உலக யோகா தினம்: பிரதமர் தலைமையில் பிரமாண்ட யோகா பயிற்சி..!

ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் பிரதமர் மோடி தலைமையில் கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் பிரமாண்ட யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஐ.நா சபையில் கடந்த 2014-ம் ஆண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவின் நன்மைகளையும் பெருமையையும் எடுத்துக்கூறினார். அதனை சர்வதேச தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என அப்போது அவர் பரிந்துரைத்தார். இதற்கு 177 உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்தன. இதனை தொடர்ந்து, 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்தது.

இந்நிலையில் 11வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்படுகிறது. ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த யோகா நிகழ்ச்சியை மிகப்பிரமாண்டமாக நடத்துவதற்கு, ஆந்திர பிரதேச மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தபோதிலும், விசாகப்பட்டினத்தில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே. கடற்கரையில் இருந்து போகபுரம் வரை உள்ள 26 கி.மீ. நீள நடைபாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் மக்கள் பங்கேற்பதற்கு வசதியாக 326 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் தலா 1,000 பேர் பங்கேற்று பயிற்சியில் ஈடுபடலாம். அவர்களுக்காக 3.32 லட்சம் டி-சர்ட்கள், 5 லட்சம் யோகா பாய்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, சர்வதேச யோகா தினத்தில் ஆந்திர பிரதேசத்தின் துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே. கடற்கரையில் பிரதமர் மோடி, ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலரும் காலை 6.30 மணி முதல் யோகாசனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

1,200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், டிரோன்கள் ஆகியவற்றை கொண்டு கண்காணிப்பு பணிகளும் நடந்து வருகின்றன. முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சிக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். காலை 6:30 மணி முதல் காலை 8 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்க உள்ளனர். கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் இந்த பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!