தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 3 – ஆரூர்தமிழ்நாடன்

அத்தியாயம் -3

அறிவானந்தரின் வருகை!

——————————————————————–

பகல் மயங்கிக்கொண்டிருந்த மாலைப் பொழுது அது.

சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் அந்த கல்லூரித் திடல் முழுக்க, ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய்ப் பரவசத்தோடு திரண்டிருந்தனர்.

அங்கங்கே மெஹா சைஸ் போர்டுகளில் ஞானகுரு அறிவானந்தர் பலவித புன்னகையோடு தரிசனம் அருளிக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்கவும் அவரது அருளுரையைக்

கேட்கவும் அத்தனை பேரும் ஆர்வத்தோடு காத்திருப்பது அவர்களின் பாவனையிலேயே தெரிந்தது.

அழகாய் அமைக்கப்பட்டிருந்த மேடையில் , சந்தன நிறை உடையோடு செழுமையாய்க் காட்சி தந்த இளைஞர்க்குழு ஒன்ற் மனமுருகப் பாடிக்கொண்டிருந்தது.

‘உலகின் சூட்சுமம் அறிந்தவனே…
உயிர்களை நடத்தும் நாயகனே..- உன் .
கண்களில் விடியுது எங்கள் கிழக்கு
ஏற்றி வைக்கிறாய் ஆயிரம் விளக்கு’

-என அவர்கள் வசீகரமாய்ப் பாட, இசைக் குழுவினர் அதற்கு லாவகமாய் பின்னணி இசைத்து பலரையும் பரவச வானில் கண்மூடி மிதக்க வைத்துக்கொண்டிருந்தனர்.

இடையிடையே இளைஞர்கள், அறிவானந்தரின் படத்தோடு கூடிய துண்டுப் பிரசுரங்களை கூட்டத்தினருக்கு விநியோகித்துக்கொண்டிருந்தனர். மைதான முகப்பில் அறிவானந்தா ஆறவழிச் சாலையின் புத்தகக் கடை முளைத்திருக்க, அங்கே சிலர் புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தனர்.

பல மாநிலங்களிலிருந்தும் பல நாடுகளிருந்தும் வந்திருந்த அறிவானந்தரின் அறவழிச்சாலை அன்பர்களுக்கு மேடைக்கு முன்பக்கம் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதியிலேயே மீடியாக்காரர்களும் அமர்ந்திருந்தனர்.

பாடலின் அர்த்தம் புரியாதபோதும் ஒருவித லயிப்போடு மோனத்தவம் கொண்டவர்கள் போல் உட்கார்ந்திருந்தனர் பிறமொழிக்காரர்கள்.

இரண்டாவது வரிசையில் தன் ஆத்ம நண்பன் தமிழ்ச்செல்வன் என்கிற செல்வாவோடு உட்கார்ந்திருந்த அகிலா ‘என்ன இன்னும் அந்த சாமியார் வரக் காணோம். வரவர

ஆன்மீகவாதிகளும் அரசியல்வாதிகள் போல் நிகழ்ச்சிகளுக்குத் தாமதமா வருவதை கடைபிடிக்க ஆரம்பிச்சிட்டாங்க’ என்றாள் அலுத்துக்கொண்டு. அப்போதும் கூட அவள் முகம்

பெளர்ணமிபோல் இருந்தது.

தமிழ்செல்வனோ ‘சென்னை போக்குவரத்து நெரிசலில் யாரா இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு இடத்துக்குப் போய்ச் சேரமுடியாது. அதனால் அறிவானந்தர் மீது நாமா ஒரு கருத்தை உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்றான் நிதானமாக.

அதே நேரம், மெல்லிய பரபரப்பு கூட்டத்தில் கிளம்பியது. பக்கவாட்டு வழியாக ஒரு சாண்ட்ரோ கார் மேடைக்குப் பின்புறமாக வந்து நிற்க, அதிலிருந்து பரபரவென இறங்கிய அறிவானந்தர், தன் செயலாளர் சத்தியானந்தா சகிதம் மேடையேறினார்.

கைதட்டலோ ஆரவாரக் கூச்சலோ இன்றி அந்தக் கூட்டம்

அப்படியே எழுந்து நின்று கைகூப்பியது. பதிலுக்கு அறிவானந்தரும் கைகூப்பிவிட்டு மேடையின் மத்தியில் போடப்பட்டிருந்த அந்த அலங்கார நாற்காலியில் அமர்ந்தார்.

அதுவரை மேடையில் இசைத்துக்கொண்டிருந்த இசைக் குயில்கள் சரசரவென இறங்க, கூட்டத்தைப் பார்த்து சில நிமிடங்களுக்குக் கைகூப்பியபடியே இருந்தார் அறிவானந்தர்.

பலர் மாலைகளோடு நெருங்க, அவர்களில் ஒரு சிறுமியின் கையால் ஒரு மாலையை மட்டும் கழுத்தில் வாங்கிக்கொண்ட அறிவானந்தர், அந்த மாலையை அந்தச் சிறுமியின் கழுத்தில் போட்டு அதன் உச்சந் தலையைத் தொட்டு ஆசிர்வதித்தார்.

சராசரிக்கும் சற்றே அதிகமான உயரம். மாநிறம். அளவாக வெட்டப்பட்ட தலைக்கேசம். அடந்த

புருவத்துக்குக் கீழ், பளீர் விழிகள் துருதுருவென புரண்டுகொண்டிருந்தன. நேர்த்தியான நாசி. அளவான சதைப் பற்றோடு கூடிய முகத்தில் ஏகப் பொருத்தமாய்

ஆரஞ்சு நிற உதடுகள் ஒட்டிக்கொண்டிருந்தன. ரோமம் மழிக்கப்பட்ட மளமள கன்னங்கள்.

சந்தன நிற ஜிப்பா, வேட்டி. கழுத்தில் ருத்திராட்ச மாலைகள்.

அறிவானந்தரின் இந்தத் தோற்றத்தைக் கண்களால் அளந்த அகிலா,

“பார்வைக்கு ஒரு அறிவு ஜீவிபோலத்தன் தெரிகிறார். இந்த ஆளை சாமியார் போல் ஏன் மக்கள் கொண்டாட வேண்டும்? இந்த மனிதன் எப்படி பல ஆயிரக்கணக்கான மக்களைக் கவர்ந்து வைத்திருக்கிறான். மக்களிடம் மடமை இருக்கும்வரை

இப்படிப்பட்ட ஆன்மீகவாதிகளின் வியபாரம் ஜரூராகத்தன் இருக்கும்” என்றாள் தமிழ்ச்செல்வனிடம் தணிந்த குரலில்.

ஒரு சில வினாடிகள் தீவிரமான மெளனத்தில் இருந்த தமிழ்ச்செல்வன் ‘யாரையும் வெறும் பார்வையால் எடைபோடக் கூடாது’ என்றான் மெதுவாய்.

‘இந்த சாமியாரை ஏடாகூடக் கேள்விகளைக் கேட்டு எப்படி சங்கடப்படுத்தப் போறேன்னு பாரு செல்வா’ என அகிலா புன்னகை புரிய,

“அகிலா, இது அவருடைய கோட்டை போன்ற இடம். இங்கு இருப்பவர்கள் அவரது தீவிர விசுவாசிகள். இங்கே நம்மைப் போன்றவர்கள் கேள்வி எழுப்ப முடியாது. எழுப்பினாலும் பதில் கிடைக்காது. அப்படியே பதில் கிடைத்தாலும்
இங்கிருந்து நாம் முழுதாகத் தப்பித்துப் போய்விட முடியாது. எனவே உன் அசட்டுத் துணிச்சலை அடக்கிவை’ என்று உரிமையாய்க் கண்டித்தான்.

அகிலாவோ ‘அதையும்தான் பார்ப்போமே. இங்கே மீடியாக்கள் வந்திருக்கு. அவங்க முன் நாம் தாக்கப்பட்டால் பிரச்சினை நமக்கல்ல; அறிவானந்தருக்குதான். இந்த சாமியாருக்கு எதிரான சுனாமி தானா கிளம்ப ஆரம்பிச்சிடும்’ என்றாள் புன்னகையோடு. இதற்கு மேல் தமிழ்செல்வன் பேசவில்லை.

ஒரு இளம்பெண், மேடை ஏறினாள். அறிவானந்தரைப் பார்த்து கைகூப்பியவள், கூட்டத்தைப் பார்த்து தலை வணங்கினாள். பின்னர் மைக் முன் வந்து…

‘நமது ஆன்மீக வழிகாட்டி ஞானகுரு அறிவானந்தர் இங்கே வந்திருக்கிறார். நமக்கு அவர் ’அன்பே ஆனந்தம்’ என்ற தலைப்பில் அருளுரை தர இருக்கிறார். அவரிடம் யார்
வேண்டுமானாலும் என்ன கேள்வி வேண்டுமானாலும் இப்போது பகிரங்கமாகக் கேட்கலாம்’ என்றபடி நகர்ந்தாள்.

அகிலாவோ ‘ச்சே யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாமாமே.’ என தன் சுவாரஸ்யமின்மையை வெளிப்படுத்தினாள். தமிழ்ச்செல்வன் இதற்கும் பதில் சொல்லவில்லை.

மேடையின் வலதுபக்கம் வைக்கப்பட்டிருந்த மைக் ஸ்டாண்ட் அருகே வந்தார் அறிவானந்தர். ஒரு நிமிடம் கண்களை மூடி தியானிப்பதுபோன்ற பாவனையில் இருந்தார். அகிலா அவர்மீது இளக்காரப் பார்வையை வீசினாள்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!