர் பலியிட்டு விடும் வேகத்துடன் ஆவேசமாக வாளைச் சுழற்றினர்.
ஆக்ரோஷமாகத் தொடர்ந்த வாட்போர், நெடு நேரம் நீடித்தது. நந்திவர்மரின் வேகமான வாள் வீச்சை எதிர்த்து வந்த ஸ்ரீவல்லபர் ஒரு கட்டத்தில் சற்று தளர்ந்தார். மெல்ல நந்திவர்மரின் வாளை தடுத்துக் கொண்டிருந்தார்.
‘என்ன திமிர் இருந்தால் எனது உயிரானவளைக் குறித்து தவறாகப் பேசியிருப்பாய். அவ்வாறு பேசிய உன்னை இனி பேசவே இயலாதவாறு கொன்று விடுகிறேன் பார்’ நந்திவர்மரின் மனதிற்குள் ஆவேசம் பிறந்தது. அடுத்த கணம் அவரது வாள் முன்னை விட வேகம் கொண்டது.
ஏற்கனவே சற்று தளர்ந்திருந்த ஸ்ரீவல்லபரை நோக்கி வேகமாகத் தனது வாளை வீசினார் நந்திவர்மர். ஸ்ரீவல்லபரின் கரத்திலிருந்த வாள் விண்ணில் பறந்தது. ஸ்ரீவல்லபரின் கவனம் கைவிட்டு சென்ற வாளின் மீதிருந்த ஒரு கணம் போதுமானதாக இருந்தது நந்திவர்மருக்கு.
பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர் கூறியதாக சோழ மன்னர் குமராங்குசர் கூறியது நந்திவர்மர் மனதில் வந்து சென்றது.
‘இராஷ்டிரகூட இளவரசியை நான் அடைந்தாலும் உறவு பிறக்கும்’ என ஸ்ரீவல்லபர் கூறியது மனதில் வந்ததும், நந்திவர்மர் உக்கிரம் அடைந்தார்.
தனது வாளைப் பறிகொடுத்திருந்த பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபரின் கழுத்தை நோக்கிப் பாய்ந்தது பல்லவ மன்னர் நந்திவர்மரின் வாள்.
5 Comments
யப்பப்பப்பப்பாஆஆஆஆ… செம்ம செம செம… இந்தா புடிங்க மூனு ஃபயரை 🔥 🔥 🔥… லேடி சாண்டில்யன் போர் வர்ணனையிலும் படு விறுவிறுப்பை கொடுத்துட்டீங்க.. அட்டகாசம்….
அன்புடன் நன்றி… ☺️☺️
Very nice narration
Very nice narration
Thank you.. 🙂🙂