உலக மனநல நாள் மனநலப் பிரச்சினைகள் குறித்த உலக மக்களின் விழிப்புணர்வை அதிகரித்தல் மற்றும் மனநலத்தை மேம்படுத்துவதற்கான ஆதரவை ஒருங்கிணைத்தல் ஆகிய நோக்கங்களுடன் அக்டோபர் 10-ம் நாளை உலக மனநல நாளாக ஐநா சபையின் துணை அமைப்பான உலக சுகாதார நிறுவனம் (WHO) 1992 முதல் அனுசரித்துவருகிறது தூங்கும்போது கதை சொல்ல ஒரு சொந்தம், எந்தப் பொருள் எடுத்தாலும் எனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்கும் ஒரு சொந்தம், தவறு செய்து அடி வாங்கினால் அடிபடாமல் காக்கும் ஒரு சொந்தம், தோற்று துவண்டு இருக்கும்போது தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கும் ஒரு சொந்தம் என இருந்த கூட்டுக் குடும்ப வகுப்பறைகள் சொல்லிக் கொடுத்த பாடங்கள் ஏராளம். அவை மனப்பாடம் செய்யும் ஏட்டுப்பாடங்கள் அல்ல. மனதைப் பண்படுத்தும் மனப்பாடங்கள். திருவிழாக்கள் என்றாலே இரட்டிப்பாகும் இல்லற மகிழ்ச்சி. எல்லையில்லா பாடங்கள் சொல்லித் தந்த வீட்டுக் கூடங்களில் இன்று நிறைந்திருப்பவை சொந்தங்கள் அல்ல; சொகுசு வாழ்க்கைக்காக நாம் சொந்தமாக்கிக்கொண்ட தொலைக்காட்சியும், கைபேசியும்கம்யூட்டரும் தான். விளைவு உலகம் முழுவதும் 20 முதல் 30 சதவீத குழந்தைகளும் இளைஞர்களும் மனநோயின் அறிகுறியுடன் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆம் உலகம் முழுவதும் 380 கோடி மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் ஒவ்வொரு வருடமும் மூன்றில் ஒரு பங்கு இளம்பருவத்தினரும் பத்தில் இரு குழந்தையும் மனது சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வின்படி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களால் உலக பொருளாதாரம் ஒவ்வொரு ஆண்டும் 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் அளவு உற்பத்தியில் குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. மனதின் சக்திமனிதனை மாமனிதனாக்குவதுமனதின் சக்தியே. மனநலம் இல்லையெனில் வெற்றிபெற்றவனுக்கும் மகிழ்ச்சி துாரமே. எவ்வளவு பயிற்சி இருந்தாலும் முயற்சி இருந்தாலும் மனபலம்இல்லாதவருக்கு வெற்றி எட்டாக்கனியே. உடலின் ஆரோக்கியத்தைபற்றி மட்டுமே பேசி வந்த நிலையில் உள்ளத்தின் ஆரோக்கியத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் 1992ல் உலக மனநல அமைப்பு அக்டோபர் 10ம் நாளை உலக மனநல நாள் என்று அறிவித்துள்ளது. இந்நாளில் மனநலம் மற்றும் மனது சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கான தீர்வு பற்றிய விழிப்புணர்வுப் பிரசாரங்கள் நடத்தப்படுகின்றன. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஒரு வாரம் முழுவதும் மனநல வாரமாககொண்டாடப்படுகிறது. இந்த வருடம் மாறிவரும் உலகில் ‘இளைஞர்களுக்கான மனநலம்”பற்றிய விழிப்புணர்வை வலியுறுத்தி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.“ஊனுடம்பு ஆலயம் உள்ளம் ஒரு கோயில்” என்ற தத்துவத்தை உலகிற்கு எடுத்துச் சொன்ன இந்தியாவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனையான பதிவு.
உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் ஒரு சமூகத்தில், பெரும் மக்கள் கூட்டம் இருக்கும் இடத்தில் குற்றங்கள் நடப்பது தவிர்க்க இயலாது. ஓவ்வொரு நாட்டிலும் அதன் சட்டத்துக்கு ஏற்ப குற்றங்கள் வரையறுக்கப்படுகின்றன. சிலர் சட்டங்களுக்கு அப்பாற்பட்டு குற்ற செயலில் ஈடுபடுவதால் அதற்கான தண்டனையும் வழங்கப்படுகிறது. தண்டனைகளில் மிகவும் கொடூரமானது மரண தண்டனை. பெரும்பாலான நாடுகளில் தற்போது மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. இந்த தண்டனையை வழங்கிக் கொண்டிருக்கும் இன்னும் சில நாடுகளும் இதை தடை செய்ய வேண்டும். உலகம் முழுவதும் இதை பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும் எனும் நோக்கில் அக்டோபர் 10-ம் நாள் ‘உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. 2002 மே.13ல் ரோமில் கூடிய சர்வதேச தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.ஓ) கூட்டத்தில், மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2003 அக்.10ல் முதல் முதலாக இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டது. செய்யாத குற்றம், மொழி புரியாததால் அடைந்த தண்டனை, ஆராயப்படாத நீதி, மூளை வளர்ச்சி இல்லாதவர் செய்த குற்றம், சிறுவயதில் செய்த குற்றம் ஆகியவை காரணமாக, உலகில் ஐந்து பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நீதி இல்லாமல் அநீதியாக 5 பேர் மரண தண்டனை பெற்றனர். இனி இதுபோல் நடக்காமல் இருக்க, மரண தண்டனையை உலக நாடுகள் ரத்து செய்ய வேண்டும் என மரண தண்டனை எதிர்ப்புக் குழுவினர் கோரிக்கை வைக்கின்றனர். இந்தியாவில் அரிதிலும் அரிதான குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை தரப்படுகிறது. இது குறித்து 2 விதமான கருத்துகள் நாட்டில் நிலவுகிறது. மரண தண்டனை விதிப்பதன் மூலம், குற்றங்கள் குறையும் என ஒரு சாராரும், குற்றவாளிகளை கொல்லும் உரிமை யாருக்கும் இல்லை என எதிர்தரப்பும் வாதிடும் போக்கு இன்றும் தொடரும் நிலையில் இந்நாளில் இந்த தலைப்பு குறித்து யோசிக்கலாம்.
மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் – மறைந்த தினம் இன்று = அக்- 10 20ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். நெடுந்தொகை விருந்து, குறுந்தொகை விருந்து, நற்றிணை விருந்து, திருக்குறள் உரை, தமிழ் இலக்கிய வரலாறு, கள்ளோ காவியமோ, நெஞ்சில் ஒரு முள், அகல் விளக்கு, கரித்துண்டு, உள்ளிட்ட குறிப்பிடத்தக்க நூல்களை எழுதியுள்ளார்.
- இவரது திருக்குறள் தெளிவுரை 100-க்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளிவந்துள்ளன. சாகித்ய அகாடமி, பாரதிய ஞானபீடம், தேசியப் புத்தகக் குழு, இந்திய மொழிக் குழு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம்-தமிழ் அகராதிக் குழு உள்ளிட்ட ஏராளமான அமைப்புகளில் அங்கம் வகித்துள்ளார்.
- தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். தூய தமிழில் பிறமொழிக் கலப்பு இல்லாமல் கதை எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
- கல்வித் துறை ஆய்வு மாநாடுகளில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில், ரஷ்யா, பாரீஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்றுள்ளார். 1972-ல் அமெரிக்க ஊஸ்டர் கல்லூரி இவருக்கு டி.லிட். பட்டம் வழங்கியது.
- ‘அகல் விளக்கு’ என்ற நாவலுக்காக இவருக்கு 1961-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இவரது ‘கள்ளோ காவியமோ’, ‘அரசியல் அலைகள்’, ‘மொழியியல் கட்டுரைகள்’ ஆகிய 3 நூல்களுக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது. இவரது பல நூல்கள் ஆங்கிலம், இந்தி, மராத்தி, சிங்களம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
- காலம் தவறாமையை இறுதிவரைக் கடைபிடித்தவர். அனைவராலும் ‘மு.வ.’ என நேசத்துடன் அழைக்கப்பட்டார். இறுதிவரை தமிழ்ப் பணியாற்றி வந்தவருமான மு.வரதராசனார், 1974-ம் ஆண்டு 62-வது வயதில் மறைந்தார்.
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்: தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் தமிழீழத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் நாளன்று எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழீழப் போராட்ட வரலாற்றிலே 1987ஆம் ஆண்டு களத்தில் கொல்லப்பட்ட முதல் பெண் போராளியான இரண்டாம் லெப். மாலதியின் நினைவு நாளில் இது நினைவு கூரப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. 1984 ஆம் ஆண்டு பெண்கள் ஆயுதப் போராட்டத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டனர். தொடக்கத்தில் பெண்போராளிகள் ஆண்போராளித் தளபதிகளின் கீழ் செயற்பட்டாலும், 90களின் பிற்பகுதியில் தனித்துவமாகச் செயற்படும் வகையில் பெண்கள் படையணி தலைவர் மே.த.கு வே.பிரபாகரனால் கட்டியெழுப்பப்பட்டது. பெண்போராளிகள் புலிகளின் அனைத்து விதமான கட்டமைப்புக்குள்ளும் உள்வாங்கப்பட்டனர். அவர்கள் இராணுவப் படையணியாக மட்டுமல்லாது, தொழினுட்பத்துறை, பொறியியல்துறை, மருத்துவம், கடற்படை, அரசியல், நிர்வாகக்கட்டமைப்பு போன்றவற்றில் ஆண்போராளிகளுக்கு நிகராகவே இருந்தனர். தமிழீழப் போராட்ட வரலாற்றிலிருந்து பிரிக்கமுடியாத சக்தியாகப் பெண்போராளிகள் வளர்ந்துள்ளனர். 10.10.1987 அன்று இந்திய அமைதிப் படைகளுடன் விடுதலைப் புலிகள் மோதலைத் தொடங்கிய போது கோப்பாயில் இந்திய படைகளுடன் இடம் பெற்ற மோதலில் கொல்லப்பட்டவரே 2ஆம் லெப்.மாலதி.
தேசிய அஞ்சல் தினமின்று தகவல் பரிமாற்றம் என்பது பண்டைய காலந்தொட்டு உலக மனிதர்களிடையே தவிர்க்க முடியாத சேவையாக இருந்து வருகிறது. ஓரிடத்தில் முரசு கொட்டியோ அல்லது பறை இசைத்தோ அரசாங்கத்தின் தகவல்களைத் தெரிவிப்பது மட்டுமன்றி, ஓரிடத்திலிருந்து தொலைவிலுள்ள மற்றொரு இடத்திற்கு தகவல்களைக் கொண்டு செல்ல, ‘ஓட்ட தூதுவர்களை’ பயன்படுத்தியது வரை இதன் வரலாறு மிக நீண்ட நெடியதாகும். இந்தியாவின் அஞ்சல் வரலாற்றை சிந்து சமவெளியிலிருந்து தொடங்கிய தொன்மைக் காலம், முகலாய மன்னர்கள் ஆட்சியின் போது தொடங்கிய இடைப்பட்ட காலம், ஆங்கிலேய ஆட்சியின் போது தொடங்கிய நவீன காலம் என மூன்றாகப் பிரிக்கலாம். ஆங்கிலேயருக்குப் பிறகு இந்திய அஞ்சல் துறை நவீனத்துடன் பல்வேறு மாற்றங்களைக் காணத்தொடங்கியது. மன்னர்கள் காலத்தில், தகவல்களைக் கொண்டு சென்றவர்கள் ‘தகவலாளி’, ‘ஓட்டக்காரன்’ அல்லது ‘ஓட்டத் தூதுவன்’ என அழைக்கப்பட்டனர். அஞ்சல் ஊழியர்களை பெருமைபடுத்திய ‘ஹர்ஹரா’ திரைப்படம்: கடிதங்கள் அடங்கிய சாக்குப் பைகளைக் தூக்கிக் கொண்டு ஓட்டமும், நடையுமாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தனர். அச்சமயம் விலங்குகளாலோ, கள்வர்களாலோ அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவர்களின் பாதுகாப்புக்காக கையில் வேல் ஏந்திச்சென்றனர். அண்மையில் வெளியான ‘ஹர்ஹரா’ என்ற தமிழ்ப்படத்தில் ஓட்டக்காரர்களையும், தபால்காரர்களையும் மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். புறாக்களின் கால்களில் ஓலைகளைக் கட்டி தூது அனுப்பிய வரலாறும் உண்டு. கிராமங்களில் அதிரும் அஞ்சல் சேவை: உலகிலுள்ள பிற நாடுகளின் அஞ்சல் சேவைகளைக் காட்டிலும் மிகப் பெரிய வலை தொடர்பைக் கொண்டதுதான், இந்திய அஞ்சல் துறை. நாடு முழுவதும் 1 லட்சத்து 59 ஆயிரத்து 251 அஞ்சல் அலுவலகங்கள் உள்ளது. அவற்றில் ஊரகப் பகுதிகளில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 985-மும், நகர்ப்புறங்களில் 15 ஆயிரத்து 299- அஞ்சல் அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும் 808 தலைமை அஞ்சல் அலுவலகங்களும், 24 ஆயிரத்து 302 துணை அஞ்சல் நிலையங்களும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 141-கிளை அஞ்சல் அலுவலகங்கள் நாடு முழுவதும் இயங்குகின்றன. வரலாற்று சிறப்பு பெற்ற அஞ்சல் துறை: இந்திய அஞ்சல் சேவை என்பது அதிகாரப்பூர்வமற்ற வகையில், கடந்த 4 நூற்றாண்டுகளுக்கு முன்பு 1727-இல் துவங்கியது. முதன் முதலாக கொல்கத்தாவில் ஆங்கிலேயர் காலத்தில் 1774ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சென்னையில் 1786-லும், மும்பையில் 1793-ஆம் ஆண்டும் அஞ்சல் சேவைகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் அஞ்சல் சேவையில் சீரான தன்மையைக் கொண்டு வரும் பொருட்டு, 1837-ஆம் ஆண்டு ‘இந்திய அஞ்சல் சட்டம்’ இயற்றப்பட்டது. மேலும் இந்த சட்டத்தை விரிவுபடுத்தி தற்போதைய நவீன அஞ்சல் சேவைக்கு வித்திடும் வகையில், 1854-ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. இதற்கிடையே 1854-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி ரயில்வே அஞ்சல் துவங்கப்பட்டது. அதே ஆண்டில் கப்பல் அஞ்சல் சேவை முதன் முதலாக 1859ஆம் ஆண்டு கல்கத்தாவிலிருந்து போர்ட் பிளேர் வரை துவங்கப்பட்டது. அதன் பிறகு பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் கப்பல் மூலமாக அஞ்சல் சேவை நடைபெறத் தொடங்கின. பிப்ரவரி 18, 1911 அன்று உலகின் முதல் ஏர்மெயில் விமானம் கங்கை ஆற்றின் குறுக்கே 18 கி.மீ. தூரம் பயணித்து அலகாபாத்தில் இருந்து நைனிக்குச் சென்றது. 1898-ஆம் ஆண்டு பல புதிய சீர்திருத்தங்களோடு இந்திய அஞ்சல் சட்டம் அறிமுகமானது. இதைத் தொடர்ந்தே உலகம் முழுவதும் நூறு நாடுகளில் இந்திய அஞ்சல் துறை தனது சேவைகளை விரிவுபடுத்தியது. சராசரியாக 8 ஆயிரத்து 627 பேருக்கு ஒரு அஞ்சல் நிலையமும், ஊரகப் பகுதிகளில் சராசரியாக 6 ஆயிரத்து 229 பேருக்கும், நகர்ப்புறங்களில் சராசரியாக 31 ஆயிரத்து 242 பேருக்கும் அஞ்சல் நிலையங்கள் சேவை புரிந்து வருகின்றன. ஒவ்வொரு அஞ்சல் நிலையங்களும் சராசரியாக 20.54 சதுர கி.மீ-ல் தங்களது சேவையை செய்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் 17 ஆயிரத்து 890 அஞ்சல் நிலையங்களும், மகாராஷ்டிரத்தில் 13 ஆயிரத்து 688 அஞ்சல் நிலையங்களும், தமிழ்நாட்டில் 11 ஆயிரத்து 865 அஞ்சல் நிலையங்களைக் கொண்டு, இந்தியாவில் முதல் மூன்று இடங்களில் உள்ளன. நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரிவு அஞ்சல் துறையில் மொத்தம் 4 லட்சத்து 3 ஆயிரத்து 678 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 16.39% பட்டியல் சாதியினராகவும், 7.58% பட்டியல் பழங்குடியினத்தவராகவும் உள்ளனர். 32 ஆயிரத்து 328 பெண்கள் அஞ்சல் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர். நவீன வடிவங்கள் பல வந்தாலும்கூட, 4ஜி, 5ஜி நுழைய முடியாத இடத்தில்கூட இந்த தபால்காரர்கள் நுழைந்து சேவை புரிவதுதான் இந்திய அஞ்சல் துறையின் அழிக்க முடியாத வரலாற்று சாதனை. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ஆம் தேதி ‘உலக அஞ்சல் தினம்’ கொண்டாடப்படும். அதே வேளை, அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 10-ஆம் தேதி ‘இந்திய அஞ்சல் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் அஞ்சல் கொண்டு வந்து சேர்க்கும் நமது ‘தபால்காரர்களை’ வாழ்த்தி மகிழ்வோம்.
நகைச்சுவை, குணச்சித்திரம் என பன்முக நடிப்பை வெளிப்படுத்தியவர் ‘ஆச்சி‘ மனோரமா நினைவு நாளின்று! உங்களில் யாருக்கேனும் வாழ்க்கை வெறுத்துப்போனாலோ, தற்கொலை எண்ணம் தலைதூக்கினாலோ மனோரமாவின் வாழ்க்கை வரலாறை ஒருமுறை புரட்டிப் பாருங்கள். இளமையில் வறுமை, சில வருடங்களே நீடித்த மண வாழ்க்கை.. என அவர் தாண்டி வந்த தடைக்கற்கள் அதிகம். அதையெல்லாம் அவர் படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்ட திறமை, தங்கமாக ஜொலித்த அவரது குணம், வயிறு வலிக்கச் சிரிக்க வைத்த நகைச்சுவை… உங்களை ஒரே நொடியில் வாழ்க்கையின் மீது அதீதக் காதல்கொண்டவர்களாக மாற்றிவிடும். ஆம்.. இந்த கோலிவுட் திரையுலகம் ஆரம்பித்த காலகட்டங்களில் இருந்து இதுவரை க்கும்நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்ற எத்தனையோ கதாநாயகிகளைப் பார்த்திருப்போம். ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுடைய புகழும், நடிப்பும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும். ஆனால், காலத்திற்கும் மாறாமல் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு நகைச்சுவை, குணச்சித்திரம் எனப் பன்முக நடிப்பை வெளிப்படுத்தியவர், ‘ஆச்சி’ மனோரமா. நாடகத்துறை, சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிப்பின் அனைத்துப் பிரிவுகளிலும் தனது பெயரை நிலைநாட்டிய மனோரமா, நடிப்பில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து ‘பொன்விழா’ கொண்டாடியவரவர். மனோரமாவின் தந்தை காசி கிளாக்குடையார், தனது மனைவியின் தங்கையை இரண்டாம் தாரமாக மணந்துகொண்டு, பத்து மாதக் குழந்தையான மனோரமாவையும், அவரது அம்மாவையும் வீட்டைவிட்டு வெளியேற்றினார். அப்படி வெளியேறியதும், காரைக்குடி அருகிலுள்ள பள்ளத்தூரில் குடிபெயர்ந்து வீட்டு வேலைகளைப் பார்த்தும், பலகாரங்களைச் செய்தும் சில காலம் வாழ்க்கையை ஓட்டியிருக்கிறார், மனோரமாவின் தாயார். ஒருகட்டத்தில் அவருக்கு உடல்நலம் குன்றிப்போக, குடும்பப் பொறுப்புகளைச் சுமந்துகொண்டு பள்ளிக்கூடம் படிக்க வேண்டிய பன்னிரண்டு வயதில், பத்து ரூபாய் சம்பளத்தில் ‘யார் மகன்’ என்ற நாடகத்தின் மூலம் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். ‘கிராமத்தில் பொம்பளப் புள்ளைங்க வெளியே வர்றதே பாவம்’ என்றிருந்த காலகட்டத்தில் ‘கலைமாமணி நாடக சபா’ குழுவில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார், மனோரமா. ஒரு நாடகத்தில் நடிக்கத் திருமயத்தில் ரயிலேறியதும், நூறு பக்க வசனத்தை மனப்பாடம் செய்ய நாடகக் குழு கொடுத்துவிட, கோவையில் இறங்குவதற்குள் அத்தனை பக்கத்தையும் மனப்பாடம் செய்து முடித்திருந்தார், மனோரமா. இவர் கலையார்வத்திற்கு இந்த ஒரு நிகழ்வே சிறந்த சான்று. மனோரமாவுக்கு படிக்கிற வயதிலேயே நன்றாகப் பாடும் திறமையும் வாய்த்திருந்தது. சினிமா பார்த்தும், கிராமபோனில் பாடல்களைக் கேட்டு, தன் பாடும் திறமையை வளர்த்துக்கொண்டே வந்தார். இவரது பாடும் திறமையைக் கண்டு வியந்த அக்கம் பக்கத்தினர், அவரை அழைத்துப் பாடச்சொல்வது வழக்கமாக இருந்ததாம். பலரும், ‘வா வாத்யாரே வூட்டாண்ட’ பாடல்தான் மனோராமா பாடிய முதல் பாடல் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ‘மகளே உன் சமர்த்து’ படத்தில் இடம்பெற்ற ‘தாத்தா தாத்தா பொடி கொடு’ பாடல்தான், இவர் பாடிய முதல் பாடல். தென்னிந்தியாவைச் சேர்ந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் ஆகிய ஐந்து முதலமைச்சர்களுடன் இணைந்து நடித்த ஒரே நடிகை மனோரமாதான். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறார். 1500-க்கும் மேற்பட்ட படங்களிலும் 5000-த்திற்கும் அதிகமான நாடகங்களிலும் நடித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தவர். கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, அண்ணா விருது எனப் பல விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறார். இப்படித் தனது வாழ்வின் பெரும்பகுதியைக் கலையுலகில் செலவழித்தால், ‘கலை’ என்னும் சொல்லோடு இரண்டறக் கலந்தவர் நடிகை மனோரமா. நடிப்பும் சரி, பாடலும் சரி, நடனமும் சரி… மனோரமா எதையும் முறையாகக் கற்றுக்கொண்டவர் இல்லை. அத்தனையும் கேள்வி ஞானம்தான். ஆனால், அதை எந்தளவிற்குச் சிறப்பாகச் செய்யமுடியுமோ, அந்தளவிற்கு சிறப்பாகச் செய்தார். அந்தக் காலத்தில் ஒரு பிரபலமான ஜோக் ஒன்று இருந்தது. ‘என் பொண்டாட்டி செஞ்ச அல்வா, மனோரமா மாதிரி, பாத்திரத்தோடு ஒட்டிக்கும்!’ என்பதுதான், அது. ஆரம்ப பேராவில் சொன்னது போல் தமிழ் மக்கள் அத்தனைபேரையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்த மனோரமாவின் சொந்த வாழ்க்கை இறுதிவரை சோகம் நிறைந்ததாகவே இருந்தது. ஆனாலும் மறைந்த நிலையிலும் மனத் திரையில் வாழும் ஆச்சிக்கு அஞ்சலி.
தமிழர்களின் பாரம்பரிய கலையான வில்லிசையின் மாபெரும் கலைஞர் பதம்ஶ்ரீ கலைமாமணி சுப்பு ஆறுமுகம் நினைவு நாள் இவர் 1928 ம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் பிறந்தார்.இவர் வில்லுப்பாட்டினை மறைந்த பழம்பெரும் திரைப்பட நடிகர் என்.எஸ் கிருஷ்ணன் மற்றும் சுப்பையா பிள்ளை போன்றவர்களிடம் கற்றார் சுப்பு ஆறுமுகம் தனது வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்து வந்தார்.மகாத்மா காந்தியின் சுயசரிதையை வில்லிசையாக பாடி அனைவரது கவனத்தையும் பெற்றார். கடந்த 40 வருடங்களாக வில்லுப்பாட்டு கச்சேரியினை நடத்தி வந்தார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தன் வில்லுப்பாட்டினால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை வில்லுப்பாட்டின் வாயிலாக வழங்கினார் . 1975ம் ஆண்டு கலைமாமணி விருதும், சங்கீத நாடக அகாடமி விருதினையும் பெற்றார்.
கடிகாரம் முதல் கார் வரை வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ரத்தன் டாடா காலமான தினமின்று.! “உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால், அதைக் கொண்டு கட்டடம் எழுப்புங்கள்!” – இதைச் சொல்லியவர் இந்தியாவில் மட்டுமே காலூன்றியிருந்த ஒரு வியாபார குழுமத்தை உலகெங்கும் எழுப்பி, அக்குழுமத்தையே உலக சந்தையில் இந்தியாவின் அடையாளமாய் மாற்றிய ரத்தன் நாவல் டாடா. நம் உணவில் உப்பாய், தேநீராய், நம் கையில் கடிகாரமாய், நம் செல்போனில் சிம் கார்டாய், நம் வீட்டுத் தூணில் இரும்பாய், நாம் பயணிக்கும் காராய், நம் டிவியில் டி.டி.எச்சாய், நாம் அணியும் நகையாய் ஒவ்வொரு இடத்திலும் கால் ஊன்றி தடம் பதித்த டாடா சன்ஸின் தலைவர் ரத்தன் டாடாவின் காலமாகி ஓராண்டு இன்று. அவரைப் பற்றிய நினைவு குறிப்புகள்… 1937ல் சூரத் நகரில் நாவல் டாடா-சுனூ தன்மதியருக்குப் பிறந்த டாடா, தனது நிர்வாக மேல்படிப்பை ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் 1975ல் முடித்தார். அவர் அங்கு மேற்படிப்பை முடித்தவுடனேயே மிகப்பெரிய நிறுவமான IBMல் அவருக்கு வேலை கிட்டியது. ஆனால் இந்தியாவில்தான் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தாய்நாட்டிற்கே திரும்பினார். தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் பணியிலமர்ந்தார் ரத்தன் டாடா. சொந்த நிறுவனமாய் இருந்தாலும் அடிப்படையான சிறிய பொறுப்புகளையே செய்து வந்தார் அவர். அதனால் உழைப்பின் அருமையை அறிந்திருந்தார். 30 வருடம் டாடா குழுமத்தின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு பங்காற்றிய ரத்தன் டாடா, 1991ல் டாடா குழுமங்களின் தலைவராக, நிறுவனரும் அன்றைய தலைவருமான ஜே.ஆர்.டி டாடாவால் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு நடந்ததெல்லாம் உலகமே வியந்த அசுர வளர்ச்சி. அதுவரை இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக இருந்த டாடா குழுமத்தை உலகின் பார்வைக்கு எடுத்துச் சென்றார். “சிறிய முன்னேற்றங்கள் பற்றி யோசிப்பது எனக்குப் பிடிக்காது” என்பார் டாடா. “எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகப்பெரிதாய் அனைவரும் வியக்கும் வகையில் இருக்க வேண்டும்” என்று கூறுவார். அப்படித்தான் மிகப்பெரிய அடிகளை உலக மார்க்கெட்டில் எடுத்து வைத்தது டாடா குழுமம். உலகின் ஒவ்வொரு நாட்டிலும்,ஒவ்வொரு சந்தையிலும் தனக்கான வாய்ப்புகளை கண்டறிந்தார். இரும்பு, மென்பொருள், கெமிக்கல், தேநீர், கார்கள் என அனைத்துத் துறையிலும் அசுர வளர்ச்சி கண்டது இந்நிறுவனம். இவர் பொறுப்பேற்ற பின் டாடா குழுமம் கால் வைக்காத துறை இல்லை என்றே சொல்லலாம். ஆண்டுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய மென்பொருள் நிறுவனம் என்ற சாதனையைப் படைத்தது டாடா குழுமம். சொகுசுக் கார்களைத் தயாரிப்பதில் வல்லுநர்களான லேன்ட்ரோவர், ஜாக்குவார் ஆகிய கம்பெனிகளின் இந்திய உரிமையை 2008ல் வாங்கினார் டாடா. இது ஆட்டோமொபைல் உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இந்திய கார்களுக்கு வெளிநாட்டில் மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்தினார். கோரஸ் என்ற உலகின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனத்தை டாடா வாங்க, உலகின் முன்னனி இரும்பு உற்பத்தியாளராய் உருப்பெற்றது டாடா ஸ்டீல்ஸ். உலகமயமாக்கலால் பல நிறுவனங்கள் இந்தியாவிற்குள் காலடியை எடுத்து வைக்க, உலக சந்தையில் சத்தமின்றி தன்னிகரற்ற ஒரு இடத்தைப் பெற்றது டாடா குழுமம். தற்போது இந்நிறுவனத்தின் வருவாயில் 65% வெளிநாடுகளிலிருந்துதான் ஈட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பொருளாதார வளர்ச்சியில் இவரது பங்கீட்டைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருதும், பத்ம விபூஷண் விருதும் வழங்கி கௌரவித்தது. அனைத்து முன்னனி கார் நிறுவனங்களும் கோடிகளில் கார்களைத் தயாரித்துக்கொண்டிருக்க, மாற்றுத் திசையில் பயணித்தார் டாடா. சாமானிய மனிதனும் நான்கு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்று கருதினார். அதனால் உதித்ததுதான் ‘டாடா நானோ’ திட்டம். வெறும் ஒரு லட்ச ரூபாய்க்கு கார்கள் வெளிவரும் என்று டாடா நிறுவனம் அறிவித்தபோது உலகமே கேலி செய்தது. தரம் குறைவாயிருக்கும், சிறு அடிபட்டாலும் கார் நொறுங்கிவிடும் என பழித்தனர். இது நிச்சயம் சாத்தியமில்லை என்று அனைவரும் சொல்ல, அனைத்தையும் பொய்யாக்கி இந்திய சாலைகளில் நானோவை கம்பீரமாய் வலம்வர வைத்தது டாடா நிறுவனம். விலை முன்பு சொல்லப்பட்டதை விட சற்றுக் கூட இருந்தாலும் (1.25 லட்சம்) , உலகின் மிகவும் குறைந்த விலை கார் என்ற பெருமையை தனதாக்கியது நானோ. விலை குறைவு என்றாலும் தரத்தில் எந்தக் குறையும் இல்லாமல் வெற்றிகரமான மாடலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது நானோ. உலகின் அனைத்து கார் கம்பெனிகளும் டாடாவிற்கு தலை வணங்கின. மும்பை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட தாஜ் ஹோட்டல்களும் டாடா நிறுவனத்திற்கு சொந்தமானவையே. அவற்றை சரிசெய்வதற்காக பொது டெண்டர் விடப்பட்டபோது பாகிஸ்தானைச் சார்ந்த இரு பெரும் நிறுவனங்கள் அவற்றிற்கு விண்ணப்பித்திருந்தன. அந்த டெண்டெரை தனதாக்கும் பொருட்டு அந்நிறுவனங்களைச் சார்ந்த இருவர் டாடாவைப் பார்க்க அவர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். பாகிஸ்தானியர்கள் என்பதால் அவர்களை வெகுநேரம் காக்கவைத்த டாடா, பின்னர் அப்பாயின்ட்மென்ட் இன்றி யாரையும் பார்க்க முடியாது என்று மறுத்துவிட்டார். அவர்கள் இருவரும் அன்றைய தேதியில் அமைச்சராய் இருந்த ஆனந்த் ஷர்மாவை அணுக, டாடாவிடம் இதுபற்றி பேசியுள்ளார் அமைச்சர். அதற்கு டாடா அளித்த பதில் நம்மை மெய்சிலிர்க்கச் செய்யும். “உங்களுக்கு வேண்டுமானால் இது கூசாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அது அவமானம்” என்று டாடா கூற, அதிர்ந்து போனாராம் அமைச்சர். ஒருசமயம் டாடா சுமோ கார்கள் வேண்டுமென்று பாகிஸ்தான் அரசு, மிகப்பெரிய ஆர்டர் ஒன்றை டாடா நிறுவனத்திற்குத் தர, ‘பாகிஸ்தானுக்கு ஒரு கார் கூட கொடுக்க முடியாது’ என்று ஆர்டரை நிராகரித்தார் டாடா. பணம்தான் முக்கியம் என்று பலரும் அறத்தை மீறிச் செயல்பட்டாலும் பணத்தை விட தாய்நாடுதான் தனக்கு முக்கியம் என்று கருதுபவர் டாடா. இளைஞர்கள் பலருக்கும் தொழில் நுணுக்கங்களை பயிற்று வருகிறார். சரியாக 3 ஆண்டுகள் முன்பு, இதே நாளில் சைரஸ் மிஸ்டிரியை டாடா குழுமத்தின் தலைவராக நியமித்துவிட்டு அப்பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றார் ரத்தன் டாடா. மிகவும் சாந்தமான மனிதர். ஆதரவற்ற குழந்தைகளுக்கும், மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கும் தனது தொண்டு நிறுவனம் மூலமாக பல உதவிகளைச் செய்து வருகிறார். எதையும் நேரடியாகப் பேசுவார் டாடா. “நீங்கள் ஏன் கல்யாணம் செய்துகொள்ளவில்லை?” எனக்கேட்டதற்கு “4 முறை கல்யாணம் செய்யும் நிலைக்குச் சென்று, கடைசியில் அது நிறைவேராமல் போனது. எனக்கு 4 காதல் தோல்விகள் உள்ளது” என்று சிரித்துக்கொண்டே வெளிப்படையாகச் சொன்னார் டாடா. ஆனால் அவையெல்லாம் அவரது சிந்தனையை சிதறடிக்கவில்லை. அவரது தொலைநோக்குப் பார்வைகளை சிதைக்கவில்லை. முன்னேற்றம் என்பதை மட்டும் மூச்சாய்க் கொண்டு, இன்று வரை அம்முன்னேற்றத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார் டாடா. உலக சந்தையில் இந்தியாவிற்கு ஓர் அந்தஸ்ததை ஏற்படுத்திக் கொடுத்ததிலும், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் டாடா குழுமத்தின் பங்கும், ரத்தன் டாடாவின் பங்கும் அளப்பறியது. “என்னால் இறக்கை விரித்து பறக்க முடியாத நாளே, என் வாழ்க்கையின் சோகமான நாள்” என்பார் ரத்தன் டாடா.அவர் மறைந்தாலும் அவரின் சிறகுகள் இன்னும் பறந்து கொண்டுதான் இருக்கிறது
