உரத்த சிந்தனை அமைப்பின் பாரதி உலா 9 ஆவது நிகழ்ச்சி

உரத்த சிந்தனை அமைப்பின் பாரதி உலா 9 ஆவது நிகழ்ச்சி,

சென்னை குரோம்பேட்டையில் உள்ள SDNB மகளிர் வைஷ்ணவா கல்லூரியில் நேற்று   23.12.25 அன்று  மதியம் நடைபெற்றது.

கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ஹேமலதா தலைமை தாங்கினார்.

தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ச.துர்கா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

பாரதியாரின் பாடல்களுக்கு மாணவிகள், தனியாகவும்  வாகவும் குழுவாகவும் சிறப்பாக நடனமாடினர்.

மாணவிகளின் பேச்சரங்கம், பாடலரங்கம் உற்சாகமாகத் தொடர்ந்தது.

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த, உரத்தசிந்தனை தலைவர் பத்மினி பட்டாபிராமன், மாணவிகளின் உரையிலிருந்து கேள்விகள் கேட்டார்.

சரியான விடை சொன்ன மாணவிகளுக்கு பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய திருக் குறள் இரண்டு வரிக் காவியம் நூல் பரிசாக அளிக்கப்பட்டது.

தனது தலைமை உரையில் ஹேமலதா, மாணவிகள்,பாரதியாரின் சிந்தனைகளை  மனதில் பதிய வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து துணை முதல்வர் (சுயநிதி  பிரிவு) முனைவர் கலைவாணி,

கலைப்புல முதன்மையர் முனைவர் பத்ம விலாசினி இருவரும் வாழ்த்துரை வழங்கி உரத்த சிந்தனை அமைப்பைப்  பாராட்டினர்.

அடுத்துப் பேசிய சென்னை ஸ்ருதிலய வித்யாலயா நாட்டியப் பள்ளி முதல்வர் கலைமாமணி பார்வதி பாலசுப்ரமணியம்,

பத்மினி பட்டாபிராமன்  இருவரும் மாணவிகளின் திறமைகளைப் பாராட்டினர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், மாணவிகளைப் பாராட்டி, பரிசுகள் வழங்கியதோடு, தன் சிறப்புரையில்,நூல்கள் வாசிப்பு என்பது அவசியம் என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியை  பேராசிரியை சுகந்தி அன்னத்தாய்  ஒருங்கிணைத்திருந்தார்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய, உரத்த சிந்தனையின் பொதுச்செயலாளர் உதயம் ராம், ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.

உரத்த சிந்தனை பொருளாளர் தொலைப்பேசி மீரான் நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில்,  NR. பாலசுப்ரமணியம் பேராசிரியர் பட்டாபிராமன்,  பிச்சம்மாள், இந்திராணி தங்கம், திரு.தங்கம், ஆர்ட்டிஸ்ட் மணி, ரமேஷ், எடிட்டர் ராஜாராம் திருமதி சாந்தி பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் பேசுகையில்,

குரோம்பேட்டை, SDNB வைஷ்ணவ் பெண்கள் கல்லூரியில் இத்தனை அழகாக தமிழ் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை.

ஆடல், பாடலிலும் நேர்த்தி இருந்தது.

திரும்பத் திரும்ப பாரதி பற்றி   பேசினாலும் கேட்டாலும் அலுப்பதேயில்லை. சிலிர்ப்பு குறைவதேயில்லை.

சில திருத்தங்கள் குறித்துப் பேசினேன்.

மனதிலுறுதி வேண்டும் பாடலில் ‘மண் பயனுற வேண்டும் ‘ என்று ஒரு வரி உண்டு. அது எல்லாப் புத்தகங்களிலும், கூகுள் தேடலிலுமே அப்படித்தான் இருக்கிறது. ஆனால் பாரதி தன் கைப்பட எழுதிய அதேப் பாடலில் ‘மண் விளைந்திட வேண்டும்’ என்றுதான் எழுதியிருக்கிறார்.

அதேப்போல ‘தமிழ் இனி மெல்லச் சாகும்’ என்று பாரதி சொன்னதாக பலரும் குறிப்பிடுவதுண்டு. அதுவும் தவறான பார்வை. அது பாரதியின் நேரடிக் கருத்தல்ல. தமிழ்த்தாயின் கவலையாகக் குறிப்பிடும்போது எழுதிய கவிதையின் நடுவில் வரும் ஒரு வரிதான் அது. முன் பின் வரிகளையும் சேர்த்துப் படித்தால்தான் அவரின் ஆதங்கமும் சரியான அர்த்தமும் புரியும்.

அந்தக் கவிதை வரிகள் இவை:

புத்தம் புதிய கலைகள் – பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்

மெத்த வளருது மேற்கே – அந்த

மேன்மை கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவுங் கூடுவதில்லை – அவை

சொல்லுந் திறமை தமிழ் மொழிக்கில்லை

மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த

மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை யுரைத்தான் – ஆ

இந்த வசை எனக்கெய்திடலாமோ?

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்

செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

இதைப் போல பாரதியைப் பற்றிய பல முரணான தகவல்கள், வரலாற்றுப் பிழைகள் இவற்றை ஆதாரப்பூர்வமாக அலசி ஆராய்ந்து மாலன் நாராயணன்  சார் எழுதியுள்ள ‘உண்மை நின்றிட வேண்டும்’ புத்தகம் குறித்தும் குறிப்பிட்டேன்.

ரசிக்க வேண்டிய இடங்களில் ரசித்துக் கை தட்டி சிரித்து உற்சாகம் ததும்ப மூன்று மணி நேரம் ஆர்வம் குறையாமல் இருந்த மாணவிகளைப் பாராட்டினேன்.

கிட்டத்தட்ட 300 பேருக்கு மேலிருந்த கூட்டத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளில் உடன் கட்டை ஏறுதல் என்கிற சதியைப் பற்றி எத்தனைப் பேருக்குத் தெரியும் என்றேன். பத்து பேர் மட்டுமே கை தூக்கியது ஆச்சரியம். விளக்கிச் சொன்னபோது வியந்தார்கள்.

டியர் ஜென் சி கிட்ஸ்!

ஃபேஷன், ஃபெமினிஸம், என் ஆடை, என் சுதந்திரம் என்று நிறைய பேசும் உங்களுக்கு பெண் எந்த மாதிரி தடைகளைத் தாண்டி வந்து இன்று சாதனைப் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருக்கிறாள் என்று பெருமிதம் கொள்ள..கொஞ்சம் வரலாறும் அறிந்திருக்க வேண்டாமா?

செய்தித் தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன்

படங்கள் : ராம் – ராஜாராம்

காணொலிப்பதிவு : மு மனோன்மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!