உலக மனிதநேய நாள் ( World Humanist Day) மனிதநேயத்தின் அவசியத்தை அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. ஆனால் இன்றைய உலகில் நடப்பதைப் பார்த்தால், மனித நேயம் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கிறது. பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வணிக நோக்கோடும், சுயநல நோக்கோடும் செயல்படும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், அரசுகள் போன்ற அத்தனையும் சமுதாயத்தை சீரழிப்பதில் போட்டி போட்டுக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளதைத்தான் கண்முன்னே பார்த்துக்கொண்டிருக்கிறோம். மேலும் மனிதாபிமானம், அல்லது மனித நேயம் என்பது இன்று காணாமல் போய்வருகிறது. அன்னை தெரேசாக்கள் தோன்றுவது அத்திபூத்தாற்போல் ஆகிவிட்டது. தன்னைத் தாக்கும் பகைவர்களுக்கு கூட தீங்கு செய்யாதிருப்பதை தனது போராட்ட வழியாக நடைமுறைப்படுத்தி வெற்றி கண்ட அண்ணல் மகாத்மா காந்திகளை எங்கும் காண முடியவில்லை. மக்களுக்கு தொண்டாற்றும் நல்மனம் படைத்தவர்களைக் கூட, ஜாதி, மதம் என்ற பிரிவினைகளைப் புகுத்தி ஒதுக்கிவைக்கும் குறுகிய மனம் புகுந்துவிட்டது. இதனால், எலும்பும் தோலும் போர்த்திய உடம்பை வைத்துக்கொண்டு மனிதநேய உணர்வுகளின்றி எத்தனை கோடி பேர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என நாம் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். “மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ” என பாரதியார் பாடியதில் இன்றும் எவ்வித மாற்றமும் இல்லை. இச்சூழலில் உலக மனிதநேய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது, மேலும் 1980 களில் இருந்து நாம் அதைக் கொண்டாடி வருகிறோம். உலகெங்கிலும் உள்ள மனிதநேயவாதிகள் மனிதநேயத்தின் நேர்மறையான மதிப்புகளைப் பரப்புவதற்கும் மனிதநேய இயக்கத்தின் உலகளாவிய கவலைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் இது ஒரு வாய்ப்பாகும்.
உலகெங்கிலும் உள்ள ஹைட்ரோகிராஃபிக் மற்றும் ஹைட்ரோகிராஃபர்களின் பணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூன் 21 அன்று உலக ஹைட்ரோகிராஃபிக் தினம் அனுசரிக்கப்படுகிறது. இது சர்வதேச ஹைட்ரோகிராஃபிக் அமைப்பால் (IHO) தொடங்கப்பட்டது மற்றும் முதன்முதலில் 2006 இல் கொண்டாடப்பட்டது. இந்த நாள் 1921 இல் IHO நிறுவப்பட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது அது சரி ஹைட்ரோகிராஃபி என்றால் என்ன? ஹைட்ரோகிராஃபி என்பது பூமியின் நீர்நிலைகளின் இயற்பியல் அம்சங்களை அளவிடும் மற்றும் விவரிக்கும் ஒரு விஞ்ஞானக் கிளையாகும். குறிப்பாக, இது கடல்கள், கடலோரப் பகுதிகள், ஏரிகள் மற்றும் ஆறுகளின் ஆழம், வடிவம், அலைகள், நீரோட்டங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளின் புவியியல் அம்சங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்தத் தரவுகள் பின்னர் கடல்வழி வரைபடங்கள் (Nautical Charts), வழிசெலுத்தல் உதவிகள் மற்றும் பிற கடல்சார் தகவல்களாக மாற்றப்படுகின்றன.
உலக இசை நாள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை தோன்றிவிட்டாலும். வெளிநாடுகளில் இசை உருவானது எப்படி என்றால் விலங்குகளில் இருந்து மனிதன் தன்னை பாதுகாக்க எழுப்பிய சத்தத்தின் மூலம் உருவானதுதான் இசை. அதனால்தானோ என்னவோ இன்றைக்கும் நம் ஒவ்வொருவரின் மனோ நிலையையும் இசை தீர்மானிக்கிறது. பெரும்பாலான மனிதர்களின் நினைவுகளையும் அதன் நிகழ்வுகளையும் இசை மீட்டெடுக்க கூடியது. இசையின் வடிவங்கள் வேறாகலாம். இந்தியாவை பொறுத்தவரை திரை இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி, கஜல், பறை என ஏராளமான இசை வடிவங்கள். இதில் திரையிசை முதல் பறையிசை வரை இந்தியாவில் தனி மனிதனின் வாழ்வின் தொடக்கம் முதல் இறுதி வரை பயணப்பட்டுக் கொண்டிருக்கும். சர்வதேச அளவில் பல்வேறு இசை வகைகள் உள்ளன அதில் பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, மற்றும் நவீன இசை என பல பரிமாணங்கள் உருவாகின. உலகில் ஒவவொரு நாடும் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு பல வகையான இசைகளை இசைக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி, ஹார்டு ராக், ஹெவி மெட்டல் உள்ளிட்ட இசை வகைகள் உலகளவில் பிரபலம். இதை எல்லாம் அசை போடும் நோக்கில்தான் உலக இசை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள 120 நாடுகள், கச்சேரிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் இந்த தினத்தை கொண்டாடுகின்றன. இசையை இளைய தலைமுறையினருக்கான் கலை வடிவமாக மாற்றுவதே உலக இசை தினத்தின் நோக்கமாகும்.
உலக யோகா தினம் இப்புவியில் பிறந்த ஒவ்வொரு மனிதனை வழிநடத்துவது மனமே. அந்த மனம் நல்ல சிந்தனைகளை, ஒழுக்கங்களை கற்பிப்பதாக இருத்தலே ஒருவரை நல்வழிப்படுத்தும். அலைபாய்ந்திருக்கும் எண்ணங்களால், ஆசைகளால் அவதியுறும்போது அவனை கட்டுப்படுத்தவும், நேர்வழியில் நடக்கவும் உதவுவது யோகா.. !. ‘தன்னுள் எப்படி வாழ வேண்டும்’ என்கிற சாரத்தைப் பயிற்றுவிக்கும் அறிவியல்தான் யோகா. இந்த மருந்தில்லா சிகிச்சை முறை உடல், மனம், ஒழுக்கம், உணர்ச்சி நிலைகள், ஆன்மிகக் கூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. யோகா செய்வதால் செரிமான சக்தி அதிகரிக்கும்; மனரீதியான ஆரோக்கியமும் கிடைக்கும். உடலில் ஆக்சிஜன் சக்தி அதிகரிக்கும். கழிவுகள் மிக எளிதாக வெளியேறும். குறிப்பாக, செல்களில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படும். இதை எல்லாம் உரத்த குரலில் ஓங்கிச் சொல்லும் நாளே பன்னாட்டு யோகா நாள் மனித உடல் மிகச் சிக்கலான இரசாயனத் தொழிற்சாலை. அதை வெளியில் இருந்து கையாள்வது மிகக் கடினமான ஒன்று. உங்கள் உள்ளிலிருந்து இதை நீங்கள் கையாள முடியும். ஆனால் அதற்கு உங்களுக்கு, உங்கள் உள் செல்லும் வழி தெரிய வேண்டும்! உங்களுக்குள் துடித்துக் கொண்டிருக்கும் படைப்பின் மூலத்தை அடைவதற்கான வழியை யோகா வழங்குகிறது. இன்று நம் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இளம் தலைமுறையை மன அழுத்தம் பீடித்து வதைக்கிறது. மன அழுத்தத்தால் ஒற்றைத் தலைவலி, குடல் பாதையில் எரிச்சல், இதய பாதிப்பு, சர்க்கரைநோய், எலும்புத் தேய்மானம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். யோகா செய்வதால், மன அழுத்தத்தைக் குறைக்கலாம்; அதனால் ஏற்படும் விளைவுகளையும் தடுக்கலாம். யோகா, நவீன மருத்துவச் சிகிச்சைகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும். புற்றுநோய்க்காக கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் தொடர்ந்து யோகா செய்தால், பக்கவிளைவுகள் வெகுவாகக் குறையும். இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களும் யோகா செய்யலாம். சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்காக சிகிச்சை பெறுவோர் தொடர்ந்து இதைச் செய்தால், மருந்துகளின் அளவைக் குறைக்க முடியும். யோகா செய்பவர்களின் தசைகள் மென்மையடையும். முழு உடல் ஆரோக்கியம் கிடைக்கும்; மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். தொடர்ந்து யோகா செய்பவர்களுக்கு எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும். நரம்புகள் சிறப்பாக வேலை செய்யும். இதயம் நோக்கி ரத்தம் சீராகப் பாயவும், செரிமான மண்டலம் சிறப்பாகச் செயல்படவும் யோகா உதவும். பதஞ்சலி முனிவரால் இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். யோகாவின் வளர்ச்சிக்காக பதஞ்சலி முனிவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. 1890-ம் ஆண்டு வரை யோகா கலை இந்தியாவில் மட்டுமே பிரபலமாக இருந்தது. இதனை உலகளவில் மாற்றி பெருமை சுவாமி விவேகானந்தரையே சாரும். மொத்தத்தில் யோகா என்பது ஒரு பழமையான பயிற்சி மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. யோகப் பயிற்சி மூலம், ஒருவர் உடல், மனம் மற்றும் ஆன்மாவில் ஒருமைப்பாட்டை அடைய முடியும்.
கோடைகால சங்கிராந்தி (Summer Solstice) நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், வட அரைக்கோளத்தில் சூரியன் மிக அதிகபட்சமாக வடக்கே சாய்வதால், பகல் பொழுது மிக நீளமாகவும், இரவு பொழுது மிகக் குட்டையாகவும் இருக்கும். இந்த நிகழ்வு, பூமியின் அச்சு சாய்ந்திருப்பதன் காரணமாக ஏற்படுகிறது. பூமத்திய ரேகைக்கு அப்பால் உள்ளவர்களுக்கு: வட அரைக்கோளம்: இங்குள்ளவர்களுக்கு இது கோடைகால சங்கிராந்தி நாளாகும். இது ஆண்டின் மிக நீண்ட பகல் பொழுதாகவும், மிகக் குறுகிய இரவுப் பொழுதாகவும் அமையும். வடதுருவத்தில் 24 மணி நேரமும் சூரிய ஒளி இருக்கும். தென் அரைக்கோளம்: இங்குள்ளவர்களுக்கு இது குளிர்கால சங்கிராந்தி (Winter Solstice) நாளாகும். இது ஆண்டின் மிகக் குட்டையான பகல் பொழுதாகவும், மிக நீண்ட இரவுப் பொழுதாகவும் அமையும். தென் துருவத்தில் 24 மணி நேரமும் இருளாக இருக்கும். பூமத்திய ரேகைப் பகுதிகளில்: பூமத்திய ரேகைப் (Equator) பகுதிகளில், ஆண்டு முழுவதும் பகலும் இரவும் ஏறக்குறைய சமமான நேரத்திலேயே இருக்கும். சங்கிராந்தி நாட்கள் இந்த பகுதிகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. கோடைகால சங்கிராந்தி பல கலாச்சாரங்களில் கோடையின் தொடக்கமாகவும், அறுவடைத் திருவிழாக்களுக்கும், சூரிய வழிபாட்டிற்கும் ஒரு முக்கியமான நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் காலமான தினமின்று திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், சங்கராபரணம், வசந்த மாளிகை போன்று 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ‘திரை இசைத் திலகம்’ கே.வி. மகாதேவன். அவர் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் உண்டு. பிறரிடம் கருணை நோக்கு தேவை கே.வி.மகாதேவனிடம் ஒரு பெரிய இசைக்குழு உண்டு. அந்த இசைக்கலைஞர்களை எப்போதுமே அவர் மிகக் கனிவுடன் நடத்துவார். அவர் இசையமைக்கும் சில திரைப்படங்களுக்குச் சில இசைக்கருவிகள் தேவைப்பட்டிருக்காது. என்றாலும்கூட தனது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தன் குழுவில் உள்ள அம்புட்டு இசைக் கலைஞர்களுக்கும் ஆதரவு அளிச்சு வந்தார் அவர். நாம் பேச வேண்டாம், நம் சாதனைகள் பேசட்டும் காலத்தால் அழிக்க முடியாத பல காவியப் பாடல்களைத் தன் இசையமைப்பில் அளித்தவர் கே.வி.மகாதேவன். ஆனால், அவர் தன்னைப்பற்றி வெளி உலகத்துக்கு மிகமிகக் குறைவாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். பேட்டிகளுக்கு அவர் ஒப்புக் கொண்டதேயில்லை வெட்கம் வேண்டாம் பள்ளிப்படிப்பு ஏறவில்லை. துவக்கத்தில் பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் பெண் வேஷங்களில் நடித்த போது மாதச்சம்பளம் 15 ரூபாய். கதாகாலட்சேபம் நடந்தபோது அதில் பின்பாட்டுப் பாடியிருக்கிறார். வேறு வழியில்லாமல் சென்னைக்கு வந்த நாட்களில் மிகவும் சிரமப் பட்டிருக்கிறார். சென்னையில் பல ஹோட்டல்களில் சர்வராக வேலை பார்த்ததை அவரே பிந்தைய நாட்களில் சொல்லியிருக்கிறார். வெறும் அரைக்கால் ட்ரௌசர். மேலே ஒரு பனியனோடு துறைமுகத்திலிருந்து சைக்கிளில் சூளைக்குப் போய் லாரி ஆபிஸில் அனுப்பும் சரக்குகளைப் பற்றிய துண்டுச் சீட்டைக் கொடுத்துவிட்டு வரும் வேலையும் பார்த்திருக்கிறார்.பலப் பல வேலைகள். அதற்காக அப்போது அவருக்குக் கிடைத்தவை பத்தணா தான். “அதைச் சொல்ல நான் வெட்கப்பட மாட்டேன். திருடாம, பொய் சொல்லாம, பிச்சை எடுக்காம, எந்தத் தொழில் செஞ்சு சம்பாதிச்சாலும் தப்பில்லை’’ என்றிருக்கிறார் தனது கடந்த காலத்தை நினைவுகூரும்போது. சிறப்பான நடத்தை எதிர்பாராத கோணங்களிலும் உதவும் கே.வி.மகாதேவனின் சக காலத்தில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணை, திரையிசையில் அவருக்கு சமமாக ஆட்சி செய்யத் தொடங்கிய கால கட்டம் வந்தது. ஒரு முறை காலகாலமாக கே.வி.மகாதேவன் இசையமைப்பில் வெளியான படங்களில் நடித்த எம்ஜிஆர் தனது அடுத்த படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனை இசை அமைக்கச் சொல்லி அணுகினார். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் ஆசைதான். ஆனால் அவர் தன் தாயிடம் இதுபற்றி கூறிய போது பளார் என்று அவரை அறைந்தாராம் அவரது தாய். “மகாதேவன் தொடர்ந்து இசையமைக்கும் கம்பெனிகளுக்கு நீயேன் இசையமைக்க ஒப்புக் கொள்கிறாய்? அது கூடாது” என்றாராம். (இதைத் தொடர்ந்து அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார் விஸ்வநாதன்). அப்படி ஒரு நற்பெயரை சம்பாதித்து வைச்சிருந்தார் கே.வி. மகாதேவன். எப்போதும் நம்மை முதன்மைப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது பல பிரபல திரை இசையமைப்பாளர்கள் தங்களது பெரும்பாலான பாடல்களுக்கு ‘மெட்டுக்குப் பாட்டு’ எனும் வகையில்தான் இசை அமைப்பது வழக்கம். அதாவது இசைக்குத் தகுந்தபடி பாடல் வரிகளை எழுத வேண்டும். ஆனால் இதில் கே.வி.மகாதேவன் நேர்மாறானவர். கிட்டத்தட்டத் தனது அனைத்துத் திரைப்பட பாடல்களுக்கும் வரிகள் எழுதப்பட்ட பிறகுதான் அவற்றுக்கு ஏற்றவாறு இசையமைச்சிருக்கார். இத்தனைக்கும் கே.வி.மகாதேவனின், காதல் பாடல்கள் பலாச்சுளை. சோகப்பாடல்கள் வீணையின் இதம். உற்சாகப் பாடல்கள், தபேலாவின் வேகம். தத்துவப் பாடல்கள் புல்லாங்குழலின் மென்மை. இப்படித்தான், கே.வி.மகாதேவனின் பாடல்கள், ஹிட்டடித்தன. ‘உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல’ என்று உருகவைப்பார். ’இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்’ என்று கிறங்கடிப்பார். ’நதி எங்கே போகிறது கடலைத்தேடி’ என்றும் ‘பறவைகள் பலவிதம்’ என்றும் ‘கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தைக் காட்டினாள்’ என்றும் ஒவ்வொருவிதமாக, பாடல்களைக் கொடுத்த கே.வி.மகாதேவன், பாட்டுக்குத்தான் மெட்டு என்பதில் உறுதியாக இருந்தார். முதல் தேசிய விருது இசை அமைப்பாளர் நாற்பதுகளின் தொடக்கத்தில் தொடங்கிய மகாதேவன் மாமாவின் இசைப்பயணம் எழுபதுகளின் இறுதி வரை தொடர்ந்தது. 1967-ம் ஆண்டில், இசையமைப்பாளர்களுக்கும் தேசிய விருது வழங்கலாம் என மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்ற முதல் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் தான்! 1918-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி பிறந்தவர் கே.வி.மகாதேவன். நூற்றாண்டுகளைக் கடந்தும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிற, போற்றப்பட்டுக் கொண்டே இருக்கிற, கொண்டாடிக்கொண்டே இருக்கிற மகா இசைமேதை மகாதேவனின் நினைவுகளை போற்றி வணங்குகிறது மின்கைத்தடி மின்னிதழ் குழு.