டிரினிடாட் அண்டு டுபாகோ பள்ளி மாணவர்களுக்கு 2 ஆயிரம் லேப்டாப்களை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்காக அவர் தனி விமானத்தில் கடந்த 2-ந்தேதி கானாவுக்கு புறப்பட்டு சென்றார்.
கானா நாட்டின் ஜனாதிபதி ஜான் திராமணி மகாமா அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
இந்த பயணத்தில், வரலாற்று தன்மை கொண்ட உறவுகளை ஆழப்படுத்தும் நோக்கில் இரு தலைவர்களும் தங்களுடைய பார்வைகளை பரிமாறி கொண்டனர். முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு, திறன் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
