கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிறப்பு புலனாய்வுக் குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
கரூரில் கடந்த 27-ந் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி இந்த குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்த உத்தரவுக்கு எதிராக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் வக்கீல் விஜய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு கட்சித்தொண்டர்களையும், ரசிகர்களையும் பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடியுள்ளதாக ஐகோர்ட்டு கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளது.
இவை விஜய், அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் மீது தவறான எண்ணத்தை உருவாக்கி உள்ளது. த.வெ.க. தரப்பு கருத்துகளை முன்வைக்க வாய்ப்பு அளிக்காமல், கரூரில் 41 பேர் பலியான வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில், நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசலுக்கு சில ரவுடிகளால் முன்கூட்டியே திட்டமிட்ட சதியே காரணம் என்பதை மறுக்க முடியாது. சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கரூர் சம்பவத்தை சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என நேற்று முன்தினம் முறையிடப்பட்டது. இதனையடுத்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார். அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
