30 வகை தயிர் -மோர் ரெசிபி !

 30 வகை தயிர் -மோர் ரெசிபி !

30 வகை தயிர் -மோர் ரெசிபி ! கோடைக் கால உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு வகைகள்

ஸ்ரீகண்ட்

தேவையானவை:
கெட்டித் தயிர் – 100 கிராம், பொடித்த சர்க்கரை – 25 கிராம், குங்குமப்பூ (பாலில் ஊற வைக்கவும்) – கால் டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டி தண்ணீர் வடியும் வகையில் 2 மணி நேரம் வைக்கவும். தண்ணீர் முழுவதுமாக வடிந்ததும் தயிரை ஒரு பாத்திரத்தில் போடவும். இதில் பொடித்த சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை சிறிய கப்களில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

பூசணி – தயிர் பச்சடி
தேவையானவை:
வெண் பூசணி – ஒரு கீற்று, தயிர் – 100 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பூசணிக்காயைத் துருவி நீரை வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி… கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பூசணித் துருவலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பச்சை மிளகாய், சீரகம் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, உப்பு சேர்த்து தயிருடன் கலக்கவும். வதக்கிய பூசணியை, தயிர் கலவையுடன் கலந்து பரிமாறவும்.

மின்ட் கூலர்

தேவையானவை:
மோர் – 150 மில்லி, புதினா இலை – 12, இஞ்சித் துருவல், மிளகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
புதினா, இஞ்சி, மிளகு, சீரகம், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து, மோரில் கலக்கவும். நன்றாக குளிர வைத்துப் பரிமாறவும்.

மாம்பழ ஸ்மூத்தி

தேவையானவை:
மாம்பழம் – 1, பொடித்த சர்க்கரை – 2 டீஸ்பூன், கெட்டித் தயிர் (துணியில் கட்டி நீரை வடித்து எடுக்கவும்) – 50 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் – சிறிதளவு.

செய்முறை:
மாம்பழத்தை நறுக்கி துண்டுகளாக்கவும். கொஞ்சம் துண்டுகளை தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதியை கூழாக்கவும். இதில் சர்க்கரை, வடிகட்டிய தயிர், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சிறிய கப்களில் மாம்பழக் கலவையை ஊற்றி, மாம்பழத் துண்டுகளை மேலாகத் தூவி, குளிர வைத்துப் பரிமாறவும்.

வெள்ளரி மோர்

தேவையானவை:
தயிர் – 100 கிராம், சிறிய வெள்ளரிக்காய், பச்சை மிளகாய் – தலா 1, நறுக்கிய கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெள்ளரிக் காயை நறுக்கி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து மிக்ஸியில் இரண்டு முறை சுற்றி… தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். வடிகட்டி குளிர வைத்துப் பரிமாறவும். தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

இஞ்சி – தயிர் பச்சடி

தேவையானவை:
இஞ்சித் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், தயிர் – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந் ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப் பிலை சேர்த்து தாளிக்கவும். துருவிய இஞ்சியை அதில் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். தயிரில் உப்பு சேர்த்துக் கலக்கி, வதக்கிய இஞ்சித் துருவல் கலவையுடன் கலந்து பரிமாறவும்.

இது ஜீரணத்துக்கு மிகவும் நல்லது.

கார்ன் தயிர் வடை

தேவையானவை:
சோள முத்துகள் – 100 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 4, தயிர் – 100 கிராம், பெருங்காயத் தூள், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு சிட்டிகை, நறுக்கிய கறிவேப்பிலை கொத்த மல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
சோளத் துடன் இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வடைக்கு அரைப்பது போல் அரைக்கவும். அரைத்த மாவை வடை போல் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

தயிருடன் உப்பு சேர்த்து அடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து தயிரில் சேர்க்கவும். வடைகளின் மேலாக தயிரை ஊற்றி… மிளகாய்த்தூள், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

சேமியா பகாளாபாத்

தேவையானவை:
சேமியா – 100 கிராம், தயிர் – 50 கிராம், பால் – 50 மில்லி, இஞ்சித் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, திராட்சை, மாதுளை முத்துக்கள் – ஒரு கைப்பிடி, ஆப்பிள் துண்டுகள் – 3 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கொதிக்கும் நீரில் சேமியாவைப் போட்டு, ஒரு நிமிடம் வைத்திருந்து வடிகட்டவும், கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கவும். இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தயிர், உப்பு ஆகியவற்றை தாளிப்புடன் சேர்த்துக் கலக்கவும். இதை சேமியாவில் சேர்த்துக் கலந்து… பால், பழங்களை சேர்த்து நன்றாகக் கிளறவும்.

அப்படியே சாப்பிடலாம். அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.

பழ தயிர் பச்சடி

தேவையானவை:
ஆப்பிள், வாழைப்பழம் – தலா 1, கறுப்பு, பச்சை திராட்சை (சேர்த்து) – 50 கிராம், மாதுளை முத்துக்கள் – 2 டேபிள்ஸ்பூன், ஆரஞ்சு சுளைகள் – 10, பப்பாளி – ஒரு பெரிய துண்டு, ஸ்ட்ராபெர்ரி – 4, தயிர் – 100 கிராம், தேன் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
பழங்களைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் எல்லாப் பழங்களையும் போட்டு, தயிர் சேர்த்து நன்றாகக் கிளறவும். மேலாக தேனை ஊற்றிப் பரிமாறவும்.

விருந்தில் பரிமாறுவதற்கு ஏற்ற ரிச்சான பச்சடி இது!

வெந்தய தயிர் பச்சடி
தேவையானவை:
முளைகட்டிய வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன், தயிர் – 100 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
முளைகட்டிய வெந்தயத்தை ஆவியில் 5 முதல் 8 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். வேக வைத்த வெந்தயத்தை சேர்த்துக் கிளறி… தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

சுகர் பிராப்ளம் உள்ளவர்களுக்கு ஏற்ற குளுமையான பச்சடி இது.

டிரை ஃப்ரூட்ஸ் ரெய்தா
தேவையானவை:
முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட் (பொடியாக நறுக்கவும்) – தலா 2 டீஸ்பூன், பேரீச்சம்பழத் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், தயிர் – 100 கிராம், காய்ந்த திராட்சை – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – அரை டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:
நெய்யில் திராட்சையை வறுக்கவும். தயிரில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட்டை தயிர் கலவையுடன் சேர்க்கவும். பேரீச்சம்பழத் துண்டுகள், வறுத்த திராட்சையையும் அதில் சேர்த்துக் கலக்கவும்.

விருந்துக்கு ஏற்ற சுவையான டிரை ஃப்ரூட்ஸ் ரெய்தா ரெடி!

மலாய் லஸ்ஸி

தேவையானவை:
தயிர் – 100 கிராம், பால் ஏடு, பொடித்த சர்க்கரை – தலா 2 டேபிள்ஸ்பூன், சீரகத்தூள் – கால் டீஸ்பூன், ரோஸ் வாட்டர் – 3 சொட்டு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:
தயிருடன் உப்பு, சீரகத்தூள், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். இதை டம்ளரில் ஊற்றி மேலாக பால் ஏடு, ரோஸ் வாட்டரை சேர்த்துப் பரிமாறவும்.

இது… ஜீரண சக்தியைக் கூட்டும்.

தயிர் மினி இட்லி

தேவையானவை:
மினி இட்லி – 20, தயிர் – 100 கிராம், சாட் மசாலா – ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு – தலா கால் டீஸ்பூன், மாதுளை முத்துக்கள், முளைகட்டிய பயறு – தலா 4 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை:
தயிருடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், சாட்மசாலா சேர்த்துக் கலக்கவும். இதனுடன் மாதுளை முத்துக்கள், முளைப்பயறு, மினி இட்லி சேர்த்துக் கலந்து, கொத்துமல்லி தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால் ஆப்பிள், திராட்சை, அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி பழங்களையும் சேர்க்கலாம்.

சத்தான, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு இது.

ஜவ்வரிசி மோர் தோசை

தேவையானவை:
ஜவ்வரிசி – 100 கிராம், புழுங்கலரிசி – 150 கிராம், பச்சை மிளகாய் – 8, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, மோர் – 100 மில்லி, வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அரிசியைத் தண்ணீரிலும், ஜவ்வரிசியை மோரிலும் ஒரு மணி நேரம் ஊற வைத்து, முதலில் அரிசியைத் தனியே அரைக்கவும். மோரில் ஊறிய ஜவ்வரிசியுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். இரண்டு மாவையும் ஒன்றாக சேர்த்து… வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மெல்லிய தோசைகளாக சுட்டெடுக்கவும்.

காரச் சட்னி இதற்கு சரியான ஜோடி

புளி சேரி

தேவையானவை:
தயிர் – 100 கிராம், வெண் பூசணி – ஒரு கீற்று, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், சீரகம், துருவிய இஞ்சி – தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 6, கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பூசணியைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீர்,

மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். தேங்காயுடன் சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அரைத்து, வெந்த பூசணி, சின்ன வெங்காயம் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். தயிர் சேர்த்துக் கிளறவும். தேங்காய் எண்ணெயைக் காய வைத்து… கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, வெந்த பூசணி-தயிர் கலவையில் சேர்த்துப் பரிமாறவும்.

கேரளாவில் விருந்து, பண்டிகை நாட்களில் இந்த பதார்த்தம் கட்டாயம் இடம் பெறும், பெரிய வெள்ளரி அல்லது சுரைக்காய் பயன்படுத்தியும் செய்யலாம்.

கத்திரிக்காய் – தயிர் கிரேவி

தேவையானவை:
கத்திரிக்காய் – கால் கிலோ (நீளமாக நறுக்கவும்), தயிர் – 100 கிராம், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 1 (நறுக்கவும்),
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

கிரேவிக்கு அரைக்க:
பட்டை, இஞ்சி – தலா ஒரு சிறிய துண்டு, சீரகம் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கசகசா – ஒரு டீஸ்பூன், மிளகு – 8, பூண்டு – 4 பல், பச்சை மிளகாய் – 6.

செய்முறை:
தயிருடன் இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.

அரைக்கக் கொடுத்துள்ளதை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கி… அரைத்த விழுதைச் சேர்த்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். இதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, தயிர் கலவை, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து வரும்போது வதக்கிய கத்திரிக்காய் சேர்த்து மூடி, அடுப்பை ‘சிம்’மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

உருளை – தயிர் கிரேவி
தேவையானவை:
சிறிய உருளைக்கிழங்கு – 12, தயிர் – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 5, சோம்பு – கால் டீஸ்பூன், பட்டை – ஒரு சிறிய துண்டு, ஏலக்காய், கிராம்பு – தலா 1, நறுக்கிய கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்துக் கொள்ளவும். தேங்காயுடன் பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து அரைக்கவும் கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். அரைத்த விழுதுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலக்கி உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் தயிர் சேர்த்துக் கலந்து இறக்கி, கொத்தமல்லி, புதினா தூவவும்.

தஹி பிண்டி

தேவையானவை:
வெண்டைக்காய் – கால் கிலோ, தயிர் – 100 கிராம், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி, துண்டுகளாக நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு 3 நிமிடம் வதக்கி தனியே வைக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி… சீரகத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, இஞ்சித் துருவல், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். வதக்கிய வெண்டைக்காய், தயிர், உப்பு சேர்த்து, மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

இது, சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்!

தஹி பக்கோடா

தேவையானவை:
பச்சைப் பயறு – 100 கிராம், கறுப்பு உளுந்து – 50 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, சீரகம் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தயிர் – 150 கிராம், மிளகாய்த்தூள், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பச்சைப் பயறு, உளுந்து இரண்டையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து… இஞ்சி, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக் கவும். இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பொரித்த வற்றை தண்ணீரில் போட்டு தனியே எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில், தயிரை விட்டு உப்பு, சேர்த்துக் கலக்கவும். இதில் பக்கோடாக் களைப் போட்டு… மிளகாய்த் தூள், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

தஹி பூரி

தேவையானவை:
மைதா – 50 கிராம், ரவை, கேரட் துருவல் – தலா 2 டேபிள்ஸ்பூன், வேக வைத்த உருளைக்கிழங்கு – 2, சாட் மசாலா – அரை டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் – தலா கால் டீஸ்பூன், தயிர் – 100 கிராம், நறுக்கிய கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
மைதாவில் ரவை, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து… சிறு சிறு பூரிகளாக இட்டு, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வெந்த உருளைக்கிழங்கை மசித்து… கேரட் துருவல், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். தயிரில் மிளகுத்தூள், சீரகத்தூள், சாட் மசாலா சேர்த்துக் கலக்கவும்.

பூரிகளின் நடுவே சிறு ஓட்டை போட்டு, அதனுள் மசித்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து, மேலாக தயிர் ஊற்றி… கொத்தமல்லி, புதினா தூவி பரிமாறவும்.

மார்வாரி கடி

தேவையானவை:
புளித்த தயிர் – 100 கிராம், கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, பிரிஞ்சி இலை – 2, கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
தயிருடன் கடலை மாவு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விட்டு கலந்து, மிதமான தீயில் 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். மற்றொரு கடாயில் நெய் விட்டு… கடுகு, பெருங்காயத்தூள், பிரிஞ்சி இலை, காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும். மிளகாய்த்தூளை ஒரு டீஸ்பூன்தண்ணீரில் கரைத்து, தயிர் கலவையில் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.

சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.

உருண்டை மோர்க்குழம்பு
தேவையானவை:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 50 கிராம், சோம்பு, மஞ்சள்தூள், கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகு – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, மோர் – 200 மில்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து… சோம்பு, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். தேங்காயுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து, தண்ணீர் விட்டு நீர்க்க கரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து… உப்பு, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை ‘சிம்’மில் வைத்து ஒவ்வொரு உருண்டைகளாகப் போடவும். எல்லாம் சேர்ந்துக் கொதித்ததும், மோரில் சிட்டிகை உப்பு,மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கி, குழம்புடன் சேர்த்து, கொதித்து வரும்போது இறக்கவும். தேங்காய் எண்ணெயை மேலாக ஊற்றவும்.

ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி

தேவையானவை:
தயிர் – 100 கிராம், ஸ்ட்ரா பெர்ரி பழம் – 4, பொடித்த சர்க்கரை – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:
பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி பழத்துடன் தயிர், சர்க்கரை, உப்பு சேர்த்து நன்றாக நுரை வரும்வரை மிக்ஸியில் அடிக்கவும். குளிர வைத்துப் பரிமாறவும்.

சூரத் கடி

தேவையானவை:
தயிர் – 150 கிராம், கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி-பச்சை மிளகாய் விழுது, சர்க்கரை, நெய், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
தயிரை நன்றாகக் கடைந்து, கடலை மாவு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் தேவையான தண்ணீர், சீரகம், இஞ்சி-பச்சை மிளகாய் விழுது, சர்க்கரை, உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் நெய், எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கறிவேப்பிலை தாளித்து, தயிர் கலவையை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து வரும்போது கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். சூடான சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.

தஹி ரிங் சாட்

தேவையானவை:
அரிசி மாவு – 50 கிராம், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சாட் மசாலா – அரை டீஸ்பூன், ஓமப்பொடி – 2 டேபிள்ஸ்பூன், கேரட் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, தயிர் – 100 கிராம், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அரிசி மாவுடன் உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை கையில் எடுத்து சிறு சிறு வளையம் போல் வட்ட வடிவமாக (ரிங்) சுற்றிக் கொள்ளவும். இதை ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் வெந்த ரிங்க் துண்டுகள், கேரட் துருவல், வெங்காயம், சிறிதளவு உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள், சாட் மசாலா, தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஓமப்பொடி, கொத்த மல்லியை மேலாகத் தூவி பரிமாறவும்.

இன்ஸ்டன்ட் தயிர் வடை

தேவையானவை:
பிரெட் ஸ்லைஸ் – 8, தயிர் – 50 கிராம், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி விழுது – தலா ஒரு டீஸ்பூன், கேரட் துருவல் – 2 டீஸ்பூன், வெங்காயம் – 1 (நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பிரெட் துண்டுகளின் ஓரத்தை வெட்டி எடுத்துவிட்டு உதிர்த்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தயிர், கேரட், வெங்காயம், இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, உதிர்த்த பிரெட்டை சேர்த்துக் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதில் சிறிது எடுத்து வடை போல் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். பரிமாறும்போது தயிரை சிறிது சிறிதாக ஊற்றி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

தஹி பனீர்

தேவையானவை:
பனீர் – 200 கிராம், தயிர் – 100 கிராம், இஞ்சி, பட்டை – தலா ஒரு சிறிய துண்டு, மஞ்சள்தூள், சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன், பூண்டு – 4 பல், பச்சை மிளகாய் – 4, கசகசா, சீரகம் – தலா அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, வெங்காயம் – 1 (நறுக்கவும்), புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
இஞ்சி, பூண்டு, சீரகம், கசகசா, பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும், கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிரிஞ்சி இலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் பனீர் துண்டுகள், உப்பு, அரைத்த விழுது சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தயிருடன் உப்பு, மஞ்சள்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கி, பனீர் கலவையுடன் சேர்த்துக் கிளறி… புதினா, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சப்பாத்தி, புலாவ் வகைகளுக்கு ஏற்ற சைட் டிஷ் இது.

கம்பு மோர்க்கூழ்

தேவையானவை:
கம்பு மாவு – 100 கிராம், மோர் – 150 மில்லி, சின்ன வெங்காயம் – 6, சீரகம் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து… அதில் கம்பு மாவு, உப்பு, சீரகம் சேர்த்துக் கூழாக காய்ச்சவும். காய்ச்சிய கூழை ஆற வைத்து, மோர் சேர்த்துக் கலக்கவும். இதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துப் பருகவும்.

மாம்பழ மோர்குழம்பு

தேவையானவை:
மாம்பழம் – 1, தயிர் – 100 கிராம், இஞ்சி – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், தேங்காய் ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொதிக்கவிடவும். இதில் உப்பு, கடைந்த தயிர், மாம்பழத் துண்டுகள் சேர்த்து, கொதித்து வந்ததும் இறக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும்.

மோர் வடை

தேவையானவை:
புழுங்கலரிசி, புளித்த மோர் – தலா 200 கிராம், ஜவ்வரிசி – 50 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் – 5, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அரிசியை மோரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து… இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து மீண்டும் அரைக்கவும். ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடித்து, அரைத்த மாவுடன் சேர்க்கவும். இதனுடன் உப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து, சிறிய வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...