Into the Shadows-விமர்சனம்
அமேசான் பிரைமில் 2018ல் வெளியான Breathe தொடரின் அடுத்த பாகம். அந்தத் தொடரில் முக்கியப் பாத்திரமாக வந்த காவல்துறை அதிகாரி கபீர்தான் இந்த இரண்டு தொடர்களையும் இணைக்கும் ஒரே புள்ளி. மற்றபடி வேறு கதை இது.
மொத்தம் 12 பாகங்கள். ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 45-50 நிமிடங்கள் நீளம். முதலில் மிக மெதுவாகத் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடிக்கிறது திரைக்கதை. 5வது அத்தியாயத்தில் உச்சத்தைத் தொடுவதோடு, கதையிலும் பல திருப்பங்களும் ஏற்படுகின்றன. குழந்தையைக் கடத்தியது யார் என்பதையும் சொல்லிவிடுகிறார்கள். ஐந்தாவது பாகத்திலேயே இவ்வளவு பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிறகு, மீதமுள்ள ஏழு பாகங்களில் என்ன செய்யப்போகிறார்களோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
தில்லியில் வசிக்கும் அவினாஷ் சபர்வால் (அபிஷேக் பச்சன்) ஒரு மனநல மருத்துவர். அவருடைய மனைவி அபா (நித்யா மேனன்) ஒரு சமையற்கலை நிபுணர். அவர்களுடைய ஆறு வயதுக் குழந்தை சியாவுக்கு நீரிழிவு நோய் உண்டு.
திடீரென ஒரு நாள் சியா காணாமல் போய்விடுகிறாள். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு சியாவின் பெற்றோரைத் தொடர்புகொள்ளும் கடத்தல்காரன், தொடர்ச்சியாகக் கொலைகளைச் செய்யச் சொல்கிறான். இந்தத் தொடர் கொலைகள், கோபம், பயம், காமம் போன்ற மனிதனின் மோசமான குணங்களின் அடிப்படையில் அமைகின்றன. அவினாஷும் கொலைகளைச் செய்ய ஆரம்பிக்கிறான்.
இந்தக் கொலைகளை விசாரிக்க வருகிறான் கபீர் (அமித் சத்). சியாவைக் கடத்தியது யார், சம்பந்தமில்லாதவர்களைக் கொலைசெய்யச் சொல்வது ஏன், சியா மீட்கப்படுகிறாளா என்பது மீதிக் கதை.