பேய் ரெஸ்டாரெண்ட் – 1 | முகில் தினகரன்
இரவு பத்து மணி.
இருள் வானில் அரை நிலா சோகமாய் தொங்கிக் கொண்டிருந்தது.
நகரத்தை விட்டு மிகவும் தள்ளியிருக்கும் அந்தக் குடியிருப்புப் பகுதியில் இப்போதுதான் ஆங்காங்கே வீடுகள் முளைக்க ஆரம்பித்திருந்தன. இன்னமும் வளர்ச்சியடையாத அந்த ஏரியாவில் சாதாரணமாகவே மனித நடமாட்டம் மிக மிகக் குறைவு. பகலிலாவது அவ்வப்போது ஒன்றிரண்டு மனிதர்கள் குறுக்கும் நெடுக்கும் போவார்கள்….வருவார்கள். இரவில் தெரு விளக்கு கூட இல்லாத அந்த குடியிருப்புப் பகுதி ஒரு இருண்ட சாம்ராஜ்யமாய் மாறி விடும்.
அந்தப் பகுதியை அடைய ஒரேயொரு பாதைதான் உண்டு. இரண்டு பக்கமும் புதர் மண்டிக் கிடக்கும் அந்தப் பாதை பாம்புகளின் விளையாட்டு மைதானம்.
ஆறு மாதங்களுக்கு முன்புதான் அந்தப் பகுதியில் குறைந்த விலைக்கு வந்த ஒரு புதிய வீட்டை வாங்கியிருந்தான் ஆனந்தராஜ். இன்னமும் திருமணம் ஆகாத இளைஞன். ஊரிலிருந்து அவனுடைய தாயார் மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் போன் செய்து கல்யாணப் பேச்சைத் துவக்க, ஒவ்வொரு முறையும் ஏதோவொரு காரணத்தைச் சொல்லி தவிர்த்து விடுவான். வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்ட பிறகுதான் திருமணமே, என்கிற ஒரு வெறியோடு பல வியாபாரங்களை செய்து நிறைய நஷ்டங்களைச் சந்தித்தவன்.
அதன் காரணமாய் அவன் எதிர்பார்க்கும் உச்சம் மட்டும் இன்னும் கனவாகவே இருக்கின்றது.
காதுகளில் இயர் போனைச் செருகிக் கொண்டு, ஏதோ ஒரு ஆங்கிலப் பாடலைக் கேட்டபடியே தலையாட்டிக் கொண்டிருந்த திருமுருகனின் பின் மண்டையில் “படீர்” என் ஓங்கி அடித்தான் ஆனந்தராஜ். தெறித்துப் போய் விழுந்தது இயர் போன்.
திடுக்கிட்டுத் திரும்பிய திருமுருகன், சட்டென்று ஓடிப் போய் அந்த இயர் போனைக் கைப்பற்றினான். “ஏண்டா பேய் மாதிரி அடிக்கறே?…நீயென்ன பிசாசு வம்சமா?…பேய்க் கோத்திரமா?” கோபமாய்க் கேட்டான்.
“பின்னே?..அடிக்காமக் கொஞ்சுவாங்களா உன்னைய?” இடையில் புகுந்து தன் கடுப்பைக் கொட்டிய விஜயசந்தரைப் பார்த்து திருமுருகன் ஆவேசமாய் எதையோ சொல்ல வர,
அவர்களது சச்சரவை தன் “ச்சூ…” என்ற அதட்டல் குரலில் அடக்கிய ஆனந்தராஜ் “ஏண்டா…நான் எதுக்கு உங்களையெல்லாம் இன்னிக்கு இங்க வரச் சொன்னேன்?…இப்படிப் பைசா பெறாத விஷயத்துக்குச் சண்டை போடவா?….” கோபமாய்க் கேட்டான்.
“எதுக்கு?…எதுக்கு வரச் சொன்னே?…நீயே சொல்லு” என்றான் திருமுருகன்.
“நாம கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து….எந்த இட்த்திலெல்லாம் நாம சறுக்கினோமோ?..அதை ஆராய்ந்து பார்க்கத்தான் கூடியிருக்கோம்”
“ஆனந்து…கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுப்பா” விஜயசந்தர் சலித்துக் கொண்டான்.
“நாம மூணு பேரும் கூட்டா சேர்ந்து என்னென்னமோ பிசினெஸெல்லாம் பண்ணிப் பார்த்திட்டோம்…எதுவுமே எடுபடலை!…ஏகத்துக்கு கையைச் சுட்டுக்கிட்டோம்!… உண்மைதானே?”
“க்கும்…அதான் ஊருக்கே தெரியுமே?”
“இப்ப கடைசியா கைல இருக்கற கொஞ்ச நஞ்சத்தைப் போட்டு புதுசா…வித்தியாசமா…ஜனங்க இதுவரைக்கும் பார்த்தேயிராத விதத்துல ஒரு புது பிசினஸ் ஆரம்பிக்கணும்னு அதுக்கான ஐடியாக்களை டிஸ்கஸ் பண்ணத்தான் வந்திருக்கோம்…இப்படி சண்டையிலேயே பொழுதைப் போக்கிட்டுப் போக இங்க வரலை!…நல்லா யோசிச்சுப் பாருங்கடா….நம்மை மாதிரி உழைச்சவங்களும் கிடையாது…நம்மை மாதிரி நஷ்டம் அடைஞ்சவங்களும் கிடையாது… அப்படியும் நமக்கு இன்னும் புத்தி வரலேன்னா எப்படிடா?” என்று கோபம் கலந்த குரலில் சொன்னான்.
அந்த யதார்த்த உண்மையைப் புரிந்து கொண்ட மற்ற இருவரும் கொஞ்சம் கொஞ்சமாய் சீரியஸுக்கு மாறினர், “ம்…இப்பச் சொல்லு” என்றனர் ஒரே குரலில்.
“நான் சமீபத்துல ஒரு புத்தகத்துல படிச்சேன்!…ஆஸ்திரேலியாவுல ஒருத்தர் புதுசா ஒரு ரெஸ்டாரெண்ட் துவங்கியிருக்கார்!…”
எல்லோரும் அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருக்க, “ப்ச்…அது எல்லோரும் செய்யறதுதானே?…அதுல என்ன புதுமை?”ன்னு கேளுங்கடா!” தானே எடுத்துக் கொடுத்தான் ஆனந்தராஜ்.
“அதை நாங்க கேட்காட்டி என்ன நீயே சொல்லிடு!” என்றான் திருமுருகன்.
“அந்த ரெஸ்டரெண்ட்ல அவர் என்ன புதுமையைப் புகுத்தினார்ன்னா…அந்த ரெஸ்டாரெண்ட்டுக்கு அவர் வெச்ச பேர் என்ன தெரியுமா?… “டெவில்ஸ் ரெஸ்டாரெண்ட்!”…தமிழ்ல “பேய் ரெஸ்டாரெண்ட்”. அந்தப் பேருக்குத் தகுந்த மாதிரி ரெஸ்டாரெண்டோட இண்டீரியர் டெக்கரேஷனை ஒரு பேய் மாளிகை மாதிரி உருவாக்கி… திரும்பின பக்கமெல்லாம் எலும்புக் கூடுகள்… மண்டையோடுகள்… குட்டிச்சாத்தான்கள்… ரத்தக் காட்டேரிகள்!.. ன்னு ஒரே திகில் சமாச்சாரங்களாத் தெரியற மாதிரி செட் பண்ணி வெச்சிட்டாரு!…சர்வர்கள் எல்லோருமே பேய்…பிசாசு உருவத்தில்தான் சப்ளையே பண்ணுவாங்க!…
திடீர்… திடீர்னு ரெண்டாரெண்டுக்குள்ளார திகிலூட்டும் விதத்தில் சில சம்பவங்கள் நடக்குமாம்!… சம்பவங்கள்ன்னா.. பேசிட்டிருக்கும் போதே ஒருத்தனோட தலை கழண்டு விழுமாம்!… திடீர்னு ஒரு கை மட்டும் அந்தரத்துல ரத்தம் சொட்டச் சொட்ட பறந்து போகுமாம்!.. அதெல்லாம் வெறும் டிராமா என்பது வர்ற கஸ்டமர்கள் எல்லோருக்கும் தெரியும்… தெரிந்தாலும் அதைப் பார்க்கும் போது இயல்பா ஏற்படுற பயம் ஏற்படத்தான் செய்யுமாம்!.. .ஆனா…. அதுதான் திரில்லாம்!. .அதுக்குத்தான் அங்க மார்க்கெட்டாம்.. .அதைப் பார்க்கத்தான் கூட்டம் பிச்சுக்குதாம்!” ஆனந்தராஜ் சொல்லிக் கொண்டே போக,
“சரி ஆனந்து…இப்ப எதுக்கு இதை எங்க கிட்ட சொல்லிட்டிருக்கே?… நாம ஆஸ்திரேலியா போகப் போறோமா?” திருமுருகன் ஆவலோடு கேட்க,
“க்கும்…நம்ம மூஞ்சிக்கு அது ஒண்ணுதான் கொறைச்சல்!…நாமும் அதே மாதிரி ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்கறோம்!…“பேய் ரெஸ்டாரெண்ட்!”
அதைக் கேட்டு “ஹா….ஹா…”வென்று வாய் விட்டுச் சிரிச்ச விஜயசந்தர், “கண்ணா…அதெல்லாம் அந்த ஊர்ல எடுபடும்…நம்மூர்ல ஒரு பயல் உள்ளார வரமாட்டான்!…அதையெல்லாம் நம்ம ஆளுங்க விட்டலாச்சாரியாரின் ஜகன்மோகினில தொடங்கி…இன்னிக்கு ராகவா லாரன்ஸோட காஞ்சனா படம் வரைக்கும் பார்த்துச் சலிச்சிட்டாங்க!…அதுவுமில்லாம நம்மூர் ஆசமிகளெல்லாம் கையேந்தி பவன்ல புரோட்டாவும்…நாயர் கடைல டீயும் குடிச்சிட்டு…பாடாவதி தியேட்டர்ல போய் ஷகிலா படம் பார்த்திட்டுப் போய் குப்புறப் படுக்கற பசங்க!…அந்த பேய்…திரில்…எதையும் ரசிக்க மாட்டானுக!”
வலது கை முஷ்டியால் இடது கையை ஓங்கிக் குத்திக் கொண்ட ஆனந்தராஜ், “இது… இதுதாண்டா நம்ம ஃபெயிலியர்க்குக் காரணம்!…ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் போதே அதோட நெகடிவ்ஸைப் பத்தி மட்டும்தான் பேசறோம்!…அப்புறம் எப்படி நாம வெற்றியை எட்டிப் பிடிப்போம்?” என்று கத்தலாய்ச் சொல்ல,
“சரி…சரி…கத்தாம மேலே சொல்லு” என்றான் திருமுருகன்.
“அந்த ஆஸ்திரேலியாக்காரன் இன்னிக்கு உலகம் முழுதும் பேசப்படறான்னா….அதுக்குக் காரணம் அவனோட துணிச்சல்!… “டெவில்ஸ் ரெஸ்டாரெண்ட்”னு பேரு வெச்சா அது அபசகுனம்!…நஷ்டமாயிடும்னு அவன் நினைக்கலை!…அதே மாதிரி எலும்புக் கூடுகளையும்…மண்டையோடுகளையும் கொண்டு வந்து குவிச்சா மக்கள் பயப்படுவாங்க!…அருவருப்புப்படுவாங்க”ன்னு அவன் நினைக்கலை!..வித்தியாசமா திங்க் பண்ணி…வித்தியாசமா செஞ்சான்…மாத்தி யோசிச்சான்…ஜெயிச்சான்!.. எனக்கென்னமோ… இந்த முயற்சில நமக்கு வெற்றி கிடைக்கும்னு தோணுது!” ஆனந்தராஜ் விடாமல் சொன்னான்.
“ஆனந்து…ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்கலாம்கற உன்னோட ஐடியா சரி…ஏத்துக்கலாம்!… ஆனா… அதை… டெவில்ஸ் ரெஸ்டாரெண்ட் மாதிரி ஆரம்பிக்கலாம்னு சொல்றே பாரு… அதுதாண்டா கொஞ்சம் நெருடலாயிருக்கு!… சுடுகாட்டுல போய் எவனாவது டிபன் சாப்பிடுவானா” திருமுருகன் தன்னோட பயத்தைச் சொன்னான்.
“அட…ஒரு முயற்சிதானே?… பண்ணிப் பார்ப்போமே?… இந்த நாட்டுக்கு… இந்த ஊருக்கு அது புதுசுதானே?”
சில நிமிட யோசனைக்குப் பின் திருமுருகனும், விஜயசந்தரும் ஆனந்தராஜின் யோசனைக்கு பச்சைக் கொடி காட்ட, அங்கு ஒரு தீர்மானம் உருவானது.
“ஓ.கே.டா!…இப்ப டெவில்ஸ் ரெஸ்டாரெண்ட் வைக்கறதுன்னு முடிவு பண்ணிட்டோம்!..அதுக்கு என்ன பேர் வைக்கலாம்…” ஆனந்தராஜ் கேட்டான்.
“டெவில்ஸ் ரெஸ்டாரெண்ட்”ன்னே வெச்சிடலாமே?” திருமுருகன் சொல்ல,
“அது சாத்தியமில்லை!…ஏன்னா..அந்த ஆஸ்திரேலியாக்காரன் காதுக்கு அது போயிடுச்சுன்னா… ராயல்டி.. அதுஇதுன்னு பிரச்சினை பண்ணுவான்!…அதனால பேரை மட்டும் நம்ம ஊருக்குத் தகுந்த மாதிரி மாத்திக்குவோம்!” என்றான் ஆனந்தராஜ்.
“ம்ம்… அப்ப.. “பேய் ரெஸ்டாரெண்ட்” ன்னோ…. “பிசாசு ரெஸ்டாரெண்ட்” ன்னோ… வெச்சுக்குவோம்?” விஜய்சந்தர் சொல்ல,
“அட… “பேய் ரெஸ்டாரெண்ட்” இது கூட நல்லாத்தான் இருக்கு… இதையே வெச்சுக்குவோம்!… நீ என்ன சொல்றே முருகா?” திருமுருகனைப் பார்த்துக் கேட்டான் ஆனந்தராஜ்.
“உங்க ரெண்டு பேருக்கும் ஓ.கே.ன்னா…எனக்கும் ஓ.கே.தான்!”
“அப்புறமென்ன?… வேலைகளைத் துவங்கிட வேண்டியதுதான்!… முதல்ல ஒரு நல்ல இடம்… நல்ல பில்டிங் பார்க்கணும்!… அப்புறம் ஒரு ரசனையுள்ள… கிரியேட்டிவிட்டி உள்ள இண்டீரியர் டெக்கரேட்டரைக் கூப்பிட்டு நாம கேட்கிற மாதிரி டிஸைன் பண்ணச் சொல்லணும்!… அதுக்கப்புறம்… பேப்பர்ல விளம்பரம் குடுத்து ஆட்களை வேலைக்கு அமர்த்தணும்!…” ஆனந்தராஜ் அடுக்கிக் கொண்டே போக,
“சரி ஆனந்து.. நீ சொல்றதைக் கேட்கும் போது பட்ஜெட் எகிறிடும் போலல்ல தெரியுது?”
“வேண்டாம்… இப்போதைக்கு கையிருப்புக்குத் தகுந்த மாதிரி பண்ணிடுவோம்!… அப்புறம் பிசினஸ் ஓட்டத்தைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாய் டெவலப் பண்ணுவோம்!” ஏற்கனவே பட்ட நஷ்டங்கள் தந்த அனுபவத்தில் பேசினான் ஆனந்தராஜ்.
அப்போது சட்டென்று தன் கையை முன்னால் நீட்டி, “ஸ்ஸ்ஸ்ஸ்..…எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க…ஏதோ சத்தம் கேட்குது” என்று கிசுகிசு குரலில் சொன்னான் திருமுருகன்.
அடுத்த நிமிடம் எல்லோரும் வாயைச் சாத்திக் கொள்ள, அந்த அறை மயான அமைதிக்குள் மூழ்கியது.
“எங்கியோ பேச்சுக் குரல் கேட்குது!… பக்கத்து வீட்டிலா?” திருமுருகன் நடுங்கும் குரலில் கேட்டான்.
“பக்கத்து வீடா?…. எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு இங்கிருந்து சுத்தமா அரைக் கிலோ மீட்டர் தள்ளித்தான் இருக்கு” என்றான் ஆனந்தராஜ் சிரித்துக் கொண்டே,
“அப்படின்னா…முகமூடித் திருடனுகளோ?”
“வரட்டும்… வந்து இங்க இருக்கற வறட்சியைப் பார்த்து நமக்கு ஏதாவது பிச்சை போட்டுட்டுப் போகட்டும்”
“இதுக்குத்தான் இந்த மாதிரி ஒதுங்கிக் கிடக்கும் ஏரியாக்களுக்கு ராத்திரில வரக் கூடாது!ங்கறது” கையை உதறிக் கொண்டு சொன்னான் திருமுருகன்.
அப்போது அந்தப் பேச்சுக்குரல் ஓங்கி ஒலிக்க, “டேய்…நம்ம தெருவுலதான் போறானுக!…” சன்னக் குரலில் சொன்னான் விஜயசந்தர்.
“ஒன் மினிட்” என்று சொல்லி விட்டு, நிதானமாய் நடந்து ஜன்னலருகே சென்று, லேசாய் ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்த ஆனந்தராஜ் ஆடிப் போனான்.
நான்கு பேர், பேண்ட் சர்ட் அணிந்த ஒரு மனிதனை தூக்கிக் கொண்டு ஓடினர். மெல்லத் திரும்பி, தன் நண்பர்களை ஜாடையில் அழைத்து அதைக் காட்ட, எல்லோரும் தங்கள் இரு கைகளால் வாயைப் பொத்திக் கொண்டு, கண்களில் பீதியை நிரப்பிக் கொண்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“எ..ன்..ன..டா இ..து?…எ..ங்..கி..யோ வெ..ச்..சு…எ..வ..னை..யோ கொ..லை ப..ண்..ணி..ட்..டு அ..தை..ப் பு..தை..க்..க இ..ங்..க வந்திருக்கானுக போலிருக்கு” “தட…தட”வென நடுக்கும் உதடுகளில் பேசினான் திருமுருகன்.
“பயப்படாதடா…நான் போய் என்ன?…ஏது?ன்னு பார்த்திட்டு வர்றேன்” சொல்லியவாறே டார்ச் லைட்டோடு கதவருகே சென்றவனை ஓடிப் போய்த் தடுத்தான் திருமுருகன்.
பேய் விருந்து தொடரும்…
5 Comments
நல்ல துவக்கம்… 💐
வித்தியாசமான முயற்சி
மிகவும் அதிரடியான ஆரம்பம்
வாழ்த்துகள் சார்💐💐💐
ஆரம்பமே அசத்தல் சார் ..
அருமையான கதை தொடக்கம். வாழ்த்துக்கள்.