சமூக வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்தில் புத்தகங்களின் பங்கு அளப்பரியது. புத்தக வாசிப்பு என்பது குழந்தை முதல் முதுமை வரை படிக்கும் பழக்கத்தை முக்கியமானதாக வைத்திருக்க வேண்டியுள்ளது. அவ்வகையில், நான்கு பருவத்தினருக்குமான நூல்களை வெளியிடும் விழாவை, புதுச்சேரி, நடைவண்டி சிறுவர் கலை இலக்கியக் கழகம் ஒருங்கிணைத்தது. புதுச்சேரியில் உள்ள, புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் 02-01-2026 (வெள்ளி) அன்று இந்நூல் வெளியீடு நிகழ்வு சிறப்புற நடந்தது.
இளம் குழந்தைகளுக்கான, தமிழக அரசின் இளந்தளிர் இலக்கியத் திட்ட நூல்கள், வாசிப்பு இயக்க நூல்கள், காத்தாடிக்கதைகளும் மு.பா. வின் பாடல்களும் – வெளியிடப்பட்டது. வளரும் குழந்தைகளுக்கான, வளர்கிறேன் பெண், ஆண் என்னும் நூலும் இளையோர் நாவலான, நினைவோ ஒரு பறவையும் பெற்றோர்களுக்கான, பேசும்பொற்சித்திரமே என்னும் நூலும் ஆசிரியர்களுக்கான, கற்றல் கற்பித்தல் போன்ற விதம் விதமான நூல்கள் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்விற்கு, திரு. செந்தில் செல்வன் வரவேற்புரை அளித்தார். திரு. மு.பாலசுப்பிரமணியன் அறிமுகவுரை ஆற்ற, கவிஞர் இரா.மீனாட்சி, பேராசிரியர் மீனா, திரு கண்ணன், ஃப்ரஞ்ச் நிறுவனம், எழுத்தாளர் அமரந்தா, ரேவதி, வானவில் பள்ளி – ஜெ. கிருஷ்ணமூர்த்தி என பலர் உரை நிகழ்த்தினர். குழந்தைகள் சிலர், புத்தகம் பற்றி பேசி புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர். எழுத்தாளர், சாலை செல்வம் ஏற்புரை நிகழ்த்தினார். கீதா நன்றியுரை கூறினார். எழுத்தாளர் இளவரசி சங்கர் அவர்கள் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்.
வகம் பதிப்பகம், புதிதாகத் தொடங்கப்பட்ட செம்மண் பதிப்பகம், கற்றளி பதிப்பகம் என பதிப்பகத்தினரும் பங்கு கொண்டனர். நிகழ்வில் சிறார்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் இலக்கிய வட்டத்தினர் எனப் பலரும் கலந்துகொள்ள விழா இனிதே நிறைவுற்றது.
