புதுச்சேரியிலிருந்து “வள்ளியப்பா”

புதுச்சேரியின் “புதுவை பாரதி” என்ற மாத அச்சிதழ், இலக்கிய வட்டத்தில் தமிழகம், புதுவை என வாசகர்களையும் படைப்பாளிகளையும் எழுத்தாளுமைகளையும் கொண்டதாகும். அத்தகையச் சிறப்பான இதழுக்காகத் தன் அளப்பரிய உழைப்பினை அளித்த ஆசிரியர் பாரதிவாணர் சிவா அவர்களை யாவரும் அறிவர். மேலும், கலை, இலக்கியம், இதழ்ப்பணி முதலான அனைத்திற்கும் அவர்தம் குடும்பத்தினரும் மனமுவந்து ஒன்றிணைந்து, தோள் கொடுப்பவர்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

“புதுவை பாரதி” இதழை நாற்பதாண்டுக் காலமாக நடத்தி வந்தவரான, அகவை அறுபது கடந்த, பாரதிவாணர் சிவா அவர்களின் திறன் முகங்கள் பலவாகும். நல்வாழ்க்கைக் குடும்பத் தலைவர், பாரதி பற்றாளர், “புதுவை பாரதி” இதழ்ப் பணியாளர், ஓவிய ஆசிரியர், பள்ளி ஆசிரியர், பேச்சாளர், சமூகச் சிந்தனையுடன் கூடிய செயற்பாட்டாளர், சிறார்களுக்கான இலக்கியகர்த்தா, நாடக நடிகர், வானொலி, தொலைக்காட்சி நிகழ்வுகளின் பங்கேற்பாளர், தமிழகத்திலும் அயலகத்திலும் இலக்கிய நிகழ்வுகளின் பங்கேற்பாளர், தக்காரைத் தக்க நேரத்தில் பாராட்டி வாழ்த்துபவர் என ஆளுமைத் தன்மை உடையவர் பாரதிவாணர் சிவா அவர்கள்.

கடந்த 2025ஆம் ஆண்டு வரை இதழ்ப்பணியில், “புதுவை பாரதி”யை புதுச்சேரியில் மீண்டும் பாரதியாகவே நிறுத்தி அழகு பார்த்தவர், இந்த 2026ஆம் ஆண்டு, சனவரி முதல் “வள்ளியப்பா” எனும் சிறார் இலக்கியக் காலாண்டிதழ் வாயிலாகச் சிறார் இலக்கியப் பரப்பினை முன்னிறுத்த விழைந்துள்ளார்.

தற்போதையச் சூழலில், சிறார்களுக்கான இலக்கியம், இதழ்கள் மற்றும் படைப்பாளர்கள் போதுமான அளவில் இல்லை. இந்நிலையின் நிதர்சனத்தை மறுப்பார் இலர். இந்நிலை மாற்றத்திற்கான முன்னெடுப்பாக, நம் பாரதிவாணர் அவர்கள், ஏற்கனவே, “புதுவை பாரதி” இதழில், 2006ஆம் ஆண்டு தொடங்கிய “சின்னஞ்சிறு மலர்”பகுதியின் நீட்சியாக, இப்போது “வள்ளியப்பா” சிறார் இலக்கியக் காலாண்டிதழ் மலர்ந்துள்ளது. இவ்விதழானது, சிறார்ப் படைப்பாளர்களை, சிறார்களுக்கானப் படைப்பாளர்களை உருவாக்கவும் அவர்களுக்கான வாசக வட்டத்தை இன்னும் விரிவாக்கம் செய்வதாகவே அமைகிறது.

இத்தகைய, இவ்விதழின் ஆசிரியராக, “குழந்தை இலக்கிய ரத்னா” பாரதிவாணர் சிவா, உதவி ஆசிரியராக ந. ஆறுமுகம், ஆசிரியர் குழு உறுப்பினராக, ந. அருள் ஜோதியன், ஆலோசனைக் குழு உறுப்பினராக சி. ராஜேஸ்வரி எனப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

“வள்ளியப்பா”வை வாஞ்சையுடன் வரவேற்கிறோம்!

செய்தி தொகுப்பு : கவிஞர் மாலதி இராமலிங்கம், புதுச்சேரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!