மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா, மாமன்ற கூட்டத்தில் முன்வைத்திருக்கிறார். இதில், மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவை உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் தொடங்கி, அண்ணா நினைவிடம் வரை இந்த ரோப் கார் சேவை முதற்கட்டமாக தொடங்கப்பட இருக்கிறது.

சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ், மெரினா தொடங்கி பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவையை கொண்டுவர சென்னை மாநகராட்சி கடந்த 2022ம் ஆண்டே முடிவு செய்திருந்தது. இதற்கான ஆலோசனைகள் மற்றும் ஆய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த பணிகளின் ஒரு பகுதியாக, லைட் ஹவுஸ் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க கடந்த 2024ம் ஆண்டு சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியிருந்தது.

இதற்காக தனியார் நிறுவனம் சமீபத்தில் மெரினாவில் 30 அடி வரை பள்ளம் தோண்டி மண் பரிசோதனையை மேற்கொண்டிருந்தது. இது மீனவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கையில் தற்போது சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரோப் கார் சேவை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரோப் கார் அமைக்கப்பட்டால் சுமார் 50-100 அடி உயரத்திலிருந்து மெரினாவின் அழகை ரசிக்க முடியும். மட்டுமல்லாது ரோப் கார் குளிரூட்டப்பட்ட பெட்டிகளாக அமைக்கப்பட உள்ளது.

ரோப் கார் கடலோரப் பகுதிகளில் அமைக்கப்படுகிறது என்பதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறுவது என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்த ரோப் கார் இடையில் 2 நிறுத்தங்களை கொண்டிருக்கும். ஒன்று கண்ணகி சிலை மற்றொன்று விவேகானந்தர் இல்லம். ஒரு கேபினில் 8-10 வரை அமர்ந்து பயணிக்க முடியும். அதேபோல, இத முழுக்க சூரிய மின்சக்தியால்தான் இயங்கும். எனவே, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.285 கோடியாகும். இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அறிக்கை கிடைத்தவுடன் கட்டுமானத்திற்கான டெண்டர் கோரப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!