தலைவா சுகமா? நம் தனிமை சுகமா?

 தலைவா சுகமா? நம் தனிமை சுகமா?

அவளுக்கு பதட்டமாக இருந்தது. அவனுடைய பதிலுக்காக காத்திருந்தாள். சசீதர் அமைதியாக அவளைப்பார்த்துக்கொண்டிருந்தான்.
‘சரீன்னு சொல்லித் தொலையேண்டா’மனசுக்குள் அர்ச்சனை தொடர்ந்தது.
“ஹ்ம்! ஓகே! நீ நம்ம வீட்டுக்கு வரியா? இல்லை நான் வரணுமா?”

அவனுடைய “நம்ம வீடு “என்ற பதம் லேசாய் அசைத்தது. அவளை…

“நானும் பிள்ளைகளுமே நாளைக்கு வந்திடுறோம். அதுதான் வரவங்களுக்கும் வசதியாயிருக்கும். “

அவனுடையது மூன்று பெட்ரூம் ப்ளாட்..கிச்சன் வராண்டா என்று தனிவீடு போலிருக்கும்.

“ஓகே! ” தோள்குலுக்கலில் அலட்சியம் தெரிந்தது. ‘க்கும்! இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை! ,’அர்ச்சனையைத் தொடர்ந்தாள்.

சசீதருக்கும் அவளுக்கும் திருமணமாகி ட்வின்ஸ்ஸும் பிறந்த பின்பு அவளுடைய அத்தைப்பாட்டி அவளைக்காண்பதற்காக வெளிநாட்டிலிருந்து வருகிறாள். இவளை சிறுவயதில் வளர்த்தவள்தான்.பிறகு வெளிநாட்டு வாசம் அங்கேயே செட்டிலாகிவிட வருகை குறைந்து விட்டது பிள்ளைகள் பேரன்பேத்திகள் எல்லோருமே அந்நிய மண்ணில் காலூன்றியாயிற்று. கடைசி காலத்தில் இந்தியாவில் உள்ள சுற்றங்களை பார்த்து விசாரித்து போக வருகிறாள்.

இவளை அவருக்கு ரொம்பவுமே பிடிக்கும். வானதி என்ற பெயரும் அவரே தேர்வு செய்து வைத்ததுதான்.

வானதி சசியுடன் காதலில் விழுந்து வீட்டையெதிர்த்து மணம் செய்துகொண்டு ட்வின்சும் வந்து….கூடவே பிரிவும் வந்துவிட்டது.

ஆம்!
அப்படி விழுந்து விழுந்து காதலித்துவிட்டு வீட்டைஎதிர்த்து உறுதியோடு திருமணமும் செய்தபின்பு காதல் கொஞ்சம் பின்னுக்குப் போக குறைகள் பூதாகாரமாய் தெரிந்தது.

கூடவே மசக்கை பிள்ளைபிறப்பு
ஆணொன்றும் பெண்ணொன்றுமாய்….
தேனாகத் தித்திருக்க வேண்டியது உப்பு
பெறாதவைகளுக்கெகெல்லாம் தேள்கொடுக்காய் மாறிவிட்டது.

வானதிக்கு இல்லத்தை நிர்வகிக்கும் பக்குவம் வருமுன்பே சுமைகள் ஏறிவிட …சசீதருக்கும் அப்படியே! அவன்பெற்றோர் இன்றி ஹாஸ்டல் உறவுகளில்லா வீடு என்று வளர்ந்த காட்டுச்செடி! நல்லதை எடுத்துக்கூற யாருமேயில்லை. படித்தபள்ளியும் ஹாஸ்டலும் நல்ல நண்பர்களுமாய் இருந்த பணவசதிக்கு தடம் மாறாமல் அவனை புடம் போட்டிருந்தது.

அன்பை யாசிக்கும் அந்தப் பெரிய குழந்தைக்கு தன் எண்ணங்களை சொல்லத்தெரியவில்லை. தொழிலில் வெற்றிபெற்றவனால் குடும்பத்தில் சறுக்கலை நிறுத்த முடியவில்லை.

வானதியும் சரிக்கு சரியாய் மல்லுக்கு நின்றாள்.வேலைகௌகுப்போகும் சுதந்திரம் கைநிறைய வாங்கும் சம்பளம் இவையெல்லாம் மேலும் அவளைவழிப்படுத்த வழிவிடவில்லை
சகிப்பின்மை பொறுமையின்மை ஈகோ,வாக்குவாதமென தொடர்ந்த சண்டை சச்சரவில் சசீதர் கை நீட்டிவிட வானதி வெகுண்டாள்.

தாய்வீடு போகவும் தன்மானம்இடம் தரவில்லை. தூரத்து சொந்தம் ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டு குழந்தைகளைப் பிரித்தெடுத்துக் கொண்டு போய்விட்டாள் தனியே.

சசீ தவறையுணர்ந்து மன்னிப்பு கேட்டும் அவள் மலையிறங்கவில்லை. அவ்வப்போது குழந்தைகளைப்பார்ப்பதும் வருவதுமாய் நாட்கள் ஓடியது. பெரியவர்களின் அரவணைப்பும் வழிகாட்டலும் இல்லாததினாலோ என்னவோ விவாகரத்து கூட பெரிய விஷயமாய் அவளுக்குப்படவில்லை. அன்றைக்கு அவள் விவாகரத்து பேப்பர்களைநீட்டி கையெழுத்து க் கேட்டபோது கோபத்துடன் அவள் முகத்தில் வீசியெறிந்து விட்டுப் போனவன் தான். பிறகு குழந்தைகளைப் பார்க்கக்கூட போகவில்லை…

இன்று அவளே அவன் அலுவலகம் தேடி வந்திருக்கிறாள். அந்தப்பெரியவர்கள் தங்கிச் செல்லும் அந்த நாலைந்து நாட்களுக்குதொ நம் பிரிவு தெரிய வேண்டாம் என்ற கோரிக்கையுடன்.

பழுத்த பழங்களாய் வந்திறங்கிய தம்பதிகளைக் கண்டதுமே சசிதருக்கு மரியாதையும் வாஞ்சையும் ஊற்றெடுத்தது. தன் வேலைகளைத் தள்ளி வைத்தான். வானதியும் விடுப்பு எடுத்துக் கொண்டிருந்தாள். பார்த்துபார்த்து செய்தாள். குழந்தைகளும் புதிய உறவில் சுலபமாய் பொருத்திக் கொண்டனர்.

இப்படியோர் உறவின் நிழலின்றியே வளர்ந்தவன் அவன். அந்த சுருங்கிய விரல்களும் ஸ்பரிசமும் நிம்மதியைத்தந்தது. மஞ்சள் பூசிய முகமும் குங்குமம் வைரத்தோடும் மூக்குத்தியும் சூரியகாந்திப்பூப்போல தகதகத்தது.
கிழவரும் பறங்கிப்பூ நிறத்தில் தளர்வு தெரிந்தாலும் கம்பீரமாக இருந்தார்.

சசி,வானதி இருவருமே ஆரம்பத்தில் நடிக்கத்துவங்கி இந்த நாலைந்து நாளிலேயே இயல்பாகியிருந்தார்கள்.

சசீ மட்டுமல்ல
வானதியும் மனதளவில் நெகிழ்ந்திருந்தாள் அந்த முதிய தம்பதிகளின் பரஸ்பர அன்பும் காதலும் அவளிடம் ஒரு ரசவாதத்தை மலர்வித்தது.

“உங்களுக்குள்ளே சண்டையே வந்ததில்லையா பாட்டி?”

“அதெப்படிடா பேராண்டி?

இந்த துர்வாசருக்கு கோபம் மூக்குமேல. எங்க மாமியாருக்கு நாக்கே கத்தி மாதிரி கூடவே நாத்திகள் கொழுந்துகள்…. இன்னும் இவருடைய பாட்டி வேற….பெரிய கூட்டுக்குடும்பம். …எல்லா வேலையும் முடித்து வரும்போது பாதி ஜாமமாயிடும் இவர் படுக்கையறையில் தாம்தூமென்று குதிப்பார்….”

தாத்தாவின் கோபம்தாபம் கூட்டுக்குடும்பச் சிக்கல் கணவனின் வழிசல் தனியறைச் சமாளிப்பு சிறியவர்கள் முன்பான அடக்கிவாசிக்கிற அவஸ்தை….என்று பேச
பதிலுக்கு கிழவனும் வாரினார்.

மனைவியின் சந்தேகம் …வாய்வீச்சு ..மௌனமான போர்க்கொடி… கோபத்தில் அடித்தது கைநீட்டிவிட்ட பச்சாத்தாபத்தில் சாப்பிடாமலிருக்க… இவளும் கூடவே பட்டினி கிடந்து வேலையில் உழன்றதைக் கண்டதும் தவித்துப்போய் அதற்கு மல்லீப்பூவும் அல்வாவுமாக தான் சரண்டர் ஆனது… என்று பட்டாசாய் வெடித்தார்.

“ஆனா… அப்போ..அந்த நேரம் இவ என் மனைவி. என் ஆளுமைன்னு தோணியது. எடுத்ததுக்கும் தொட்டதுக்கும் கோபம். அதுக்கெல்லாம் இவதான் வடிகால்….அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா இவள் அருமைபுரிஞ்சுது. இவ இல்லைன்னா நான் எதுவுமே இல்லைன்ற நிஜம் புரிஞ்சுது. இவள் என்னில் பாதி. என் சுகதுக்கத்தில் இவளின் பங்கு மேன்மை புரிந்தபோது….வயசாயிட்டுது. ஆனா…வாழ்க்கைன்னா என்னன்னு தெரிஞ்சுது. இப்போதான் நாங்க இன்னும் இறுகிப்போயிருக்கோம். காதலில் மிதந்துக்கிட்டிருக்கோம். என்னடி கிழவி! சரிதானே?”

“அவர்கண்ணடிக்க
பாட்டி வெட்கமும் பொய்க்கோபமுமாய்
“க்கும் இவருக்கு இளமை ஊஞ்சலாடுது ” என்று மோவாயை இடித்துக் கொண்டாள். ஒரு அழகிய கவிதையைப் போல ரசனையாக இருந்தது அந்த காட்சி.
வானதிக்குள் ஏதோ உள்ளே புரண்டு கொடுத்தது. சசீதருக்கும் ஏக்கம் கப்பும்கிளையுமாய் கவிந்தது.
எதையோ இழந்து வெற்றாய் நிற்கிறோம் என்று இருவருள்ளும் தோன்றியது.

ஆயிற்று அவர்கள் புறப்படும் நாளும் வந்தது. ஓருவரும் காலில் பணிந்து எழ முதிய தம்பதிகள் அணைத்து ஆசிர்வதித்தனர்.

“வானதி, சசீ ரெண்டு பேருமே நல்லாவே நடிச்சீங்க”

வானதியும் சசீயும் திடுக்கிட்டு பார்த்துக்கொள்ள…

” நீங்க நடிப்பதை நாங்க வந்த மறுநாளே கண்டுபிடிச்சுட்டோம். மிச்சச் சந்தேகத்தை உங்க குழந்தைகளிடம் பேசியதில் புரிஞ்சு போச்சு.
கணவன் மனைவி உறவு அறுத்துட்டு போறதுல்ல. குற்றம்குறைகளோடு நிரவிக்கிட்டுப் போற ஆயிரங்காலத்துப்பயிரு. வெளியுலகத்துலே உன் தொழில்வெளியிலே…உன்னோட ஆபிசுலே எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகலையா….அப்போ தாம்பத்தியத்துலே ஏன் அட்ஜஸ்ட் பண்ணக்கூடாது விட்டுக் கொடுத்துட்டு போகக்கூடாது.மனசு விட்டுப் பேசுங்க. குழந்தைகளை முன்னிலைப்படுத்தி பாருங்க. பிரிஞ்சு சாதிக்க நினைக்கிறதை ஒன்னாயிருந்து சாதியுங்களேன். எங்களுக்காக நடிக்க முடிஞ்சதை அப்படியே நிஜமாக்கி வாழ்க்கையை வாழ்ந்து பாருங்க. உங்களுக்குள்ளே காதல் செத்துப்போகலை!நீறு பூத்துக்கிடக்கு. ஊதிவிட்டாலே போதும் கனல் பத்திக்கும். நீங்க ரெண்டு பேரும் உங்க குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டா நிக்கனும் . நிஜமாகவே நீங்க சேர்ந்து வாழனும் இதான் எங்க விருப்பம்”.

உள்ளே குமுறிக்கொண்டிருந்த எரிமலை வெடித்துச்சிதறி நெருப்புக்குழம்பைக்கொட்டுவது போல வானதிக்குள் அழுகை அழுத்தத்தைமீறி வெளிவந்தது.

சசீயின் கைகள் அனிச்சையாய் அவளை அணைத்துக்கொள்ள நீண்டது. அந்தகைவளைவிலேயே அவன் மார்பின்மீது தொய்ந்து சரிந்து அழ …அவனும் கண்ணீர்கசிய அவள் முதுகை வருடினான். அவளை ஆசுவாசப்படுத்த அவளின் முகம் நிமிர்த்தி நெற்றியில் இதழ் பதித்தான்.

பொங்கிவந்த கண்ணீரில் மனதின் அடைசல்கள் வெளியேற இரு காதல் உள்ளங்களின் சங்கமம் உப்புச்சுவையில் நடந்தேறியது. அணைப்பு அன்னும் இறுகியது.

குறிப்புணர்ந்தவர்களாய் முதியவர்கள் குழந்தைகளுடன் சந்தோஷம் பொங்க வெளிநடப்பு செய்தனர்…

“வானு…வானும்மா”என்ற சசீதரின் அழைப்பு வானதியின் உயிராழத்தைத்தீண்ட….. அவள் உருகிப்போய் நின்றாள்.

************************

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...