புர்ஜ் கலீஃபா – துபாய்
புர்ஜ் கலீஃபா துபாயில் உள்ள ஒரு வானளாவிய கட்டிடம் ஆகும்.
இதுவே உலகின் உயரமான கட்டிடமும் ஆகும்.
இது 163 மாடிகளைக் கொண்டது. 828 மீட்டர் அதாவது 2,716.5 அடி உயரமுள்ள இதன் கட்டுமானம் 2004, செப்டம்பர் 21 இல் ஆரம்பிக்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்து, 2010, ஜனவரி 4 ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது.
இந்த புர்ஜ் கலீஃபா கட்டிடம் உலகின் உயரமான நன்கொடைக் கட்டிடமாக இப்போது மாறியிருக்கிறது. எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்..?
துபாய் நகரின் அடையாளமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் பிரமாண்ட கட்டிடம் புர்ஜ் கலீஃபா தற்போது கருணையின் அடையாளமாக நிமிர்ந்து நிற்கிறது .
கொரோனா பாதிப்பினால் ஒரு வேளை உணவிற்கே அல்லல்படக்கூடிய 12 லட்சம் மக்களுக்கு உணவளித்து அவர்கள் வாழ்வில் ஒளியூட்டியிருக்கிறது இந்த புர்ஜ் கலீஃபா .
வண்ண வண்ண கண்ணாடி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உயர்ந்து நிற்கும் இந்தக் கட்டிடம், உயரிய மனிதர்களின் கொடைப் பண்பை உலகிற்கு பறை சாற்றும் விதமாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
12 லட்சம் வண்ண விளக்குகள் புர்ஜ் கலீஃபாவில் அலங்கப்பட்டிருந்த நிலையி்ல், இந்த ஒவ்வொரு விளக்கும் விற்பனைக்கு என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்த கண்ணாடி விளக்குகளை விற்கும்போதே, கொரானா கிருமியால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளின் உணவுக்காக இது செய்யப்படுவதாக சொல்லப்பட்டது.
கண்ணாடி விளக்குகள் உண்மையில் கழற்றி எடுத்து விற்கப்படவில்லை.
அதை ஒரு குறியீடாகச் சொல்லி விளக்கு விற்பனை என்று கூறப்பட்டது.
12 லட்சம் விளக்குகளும் அப்படியேதான் அங்கேயேதான் இருக்கும்.
ஆனால் அதற்கான விலையை மட்டும் விளக்கை வாங்க விரும்புபவர்கள் கொடுத்து விட வேண்டும்.
அப்படியொரு உயர்ந்த நோக்கில்தான் விளக்குகள் ஒவ்வொன்றும் ரூபாய் 100 மதிப்பில் விற்கப்பட்டன.
இந்த வணிகத்திற்குப் பின்னால் உள்ள மனிதநேயத்தைப் புரிந்துக் கொண்ட, மக்களும் கண்ணாடி விளக்குகளை போட்டி போட்டு வாங்கிக் கொண்டனர்.
வாங்கிய ஒவ்வொரு கண்ணாடி விளக்கும் ஒவ்வொரு மனிதனின் பசியைப் போக்கியது.
ஆம். 12 லட்சம் விளக்குகள் விற்பனை செய்யப்பட்டதில், 12 லட்சம் மனிதர்களின் பசி போக்கப்பட்டது.
இதனைக் கொண்டாடும் விதமாக, பூர்ஜ் கலீஃபா மீண்டும் விளக்குகளை ஒளிர விட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. அதில், இந்த நிகழ்வைப் பற்றியும், இதனால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை பற்றியும் குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன.
வணிகம் என்பதே மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டது என்ற தற்காலிக நுகர்வு மனநிலையை உடைத்துக் கொண்டு ஒளிர்கிறது இந்தக் கட்டிடம்.
தனி மனிதனுக்கு உணவில்லையெனில் உலகம் அழிந்து போகட்டும் என்ற வரிகளுக்கு மாற்றாக, உணவளித்து உலகிற்கே ஒளியூட்டுவோம் என்ற புதிய கவிதையைப் படைத்திருக்கிறது புர்ஜ் கலீஃபா.
இனிமேல், புர்ஜ் கலீஃபா உலகின் உயரமான கட்டிடமல்ல, மானுடம் என்றும் வீழாது என்பதை உயர்த்திச் சொல்லும் அடையாளச் சின்னமாகவும் மாறியுள்ளது!