கமலா ஹாரிஸ் வெற்றி: உயரும் அமெரிக்க – இந்தியர்களின் அரசியல் செல்வாக்கு

 கமலா ஹாரிஸ் வெற்றி: உயரும் அமெரிக்க – இந்தியர்களின் அரசியல் செல்வாக்கு

அமெரிக்கத் தேர்தல் 2020: கமலா ஹாரிஸின் வெற்றியும், அமெரிக்க-இந்தியர்களின் அதிகரிக்கும் அரசியல் செல்வாக்கும்.

2020 அமெரிக்க தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோசப் பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வரலாறு படைத்துள்ளார். துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண்மணி என்பதோடு, அந்தப் பதவிக்கு கருப்பினத்தில் இருந்தோ, இந்திய வம்சாவளியில் இருந்தோ வரும் முதல் நபரும் அவரே.

கலிஃபோர்னியாவின் ஆக்லாண்டில் பிறந்த கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் சென்னையில் பிறந்தவர். தந்தை டொனால்ட் ஹாரிஸ், ஜமைக்காவில் பிறந்தவர்.

ஹாரிஸ் தனது தாயுடன் அவ்வப்போது இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது உறவினர்கள் இன்னும் இந்தியாவில் உள்ளனர்.

கமலா ஹாரிஸைப் போலவே, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேறு சிலரின் கதை இது.

அவர்களின் பெற்றோர் கல்வி மற்றும் கடின உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற ஊக்குவிக்கின்றனர்.

அமெரிக்காவில் நிறம் மற்றும் இன அடிப்படையில் பாகுபாடு நிலவிய வரலாறு உள்ளது . கறுப்பின மக்களிடையே அவர்களின் தோல் நிறத்தின் அடிப்படையில் ஓரளவிற்கு பாகுபாடு காட்டப்படும் உணர்வு இப்போதும் உள்ளது.

ஆயினும் 1960 களின் கொடூரமான சகாப்தத்திலிருந்து அமெரிக்கா நீண்ட தூரம் வந்துள்ளது. அந்த நேரத்தில் கறுப்பின மக்கள் நிறம் மற்றும் இன அடிப்படையில் பாகுபாட்டை எதிர்கொண்டிருந்தனர்.

ஆனால் 2008 ஆம் ஆண்டில் பராக் ஹுசைன் ஒபாமா என்ற கறுப்பின அமெரிக்கர் , அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது பாகுபாடு முடியும் திசையில் மிகப் பெரிய உதாரணமாக அது அமைந்தது.

தற்போது ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம் கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களுக்கு, குறிப்பாக புதிய தலைமுறையினருக்கு ஊக்கத்தை அளித்துள்ளார். அவர்களும் கடுமையாக உழைத்தால், அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவியை அடைய முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார்.

அமெரிக்காவில் சாதித்த இந்தியர்கள்
1960 களில் இந்தியாவில் இருந்து வந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பின்னர் மெதுவாக, அடுத்த 4 தசாப்தங்களில், லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேறினர்.

அமெரிக்க அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறையின் 1980 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, நாட்டில் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இருந்தனர்.

1990 ஆம் ஆண்டில், அவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்ந்தது. ஐ.டி துறையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் நுழைந்தபோது, ​​2000 ஆம் ஆண்டு வாக்கில் இந்த எண்ணிக்கை சுமார் 20 லட்சமாக அதிகரித்தது.

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2010 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 70 சதவிகிதம் உயர்ந்து 28 லட்சத்து 43 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

ஒரு மதிப்பீட்டின்படி, இப்போது அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 40 லட்சம் ஆகும்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில், ஐ.டி, மருத்துவம், வணிகம், அரசியல் மற்றும் கல்வி போன்ற முக்கியமான துறைகளில் முத்திரை பதித்துள்ளனர்.

கூகுள், மைக்ரோ சாஃப்ட் போன்ற ஐடி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருந்தாலும், பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் முக்கியமான பதவிகளாக இருந்தாலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தங்கள் திறன்களை நிரூபித்துள்ளனர்.

அமெரிக்கத் தேர்தல் 2020: கமலா ஹாரிஸின் வெற்றியும், அமெரிக்க-இந்தியர்களின் அதிகரிக்கும் அரசியல் செல்வாக்கும்

இதேபோல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மருத்துவத் துறையிலும் கல்வித் துறையிலும் முக்கியமான பதவிகளை வகிக்கின்றனர்.

அடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கோவிட் அலுவல் குழுவின் தலைவர் விவேக் மூர்த்தியும் இவர்களில் அடங்குவார்.

இதற்கு முன்னர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால் லூசியானாவிலும், சவுத் கரோலினாவில் நிக்கி ஹேலியும் ஆளுனர் பதவியை வகித்துள்ளனர். ஜிண்டால் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராகவும், நிக்கி ஹேலி, ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்கத் தூதராகவும் இருந்துள்ளனர்.

திரைப்படங்கள் மற்றும் கலை உலகில் ஆஸ்கர், கிராமி விருதுகள் பெற்றது உட்பட பல இந்திய கலைஞர்கள் ஹாலிவுட்டில் தங்கள் அடையாளத்தை பதித்துள்ளனர்.

அரசியலில் முன்னேறும் இந்திய சமூகம்
அமெரிக்காவில், இந்திய சமூகம் பொருளாதார ரீதியாக மிகவும் வலுவானது. பல்வேறு அரசியல் சமூகத்தினரின் தேர்தல் நிதி திரட்டலிலும் இவர்கள் தீவிரமாக பங்களித்து வருகின்றனர்.

இப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா முழுவதும் அனைத்து மட்டங்களிலும் அரசியலில் பங்கேற்கின்றனர். அது பள்ளி வாரியத் தேர்தல் அல்லது நகர சபை, நகர மேயர் பதவி அல்லது மாகாண சட்டமன்றத் தேர்தல் என எதுவாக இருந்தாலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் முன்வந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 எம்.பி.க்கள் உள்ளனர்.

இந்த முறை 2020 தேர்தலில், டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரின் தேர்தல் பிரச்சாரமும், இந்திய சமூகத்தை கவர முயற்சித்தன. மேலும் இதற்காக சிறப்பு விளம்பரங்களும் சில பகுதிகளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.

கடந்த பல தேர்தல்களின் போது, ​​இரு தரப்பினரின் தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி திரட்டுவதற்கான திட்டங்களையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

நியூயார்க்கில் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி திரட்டும் திட்டங்களை ஏற்பாடு செய்வதில் சந்த் சிங் சட்வால் போன்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல தொழிலதிபர்களும் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

சந்த் சிங் சட்வாலின் நிதி திரட்டும் பல திட்டங்களில், பைடன், ஹிலரி கிளிண்டன் உட்பட ஜனநாயகக் கட்சியின் பல முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

“இது இந்தியாவிற்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு இன்னும் ஆழமாக இருக்கும். பைடன் எங்கள் நண்பர், அவர் இந்தியாவுக்கும் நண்பர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கும் நண்பர்,” என்று ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் வெற்றியைப் பற்றி சந்த் சிங் சட்வால் கூறினார்.

அப்போதிலிருந்து இப்போதுவரையிலான பல மாற்றங்கள்
மூன்று அல்லது நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்த பல இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள், இப்போது தங்கள் ஆரம்ப நாட்களை நினைவுகூரும்போது, உலகம் மாறிவிட்டதை காண்கிறார்கள்.

அமெரிக்கத் தேர்தல் 2020: கமலா ஹாரிஸின் வெற்றியும், அமெரிக்க-இந்தியர்களின் அதிகரிக்கும் அரசியல் செல்வாக்கும்

இந்திய-அமெரிக்கர் உபேந்திர சிவுகுலா ஆந்திராவின் நெல்லூரில் பிறந்தார். 1970 களில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.

1980 களில் நியூயார்க்கில் மின் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, சிவுகுலா AT&T நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றினார்.

சிவுகுலா 1990 களில் நியூ ஜெர்சியில் அரசியலில் சேர்ந்தார். அவர் உள்ளூர் மட்டத்தில் சில பணிகளை செய்யத் தொடங்கினார்.

அந்த நாட்களில், இந்தியாவில் இருந்து வந்தவர்களிடையே மிகச் சிலருக்கே, அரசியல் ஆர்வம் இருந்தது.

“நான் அரசியல் வாழ்வின் ஆரம்ப கட்டங்களில் உள்ளூர் மட்டத்தில் தனியாக வேலை செய்தேன். அந்த நேரத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களில் குறைவானவர்களிடமே க்ரீன் கார்ட் அல்லது அமெரிக்க குடியுரிமை இருந்தது,”என்று அந்த ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்த சிவுகுலா தெரிவிதார்.

“1992 ஆம் ஆண்டில் நியூஜெர்சியில், ​​இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வாக்காளர்களை பதிவு செய்வதற்காக நான் ஒரு உள்ளூர் கோவிலுக்குச் சென்றபோது, ​​4 மணி நேரம் அமர்ந்திருந்தபோதும், ஒருவர் மட்டுமே பதிவு செய்துகொண்டார், ” என்று சிவுகுலா கூறுகிறார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஃப்ராங்க்ளின் டவுன்ஷிப்பின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 இல், சிவுகுலா நியூ ஜெர்சி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது முக்கிய மசோதாக்களில், சூரிய ஆற்றல், கடல் காற்று, கேப் அண்ட் ட்ரேட்( கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த) போன்றவை அடங்கும். பொறியியல் பின்னணியுடன் தொழில்நுட்ப விஷயங்களில் தீவிரமாக பங்கேற்றதால் அவரது சகாக்களால் அவர் தொழில்நுட்ப சட்டமன்ற உறுப்பினர் என்றும் அழைக்கப்பட்டார்.

சிவுகுலா 2014 வரை நியூ ஜெர்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 6 ஆண்டுகள் துணை சபாநாயகராகவும் இருந்தார்.

2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில், சிவுகுலாவும் நியூ ஜெர்சி தொகுதியில் இருந்து அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் ஜனநாயகக் கட்சி ப்ரைமரி( முதல் சுற்று)யில் தோல்வியடைந்தார்.

இப்போது சிவுகுலா , நியூ ஜெர்சியின் யுடிலிட்டி ( மின்சாரம், தண்ணீர், சமையல் எரிவாயு விநியோகம் அல்லது கழிவுநீர் அகற்றல்) வாரியத்தின் ஆணையராக உள்ளார்.

இப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் அரசியலில் பங்கேற்கிறார்கள் என்று சிவுகுலா கூறுகிறார்.

“இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் இப்போது நாட்டின் துணை அதிபராக ஆகியிருப்பதில் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஹாரிஸ் ஒரு லட்சியவாதி. அவருக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அவர் எப்போது, ​​எப்படி அமெரிக்க அதிபர் பதவியை அடைவார் என்பதை பார்க்கவேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்திய – அமெரிக்க அணுவாற்றல் ஒப்பந்தத்தில் பங்கு

இதேபோல், இண்டியானாவின் ஒரு இந்திய அமெரிக்க மருத்துவர், அமெரிக்காவில் பல தசாப்தங்களாக வசித்துவருகிறார். அமெரிக்காவில் இந்திய சமூகம் செழித்து வருவதை அவர் காண்கிறார்.

குஜராத்தின் பரோடாவில் பிறந்த இந்திய-அமெரிக்க மருத்துவர் பாரத் பராய், கடந்த 45 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். 1970 களில் இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்த பின்னர் அமெரிக்கா வந்தார் அவர். பாரத் பராய் அமெரிக்காவில் மருத்துவ இன்டர்ன்ஷிப் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பல தசாப்தங்களுக்குப் பிறகு அவர் இண்டியானா மாகாணத்தின் மருத்துவர்கள் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அவர் தற்போது குழுவில் அதிக காலம் பணியாற்றும் உறுப்பினராக உள்ளார்.

கடந்த 45 ஆண்டுகளைப்பற்றி ​​டாக்டர் பராய் இவ்வாறு கூறுகிறார், “கடந்த பல தசாப்தங்களாக இந்திய சமூகம் அதிகாரம் பெற்று வருகிறது. இந்த சமூகம் அமெரிக்காவில் அதன் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் தன் செல்வாக்கையும் அதிகரித்துள்ளது.”

1970 களில் மற்றும் 80-களின் முற்பகுதியில் அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர்களும் சில பாகுபாடுகளை எதிர்கொண்டதாக பராய் கூறுகிறார். அவர் பல அமெரிக்க அரசியல்வாதிகளை சந்தித்து, இந்திய சமூகத்தின் மக்கள் மற்றும் மருத்துவர்களின் உரிமைகள் குறித்த உதவிகளையும் பெற்று வருகிறார்.

படிப்படியாக, சமூகத்தின் செல்வாக்கு அதிகரித்ததால், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை ஆழப்படுத்துவதில் இந்திய வம்சாவளி மக்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தியாவும் அமெரிக்காவும் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, ​​ அமெரிக்க நாடாளுமன்றத்தில் இதுகுறித்த மசோதாவை கொண்டுவர உதவிசெய்யுமாறு கோரி, ஜனநாயக கட்சியின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பைடனை தான் வாஷிங்டனில் பலமுறை சந்தித்ததை , பாரத் பாராய் நினைவு கூர்ந்தார்.

2007 இல் ஜோ பைடனுடனான சந்திப்பை பற்றிக் குறிப்பிடுகையில், பராய் இவ்வாறு கூறுகிறார். “அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும் இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு குறித்தும் நான் அவரிடம் விரிவாகக் கூறியபோது, ​​பைடன் உடனடியாக ஒப்புக்கொண்டார். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மசோதாவும் எளிதில் நிறைவேற்றப்பட்டது,” என்றார்.

‘பைடனுக்கும் மோதிக்கும் இடையே நட்பு மலரும்’

பாரத் பாராய் 2014 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இதில் சுமார் 19 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

ஆனால், 2019 ல் ஹூஸ்டனில் நடந்த ‘ஹவுடி மோதி’ நிகழ்ச்சியில் பிரதமர் மோதி ” இந்த முறை டிரம்ப் அரசு ” என்ற முழக்கத்தை எழுப்பியிருக்கக்கூடாது என்று பாரத் பாராய் கூறுகிறார். “வேறு எந்த நாட்டின் தேர்தலிலும் அவர் தலையிட்டிருக்க கூடாது என்று நான் நினைக்கிறேன். இது அவருக்கும் நன்றாக தெரியும் ,”என்று அவர் குறிப்பிட்டார்.

2017ல் ட்ரம்பின் வெற்றிக்குப் பிறகு, ‘டிரம்ப் எவ்வாறு வென்றார் ‘என்று மோதி தன்னிடம் கேட்டார் என்று பராய் கூறுகிறார்.

பராய், ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் ஆதரவளித்துள்ளார். ஆனால் 2020 தேர்தலில் டிரம்பிற்கு அவர் வாக்களிக்கவில்லை. டிரம்பின் நடத்தையும் அவரது மொழியும் ஏற்றுக்கொள்ளமுடியாதவை என்றும் இதனால் அவரை ஆதரிக்க முடியவில்லை என்றும் பராய் கூறுகிறார்.

தனது மகள்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களும், பைடனின் ஆதரவாளர்கள் என்றும் அவர் கூறினார். அவரது ஒரு மகள், இண்டியானா மாகாணத்தில் பைடனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை வகித்தார்.

கமலா ஹாரிஸ் துணை அதிபரானதால் தனது மகள்கள் பெரிதும் ஊக்கமடைந்துள்ளதாகவும், அவர்களின் உற்சாகம் அதிகரித்துள்ளதாகவும் பராய் கூறுகிறார்.

இப்போது பைடன் அமெரிக்க அதிபராக, இந்தியாவுடன் நல்ல உறவைப் பேணுவார் என்றும் அவர் பிரதமர் மோதியுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வார் என்றும் பாரத் பராய் தெரிவித்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...