விலகாத வெள்ளித் திரை – 2 – லதா சரவணன்

 விலகாத வெள்ளித் திரை – 2 – லதா சரவணன்

அத்தியாயம் – 2

சூரியனின் ஒளிக்கதிர்களின் சுள்ளென்று உறைக்கும் வரையில் பொறுமையில்லாமல் கருக்கலிலேயே வாசல் பெருக்கி சாணம் தெளித்து நாலு கம்பியை நீட்டிவிட்டு இருந்தாள் பத்மா. இருளாண்டி இருந்தவரையில் அந்த ஓலைவீட்டின் முகப்பே கோயிலின் கர்ப்பகிரகத்தைப் போல இருக்கும் தெய்வம் போனபிறகு காலியாக கர்ப்பகிரமாய் பத்மா மட்டும் ! “மூணும் சின்னப்பிள்ளைங்க அவரு இருந்தவரையில் ஏதோ காலத்தை தள்ளிட்டே இனிமே என்ன பண்ணப்போறே ? உனக்கடுத்து இரண்டு பொட்டப்பிள்ளைங்க நீ ஏதோ தலையெடுத்திட்டேன்னு நினைச்சேன் ஊரைப் பார்த்த உன் புருஷனுக்கு உன்னையும் பிள்ளையும் பார்க்க கொடுத்து வைக்கலையே ?! ஏதோ இந்த வீடு மட்டும் நிரந்தரம் இல்லைன்னா உன் நிலமை.?” கணவனை இழந்த தன் பெண்ணிடம் பதினாறு பண்ண வந்த தந்தையும் தாயும் பேசியவை இவை, நீயும் வீட்டுக்கு பாரமா வந்திடாதே என்று மறைமுகமாய்!

மடமடவென்று வேகவைத்த இட்லிகளை தட்டில் வார்த்தார். நண்டும் சிண்டுமாய் இன்னும் சற்று நேரத்தில் தட்டை தூக்கிட்டு வந்துவிடுவார்கள் சட்னிக்கு தாளித்து கொட்டிவிட்டு சாம்பாரை பாத்திரத்தில் மாத்திவிட்டு நிமிரும் போது பள்ளிக்கூட வாத்தியார் வந்தார். “வாங்கய்யா உட்காருங்க கண்ணா அய்யா வந்திருக்காரு பாரு. ?!”

கண்ணன் பதவிசாக வந்து வாத்தியாரை வணங்கிவிட்டு தட்டில் சாம்பாரில் குளித்த இட்லிகளை தந்தான். “ கண்ணன் விஷயத்திலே நீங்க கொஞ்சம் யோசிக்கலாமே அம்மா, அவங்க அப்பா இருந்தவரைக்கும் இந்த ஊருக்கு எத்தனையோ நல்லது பண்ணியிருக்காரு, அவரு பிள்ளை இப்போ வசதியில்லாம படிப்பை நிறுத்தவேண்டாமே !”

“எனக்கும் விருப்பம்தான் ஆனா நம்ம ஊருலே தாலியறுத்தவளை அபசகுணமாத்தானே அய்யா நினைக்கிறாங்க, எனக்கு இப்ப பக்கபலமே கண்ணன் மட்டும்தான் அத்தனை ஒத்தாசை அவரு போனதுக்கப்புறம் நான் அதிகம் வீட்டை விட்டு தாண்டுவதில்லை அதனால அவன் இல்லைன்னா என்னாலே ஏதும் முடியாது. அதான் தம்பி தங்கைகள் படிக்கிறாங்களே ?!” அவர் கண்ணன் முகத்தைப் பார்த்தார் அதிலிருந்து எதையும் கண்டு கொள்ள முடியவில்லை, அவன் பள்ளிக்கு செல்லும் சிறு பிள்ளைகளின் கையில் இருந்த காசுக்கு ஏற்றாற்போல இட்லியை விநியோகம் செய்து கொண்டு இருந்தான்.

“நேத்து டீக்கடைக்காரர், பலகாரத்திற்கு சொல்லியிருந்தாராம் என்கிட்டே காசு கொடுத்திருக்கார் இரண்டு ரூபாய் முழுதாக கொடுத்துவிட்டு பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சென்றிருக்க, கூடவே கண்ணனும் சென்றான்.” பொருட்களைக் கொடுத்துவிட்டு வெளியே நின்றுகொண்டிருந்தவனின் காதுகளில் மறுபடியும் அதே பாடல் சப்தம் அன்று டீக்கடையில் கேட்ட அதே பாடல், மாட்டு வண்டியின் நான்கு புறங்களிலும் கம்பம் கட்டி ஒருபக்கம் மட்டும் திரையிட்ட அதன் வண்டியின் மையத்தில் ஒரு கருப்புநிற பெட்டி அது சுழல சுழல பாடல் வந்ததாம். அங்கிருந்தவர்களை நோக்கி ஒரு துண்டு பிரசுரம் எறியப்பட்டது.

பாடல் நிறுத்தி கையில்லாத சட்டையும் குழாயும் போட்ட ஒரு மனிதர் “பேரையூர் சனங்களுக்கு தெரிவிப்பது என்னன்னா இங்கிருந்து மூணு மையிலில் பெரியதெருக்குள்ள நம்ம முதலியார் ஒரு கட்டிடம் கட்டினாரே அதில் சினிமா கொட்டகை போடப்போறார் வரும் விசாழக்கிழமை படம் போடப்போறோம் முதன் முறையா நம்ம ஊருலே கொட்டகை எல்லாரும் வாங்க டிக்கெட் விலை அரையணா” என்று சொல்லிக்கொண்டே போக !

கண்ணன் அவன் பக்கம் வீசப்பட்ட துண்டு பிரசுரங்களில் ஒன்றை எடுத்து எழுத்து கூட்டிப் படித்தான். அதில் பராசக்தி என்று பிரசுரிக்கப்பட்டு சிலரின் படங்கள் கருப்புவெள்ளையில் போடப்பட்டு இருந்தது. மீண்டும் அதே பாடல் இந்த பாட்டு உள்ள படம்தான் இதுவா ? ஆனா இங்கிருந்து மூணு கிலோ மீட்டர்ல போகணும் அதுவும் படம் பார்க்க காசுவேற வேணுமே நான் எங்கன போக ? அம்மாகிட்டே கேட்கலாம் என்று பலகாரம் தீர்ந்து போன பாத்திரங்களோடு நடந்தான் கண்ணன்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...