பிபிசி நியூஸ் டிவி-க்கு ஹேப்பி பர்த் டே! பிபிசி நிறுவனம் பிரிட்டிஷ் அரசின் பொது நிதியில் இயங்கும் ஊடக நிறுவனமாகும். பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் என்ற பெயர்கொண்ட இது கடந்த 1927-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்நிறுவனம் வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலம் செய்தி சேவைகளை வழங்கி வருகிறது. இதன் தலைமையகம் லண்டனில் உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமான இது உலகின் 150 தலைநகரங்களில் 28 மொழிகளில் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளை ஒலி-ஒளிபரப்பு செய்து வருகிறது. அந்த வகையில் உலகின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான பிபிசி 1954 ஆம் ஆண்டு இதே ஜுலை மாதம் 5-ந் தேதி தனது முதல் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது. வெஸ்ட் மின்ஸ்டர் நகரத்தில் உள்ள இந்நிறுவனத்தில் 23 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
பிகினியை எல்லோருக்கும் தெரியும். பார்த்திருப்பீர்கள், ரசித்திருப்பீர்கள். ஆனால் அந்த உடை எப்போது பிறந்தது என்று தெரியுமா. 1946ம் ஆண்டு இதே ஜூலை 5ம் தேதிதான் பிகினி பிறந்த தினமாகும். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உடை வடிவமைப்பாளர் லூயிஸ் ரியார்ட்தான் முதன் முதலில் பிகினி உடையை வடிவமைத்து இந்த நாளில் வெளியிட்டார். பாரீஸில் உள்ள பிரபலமான நீச்சல் குளமான பிஸின் மாலிட்டர் என்ற இடத்தில்தான் இந்த பிகினி உடையை முதன் முதலில் அவர் நீச்சல் குளத்தில் இறக்கினார். அப்போது பிரபலமாக இருந்த மிச்சலின் பெர்னார்டினி என்ற மாடல் அழகிதான் உலகின் முதல் பிகினி உடையை அணிந்து பெருமை பொங்க காட்சி அளித்தார். சரி, பிகினி என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா…? நீச்சல் உடையை முதன் முதலில் லூயில் ரியார்ட் அறிமுகப்படுத்திய வாரத்தின் தொடக்கத்தில் பசிபிக் கடலில் உள்ள பிகினி அடால் என்ற இடத்தில் அமெரி்ககா அணு ஆயுத சோதனையை நடத்தியிருந்தது. அந்த சோதனையை நினைவு கூறும் விதமாக தனது நீச்சல் உடைக்கு அவர் பிகினி என்று பெயர் வைத்து விட்டார். முதலில் தனது நீச்சல் உடையை அணிந்து போஸ் தருவதற்கு உரிய மாடல் அழகி கிடைக்காமல் கஷ்டப்பட்டாராம் ரியார்ட். காரணம், யாருமே அப்போது அந்த டூ பீஸ் உடையை போட்டுக் கொள்ள தயங்கினராம். இதையடுத்தே மிச்சலினை அணுகினார். அவரும் ஒத்துக் கொள்ளவே முதல் பிகினிக்கு ஏற்ற உடல் கிடைத்த சந்தோஷத்தை அடைந்தார் ரியார்ட். கிட்டத்தட்ட நிர்வாணம் என்று சொல்லக்கூடிய வகையில் மிச்சலின் அணிந்த பிகினி உடை இருந்தது. இருந்தாலும் அதை சற்றும் கூச்சமில்லாமல் போட்டுக் கொண்டு நூற்றுக்கணக்கானோர் முன்பு தோன்றினார் மிச்சலின். அட்சினல் ரிப்போர்ட் பண்டைய காலங்களில் குளியலும், நீச்சலும் நிர்வாணமாகவே செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், விளையாட்டு போன்றவற்றில் 5,000 ஆண்டுகளுக்குமுன் அணியப்பட்ட சிறிய உடைகளும், தற்போதைய பிகினியோடு ஒப்பிடப்படுமளவுக்குத்தான் இருந்திருக்கின்றன.
குளோனிங் முறையில் உருவான முதல் செம்மறியாடு டோலி பிறந்துச்சாக்கும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ரோஸ்லின் ஆராய்ச்சிக் கூடத்தில் முதன்முதலாக டோலி என்ற செம்மறியாடு குளோனிங் முறையில் பிறந்துச்சாக்கும். சோதனைக்குழாய் மூலம் வளர்க்கப்பட்ட டோலி, எம்பிரியோ வளர்ச்சிக்குப் பிறகு ஒரு பெண் ஆட்டின் கர்ப்பப்பைக்குள் வைக்கப்பட்டு முழு வடிவம் பெற்றது. இதன் உருவாக்கத்தில் தலைமை வகித்தவர் லான் வில்மட் என்ற விஞ்ஞானி ஆவார். இவர் செம்மறியாட்டின் படைப்பாளி என புகழப்படுகிறார். இதன் மூலம், உடலின் எந்த பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட செல்லிலிருந்தும் அந்த உயிரியை முழுவதுமாக குளோனிங் முறையினால் உருவாக்க முடியும் என நிரூபிக்கப்பட்டது.
தமிழ் புலவர், முருக பக்தர் ‘வண்ணச்சரபம்’ தண்டபாணி சுவாமிகள் நினைவு நாளின்று.
திருநெல்வேலியில் (1839) பிறந்தவர். இயற்பெயர் சங்கரலிங்கம். தந்தையின் நண்பர் சீதாராம நாயுடுவால் முருகன் மீது பக்தி அதிகரித்தது. சிறு வயதிலேயே தமிழில் புலமை பெற்றிருந்தார். ‘பூமி காத்தாள்’ என்ற அம்மனுக்கு அப்பெயர் வருவதற்கான காரணத்தை, 8 வயதில் வெண்பா மூலம் பாடி விளக்கியவர். முருகனைப் பற்றி ஏராளமான பாடல்கள் பாடியதால் முருகதாசன் என்றும், திருப்புகழைப் பாடிக்கொண்டே இருந்ததால் திருப்புகழ் சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார். மேனி முழுவதும் திருநீறு, நெற்றியில் குங்குமம், இடது தோளில் வடகலைத் திருநாமம், வலது தோளில் தென்கலைத் திருநாமம் தரித்திருப்பார். அக்கமணி மாலை, பாதக்குறடு, கோவணத்துடன், தண்டாயுதம் ஏந்தி வலம் வந்ததால் இவரை ‘தண்டபாணி சுவாமிகள்’ என்றனர் மக்கள். அகப்பொருளின் துறைகளை அமைத்து சந்த யாப்பில் ‘வண்ணம்’ என்ற பெயரில் பாடல்களைப் பாடியதால் ‘வண்ணச்சரபம்’ என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது. தமிழகத்தில் அவிநாசி உள்ளிட்ட 218 ஊர்களுக்கும் கேரளம், இலங்கைக்கும் சென்று பக்தி நெறியைப் பரப்பினார். பழநி, விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூரில் கவுமார மடத்தை நிறுவி முருக வழிபாட்டு நெறியை வளர்க்கப் பாடுபட்டார். முத்தமிழ் பாமாலை, தமிழ்த் துதிப் பதிகம், தமிழ் அலங்காரம் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்தவர். திருக்குறளை அடியொட்டி, 1300 குறள் வெண்பாக்களில் மறுநெறித் திருநூல் என்ற நூலை இயற்றியவர். அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், வண்ணத்தியல்பு ஆகிய 3 இலக்கண நூல்களை தந்துள்ளார். அரசாட்சி, அருளாட்சி, திருமகள் அந்தாதி, திருமால் ஆயிரம், தில்லை ஆயிரம், சடகோபர் சதக்கந்தாதி, அருணகிரிநாதர் புராணம் என பல இலக்கியங்களைப் படைத்துள்ளார். ஏராளமான கீர்த்தனைகள், தனிப்பாடல்களையும் பாடியுள்ளார். ‘ஆங்கிலியர் அந்தாதி’ என்று நூல் வாயிலாக ஆங்கிலேயர் ஆதிக்கத்தை கண்டனம் செய்தார். 1240 விருத்தப் பாக்களால் ஆன சுயசரிதையை குருபர தத்துவம் என்ற பெயரில் எழுதினார். 72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை 3 ஆயிரம் பாடல்களில் புலவர் புராணம் என்ற நூலாகப் படைத்தார். வள்ளலாரை 3 முறை சந்தித்துள்ளார். தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் தந்தை, தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் உள்ளிட்டோர் இவரது சீடர்கள். பெண் கல்வி, விதவை மறுமணம், உயிர்க்கொலை புரியாமை, புலால் உண்ணாமை, தமிழ் உணர்வு ஆகியவற்றை தன் நூல்களில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார். மனைவிக்கு கல்வி கற்பித்து புலமைபெற வைத்தார். எழுத்தாணி கொண்டு ஓலைச் சுவடிகளில் இவர் 1 லட்சம் பாடல்கள் எழுதியதாக கூறப்படுகிறது. அவற்றில் 50 ஆயிரம் பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இறுதிகாலத்தில் அரிசி உணவைத் தவிர்த்து பயறு வகைகளை மட்டுமே உட்கொண்டார். 19-ம் நூற்றாண்டில் முருகன் வழிபாடு தழைத்தோங்கப் பாடுபட்டவர். கடும் தவத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட தண்டபாணி சுவாமிகள் 59-வது வயதில் இதே ஜூலை 5இல் (1898) மறைந்தார்.
வைக்கம் முகமது பஷீர், 1908 –ம் ஆண்டு ஜனவரி 10-ம் நாள் கேரளாவில் உள்ள வைக்கமில் ‘தலயோலப் பரம்பில்’ பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை முடிப்பதற்கு முன்பே வீட்டை விட்டு ஓடிவிட்டவர், இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டார். பலமுறை சிறைதண்டனை அனுபவித்தார். பகத் சிங் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கி இயங்கினார். அவ்வமைப்பின் கொள்கை இதழாக ‘உஜ்ஜீவனம்’ எனும் வாரப் பத்திரிகையும் தொடங்கினார். பத்தாண்டுகள் இந்தியா முழுக்க தேசாந்திரியாக அலைந்து திரிந்தார். ஆப்பிரிக்கா, அரேபியா போன்ற நாடுகள்வரைகூட அந்தத் தேசாந்திரி பயணம் நீண்டது. இந்தக் காலகட்டத்தில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை என்று சொல்லிவிடலாம். சில வருடங்கள் இமயமலைச் சரிவுகளிலும் கங்கைக் கரைகளிலும் இந்துத் துறவியாகவும் இஸ்லாமியச் சூஃபியாகவும் வாழ்ந்தார். மலையாளத்தில் சிறுகதை, நாவல், உரைநடை என விரிவாக இயங்கி மலையாள இலக்கியத்தின் முக்கியமான முகமாக மாறினார். பத்மஸ்ரீ உள்பட பல்வேறு உயரிய விருதுகள் பெற்றவர். 1994 -ம் ஆண்டில் இதே நாளான ஜூலை 5-ம் நாளில் தனது 86வது வயதில் காலமானார்.
பழங்குடி மக்களின் காட் பாதர் ஸ்டான் சுவாமி நினைவு நாள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1937ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி பிறந்தவர் ஸ்டேன் சுவாமி. ஸ்டானிஸ்லாஸ் லூர்துசாமி என்பதுதான் அவரது இயற்பெயர். காலப் போக்கில் அது ஸ்டேன் சுவாமியாக மாறியது. ஸ்டேன் சாமி என்று அழைப்போரும் உண்டு. செயின்ட் ஜோஜப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார் ஸ்டேன் சாமி. பள்ளி நாட்களிலேயே, பாதிரியார் ஒருவரோடு ஏற்பட்ட பழக்கத்தால் சமூக தொண்டுகளில் ஈடுபடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. 1957ம் ஆண்டு மதக் கல்வியை கற்க ஆரம்பித்துள்ளார். படிக்கும் போதே உலகின் பல்வேறு பிராந்தியங்களிலும் பழங்குடி மக்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதையும் அவர்களின் போராட்டங்களையும் பற்றி அவருக்கு அதிக புரிதலைக் கொடுத்தன. அதை அடுத்து பழங்குடியினருக்காக குரல் கொடுத்தவரின் குரல்வளையை அரசு நெரிக்க தொடங்கியது ஒரு சூழலில் ‘கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழங் குடியினரின் சுயநிர்வாகம், நிலம், நீர், காடு சார்ந்த உரிமைகளுக்காகவும், அவர்களுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் உழைத்ததைவிட நான் வேறு என்ன தவறு செய்துவிட்டேன்?” என்று கேள்வி எழுப்பினார். ஆனாலும்அடுத்தடுத்து வலுவான வழக்குகள் போடப்பட்டு, தேசியப் புலனாய்வு அமைப்பின் கீழ் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக் கைதியாக மும்பை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.முதிர்ந்த வயது, பார்கின்சன் நோயால் ஏற்பட்ட கைநடுக்கம் மற்றும் பிற நோய்கள் காரணமாக மருத்துவரீதியிலான பிணை கேட்டபோது, நீதிமன்றம் கடைசி வரை மறுத்துவிட்டது. மீண்டும் மீண்டும் உடல்நலம் மோசமான நிலையிலும் அவரை மருத்துவமனை சிகிச்சைக்கு அனுப்பினார்களே தவிர, ஜாமீனில் வெளியே அனுப்பவில்லை. கைநடுக்கம் காரணமாக, உறிஞ்சிக் குடிப்பதற்குச் சிறையில் தனக்கு உறிஞ்சுகுழல் வேண்டும் என்ற அவரது வேண்டுகோள் ஏற்கப்படாதது கண்டு, அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். மெல்ல மனநலமும் உடல்நலமும் பாதிக்கப்பட்டு, கரோனா பாதிப்புக்கும் ஆளான ஸ்டேன் சுவாமி, இதே ஜூலை 5-ம் தேதி மரணமடைந்தார்.
பாலகுமாரன் பிறந்த நாளின்று! உண்மையில் சித்தர் என்றொருவர் கிடையாது அப்படியென்று சிலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், எழுத்துலகின் சித்தர் என பாலகுமாரனை சொல்லியபோது அது பெரிதுபடுத்தப்பட்ட பிம்பமோ என்றே இன்றைய தலைமுறையினருக்கு தோன்ற வாய்ப்புள்ளது. ஆனால், எழுத்துச் சித்தர் எனும் வார்த்தைக்கு பலம் சேர்த்து, 90களின் தொடக்கத்தில் எழுத்துலகில் புயலைக் கிளப்பியவர்களின் பாலகுமாரனும் ஒருவர் என்றால் அது மிகையல்ல. இறைவனுக்கான பிரார்த்தனை குறித்து அவரது மொழியில் சொல்வதென்றால், “ஜபம் வாழ்வின் அடிப்படை. கற்றுக்கொள்வதல்ல, சொல்லி தந்து செய்வதல்ல. அது உள்ளிருந்து பீறிடவேண்டும். தன்முனைப்பாக கிளர்ந்தெழுந்து தானே சரிய வேண்டும்.” இந்த வரிகளை எழுதுவதற்கு ஒரு சித்தம் வேண்டும். இதை எழுதியவரை சித்தன் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? தஞ்சை மண், தமிழ் வளத்திற்கு எத்தனையோ கொடையாளர்களை கொடுத்திருக்கிறது. நகுலன் தொடங்கி, கல்கி, ந.பிச்சமூர்த்தி, தி.ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ் என இந்த வரிசையில் தன்னையும் நிலைநிறுத்திக்கொண்டவர் பாலகுமாரன். இவரது எழுத்து மிக ஜனரஞ்சகமாக இருந்தது. தொன்னூறுகளில் இவர் தமிழ் எழுத்துலகில் கொடிக்கட்டி பறக்கத் தொடங்கினார். குறிப்பாக இரும்பு குதிரைகள், உடையார், கங்கை கொண்ட சோழன், தாயுமானவன் போன்ற புதினங்களால் எழுத்து வட்டத்தில் பெரிதும் அறியப்பட்டார் பாலகுமாரன். கல்கியின் பொன்னியின் செல்வன், ராஜராஜ சோழனின் இளம் பருவத்தை சிறப்பாக பதிவு செய்திருந்தது என்றால், ராஜராஜ சோழனின் தஞ்சை கோயில் கட்டிய வரலாற்றை சிறப்பாக பதிவு செய்த பெருமை பாலகுமாரனின் உடையார் புதினத்தையே சேரும். ஒருபுறம் வரலாறு புதினத்தை எழுதி திணறடித்த கைகள் மறுபுறத்தில் ஜனரஞ்சகத்தை தொடாமல் இருந்ததில்லை. குறிப்பாக இரும்பு குதிரைகள் நாவல் இதற்கு ஓர் சிறந்த உதாரணமாகும். எழுத்துலகில் உச்சி முகரப்பட்ட படைப்பாளிகளில் பாலகுமாரனும் ஒருவர். எழுத்தை கடந்து, சினிமா துறையிலும் வீரியமாக பாலகுமாரன் இயங்கியிருக்கிறார். பல படங்களில் இவரது வசனங்கள் தனி முத்திரை பதித்தன. அதிலொன்றுதான் நாயகன் பட டையலாகான “நீங்க நல்வரா… கெட்டவரா…” என்பது. பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.1987ல் வெளியான நாயகன் தொடங்கி, 2006ல் வெளியான புதுப்பேட்டை வரை ஏறத்தாழ 23 திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுதியுள்ளார். இதில் இயக்குநர் ஷங்கரின் காதலன் திரைக்கதைக்கு தமிழ்நாடு அரசின் மாநில விருது வழங்கப்பட்டது. மேலும் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். 90களில் புதினங்கள் மூலமாக இலக்கிய வாசகர்கள் மனதையும், 2000-களில் திரைக்கதைகள் வழியாக சினிமாக ரசிகர்கள் மனதிலும் இடம்பெற்ற பெருமைக்கு சொந்தக்காரராக இன்றைக்கும் எழுத்தில் வாழும் பாலகுமாரனுக்கு மின்கைத்தடி சார்பில் ஹேப்பி பர்த் டே
