நாம் தமிழர் சீமான் பிரச்சாரம்

 நாம் தமிழர் சீமான் பிரச்சாரம்

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சி சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் ஒரே மேடையில் அணிவகுக்கச் செய்து அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக தலையிலான ஒரு கூட்டணியும் எதிர்க்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியும் அதோடு, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு கூட்டணியும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆணும் பெண்ணும் சமம் என்பதால், இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் 117 ஆண் வேட்பாளர்களும் 117 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுவார்கள் என்று அறிவித்திருந்தார். இந்த 234 தொகுதி வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

அதன்படி, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். மேலும், தான் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

சென்னை சூளைமேட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆயிரம் விளக்கு தொகுதி நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும் போது, புஞ்சை உண்டு நஞ்சை உண்டு, பொங்கி வரும் கங்கை உண்டு, பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை. எங்க பாரதத்தின் சோத்துசண்டை தீரவில்லை. வீதிக்கு ஒரு கட்சியுண்டு. ஜாதிக்கு ஒரு சங்கம் உண்டு.

நீதி சொல்ல மட்டும் இங்கு யாருமில்லை.. எத்தனை காலம் வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை யாரிங்கு கட்டிவைத்து கொடுத்தது ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமே வீடின்றி வாசலின்றி தவிக்குது எத்தனை காலம் இப்படி போகும் என்றொரு கேள்வி நாளை வரும் கேள்வி கேட்கணும்னா, நீங்கள் விவசாயிகள் சின்னத்தில் ஓட்டு போட்டு என் தங்கச்சியை வெற்றி பெற வையுங்கள்.

மக்களின் குறைகளை கேட்க நாங்கள் வரவில்லை. குறைகளை தீர்க்க வந்திருக்கிறோம்.

நாம் தமிழர் கட்சியை உருவாக்கி கடமையை செய்து வருகிறோம். எங்களுக்கு வருமானம் முக்கியமல்ல. தன்மானம் தான் முக்கியம். சேவைதான் வழியை தீர்மானிக்கிறது. தமிழ் நலத்தையும், வளத்தையும் காப்பது நமது கடமை.

தமிழகத்தில் 1½ கோடி இந்திகாரர்கள் குடியேறி விட்டனர். இந்தியை திணிக்கிறது என்று போராடுகிறோம். ஆனால் அவர்கள் இந்திக்காரர்களை திணித்து விட்டார்கள். இதை யாரும் கேட்கவில்லை. நாம் தான் கேட்கிறோம், தனி ஒருவராக கேட்போம்.

சிங்கம்போல் தனியாக களத்தில் நிற்கிறோம். எங்களுக்கு இந்த ஒரு முறை வாய்ப்பு தாருங்கள். இந்த மண்ணும், மக்களும் பயன்பெற வேண்டுமென தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறோம்.

இந்த இனம் வாழ வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் நோக்கம்.  நாங்கள் அரசியல்வாதி அல்ல, லட்சியவாதிகள். இவ்வாறு அவர் பேசினார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...