இன்று அன்னக்கிளி வெளியான தினம்!

 இன்று அன்னக்கிளி வெளியான தினம்!

44 வருடங்கள் கடந்தும் நெஞ்சை வருடும் ராக தேவன்..

அன்னக்கிளி! கலர்படங்கள் பெருமளவு தலைதூக்கி, அதில் வெகுஜனங்கள் நாட்டம் கொண்டிருந்த நேரம் அது.

அப்போது சாதாரண கறுப்பு-வெள்ளையில் அன்னக்கிளி 1976-ல் வெளியாகி அனைத்து தரப்பினரையும் பேச வைத்ததற்கு முக்கிய காரணகர்த்தா இசைஞானி இளையராஜாதான்.

முதல் படத்திலேயே காட்டாற்று வெள்ளம்போல் தெறித்துக் கொண்டு வந்து, மக்களின் நாடி நரம்புகளில் கலந்துவிட்டார் இளையராஜா.

அவரது இசையமைப்பில் அன்னக்கிளி திரைப்பாடல் முதல்முதலாக வெளியான நாள்தான் இன்று!

தமிழகத்தில் ஒரு மூலையில் உள்ள பண்ணைப்புரம் கிராமத்திலிருந்து, கிளம்பிய தென்றல், மெல்ல மெல்ல தவழ்ந்து, அன்னக்கிளியில் புயலென நுழைந்து…

இன்று 2 தலைமுறைகளுக்கு மேல் இசை உலகை ஆண்டு கொண்டிருக்கிறது!
எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ் போன்றோர் இசைஉலகில் கோலோச்சிய நேரம் அது.

இசையமைப்பாளர்கள் அறிமுகமாவதும் வெகு அரிதான ஒன்றாக இருந்தது.

அப்படியே அறிமுகமானாலும் சிறிது காலத்தில் மத்தாய்ப்பாய் தோன்றி மறைந்து போவர்.

ஆனால் இசையமைப்பாளராக அறிமுகமான உடனேயே சமகால இசையமைப்பாளர்களை பின்னுக்கு தள்ளி எவராலும் தொட முடியாத உயரத்தில் போய் சம்மனம் போட்டு உட்கார்ந்து கொண்டார் இளையராஜா.

அதற்கு காரணம், இசைக்கருவிகளை அவர் கையாளும் முறையும், இசை ஆளுமையையும், தன் அண்ணன் பாவலரின் பாடல்களை கேட்ட கேள்விஞானத்தால் பெற்ற இசை ஞானமும்தான்!

அதனால்தான் இன்று இசை கடவுளாக அவர் உருமாறி நிற்க முடிந்திருக்கிறது! நன்றிக்குரிய பஞ்சு அருணாசலம் முதலில் இந்த பாராட்டுக்கள் எல்லாம் மறைந்த தயாரிப்பாளரும், பாடலாசிரியருமான பஞ்சு அருணாசலத்துக்குதான் போய் சேர வேண்டும்.

அதுதான் நியாயமும், தர்மமும் கூட. இளையராஜாவின் திறமையை கண்டறிந்து அதனை தக்க சமயத்தில் உலக அறிமுகப்படுத்திய பெருமை பஞ்சு அருணாசலத்துக்குத்தான் உரியது.

இளையராஜாவை அறிமுகப்படுத்தக் கூடாது என்று பலதரப்பட்ட எதிர்ப்புகள் பஞ்சு அருணாசலத்துக்கு வந்து சேர்ந்தன.

“புது பையன் நமக்கு தேவையில்லை, ஆளைப்பார்த்தால் ஒழுங்கா மியூசிக் போடற ஆளா தெரியலயே, எதுக்கு புதுமுயற்சியில இறங்கிட்டு, வேற ஆளை பாக்கலாம்” என்று எதிர்ப்புகளை கணைகள் பஞ்சு அருணாசலத்தை துளைத்தெடுத்தன.

ஒருகட்டத்தில் அவரே, மனதை மாற்றக்கூடிய நிலைக்கும் தள்ளப்பட்டார்.

கடைசியில், ‘திறமையில் நம்பிக்கை’ என்ற ஒன்றினில் உறுதியாக இருந்து,

எதிர்ப்புகளுக்கு மத்தியில் இசையமைப்பாளராக இளையராஜாவை அறிமுகப்படுத்தினார் பஞ்சு அருணாசலம்.

அதற்கான நன்றியை அவருக்கு பல தருணங்களில் இளையராஜா நா தழுதழுக்க வெளிப்படுத்தியிருக்கிறார்.

சகுனம்! தடங்கல்! இடையூறு! ஆரம்பத்தில் அண்ணன் பாவலர் வரதராசன் மெல்லிசைக்குழுவில் பாடிக் கொண்டிருந்த இளையராஜா, பின்னர் பல்வேறு நடிகர்களின் நாடகங்களுக்கும் இசையமைக்க, நண்பர் செல்வராஜ் மூலம் பஞ்சுவிடம் அறிமுகம் கிடைக்கப் பெற்றது.

அப்போது வந்த வாய்ப்பே அன்னக்கிளி. முதன்முதலில் ரிக்கார்டிங் செய்யப்பட்ட பாடல் அன்னக்கிளி உன்னத்தேடுதே என்பது.

இதனை லதா மங்கேஷ்கரை வைத்து பாட வைப்பதாக முடிவெடுத்து,

அது சில காரணங்களுக்காக முடியாமல் போகவே எஸ்.ஜானகியை வைத்து பாட முடிவு செய்யப்பட்டு, ஒரு திருமண மண்டபத்தில் பாடலுக்கான ஒத்திகையும் பார்க்கப்பட்டதாம்.

பின்னர் ஏவிஎம்-இல் பாடல் பதிவாக்கம் தொடங்கப்பட, சில நிமிடங்களிலேயே கரண்ட் கட் ஆகிவிட… “நல்ல சகுனம்” என்று அங்கிருந்தவர் சிலர் கிண்டல் அடிக்க…

இது இளையராஜா காதில் அப்பட்டமாக விழ… முதன்முதலாக இசையமைக்கும்போது இப்படி விளக்குகள் அணைந்துவிட்டதே என்ற வேதனை இளையராஜாவுக்கு மனம் முழுக வேதனை அப்பி, ஒரு ஓரமாய் போய் இடிந்து உட்கார்ந்து விட்டார்.

ராஜாவை தேற்றிய ஜானகி!

எஸ்.ஜானகிதான் இளையராஜாவை தேற்றியிருக்கிறார்.

“தம்பி… இதெல்லாம் சகஜம்ப்பா. கரண்ட் போறதுனால ஒன்னும் கிடையாது, சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பார்” என்று சொல்லியிருக்கிறார்

சிறிது நேரத்தில் கரண்ட் வந்த பிறகும் இளையராஜாவுக்கு அதிலிருந்து மீளவில்லை.

இதனால் தான் பாடிய அன்னக்கிளி உன்ன தேடுதே பாட்டை தானே முன்னின்று ஆர்க்கெஸ்ட்ராவை ஒருங்கிணைத்தார் (Conduct) ஜானகியே.

அவரது மேற்பார்வையில்தான் அந்த முழு பாடல் பதிவு செய்யப்பட்டது.

இதையெல்லாம் ஒரு ஓரமாகவே வாடிய முகத்துடன் அமர்ந்து கவனித்து கொண்டிருந்தார். இளையராஜா.

பதிவு செய்யப்பட்ட பாடலை கேட்கலாம் என்று ரெக்கார்டை அழுத்தினார்.

அனைவருமே ஆர்வம், பாடல் எப்படி வந்திருக்க போகிறதோ என்று இளையராஜா உட்பட.

ஆனால் ஆச்சரியம்…. ஒரு சத்தமும் வரவில்லை. ரெக்கார்ட் செய்ததே பதிவாகவில்லை.

இப்போது ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் வெடித்து சத்தம்போட்டு கதறி அழுதார் இளையராஜா.

ஜானகிக்கே ஒரு மாதிரி போய்விட்டது. அனைவருமே ஒன்றும் புரியாமல் முழித்தார்கள்.

முதலில் அறிமுகமாக எதிர்ப்பு, இரண்டாவது கரண்ட் கட், மூன்றாவதாக பதிவு செய்யப்பட்டது இல்லாமலிருந்தது…

என அனைத்தும் ராஜாவை புரட்டி போட்டது. 4-வது முறை முயற்சியில்தான் பாடல் மீண்டும் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

பட்டைய கிளப்பிய பாடல்கள் படம் வெளியானது.

அனைத்து பாடல்களுமே பட்டைய கிளப்பியது.

எம்ஜிஆர், சிவாஜி பாடல்களுடன் இந்தி பாடல்களான ஆராதனா, பாபி போன்ற படங்களின் பாடல்களை மொழியும், அர்த்தமும் தெரியாமல் தமிழக மக்கள் முனகிக்கொண்டிருந்த நேரம்.

ஆனால் அன்னக்கிளி வருகைக்கு பின்னர், வடநாட்டு பாடல்கள் என்ன வெளிவந்திருக்கின்றன,

அப்போதைய ஹிட் என்ன என்றே மக்களுக்கு தெரியாமல் போயிற்று.

அதை தெரிந்து கொள்ளவும் அவர்களுக்கு நாட்டமில்லாமல் போயிற்று. அந்த அளவுக்கு கட்டிபோட்டது.

ராஜாவின் முதல் பட ராகங்கள். அதுமட்டுமல்ல, வடநாட்டு இசைக்கலைஞர்களான ஆர்.பர்மன், நௌஷத் அலி, லதா மங்கேஷ்கர் போன்றோரும் தமிழகத்தை திரும்பி பார்த்து அதிசயத்து புருவங்களை உயர்த்தினர்.

ராஜாவின் இசையை கேட்டு! ரத்த நாளங்களில் கலந்த ராஜா அன்னக்கிளி பாடல்களை கேட்கும்போது தமிழக மக்களுக்கு ஏதோ ஒரு புது உணர்வு தென்பட்டது.

யாரோ புது இசையமைப்பாளர் தனக்காகவே, தன் மனதுக்கு பிடித்தவாறே இசையமைத்தது போல உள்ளதாக ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள்.

இலங்கை வானொலியில் பாடல் ஒலிபரப்பும் போது “இசை- இளையராஜா” என்று பாடலை ஒலிபரப்பும் முன் சொல்வார்கள்.

பல காலம் இளையராஜாவை பாக்க முடியாதவர்களுக்கு எல்லாம் கூட இசை-இளையராஜா என்பது மனனமாகி போன ஒன்றாக இருந்தது.

அன்னக்கிளி பட பாடல்களுக்கு இளையராஜா என்ன கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார், எந்தவித உணர்வில் பாடகர்களை பாடவைத்திருக்கிறார்,

இதையெல்லாம் யாரும் அறிந்துகொள்ள முயலவும் இல்லை, ஆராயவும் இல்லை. அவர்கள் உணர்ந்ததெல்லாம் ஆழ்மனதில் ஊடுருவி ரத்த நாளங்களில் கலந்துவிட்ட பாடல்களையும், அதன் இனிமையையும் தான்.

மணவிழாவை அலங்கரித்த பாடல் திருமண விழாக்களில், வாராயென் தோழி வாராயோ, மணமகளே மருமகளே வா வா என்ற 60’களின் பாடல்களே பிரதானமாக ஒலிபெருக்கிகளில் இடம் பெற்றிருந்தன.

ஆனால் சுத்தச் சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும்… பாடல் திருமண வீடுகளில் முதலிடத்தை பிடித்தது.

திருமண வீட்டு பந்தங்களை துள்ளி குதித்து ஆட்டம் போட வைத்தது. வைபவத்தின் உற்சாகத்தை மேலும் கூட்டி குதூகலமூட்டியது.

உலக்கையில் நெல் குத்தும் உஸ் உஸ் சத்தத்துடன், முல்லை வெள்ளி போல அன்னமும், வெள்ளி நூலாக இடியாப்பமும், பஞ்சு பஞ்சாக பணியாரமும், என கிராமிய உணவுகள் மூக்கை துளைத்து சென்றன.

காதலர்களின் காதல் வரிகள் அதிலும் அன்னக்கிளி உன்ன தேடுதே என்ற ஜானகியின் பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. பெண்ணின் ஏக்கம்,

நாள்கணக்கில் தனக்கு உரியவனுக்காக காத்திருக்கும் தவிப்பு, உறங்காத நினைவுகள், நீண்டு கொண்டிருக்கும் தனிமை கொடுமை… இவை அனைத்தையுமே வெளிப்படுத்தும் பாங்காக அமைந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், அப்போதைய ரோமியோக்களுக்கு பிடித்த பாடலாக இருந்துள்ளது.

காதலிக்கும் இளைஞர்கள் பெரும்பாலும் தங்கள் காதல் கடிதங்களில் பயன்படுத்தும் முக்கிய வரிகளாக அன்னக்கிளி உன்னை தேடுதே என்ற வரிகள் தலையாய இடம் பிடித்திருந்தது.

லாலி லாலி லலோ… என்று ஜானகியின் குரலில் ஆரம்பிக்கும்போதே உடல் சிலிர்த்துப் போனது.

இடையில் குயிலும், புல்லாங்குழலும் போட்டி போடு சத்தம் எழுப்ப, தபேலா உருட்டலுடன் அழுத்தமான கேள்விய கேட்டு சென்றது

மச்சான பாத்தீங்களா என்று!! இதில் இடையே திடீரென்று உருமியும் பறையும் நுழைந்து தாளம் போட வைத்தன.

பொதுவாக இழவு வீடுகளிலேதான் இந்த இசைக்கருவிகள் இசைக்கப்படும் என விமர்சனங்களும் வரத்தான் செய்தாலும், அத்தனையும் சுக்குநூறாக நொறுக்கிப் போட்டது ஒட்டுமொத்த பாடலும்!

இந்த பாடல் திரையிசையின் போக்கையே தன் பக்கம் இழுத்தது.

திரைப்பட பாடல்களில் ஒரு புது அத்தியாயத்தை சேர்த்தது. அன்னக்கிளி என்றதும் மச்சான பாத்தீங்களா என்ற பாடல் வரிகள் நம் மனதில் தானாக எழும் அளவிற்கு தமிழ் சினிமாவையே கட்டிப்போட்டது!

உணர்ச்சிபெருக்கில் ராஜா சொந்தமில்லை, பந்தமில்லை… பி.சுசிலாவின் பாடல் ஒட்டுமொத்த சோகத்தின் பிம்பம்…

அதுவரை மனதில் தேக்கி வைத்திருந்த அத்தனை சோகங்களும் வெடித்து சிதறி கதறி கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

இந்த பாடல்கள் வெளியான தினத்திலிருந்தே நாடி நரம்புகளில் கலந்துவிட்டார். படம் வெளியாகி ஒருவாரம் கழித்து இளையராஜா, சென்னை மெரினாவில் வாக்கிங் சென்றிருக்கிறார்.

அப்போது அன்னக்கிளி பாடல்கள் உப்புக்காற்றில் தவழ்ந்து வந்ததை கண்டு விக்கித்து நின்றார் ராஜா. இவ்வளவு தூரம் பாடல் சென்றடையும் என்று எதிர்பார்க்கவில்லை உணர்ச்சிப் பெருக்கில் சந்தோஷப்பட்டிருக்கிறார்.

பொதுவாக நம் தமிழ் மக்கள், காதல், இனிமை, ஏக்கம், தவிப்பு, தாய்மை, இயற்கை, சோகம், பக்தி என போன்ற உணர்வுகளில் பின்னிப் பிணைந்தவர்கள்.

அதனால்தான் தங்களது வாழ்வில், ஏதாவது ஒரு இளையராஜா பாடலுடன், ஏதாவது ஒரு உணர்வுடன் தொடர்புடையதாக பந்தம் தொடர்ந்து நீண்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எண்ணற்ற பிரிவுகள், பிளவுகள், சாதிகள் கொட்டி கிடந்தாலும் இளையராஜா என்று வந்துவிட்டால் அனைத்துமே சமநிலையாகிவிடுகிறது! அனைத்து தரப்பினரையும் ஒன்று சேர்க்கும் இணைப்பு புள்ளிதான் இளையராஜா.

இன்னும் எளிமையாக சொல்லப்போனால் “வேற்றுமையில் ஒற்றுமை”யை இளையராஜா பாட்டின்மூலம் காணலாம்-உணரலாம். இசைதாயின் திருமகன் பாலவர் வரதராஜனுடன் இணைந்து இளையராஜா, தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் கச்சேரி செய்ய நேரும்போது, பாமர மக்களின் உணர்வுகளையும், எண்ணங்களையும் நாடி பிடித்து பார்க்காமலே நேரடியாக மனதில் உள்வாங்கியிருந்தார்.

அதனால்தான், அவற்றினை தன் பாடல்களில் பிரதிபலிக்க செய்ய முடிந்தது.

உச்சிவெயிலில் கொண்டு போய் மண்டைய காய நம்மை நிறுத்தினாலும், பிரச்சனைகள் வெடித்து எரிச்சலின் உச்சத்தில் தகித்து கிடந்தாலும்…

இளையராஜாவின் ஒரு பாட்டு கேட்டால் போதும். அனைத்துமே கரைந்து உருகி மெழுகாய் வழிந்து ஓடிவிடும் என்பது நிதர்சனம்.

இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இசையின் பெருமகனை…

இசையை மீட்டுருவாக்கம் செய்து காலத்தின் கையில் வழங்கியவனை…

அதிசயங்களே அதிசயித்து பார்த்து கொண்டிருக்கின்றன!

அதனால்தான் அன்னக்கிளி பட பாடல் பதிவாகி இன்றோடு 44 வருடங்கள் கடந்தும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

எத்தனையோ தருணங்களில் எத்தனையோ மனித மனங்களின் காயங்களுக்கு இளையராஜாவின் பாடல்கள் மருந்தாகின… மருந்தாகி கொண்டிருக்கின்றன..

இனியும் இனிய மருந்தாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...