அமெரிக்காவுக்கு ஒன்றிய அரசு கண்டனம்..!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 258வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனிடையே, போர் தொடங்கியது முதல் ரஷியா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. அதேவேளை, ரஷியாவில் இருந்து இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. ரஷியா கச்சா எண்ணெய் விற்பனையில் கிடைக்கும் பணத்தை கொண்டு உக்ரைன் போரை தொடர்ந்து நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.

மேலும், ரஷியாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய், ராணுவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதாகவும், இந்த பணத்தை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா பயன்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையடுத்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் கடந்த வாரம் அறிவித்தார். இது இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், வரும் நாட்களில் இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், கச்சா எண்ணெய் விவகாரத்தில் இந்தியாவை அமெரிக்கா குறிவைப்பது நியாயமற்றது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

உக்ரைன் போரை தொடர்ந்து ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனால் இந்தியா குறி வைக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்றது. வழக்கமாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கும் நாடுகள் ஐரோப்பாவிற்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்யத்தொடங்கின. போர் தொடங்கியபோது ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா ஆதரித்தது.

இந்திய நுகர்வோர்கள் குறைவான விலையில் பெட்ரோல், டீசல் பெறுவதை உறுதி செய்யவதே இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன் நோக்கம்.

இந்தியாவை விமர்சனம் செய்யும் நாடுகளே ரஷியாவிடம் வர்த்தகம் செய்கின்றன. ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் மட்டுமின்றி உரம், கனிம பொருட்கள், வேதிப்பொருட்கள், இரும்பு, எந்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்கின்றன. அமெரிக்காவும் ரஷியாவிடமிருந்து அணு உலைகளுக்கு தேவையான யுரேனியம், மின்சார கார் உற்பத்திக்கு தேவையான பலோடியம், உரங்கள், வேதிப்பொருட்களை கொள்முதல் செய்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவை அமெரிக்கா குறிவைப்பது நியாயமற்றது. ஒவ்வொரு பொருளாதார நாடுகளை போன்றே இந்தியாவும் அதன் தேசிய, பொருளாதார நலன்களை காக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளும்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!