பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து இறுதிநாளான நேற்று மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் அருள்பாலித்தார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 20-ந்தேதி பகல்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்கியது. பகல் பத்து 10-ம் திருநாளான நேற்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பாற்கடலை கடைந்து கிடைத்த அமுதத்தை அசுரர்கள் பறித்துக் கொள்ள, தேவர்கள் திருமாலை சரணடைந்தனர். அவரும் மோகினியாக தோன்றி, தேவர்களுக்கு அமுதம் கிடைக்கச்செய்தார். இதை நினைவூட்டும் வகையில் இந்த மோகினி அலங்கார காட்சி நடைபெற்றது.

இதற்காக நேற்று காலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து மோகினி அலங்காரத்தில் புறப்பட்ட நம்பெருமாள் 7 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தார். அங்கு மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சவுரி சாயக்கொண்டை, காதில் வைர மாட்டல், வலது திருமூக்கில் மூக்குத்தி, திருமேனியில் தாயார் வைரத்திருமாங்கல்யம், திருக்கையில் வளையல், திருவடியில் சதங்கை, பின் சேவையாக பின்னல் ஜடை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து காட்சியளித்தார். நம்பெருமாளின் மோகினி அலங்காரம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக ராப்பத்து திருவாய்மொழி திருநாள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கியது. இதன்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து நம்பெருமாள் தனுர் லக்னத்தில் புறப்பட்டு வெளியில் வந்தார்.

2-ம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே 3-ம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருகை தந்தார். அதிகாலை 5.45 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசல் வழியாக எழுந்தருளினார். அப்போது ‘கோவிந்தா கோவிந்தா’ .. ரங்கா.. ரங்கா.. என்று பக்தி பரவசத்துடன் பக்தர்கள் முழக்கமிட்டனர்.

பின்னர் நம்பெருமாள் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வருகிறார். அங்கு பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். அதன்பின் சாதரா மரியாதையாகி (பட்டு வஸ்திரம் சாற்றுதல்) ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின்னர் இரவு 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன், இரவு 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் நேற்று மதியம் முதல் ஸ்ரீரங்கத்தில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும்..

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன்படி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிகோவில், மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சேலம் கோட்டை பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

மேலும் நீடாமங்கலம் சந்தானராமர் கோவில், கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சென்ராய பெருமாள் கோவில், காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் ஆகிய பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில், பல்வேறு பெருமாள் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!