முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் இலாசுப்பேட்டை கிளை சார்பில் ‘பொங்கல் சிறப்பு நிகழ்வு’

14.01.2026 அன்று நடைபெற்றது. அன்பரசி ஜூலியட் வரவேற்புரையாற்றினார். கி.ரா.வின் ‘மின்னல்’ சிறுகதையினை கவிஞர் ப.குமரவேல் சிறப்பான முறையில் அனைவரும் ரசிக்கும்படியாக வாசித்தார். அதனைத் தொடர்ந்து பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’ நூலினை எழுத்தாளர் புதுவை சீனு தமிழ்மணி சுருக்கமாக வழங்கினார். ‘வள்ளலாரின் கருத்துக்களில் மேலோங்கி நிற்பது – ஆன்மீகமா ? சமூக நீதியா’ எனும் தலைப்பில் பாவலர் சு.சண்முகசுந்தரம் அவர்கள் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. ‘ஆன்மீகமே’ எனும் அணியில் சு.ஜானகிராமன், உமா அமர்நாத் ஆகியோர் வாதிட்டனர். ‘சமூக நீதியே’ எனும் அணியில் மணி கலியமூர்த்தி, ஸ்ரீ ஜெயஸ்ரீ ஆகியோர் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நடுவர் ‘வள்ளலாரின் கருத்துக்களில் மேலோங்கி நிற்பது சமூக நீதியே” என்று தீர்ப்பு வழங்கினார். இரு தரப்பு அணியினர் பல்வேறு தகவல்களையும் திரட்டி ரசிக்கும்படி வழங்கி அனைவரின் பாராட்டைப் பெற்றனர்.

‘மனதில் உறுதி வேண்டும்’ எனும் தலைப்பில் கவியரங்கம் கவிஞர் புதுவைப்பிரபா தலைமையில் நடைபெற்றது. கவிஞர்கள் ஆதி சுப சரவணன், க.சொ.செயலட்சுமி, மாலதி இராமலிங்கம், இரா விஜயா, அருள் ஜோதியன் ஆகியோர் சுவை குன்றாமல் கவிதை வாசித்தனர். சோ.தமிழ்மணி நன்றியுரை கூற நிகழ்வினை முடித்து வைத்தார். நிகழ்ச்சியினை கவிஞர் புதுச்சேரி லெனின்பாரதி நெறிப்படுத்தினார். பங்கேற்ற படைப்பாளிகளுக்கு சான்றிதழும், பருத்தி ஆடையும் போர்த்தப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.

பார்வையாளர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக தலைவர் விழாவில் முழுமையாக பங்கேற்றவர்களின் பெயர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து மூன்று நபர்களுக்கு தலைவர் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். முதல் பரிசு ரூ.500/-யினை மாலதி ராமலிங்கம் அவர்களும், இரண்டாம் பரிசு ரூ.300/-யினை ரமேஷ் அவர்களும், மூன்றாம் பரிசு ரூ.200/- யினை ப.குமரவேல் அவர்களும் பெற்றனர்.

செய்தி தொகுப்பு : கவிஞர் மாலதி இராமலிங்கம், புதுச்சேரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!