வரலாற்றில் இன்று – 16.08.2020 அ.மாதவையா
தமிழ் முன்னோடி எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர் என பன்முகத் திறன் கொண்ட அ.மாதவையா 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி திருநெல்வேலி அருகே பெருங்குளம் கிராமத்தில் பிறந்தார்.
இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டி 1914ஆம் ஆண்டு நடந்தது. பாரதியாரும் அதில் கலந்துகொண்டார். மாதவையாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. பஞ்சாமிர்தம் என்ற பத்திரிகையை 1925ஆம் ஆண்டு தொடங்கினார். நாவல், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள் என ஏராளமான கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என உரையாற்றினார். அவர் பேசி முடித்து அமர்ந்ததும் அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 53.
ஜேம்ஸ் கேமரூன்
ஹாலிவுட் வரலாற்றிலேயே அதிக செலவில் தயாரிக்கப்பட்டு சாதனை படைத்த டைட்டானிக் மற்றும் அவதார் திரைப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் 1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் பிறந்தார்.
1984ஆம் ஆண்டு வெளிவந்த இவரது டெர்மினேட்டர் என்ற ஆங்கிலத் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.
இவர் 1997ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்ட டைட்டானிக் திரைப்படத்திற்கு 11 ஆஸ்கர் விருதுகள் உட்பட பல விருதுகள் கிடைத்தன. 2012ஆம் ஆண்டு உலகின் மிக ஆழமான மரியானா அகழியின் சேலஞ்சர் மடு வரை பிரத்யேக நீர்மூழ்கி கலனில் தனியாகச் சென்று வந்து சாதனை படைத்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் மறைந்தார்.
1845ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி குறுக்கீட்டு விளைவின் அடிப்படையில் புகைப்படம் மூலமாக வண்ணங்களைப் பிரித்தெடுத்த காபிரியேல் லிப்மன் ஐரோப்பாவில் உள்ள ஹாலரிக் என்ற ஊரில் பிறந்தார்.
2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி முன்னாள் இந்தியப் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாய் மறைந்தார்.