பத்துமலை பந்தம் | 11 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 11 | காலச்சக்கரம் நரசிம்மா

11. குகன் மணியின் எச்சரிக்கை

பீஜிங்கில் இருந்து புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கோலாலம்பூரை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.

விமானத்தை குகன்மணி செலுத்திக் கொண்டிருக்கிறான் என்கிற நினைப்பே மயூரிக்கு முள்ளின் மீது நிற்பது போன்று அவஸ்தைப்பட வைத்தது. நிலப்பகுதியில் பறக்கும் போது, திடீர் என்று வெறிபிடித்து ஏதாவது ஓங்கி உயர்ந்த கட்டிடத்தின் மீது மோதிவிடப் போகிறானே என்று பயந்தாள். கடல் நீரின் மீது பறக்கும்போது, விமானத்தை நீரில் மூழ்கடிக்க செய்து விடுவானோ என்று கலவரப்பட்டாள். விமானத்தை அவன் செலுத்தும் வரையில், ஒவ்வொரு வினாடியும், ஆபத்துதான். இதனை ஃபேஸ் மேனேஜர் ஏன் புரிந்து கொள்ளவில்லை..?

வாயில், பல்லில் ஈரம் இல்லாமல்தான் அந்தப் பயணம் முழுவதும் இருந்தாள். ஒருவழியாக கோலாலம்பூரை அடைந்து விமானம் தரையைத் தொட்டதும்தான் மயூரியால் சீராகச் சுவாசிக்க முடிந்தது.

பயணிகள் அனைவரும் இறங்கிப் போகும் வரை விமானத்தின் நுழைவாயிலில் நின்று அவர்களைப் பணிவுடன் அனுப்பி வைத்தாள் மயூரி. அவளுடன் நட்பைத் தொடர்வதற்காக சில இளவட்டங்கள் அவளது அலைபேசி எண்ணைக் கேட்க, அவர்களைப் புன்முறுவலுடன் சமாளித்து வழியனுப்பிக் கொண்டிருந்தாள்.

வழக்கமாக அனைவரையும் அனுப்பி விட்டு, காக்பிட் உள்ளே சென்று விமானிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால் உள்ளே சென்று குகன்மணியைப் பார்க்க அவள் விரும்பவில்லை. அதனால் அவனது கோ பைலட் ஆண்ட்ரபோவ்-வையும் சந்திக்காமல் மற்ற பணிப்பெண்களை நோக்கிச் செல்ல எத்தனித்தபோது, ஒரு கம்பீரக் குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது.

“தாங்க்யூ மிஸ் மயூரி..! நான் விமானம் ஓட்டியதால், நீங்க இறங்கிப் போயிடுவீங்கன்னு நினைச்சேன். பரவாயில்லை..! துணிவோடுதான் பயணிச்சிருக்கீங்க. அதற்கு நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும். பை தி வே, உங்க மொபைல் நம்பர் தரீங்களா..?” –குகன்மணி கேட்டான்.

“சாரி..! பயணிகள் நிறைய பேர் என்னோட மொபைல் நம்பரைக் கேட்டாங்க. நான் யாருக்கும் என்னோட நம்பரைத் தர்றதில்லைன்னு அவங்ககிட்டே சொல்லிட்டேன்.” –மயூரி சொல்ல, அவன் முகத்தில் குறுநகை ஒன்று தோன்றி மறைந்தது. சிரிக்கும்போது இன்னும் அதிகம் கம்பீரமாகவும், கவர்ச்சியாகவும் இருந்தான் குகன்மணி. ஆனால் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவள் அவள் என்பதை அவனுக்குப் புரிய வைக்க வேண்டும்.

“வரேன்..!” என்று கூறியபடி முதல் படியில் இறங்கிய அவன், திடீரென்று நின்று, அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“மயூரி..! நீங்க நினைத்தால் பெரிய விபரீதங்கள், அனர்த்தங்கள் எல்லாம் நடக்காம காப்பாற்றலாம். ஆனால் நீங்க அலட்சியமாக நமக்கெதுக்கு வம்புன்னு ஒதுங்கிப் போனால், உங்களுக்குத்தான் பெரிய நஷ்டம் ஏற்படும். நீங்க விரும்பும் ஒன்றை அடியோடு இழப்பீர்கள்..!” –என்ற குகன்மணி தொடர்ந்து படிகளில் இறங்கினான்.

மயூரிக்குக் கடுங்கோபம் ஏற்பட்டது.

“கேப்டன் குகன்மணி..! வாட் டு யூ மீன்..? கொஞ்சம் நின்னு பேசுங்க. அறிமுகம் ஆன நாள் முதலாப் பார்க்கிறேன். விசித்திரமாப் பேசுறீங்க..? பக்குவம் இல்லாமல் நடந்துக்கிறீங்க..? என்னோட விஷயத்தில் நிறைய உரிமை எடுத்துக்கறீங்க..? நீங்க பேசறது எதுவுமே புரியாதபடி பொடி வச்சே பேசுறீங்க..! என்னதான் சொல்ல விரும்புறீங்க..?” –படபடவென்று பொரிந்து தள்ளினாள் மயூரி.

அதற்குள்ளாக விமான ஏணியின் ஐந்தாறு படிகளைக் கடந்து விட்டிருந்த குகன்மணி, அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் ஏறி வந்தான்.

“நான் சொல்வதெல்லாம் உங்களுக்குத் தானாகப் புரியும். நீங்க விரும்பியதை இழக்கப் போறீங்க..? அதை நீங்க இழக்காம இருக்கணும்னுதான் நான் உங்களைச் சுத்தி வரேன். உங்களுக்கு உதவ நினைக்கிறேன். அவ்வளவுதான்..! நீங்கதான் என்னைத் தப்பாவே புரிஞ்சுகிட்டு வரீங்க..!” –குகன்மணியின் குரலில் கரிசனம் இழைந்தோடியது.

“நான் ஒரு ஸ்ட்ராங் வுமன்..! எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை..!” –மயூரி கூறினாள்.

“ஸ்ட்ராங் வுமன்-னாக சரித்திரத்துல வளைய வந்த பெண்கள்தான் மிக எளிதாக அப்புறப்படுத்தப்பட்டனர்..! யோசிச்சுப் பாருங்க..! நான் உங்களைப் பயமுறுத்தலை. ‘வருமுன் காத்துக் கொள்ளுங்க’ன்னு எச்சரிக்கைதான் செய்யறேன். நீங்க மிக ஆழமா நேசிக்கிற ஒரு பொருளுக்குப் பெரிய ஆபத்து வந்துகிட்டு இருக்கு. என்னடா ஒரு விமானி இப்படிப் பேசறானேன்னு குழம்பாதீங்க. விமானி தொழில் எனக்கு ஒரு பொழுதுபோக்குதான். நான் பத்துமலை முருகன்கிட்டே பேசறவன்.” –என்றபடி அவளை சற்றே ஆழமாகப் பார்த்துவிட்டு, படிகளில் இறங்கி போனான், குகன்மணி.

“இவன் ஒரு நட் கேஸ்..!” –தீர்மானத்திற்கு வந்தாள் மயூரி. இவள் சென்னைக் கல்லூரியில் படித்தபோது, கனகா என்கிற ஒரு மாணவி இவளது வகுப்பில் படித்தாள். அவளுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாக இருந்தது. கழுத்தில் ஸ்படிகம், கைகளில் வண்ண வண்ண நூல்கள், நெற்றியில் ட்ராபிக் சிக்னல் மாதிரி குங்குமம், கருஞ்சாந்து, திருநீறு, சந்தனம், கோபி என்று சிறுசிறு வட்டங்களாக இட்டுக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் நடப்பாள். குனிந்தபடிதான் நடப்பாள். ஆனால் வழியில் எங்காவது சாமி படமோ அல்லது காலண்டரோ இருந்தால், அவ்வளவுதான்..! தலையை விசுக்கென்று உயர்த்தி, பரவசத்துடன் அந்தப் படத்தைப் பார்த்து, நான்கைந்து முறை காலண்டரைத் தொட்டுக் கண்களில் ஒற்றி, தலையில் வைத்துக் கொள்வாள். ‘காரைக்காலம்மை கனகா’ என்றுதான் கல்லூரியில் அவளுக்குப் பெயர். மற்றவர்கள் கேலி செய்வதை பற்றி கனகா பொருட்படுத்த மாட்டாள். அவள் உண்டு அவளது பக்தி உண்டு என்று இருப்பாள். தன்னுடன் இறைவன் பேசுவதாக சில நேரங்களில் விபரீதமாகக் கற்பனை செய்து கொள்வாள். பக்தி முற்றி விட்டதால் இந்த மாதிரிக் கற்பனைகள் என்று மயூரியே அவளிடம் கூறியிருக்கிறாள். அந்த கனகாவைப் போன்று, குகன்மணியும் பத்துமலை முருகனின் மீதுள்ள பக்தியால், தான் விசேட சக்திகளைப் பெற்றுக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறானோ என்னவோ..! இந்த மாதிரி மனிதர்கள் எப்படி விமானம் ஓட்ட வருகிறார்கள்..?

விமானப் பணிப்பெண்கள் அனைவரும் கலகலவென்று சிரித்தபடி ஒன்றாகப் படியிறங்கி வர, மயூரி அவர்களது சிரிப்பில் கலந்து கொள்ளாமல், குகன்மணி செய்த எச்சரிக்கையைப் பற்றி நினைத்தபடி அவர்களைப் பின்தொடர, மாட்டில்டா சீமர் என்கிற விமானப் பணிப்பெண் திரும்பி, மயூரியின் முகத்திற்கு முன்பாகத் தனது கையை ஆட்டினாள்.

“மயூரி..! உன்னோட போன் ரிங் ஆகுது..!” –என்றவுடன் தனது நிலையை உணர்ந்த மயூரி, அலைபேசியை எடுத்து, காலர் ஐடியைப் பார்த்தாள்.

என்ன ஆச்சரியம்…! என்றும் இல்லாத திருநாளாக இவளது அப்பா பாண்டிமுத்து தான் அழைத்திருந்தார்.

“என்னப்பா விஷயம்..!” –மயூரி கேட்க, பாண்டிமுத்துவின் குரல் நடுக்கத்துடன் ஒலித்தது.

“மயூரி..! அதிர்ச்சி அடையாதே..! ஒரு விஷயம். அம்மாவோட ஸ்கூல் பொண்ணுங்க மூணு பேரு மூணாறுல ஒரு விபத்துல இறந்து போய்ட்டாங்க. கால்பந்து டோர்னமெண்ட்டுக்கு சியர் லீடர்ஸ் தேவைன்னு கேட்டதால், அவங்க மூணு பேரையும் சத்தியவதி அனுப்பியிருக்கு. புள்ளைங்களோட பெற்றோர் உன் அம்மாவுக்கு எதிரா போலீஸ்ல புகார் கொடுத்திருக்காங்க. உன் அம்மா அரெஸ்ட் ஆனா ஆச்சரியம் இல்லே. எனக்கும் கட்சியில பிரச்னை தலை தூக்கிட்டு இருக்கு. என்னை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து தூக்கப் போறாங்கன்னு பேச்சு அடிபடுத்து. என்னோட அத்தை தேவசேனை மாடியில இருந்து விழுந்து ஆஸ்பத்திரியில கிடக்கிறாள். என் தங்கை குணசுந்தரி பத்திரிகைக்கும் ஏதோ பிரச்சனை. அவ பொண்ணு கனிஷ்காவுக்கு பெரிய பட்ஜெட் படம் நழுவி போயிடுச்சு. அவள் தம்பி தேஜஸுக்கு ஐபிஎல் விளையாடறப்ப லிகமெண்ட் டேர்-ராம்..! எல்லாருக்கும் பிரச்சனை வந்துக்கிட்டு இருக்கு. நீயாவது பத்திரமா சென்னைக்கு வந்து சேரு..! அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்.” –என்று பிரச்னைகளின் பட்டியலை ஒப்புவித்து விட்டு, அலைபேசியை துண்டித்தார், பாண்டிமுத்து.

“உன் அம்மாவைக் கைது செஞ்சா ஆச்சரியம் இல்லே..!” —பாண்டிமுத்து கூறியது மயூரியை உறைந்து போகச் செய்தது. ,

குகன்மணியின் குரல் அவளது செவியில் அலைமோதியது. ‘நீங்க நேசிக்கும் ஒன்றை இழக்கப் போறீங்க’ என்றானே.! அம்மாவைத்தான் இவள் அதிகம் நேசித்து வந்தாள்..! அவளையா இழக்கப் போகிறோம்..? மயூரிக்குத் தலை சுற்றியது. குகன்மணியின் மீது அவள் கொண்டிருந்த கோபமெல்லாம், இப்போது பயமாக மாறிக்கொண்டிருந்தது.


• • •

“பேக் அப்..!” –டைரக்டர் விஸ்வாஸ் குரல் கொடுக்க, திடுக்கிட்டு, தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து அவளது பார்வையை மறைத்தபடி சுழன்று கொண்டிருந்த அல்மோனார்ட் மின்விசிறியக் கடந்து எட்டிப்பார்த்தாள் கனிஷ்கா.

“டைரக்டர் சார்..! என்னாச்சு..! ராத்திரி எட்டு மணி வரைக்கும் கால்ஷீட் வேணும்னு ஒத்தைக் கால்ல நின்னு டேட்ஸ் வாங்கினீங்க. நான் ஆக்டர் ஜிஷ்ணு பிரசாத்துக்கு பார்ட்டி எல்லாம் கொடுத்து கெஞ்சிக் கூத்தாடி, அவருக்கு கொடுத்த டேட்ஸ்சை மாத்திக்கிட்டு, உங்களுக்கு கால்ஷீட் கொடுத்தேன். நீங்க என்னடான்னா இன்னும் லஞ்ச்சே வரல… அதுக்குள்ள பேக் அப்ன்னு சொல்றீங்க..?” –கனிஷ்கா நிஷ்டூரத்துடன் குரல் கொடுத்தாள்.

“நான் என்னம்மா செய்வது..! இன்னைக்கு எப்படியும், உங்களுக்கும், மிதுன் ரெட்டிக்கும் இருக்கிற காட்சியெல்லாம் முடிச்சுடலாம்னுதான் நினைச்சேன். மிதுன் வர முடியாதுன்னு இப்பதான், போன் செஞ்சார்..! அவர் இல்லாம உங்களை மட்டும் வச்சுக்கிட்டு ஒரு சீனும் எடுக்க முடியாது..! வேணுமின்னா சில வசனங்களுக்கு க்ளோஸ் அப் ஷாட் எடுக்கலாம்.” –என்றவுடன் கனிஷ்கா திகைப்புடன் தனது இருக்கையில் இருந்து எழுந்தாள்.

“என்ன சொல்றீங்க..? மிதுன் வரல்லியா..? நேத்து ராத்திரி கன்னிமாராவுல ஒரு பிராடக்ட் லான்ச்-சுக்குப் போனபோது கூட, ‘நாளைக்கு செட்டுல  சந்திப்போம்’ன்னு சொன்னானே..! இப்ப என்னாச்சு..?” என்றபடி தனது உதவியாளர் வசந்தியைப் பார்க்க, அவள் அந்த பார்வையின் பொருளைப் புரிந்துகொண்டு, கனிஷ்காவின் ஐபோனை அவளிடம் நீட்டினாள்.

மிதுனின் எண்ணுக்கு அழைப்பை அனுப்ப, “நீங்கள் அழைக்கும் அலைபேசி எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருக்கிறது.” என்பதைக் கேட்டதும், கனிஷ்காவின் மூடும் சுவிட்ச் ஆஃப் ஆனது.

“டாமிட்..! ஷூட்டிங்குக்கு வராம, மொபைலை சுவிட்ச் ஆஃப் செஞ்சுட்டு எங்கே தொலைஞ்சான், மிதுன் ரெட்டி..?” –கனிஷ்கா எரிச்சலுடன், தன்னிடம் மிதுன் கொடுத்து வைத்திருந்த மற்றொரு பிரைவேட் நம்பர் எண்ணை அழுத்த, அந்த எண்ணும் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. கோபத்துடன் வசந்தியிடம் போனை நீட்டியவள், உதட்டைக் கடித்தபடி நிற்க, தொலைவில் டைரக்டர் விஸ்வாஸின் அலைபேசி ஒலிப்பதைக் கேட்டு, அந்தப்பக்கமாக நோக்க, விஸ்வாஸ் காலர் ஐடியைப் பார்த்துவிட்டு, கனிஷ்கா நின்ற பக்கமாக, சற்றே பயத்துடன் நோக்குவதை, அவள் கவனித்துவிட்டாள். இவளது பார்வையைத் தவிர்த்தபடி விஸ்வாஸ் செட்டை விட்டு நடக்க, ஜாடையாக வசந்தியைப் பார்த்தாள் கனிஷ்கா.

“வசந்தி..! அந்த டைரக்டர் நாயிக்குத் தெரியாமல், அவனோட பேசறது என் ஆளா னு பார்த்துட்டு வா..! பேசறது மட்டும் அவனா இருக்கட்டும்… அவனைப் பொலி போட்டுடறேன்..!” –கனிஷ்காவின் கன்னத்தில் பூசப்பட்டிருந்த ரூஜை மீறிக் கன்னங்கள் இன்னும் சிவந்தன. வசந்தி, தலையசைத்துவிட்டு, செட்டை விட்டு வெளியேற, டைரக்டர் விஸ்வாஸ், கனிஷ்காவின் கருமை நிற BMW காரின் அருகே நின்று பேச, அவன் பார்வையில் படாமல், காரை நெருங்கிய வசந்தி, காரின் மற்றொரு பக்கமாகக் கதவைத் திறந்து உள்ளே ஏறி, பின்பாக வைத்திருந்த டிஸ்யூ பேப்பர்களை எடுப்பவள் போன்று, சற்றே ஜன்னல் கதவை இறக்கி, வெளியே விஸ்வாஸ் பேசுவதைக் கவனிக்க தொடங்கினாள் .

“கவலைப்படாதீங்க மிதுன்..! செட்டுல யாருக்கும் விஷயம் தெரியாது. குறிப்பாக கனிஷ்காவுக்கு நிச்சயம் இன்னும் விஷயம் தெரியாது. நான் பேக் அப் சொல்லிட்டேன். கனிஷ்கா கிளம்பிப் போனதும், நான் கிளம்பி வரேன். எத்தனை மணிக்கு நிச்சய தாம்பூலம்..? உங்க செங்கல்பட்டு பார்ம் ஹவுஸ்தானே..! வந்துடறேன்..!” –என்று சொல்ல, முக்கியமான தகவலைப் பெற்றுவிட்ட உற்சாகத்தில், வசந்தி காரிலிருந்து இறங்கி கனிஷ்காவை நாடிச் சென்று, அவளது காதில் விஷயத்தைப் பாய்ச்சினாள்.

மிதுன்தான் விஸ்வாஸ்சை அழைத்திருக்கிறான்..! யாருக்கு நிச்சயதாம்பூலம்..? மிதுனுக்கா..? உக்கிரம், கனிஷ்காவின் தலைக்கேறியது. கண்கள் சிவக்க வசந்தியைப் பார்த்தாள்.

“நீ போய் டிரைவர் காண்டீபனை அழைச்சுக்கிட்டு வா..!” –வசந்தி பறந்தோடிச் சென்று காண்டீபனை அழைத்து வந்தாள் .

“எனக்கு ஒரு வாடகைக் கார் வேணும். வாடகைக் கார் வந்த உடனே, கேட்டுக்கு வெளியே நிக்க வை. கார் தயாரானதும் எனக்கு சைகை காட்டு. நான் வந்து என்னோட BMW காரில் ஏறி வீட்டுக்குப் போற மாதிரி விஸ்வாஸ் கண்ணெதிரே கிளம்பி, கேட்டுக்கு வெளியே வாடகைக் காருக்கு மாறிக்கிறேன். வாடகை கார்ல நான் செங்கல்பட்டு வரைக்கும் போகணும்.” –என்றதும்,காண்டீபன் தலையசைத்தான்.

வாடகைக் கார் வந்ததும், காண்டீபன் விஸ்வாசுக்குத் தெரியாமல் சைகை காட்ட, கனிஷ்கா புறப்பட்டாள் .

“டைரக்டர் சார்..! நான் வரேன்..! இன்னைக்கு கால்ஷீட் வேஸ்ட். சரி..! அட்லீஸ்ட், நான் வீட்டுக்குப் போய் நிம்மதியாத் தூங்கறேன்.” என்றபடி தனது காரில் ஏறிக் கொள்ள, வசந்தி முன்சீட்டில் தொற்றிக் கொண்டாள். கனிஷ்கா புறப்பட்டுச் சென்றதைப் பார்த்த விஸ்வாஸ், நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு, தனது காரில் புறப்பட்டு விஸ்வாஸ், கேட்டைக் கடந்து, செங்கல்பட்டை நோக்கித் தனது காரைச் செலுத்தினான். அவனது காரை ஒரு இண்டிகோ வண்ண ஹ்யுண்டாய் எக்ஸெண்ட் வாடகைக் கார் பின்தொடரத் தொடங்கியது. உள்ளே கனிஷ்கா காளியின் உக்கிரத்துடன் பயணித்துக் கொண்டிருந்தாள்..!

–தொடரும்…

ganesh

3 Comments

  • Action packed one sir

  • ஆஹா. குகன்மணி விமானத்தை பத்திரமாக கோலாலம்பூரில் தரையிறக்கி விட்டான் என்று பார்த்தால் முற்றிலும் வேறு இடத்திலிருந்து பிரச்சனை புதிதாக முளைக்கிறது கனிஷ்கா வீட்டின் நடுவில் என்ன பிரச்சனை ஏன் மிதுன் திடீரென வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான் கண்மணி உருவில் ஒருவேளை அந்த பத்து மலை முருகன் தான் மயூரி எச்சரிக்கிறான் என்னவோ செங்கல்பட்டில் என்ன நடக்கும் சென்னைக்கு சென்று சேர்வதற்குள் இன்னும் என்னென்ன விபரீதங்கள் நடக்கப்போகிறதோ இன்னும் ஒரு வாரம் காத்திருக்கணும் அதான் கஷ்டமா இருக்கு

  • Super…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...