இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஆகஸ்ட் 05)

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது காஷ்மீர் போர் ஆம்.. ஆகஸ்ட் 5, 1965 அன்று, ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் பொதுமக்களாக வேடமிட்டு, ஆயுதங்களுடன் காஷ்மீருக்குள் ஊடுருவினர். இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான இரண்டாவது காஷ்மீர் போருக்கு (1965) முக்கிய காரணமாக அமைந்தது. போரின் முக்கிய தகவல்கள்: போரின் தொடக்கம்: ஆகஸ்ட் 5, 1965 அன்று பாகிஸ்தானின் ‘ஆபரேஷன் ஜிப்ரால்டர்’ (Operation Gibraltar) என்ற பெயரில் இந்த ஊடுருவல் நடவடிக்கை தொடங்கியது. காஷ்மீரில் கிளர்ச்சியைத் தூண்டி, அப்பகுதியைக் கைப்பற்றுவதே பாகிஸ்தானின் நோக்கமாக இருந்தது. போர் நீடித்த காலம்: இந்த போர் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் நீடித்தது. இரு நாடுகளுக்கும் இடையே கடும் சண்டைகள் நடைபெற்றன. இந்தியாவின் நிலை: அப்போது இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி இருந்தார். ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற முழக்கத்துடன், பாகிஸ்தானுக்கு எதிராகப் போரில் இந்தியா உறுதியாக நின்றது. பாகிஸ்தானின் நிலை: பாகிஸ்தானில் மேஜர் ஜெனரல் அயூப்கான் தலைமையில் இராணுவ ஆட்சி நடைபெற்றது. போரின் முடிவு: இந்த போரில் பாகிஸ்தான் இராணுவம் தோல்வியடைந்தது. சர்வதேச அளவில், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. தாஷ்கண்ட் ஒப்பந்தம்: 1966 ஜனவரி 10 அன்று, சோவியத் யூனியனின் தாஷ்கண்ட் நகரில் தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, இரு நாடுகளும் போருக்கு முந்தைய நிலைமைக்குத் திரும்புவது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தாஷ்கண்டிலேயே மர்மமான முறையில் காலமானார்.

அமெரிக்க இதழியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு நடைபெற்றது. உலகளவில் முதல் அவதூறு வழக்கில் எட்டு மாதங்களுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர் ஜான் பீட்டர் ஸெங்கர், தான் செய்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஜான் பீட்டர் ஸெங்கர் வழக்கு வழக்கின் பின்னணி: ஜான் பீட்டர் ஸெங்கர் என்பவர் நியூயார்க்கில் இருந்து வெளியான தி நியூயார்க் வீக்லி ஜர்னல் (The New York Weekly Journal) என்ற பத்திரிகையின் பதிப்பாளர். இவர், நியூயார்க்கின் அப்போதைய கவர்னர் வில்லியம் காஸ்பியின் (William Cosby) நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை வெளியிட்டார். குற்றச்சாட்டு: அதனால், 1734-ஆம் ஆண்டு, கவர்னர் காஸ்பியின் உத்தரவின் பேரில், ஸெங்கர் கைது செய்யப்பட்டு, அவதூறு (libel) வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தக் காலத்து சட்டத்தின்படி, ஒரு செய்தி உண்மையோ பொய்யோ, அரசாங்கத்தைப் பற்றி விமர்சனம் செய்வது ஒரு குற்றமாகக் கருதப்பட்டது. வழக்கின் தீர்ப்பு: நீதிமன்றத்தில், ஸெங்கரின் வழக்கறிஞர் ஆண்ட்ரூ ஹாமில்டன் (Andrew Hamilton), “ஒரு செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில், அது அவதூறு ஆகாது” என்று துணிச்சலாக வாதாடினார். இது அக்காலத்தில் ஒரு புரட்சிகரமான வாதம். நீதிபதி இந்த வாதத்தை நிராகரித்தபோதிலும், ஜான் பீட்டர் ஸெங்கர் வெளியிட்ட தகவல்கள் உண்மையானவை என்பதை நடுவர் குழு (jury) ஏற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 5, 1735 அன்று, நடுவர் குழு, ஸெங்கர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தது. இது, இதழியல் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமைக்கான ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்தத் தீர்ப்பு, அமெரிக்காவின் எதிர்கால அரசியலமைப்பில் அச்சுச் சுதந்திரம் (freedom of the press) இடம்பெற ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தது.

பிரெடெரிக் எங்கெல்ஸ் காலமான தினமின்று. 1895 கார்ல் மார்க்சுக்கு அடுத்தபடி நாகரிக உலகெங்கும் நவீனகாலப் பாட்டாளி வர்க்கத்தின் தலைசிறந்த அறிஞராகவும் ஆசானாகவும் விளங்கியவர் எங்கெல்ஸ் ஆவார். கார்ல் மார்க்சையும் பிரெடெரிக் எங்கெல்சையும் விதி ஒன்று சேர்த்து வைத்த காலத்திலிருந்து அவ்விரு நண்பர்களும் தமது வாழ்வை இருவருக்கும் பொதுவான இலட்சியத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டனர். ஆகவே, பாட்டாளி வர்க்கத்திற்கு பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆற்றிய பணியைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் தற்காலத்தியத் தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சியில் மார்க்சின் போதனையும் பணியும் வகிக்கும் முக்கியத்துவத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். எங்கெல்சின் பெயரும் வாழ்க்கையும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெரிந்திருக்க வேண்டும் எங்கெல்சின் சிந்தனைகள்: மதவாதம் மக்களின் வாழ்வை மூச்சடக்கச் செய்து‍ கடுமையானதாக்கிக் கொண்டிருக்கிறது. மதவாத தத்துவமானது‍ சாதாரண மக்களின் அரசியல் நலன்களுக்கு‍ எதிரானது. முதலாளி/ நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் நலனைக் காப்பதற்காகவே உள்ளது. முதலாளித்துவமானது‍ தொழிலாளிகளுக்கு‍ வேலை பாதுகாப்பின்மையை உருவாக்கி உள்ளது. தன் வாழ்‌க்கை என்னவாகுமோ என்ற பயத்தை உண்டாக்கியுள்ளது. முதலாளித்து‍வ பொருளாதாரத்தைப் பற்றி 1839 ஆம் ஆண்டு‍ அவர் இவ்வாறு‍ கூறுகிறார். முதலாளித்துவ சமூகத்தில் மக்களின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் பொருளாதார நலன் குறித்தே சுற்றி வருகின்றன.

ஹாலிவுட் பேரழகி மர்லின் மன்றோவின் நினைவு நாள் இன்று 1962 ஆயிரம் நடிகைகள் வந்தாலும், அவரை போல் இனி ஒருவர் இல்லையே, என தலைமுறைகள் கடந்தும் ஏங்க வைத்த நடிகை தான் மர்லின் மன்றோ.. 1950-களில் ஹாலிவுட் திரைப்படங்களில் நாயகியாக தோன்றிய மர்லின் மன்றோ, இன்றளவும் உலக திரை ரசிகர்களின் மனதில், நங்கூரம் பாய்ச்சி அமர்ந்திருக்கிறார். இவரின் பெயரை கேட்டதுமே, காற்றில் அலையடிக்கும் கவுன் அணிந்த அவருடைய, கருப்பு வெள்ளை புகைப்படம்தான் அனைவரின் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு சினிமா ரசிகர்களின், கனவுகளில் உலா வந்த எழில் தேவதை மர்லின் மன்றோ. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில், 1926-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி, பிறந்த மர்லின் மன்றோவின் இயற்பெயர் நோர்மா ஜீன் என்பதாகும். மர்லின் பிறப்பதற்கு முன்பே அவரது தந்தை இறந்துவிட, அவரின் தாய்க்கு, உடல்நலக் குறைவு ஏற்பட்ட காரணத்தால், காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார். எனினும், இளம் வயதில் காப்பகத்தை விட்டு வெளியேறி பணிப்பெண்ணாக பல இடங்களில் பணியாற்றினார். 16 வயதில் கப்பல் படை வீரர் ஜிம்மி டாகர்டி என்பவருடன் திருமணம் நடைபெற்றாலும், அதுவும் மூன்றாண்டுகள் மட்டுமே நீடித்தது. 1944-ம் ஆண்டுவாக்கில் தொழிற்சாலை ஒன்றில், பணியாற்றிக் கொண்டிருந்த மன்றோவை ஒளிப்படக் கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுக்க, அந்தப்படம் இவரது வாழ்க்கையையே மாற்றியது. அழகும், வனப்பும், இவரை மாடலிங் துறைக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க, அப்படியே சினிமா ஆசையில் நடிப்பு பயிற்சிக்கும் சென்றார் மர்லின் மன்றோ. சிறு கதாபாத்திரங்களில் ஆரம்பித்த சினிமா வாய்ப்பு, ஒரு சில ஆண்டுகளிலேயே நகைச்சுவை நாயகியாக கொடிக்கட்டி பறக்க வைத்தது. குறுகிய காலத்திலேயே ஹாலிவுட் திரையுலகத்தை ஈர்த்த மன்றோ, 20-ம் நூற்றாண்டின் இறுதியில் ஹாலிவுட்டின் உச்ச நடிகையாக கோலோச்சினார். ‘The Asphalt Jungle’ மற்றும் ‘All About Eve’ ஆகிய படங்கள் மர்லின் மன்றோவை, உலக ரசிகர்களிடம் கொண்டுச் சேர்த்தன. இவரளவுக்கு ரசிகர்களை ஈர்த்தவர்கள் குறைவுதான். The Seven year Itch என்ற படத்திற்காக, எடுக்கப்பட்ட புகைப்படம் தான், காற்றில் பறக்கும் ஆடையில் தோன்றும் மர்லின் மன்றோவின் புகைப்படம். இந்த படம் எடுத்து 60 ஆண்டுகள் ஆன பின்பும் இன்றளவும் இது போன்ற மாதிரியை, யாராலும் எடுக்க முடியவில்லை. மூன்று திருமணங்கள் செய்துகொண்ட மர்லின் மன்றோ, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடி மற்றும் ராபர்ட் கென்னடியுடனும் இணைத்துப் பேசப்பட்டார். புகழின் வெளிச்சத்தில் மர்லின் மன்றோ, இருந்தாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகவே இருந்தது. ஹாலிவுட்டின் கனவு தேவதையாக வலம் வந்த மர்லின் மன்றோ, தனது இறுதி நாட்களில் போதைப்பொருளுக்கு அடிமையாகி, தன்னுடைய 36 வயதில் இதே நாளில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலை செய்து கொண்டார் என பேசப்பட்டாலும், பிரபஞ்சத்தின் பேரழகியாக கொண்டாடப்பட்ட மர்லின் மன்றோவின் மரணம், இன்றளவும் புதிராகவே உள்ளது.

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி நினைவு நாள்! திரைகானம் பாடிய நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, கும்பகோணத்தில் பிறந்தவர். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி, டி.கே.எஸ். நாடக குழு, கிருஷ்ண நாடகசபா (இவரது சொந்த சபா) ஆகிய நாடக சபாக்களில் நடித்து தம் நடிப்பை வளர்த்துக் கொண்ட இவர், நாடகத்தைக் கண்ணாகப் போற்றியவர். தனது தந்தை காலமான அன்றும் கூட, தந்தையின் இறுதிக் கடன்களை முடித்த கையோடு, அன்றிரவே நாடகத்தில் நடித்தரிவர். இவர் சார்ந்திருந்த திராவிட இயக்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, 1960 ஆம் ஆண்டிலேயே எம்.எல்.சி. பதவி வகித்தவர் இவர். அறிஞர் அண்ணா இவருக்கு “நடிப்பிசைப் புலவர்’ என்ற பட்டமளித்தார். நடிப்பிசைப் புலவரை அனைவரும் “அண்ணாவின் செல்லப்பிள்ளை’ என்று செல்லமாக அழைத்தார்கள். நீதிபதி, பூம்பாவை, பில்ஹணா, கங்கணம், காஞ்சனா, விஜயகுமாரி, வேலைக்காரி, ஓர் இரவு, சொர்க்க வாசல், செல்லப் பிள்ளை, அவன் அமரன், மேனகா (1955), கன்னியின் சபதம், துளிவிஷம், சுகம் எங்கே ஆகிய 15 படங்களில் கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்துள்ளார்.இவர் நடித்து 100 நாட்கள் ஓடிய திரைப் படங்கள், குமாஸ்தாவின் பெண், பூம்பாவை, கிருஷ்ண பக்தி, வேலைக்காரி, சொர்க்கவாசல் ஆகியவை.

தமிழிலக்கியத்தில் பன்முகச் சிந்தனைகளோடு கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், சிறுவர் சிறுகதைகள் போன்ற படைப்புகள் பல தந்த “அரசு மணிமேகலை” நினைவு நாள் ஆகஸ்ட் 5, 2001 தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்ற இவர் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். அதோடு மட்டுமின்றி திரைப்படத் தணிக்கைக்குழு உறுப்பினராகவும், தமிழ் வளர்ச்சித் துறை திட்டக்குழு உறுப்பினராகவும் செயலாற்றியுள்ளார். இரண்டாவது உலகத் தமிழ்மாநாட்டின் போது மாநாட்டுமலர்த் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு சிறப்பாகச் செயலாற்றியவர். எழுத்தாளர், பேராசிரியர், சொற்பொழிவாளர், வானொலி- தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறந்தவர். திரைப்படக் கதை வசனம், பாடல்கள் எழுதிப் புகழ்பெற்றவர். பாரதியார் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகங்களில் இவரது படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய நூல்கள் மொத்தம் 54. இவரது முதற்கவிதை 1980 இல் வெளிவந்தது பாவேந்தர் விருது, கலைமாமணி, ஜான்சிராணி, வேலு நாச்சியார், அருந்தமிழ்த் தென்றல் போன்ற ஐந்து விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழக அரசு,[2] குழந்தை எழுத்தாளர் சங்கம், பிரான்சு தமிழ்ச்சங்கம், ஆனந்தவிகடன், கலைமகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த பரிசுகளையும் பெற்றுள்ளார்.மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் போன்றவற்றிற்கு தமிழக அரசால் ஆண்டு தோறும் மணிமேகலை விருது வழங்கப்படுகிறது.

டோனி மாரிசன் காலமான நாளின்று.நவீனத்துவ இலக்கியத்தின் மகா படைப்பாளியும் ஆப்ரிக்க-அமெரிக்க இலக்கியத்தை வேறொரு பரிமாணத்துக்கு உயர்த்தியவரும் கருப்பரின உரிமைகளுக்காக தன் வன்மையான, ஆற்றல் மிகு எழுத்துக்களால் போராடிய அமெரிக்க எழுத்தாளர் டோனி மாரிசன் இவரது பிலவட், சாங் ஆஃப் சாலமன் போன்ற நாவல்கள் இவருக்கு பெரிய புகழையும், ஆப்ரோ-அமெரிக்க இலக்கியத்தில் மிகப்பெரிய படைப்பாளுமை என்ற அந்தஸ்தையும் வழங்கியது. முதல் நாவல் ‘ப்ளூயெஸ்ட் ஐ’ வெளி வரும்போது இவருக்கு வயது 40 இருக்கும். அவரது 60வது வயதுகளின் காலக்கட்டத்தில் சுமார் 6 நாவல்கள் எழுதப்பட்ட நிலையில் நோபல் பரிசு பெறும் முதல் கருப்பரினப் பெண் படைப்பாளி என்ற வரலாறு படைத்தார் டோனி மாரிசன். அவர் ‘மொழிக்குள் வாழ்ந்தார், மொழியை விடுதலையாக்கினார்’ என்று அப்போது கூறப்பட்டது. அதாவது மொழியை நிறவெறி திணைகளான கருப்பு/வெண்மை என்ற பேதச் சிறையிலிருந்து மீட்டவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அமெரிக்க பன்முக பண்பாட்டு வாதத்தை உலக அரங்கில் உயர்த்திக் காட்டியவர் டோனி மாரிசன். தன் நாட்டின் இருண்ட கடந்த காலத்தை சென்சாரிலிருந்து விடுவித்தவர் டோனி மாரிசன். அறியப்படாதவர்களை எழுதினார், விரும்பத்தகாதவர்களாக ஆக்கப்பட்டவர்களை எழுதினார். அவர் பாஷையில் கூற வேண்டுமெனில், “ஜனநாயகப் பரிசோதனையின் இருதய மையத்தில் விடுதலையடையாதவர்களை” ப் பற்றி எழுதினார். இவரது படைப்புகளில் கருப்பரின வரலாறு கவித்துவமாகவும் துன்பியலாகவும் அன்பாகவும் சாகசமாகவும் பலபரிமாணங்கள் பெற்றது. நிறவெறி என்பது சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட ஒன்று பிறப்பினால் அல்ல என்பதை தன் கதாப்பாத்திரங்களின் போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தினார். ஆப்பிரிக்க இலக்கியம், அவர்களின் நாட்டுப்புறவியல், பைபிள் என்று அனைத்தையும் தன் நாவல்களில் திறம்பட, இடக்கரடக்கலாக, ஆற்றலுடனும் உந்து விசையுடனும் தன் நடை மூலம் கையாண்டார். “கதையாடல் எனக்கு எப்போதும் பொழுது போக்கு அல்ல, என்னைப் பொறுத்தவரை அறிவைப் பெறுவதற்கான ஒரு முதன்மை வழிகளே கதையாடல்” என்று தன் நோபல் உரையில் அவர் தெரிவித்தார். பிலவட் நாவலுக்கு 1988-ம் ஆண்டு புலிட்சர் விருது பெற்றார். ஆப்பிரிக்க-அமெரிக்க அடிமைப் பெண்ணான மார்க்ரெட் கார்னர் கெண்டகி மாகாண அடிமைச்சமூகத்திலிருந்து தப்பித்து ஒஹியோவுக்கு சென்றவர் பற்றிய நிகழ்விலிருந்தும் தான் பெற்ற குழந்தையையே கொலை செய்த கருப்பரின தாய் பற்றிய ஒரு செய்தித்தாள் செய்தியிலிருந்தும் ஊக்கம் பெற்று ‘பிலவட்’ படைப்பை அவர் எழுதினார். தப்பிச் சென்ற கார்னரை அடிமை வேட்டையாளர்கள் விரட்டுகின்றனர். மீண்டும் கார்னர் அடிமைச்சமூகச் சேவகத்துக்கும் அடக்குமுறைக்கும் திரும்ப நேரிடும் போது தன் 2 வயது மகளை இந்த கொடூர உலகில் விட்டுச் செல்ல வேண்டாம் என்று கொலை செய்கிறார், ஆனால் தானும் தற்கொலை செய்யும் முன் இவரை அடிமை வேட்டையாளர்கள் பிடித்து விடுகிறார்கள், இந்த உண்மைக்கதைதான் வேதனை பிலவட் நாவலின் பிறப்பிடம்… வேதனைப் பிறப்பிடமான பிலவட் நாவல். பிப்ரவரி 18, 1931-ல் டோனி மாரிசன் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தார். ஆப்பிரிக்க-அமெரிக்க பாட்டாளி வர்க்க குடும்பத்தின் 4 வாரிசுகளில் டோனி மாரிசன் 2வது வாரிசு. டோனி மாரிசன் 2 வயதாக இருந்த போது நில உரிமையாளர் இவர்களால் வாடகை கொடுக்க முடியாததால் இவர்கள் வசித்த வீட்டுக்கு தீவைத்தார். நிறவெறி, அடிமை முறையின் கொடூரமான காலங்களைக் கடந்து வந்த மிகப்பெரிய ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் படைப்பாளி இதே ஆகஸ்ட் 5-2019இல் காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!