ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 41 ஆயிரத்து 197 கனஅடி தண்ணீர் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
