வரலாற்றில் இன்று – 19.11.2020 சர்வதேச ஆண்கள் தினம்
சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது 1999ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. இத்தினம் அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம் (AIMWA) சார்பில் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
உலகில் ஆண்களை கௌரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்நாள் நினைவுப்படுத்தும் நாளாகவும் அமைகிறது.
உலக கழிப்பறை தினம்
உலக கழிப்பறை தினம், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதாரத்தைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை 2013ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது.
இந்திரா காந்தி
இந்தியாவின் துணிச்சல்மிக்க பெண்மணி இந்திரா காந்தி 1917ஆம் ஆண்டு, நவம்பர் 19ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். இவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் மகள் ஆவார். 1966ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1977ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தியாவின் பிரதமர் பொறுப்பை ஏற்றார். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர், மத்திய அணுசக்தி துறை அமைச்சர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய விண்வெளித்துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி முதல் மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் விடுதலைக்காக தன்னை இணைத்துக்கொண்டு வாழ்ந்த அன்னை இந்திரா காந்தி, 1984ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 31ஆம் தேதி மறைந்தார்.
இராணி இலட்சுமிபாய்
விடுதலைப் போராட்ட வீரர் ஜான்சி இராணி 1828ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி வாரணாசியில் பிறந்தார். இவர் 1857ஆம் ஆண்டு தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் போரில் மிக முக்கியமான நபர்களில்
ஒருவராவார். வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக இருந்த இராணி இலட்சுமிபாய் 1858ஆம் ஆண்டு தனது 29ஆம் வயதில் மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
2008ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி தமிழ்; திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகரான நம்பியார் மறைந்தார்.