பன்னாட்டு உலக பழங்க்குடியினர் தினம் சர்வதேச அளவில் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் நாள், பன்னாட்டு உலகப் பழங்குடியினர் நாளாகக் (International Day of the World’s Indigenous Peoples) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலகப் பிரச்சினைகளை மேம்படுத்த பழங்குடி மக்கள் செய்யும் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளையும் இந்த நிகழ்வு அங்கீகரிக்கிறது. அந்த வகையில் கடவுளுக்கு முன் தோன்றியவர்கள் நாங்கள் என்று பெருமிதம் கொள்ளும் பூர்வகுடி மக்களின் இருப்பைத் தக்க வைக்க உலக நாடுகள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டிய அவலநிலை உள்ளதைத்தான் ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பு தெளிவுபடுத்தியது. இயற்கைதான் எங்கள் இறைவன், பூமிதான் எங்கள் கோவில் என்று சொல்லித்தான் இன்றும் வாழ்கிறார்கள் மலைவாழ் பூர்வீகக் குடிமக்கள். பழங்குடிகளுக்கு மலைதான் தாய்மடி. உலகின் காடுகளும் மரங்களும் இயற்கை புல்வெளிகளும் உருவாகியதில் இயற்கையின் பங்குக்கு இணையாக ஆதிக்குடிகளின் பங்கு உள்ளது. விரிவாக்ச் சொல்வதானால் ஒவ்வொரு நாடு உருவான கதையும் அதன் பழங்குடிகளின் இரத்தத்தை கொண்டு எழுதப்பட்டுள்ளது. செவ்விந்தியர்களை அழித்து உருவான அமெரிக்கா, அமேசான் பழங்குடியின அழிப்பு, ஆப்ரிக்க பழங்குடியின அழிப்பு, ஆஸ்திரேலிய அடக்குமுறைகள் என உலக நாகரீக மனிதனின் வரலாறே பழங்குடியின அழிப்பில் தான் துவங்கியது என்று சொன்னால் மிகையாகாது. தொல்குடிகள், முதுகுடிகள், ஆதிகுடிகள், பழங்குடிகள், திணைக்குடிகள், பூர்வீகக்குடிகள் என்றெல்லாம் அறியப்படும் இவர்கள், உலகளாவிய நிலையில் 37 கோடி பேர் வாழ்ந்து வருகின்றனர். பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டோ பன்னெடுங்காலமாகவோ, அதாவது ஏறக்குறைய 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் மொழியும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள். காடுகளை, இயற்கை வளங்களையும் பாதுகாக்க பழங்குடியினரின் தீரமிக்க செயல்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. வனத்தை காக்க உயிர்களை தியாகம் செய்த பழங்குடியினரின் வரலாறு உலகெங்கிலும் உண்டு. எனவே தான், சூழலியலை பாதுகாக்க நாம் பழங்குடியின மக்களை பாதுகாக்க வேண்டும். அவர்கள், தங்களது பாரம்பரிய அறிவை, இயற்கையிடம் இருந்தும், தங்களின் முன்னோர்களிடம் இருந்தும் பெறுகின்றனர். மரபுப் பொருளாதாரம் என்பது பழங்குடிகளின் காடு, வயல், கடல் சார்ந்த எளிமையான பொருளாதார முறையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக அந்தமான் பழங்குடிகள், அமேசான் பழங்குடிகள், சில ஆப்பிரிக்கப் பழங்குடிகள் ஆகியோர் ஓரளவுக்கு இன்றும் இம்முறையிலேயே வாழ்கின்றனர்.இயற்கை சார்ந்த அறிவு, பருவ நிலை மாற்றங்கள் குறித்த தெளிவு என்று ஒவ்வொரு பழங்குடியும் ஒவ்வொரு விதமான தனித்திறன் பெற்றுள்ளனர். பாரம்பரிய வாழ்க்கை முறைகளை தொடர்ந்து பின்பற்றியும் வருகின்றனர். அந்த வகையில் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மலை மீதும், காடுகளுக்குள்ளும், இனக்குழுக்களாகவும் வாழ்ந்த பழங்குடியினரிடம் சென்று இனி இந்த மலையும், காடும், மண்ணும் உங்களுக்கு சொந்தமில்லை. நீங்கள் மிருகங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறீர்கள், இயற்கையை காயப்படுத்துகிறீர்கள் அதனால் இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்று யாராவது சொல்லியிருந்தால் ஈட்டியை எடுத்தே கொன்றிருப்பார்கள், அல்லது சிரித்து விட்டு குடிலுக்கு திரும்பியிருப்பார்கள். ஆனால், இன்று இதே வாசகங்களை சொல்லி பூர்வீக குடிகளை துரத்தி விட்டு அதே காடுகளை சூறையாடி கொண்டிருக்கிறது நாகரிக சமூகம். காடுகளை விட்டு விரட்டப்பட்டும், வலுக்கட்டாயமாக மறுகுடியமர்வு செய்யப்பட்டும், வாழ்வாதாரத்தை தேடி சென்றும் என பழங்குடியினர் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. நாகரீகமடைந்த மனிதர்கள், தங்களின் தேவைகளுக்காகப் பழங்குடியின மக்களின் வாழிடங்களான காடுகளை அழித்து, இயற்கையை முற்றிலுமாகச் சிதைத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போதையக் காலத்தில் நாகரீக மனிதர்களிடமிருந்து இயற்கையையும், பழங்குடியின மக்களையும் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பழங்குடியினருக்கான இந்நாளில், அவர்களது வாழ்வை மேம்படுத்தாவிடினும், அவர்களுக்கு இடையூறு செய்யாமல் இருந்தாலேப் போதுமானது.
நாகசாகி தினம் – ஆகஸ்ட் 9 இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா ஜப்பானின் நாகசாகியில் புளூட்டோனியம் குண்டை வீசியது, அது பேரழிவு விளைவுகளுடன் வெடித்து, 1945 ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 70,000–80,000 உயிர்களைக் கொன்றது, மேலும் கதிர்வீச்சு தொடர்பான நோய்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்தன. பேரழிவு தரும் அணுகுண்டு தாக்குதல் ஆகஸ்ட் 9, 1945 அன்று நடந்தது. அப்போதிருந்து, ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், நாகசாகி தினம் அனுசரிக்கப்படுகிறது. நிகழ்வின் பின்னணி: நாள்: 1945, ஆகஸ்ட் 9. அணுகுண்டின் பெயர்: ஃபேட் மேன் (Fat Man). அளவு மற்றும் எடை: 3.5 மீட்டர் நீளம், 1.5 மீட்டர் விட்டம், 4500 கிலோ எடை. இதில் 1 கிலோ புளூட்டோனியம் பயன்படுத்தப்பட்டது. தாக்கம்: இந்த அணுகுண்டு வீசப்பட்ட சில விநாடிகளில் சுமார் 74,000 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்த ஆண்டுகளில், கதிர்வீச்சு நோய்கள் மற்றும் காயங்களால் மேலும் பலர் இறந்தனர். இந்தக் கொடூரமான தாக்குதல், ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு தாக்குதலுக்குப் பிறகு நடந்தது. இரு நகரங்களிலும் ஏற்பட்ட பேரழிவு, உலக நாடுகள் அணு ஆயுதப் பயன்பாட்டின் ஆபத்தை உணர்ந்து கொள்ள வழிவகுத்தது. இன்று அனுசரிக்கப்படும் நாகசாகி தினம் குறிப்பிடத்தக்க வரலாற்று மற்றும் குறியீட்டு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது அணு ஆயுதப் போரின் பேரழிவு விளைவுகளை அப்பட்டமாக நினைவூட்டுகிறது. ஹிரோஷிமாவுடன் சேர்ந்து நாகசாகி மீதான குண்டுவீச்சு, அணு ஆயுதங்களின் மகத்தான மனித மற்றும் சுற்றுச்சூழல் இழப்பைக் காட்டுகிறது. குண்டுவெடிப்பின் பின்னர் உயிர்களை இழந்த அல்லது பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் நினைவை இந்த நாள் கௌரவிக்கிறது. உயிர் பிழைத்தவர்களின் துன்பத்தையும் நாகசாகி நகரத்தின் மீதான தாக்கத்தையும் இது ஒப்புக்கொள்கிறது. குறிப்பாக நாகசாகி தினம் உலகளாவிய அமைதியையும் அணு ஆயுதங்களை ஒழிப்பதையும் ஊக்குவிக்கிறது. இது நிராயுதபாணியாக்கத்தின் அவசியத்தையும் எதிர்கால அணு மோதல்களைத் தடுப்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரண்டாம் உலகப் போரின் பரந்த சூழல் மற்றும் அணுகுண்டுகளைப் பயன்படுத்துவதன் நெறிமுறை தாக்கங்கள் குறித்து சிந்திக்க இந்த நாள் ஊக்குவிக்கிறது. கடந்த கால நிகழ்வுகள் சமகால சர்வதேச உறவுகள் மற்றும் கொள்கைகளை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ள இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
சிங்கப்பூரின் 60-வது சுதந்திர தினம் – ஆகஸ்ட் 9 ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி, சிங்கப்பூரின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், 1965 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து பிரிந்து, ஒரு இறையாண்மை கொண்ட குடியரசாக மாறியதை நினைவுகூர்கிறது. பன்முகக் கலாச்சாரங்களைக் கொண்ட ஒரு நாடு, எவ்வாறு ஒற்றுமையுடன் வளர்ந்து, இன்று உலக நாடுகளின் பார்வையை ஈர்க்கும் ஒரு பொருளாதார சக்தியாக மாறியுள்ளது என்பதற்குச் சிங்கப்பூர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. முக்கிய தகவல்கள்: பிரிவினை மற்றும் சுதந்திரம்: 1963 முதல் 1965 வரை, சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்து இருந்தது. ஆனால், அரசியல் மற்றும் பொருளாதாரக் கருத்து வேறுபாடுகள் காரணமாக, 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று, சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து சுதந்திர நாடாக மாறியது. இந்த பிரிவினை சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ அவர்களுக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான நிகழ்வாக அமைந்தது. பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமை: சிங்கப்பூர் மக்கள் பல மொழிகளைப் பேசினாலும் (ஆங்கிலம், மலாய், மாண்டரின் மற்றும் தமிழ்), அவர்கள் அனைவரும் ஒரே தேசமாகத் தங்களை அடையாளப்படுத்துகின்றனர். “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற தத்துவத்தை பின்பற்றி, நாட்டின் வளர்ச்சிக்காக ஒற்றுமையுடன் பாடுபடுகின்றனர். தொடர்ந்து வரும் வளர்ச்சி: சுதந்திரம் பெற்றபோது, ஒரு சிறிய தீவு நாடாக இருந்த சிங்கப்பூர், இன்று ஒரு சர்வதேச நிதி மையம், போக்குவரத்து மையம், மற்றும் தொழில்நுட்பப் புரட்சியின் முன்னணியில் நிற்கும் நாடாக வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி அந்நாட்டு மக்களின் கடின உழைப்பு மற்றும் தொலைநோக்கு பார்வையைக் குறிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும், சிங்கப்பூரில் பிரமாண்டமான தேசிய தின அணிவகுப்பு (National Day Parade – NDP), கலை நிகழ்ச்சிகள் மற்றும் கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இது சிங்கப்பூர் மக்களின் தேசபக்தி உணர்வையும், நாட்டின் முன்னேற்றத்திற்கான உறுதியையும் வெளிப்படுத்துகிறது.
இன்று… ரக்ஷா பந்தன் டே! கி.பி. 1303-ம் ஆண்டு சித்தூர்கரை (ராஜஸ்தான்) டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி தாக்க வரும்போது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி கயிறு அனுப்பி போரை நிறுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன. இப்போது தான் காதலிக்க விரும்பாத அல்லது தனக்கு பிரச்னை ஏற்படுத்தும் ஆண்களுக்கு இளம் பெண்கள் ராக்கி கட்டி குழப்பத்தை அல்லது பிரச்னையை சமாளிப்பது சகஜமாகி விட்டது.. அந்த ராக்கி கட்டும் ரக்சா பந்தன் என்பது நிகழ்ச்சியை இம்மாதத்தின் பவுர்ணமி நாளில் கொண்டாடப்படும் . -அதாவது இன்று!!! இந்நாளில் பெண்கள் தமது ஒரிஜினல் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் (ராக்கி) கட்டுவது முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு பரிசு அல்லது பணம் அளிப்பதும் வழக்கம். பல ஆண்டுகளாக வடஇந்தியாவில் பிரபலமாக இருந்த இந்த நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருது.
