வருமுன் காப்போம்
புற்றுநோய் என்பது நம் வாழும் இந்த சமுதாயத்தில் முன்பெல்லாம் எங்கோ ஒருவருக்கு வந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் என்பது நமது சமுதாயத்தில் புற்றீசல் போல் பரவிக் கிடக்கின்றது. சமுதாயத்தில் சில வருடங்களாக புற்று நோயால் பாதிக்க பட்டோர் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. நமக்கு நெருங்கிய உறவினர், நண்பர், மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்போர் என பலதரப்பட்டோர் பலதரப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். நிறைய பேர் நோய் முற்றிய நிலையிலேயே கண்டறிந்து புற்றுநோயை குணப்படுத்தப்படாமலும் அல்லது சிலர் தீவிர சிகிச்சையின் வலியை தாங்க முடியாமலும் மரணிக்கிறார்கள். புற்றுநோயின் அறிகுறியை மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து நோயின் ஆரம்ப நிலையிலேயே தகுந்த சிகிச்சை பெற்றுக் கொண்டால் நாம் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடலாம். நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டாலும் ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி உடல் பரிசோதனை செய்து கொள்வது மிக முக்கியமாகும். அது மீண்டும் புற்றுநோய் நமக்கு பரவாமல் நம்மை காத்துக் கொள்ள உதவும். புற்றுநோய் என்பது மனித உடலின் செல்கள் அசாதாரண முறையில் கட்டுப்பாடு இல்லாமல் பெருகி பிற திசுக்களுக்கும் உறுப்புகளுக்கும் பரவும் ஒரு கொடிய நோய். இது உலக அளவில் அதிக மரணங்களுக்கு காரணமான நோய்களில் ஒன்றாகும். சில சமயங்களில், இந்த செல்களை கட்டுப்படுத்தும் மரபணுக்களில்(genes) மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் காரணமாக செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் பிரிந்து அழிவதில்லை மாறாக அவை ஒரு கட்டி (Tumor)போல குவிகின்றன. இந்த அசாதாரண செல்கள் அருகில் உள்ள திசுக்களுக்கு பரவலாம் (invasion) அல்லது ரத்தநாளங்கள் மற்றும் நிணநீர் மண்டலம் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம் (metastasis) புற்றுநோய் செல்கள் வேறு இடங்களுக்கு பரவும் போது அங்கு புதிய கட்டிகளை உருவாக்குகின்றன.
புற்றுநோய் உருவாகும் செல்கள் :–
கார்சினோமா (carcinoma) இது மிகவும் பொதுவான புற்றுநோய் வகை தோல், நுரையீரல், மார்பகம், பெருங்குடல், புரோஸ்டேட் போன்ற உறுப்புகளின் மேல் அடுக்குகளில் (epithelial cell) உருவாகிறது. சர்கோமா (sarcoma) எலும்புகள் தசை நார்கள் குறுத்தெழும்புகள் கொழுப்பு மற்றும் ரத்த நாளங்கள் போன்ற இணைப்பு திசுக்களில் உருவாகிறது.
லுகேமியா (Leukemia) ரத்த செல்களை உருவாக்கும் எலும்பு மஞ்சையில் உருவாகும் புற்றுநோய் இது ரத்த புற்று நோய் என்றும் அழைக்கப்படுகிறது.
லிம்பேமா (Lymphoma) நிணநீர் மண்டல செல்களில் உருவாகும் புற்றுநோய். மையலோமா (Myeloma) பிளாஸ்மா செல்களில் உருவாகிறது. (நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதி )
மெலனோமா (Melanoma) தோல் புற்றுநோயின் ஒரு தீவிரமான வகை இது தோலுக்கு நிறம் கொடுக்கும் மெலனின் செல்களை பாதிக்கிறது. BRCA 1 மற்றும் BRCA 2 மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் மார்பக மற்றும் கருப்பை புற்று நோய்க்கு வாய்ப்பை அதிகரிக்கும்.
புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை உபயோகப்படுத்துவதால் வாய், தொண்டை, நுரையீரல், உணவுக்குழாய், கணையம் மற்றும் சிறுநீர்ப்பை புற்று நோய்களுக்கு முக்கிய காரணமாகும். அதிகப்படியாக மது அருந்துவதால் கல்லீரல், வாய் தொண்டை மற்றும் உணவு குழாய் புற்று நோய்களுக்கு காரணம் ஆகும்.
புற்றுநோய் அறிகுறிகள்:
திடீரென முயற்சி இல்லாமல் அதிக எடை குறைதல்
இரவு நேரம் வியர்வையுடன் கூடிய தொடர்ச்சியான காய்ச்சல் குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால்
வழக்கத்திற்கு மாறாக கலைப்புடன் கூடிய நிரந்தர சோர்வு.
காரணம் மற்ற நீண்ட நாட்களாக நீடிக்கும் வலி குறிப்பாக எலும்பு, முதுகு, அல்லது தலையில்.
மச்சம் அல்லது மருக்கலில் ஏற்படும் மாற்றங்கள் (அளவு,வடிவம், நிறம் ) அல்லது புதிய மச்சங்கள், ஆறாத புண்கள் தோலின் நிறமாற்றம்.
கட்டிகள் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் குறிப்பாக மார்பகம் கழுத்து அக்குள் அல்லது இடுப்பு பகுதியில்
சிறுநீர் கழிக்கும் போது வலி,ரத்தம் அல்லது வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
நீண்ட நாட்களாக நீடிக்கும் இருமல் அல்லது குரலில் ஏற்படும் திடீர் மாற்றம்.
வாய் அல்லது தொண்டையில் ஆறாத புண்கள் குறிப்பாக புகை பிடிப்பவர்களுக்கு.
இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதும் உடல் பரிசோதனை செய்து கொள்வதும் மிகவும் நல்லது.
புகை பிடிப்பது, புகையிலை உபயோகப்படுத்துவது,மற்றும் மது அருந்துவது இவை நமக்கு நாமே செய்து கொள்ளும் பெருங்கேடாகும். இதனால் நமக்கு புற்றுநோய் மற்றும் இன்ன பிற நோய்கள் வரும் என்று தெரிந்தும் இந்த தீய பழக்கங்களில் தொடர்ந்து ஈடுபடுவதால் நமக்கும் நமது குடும்பத்தாருக்கும் ஏற்படும் இன்னல்களை சொல்லி மாளாது.
தொழிற்சாலை கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நீர் நிலைகளில் கலந்து அந்த நீரை தொடர்ந்து உபயோகப்படுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் மாசுபட்ட புகை நாம் சுவாசிக்கும் காற்றினில் கலந்து நாம் சுவாசிக்கும் காற்றை நஞ்சாகி அந்த காற்றினை நாம் தொடர்ந்து சுவாசிப்பதாலும் புற்றுநோய் வருவதற்கு காரணம் ஆகிறது. பதப்படுத்தப்பட்ட பொருள்களை தொடர்ந்து உபயோகப்படுத்துவதாலும் குடல் சம்பந்தப்பட்ட புற்றுநோய் வருகிறது. குழந்தைகளுக்கு கண்ணைக் கவரும் வகையில் உள்ள பிஸ்கட்,சாக்லேட், கலர் கலரான ஜல்லிகள், குளிர்பானங்கள் மற்றும் பல தரக்குறைவான உணவு தயாரிப்புகள் இதன் மூலம் இளவயதிலேயே புற்றுநோய் ஏற்படுகின்றது. பெற்றோர்கள் தனது பிள்ளைகளின் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் நமது முன்னோர்கள் வழி பற்றிய பழைய உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் பொரித்த உணவுகளையே விரும்பி உண்கின்றனர் இது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்ததல்ல. நமது முன்னோர்கள் பெரும்பாலும் வேகவைத்த உணவுகளையே அதிகம் உண்டனர் எளிமையாக செரிக்க கூடிய அதே சமயத்தில் நமது உடலுக்கு வலிமை தரக்கூடிய உணவுகளையே உண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தனர். உணவில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடிய மூலிகைகளான இஞ்சி பூண்டு சீரகம் கருஞ்சீரகம், மிளகு, மஞ்சள், போன்றவற்றை உபயோகப்படுத்தினர். அது மட்டுமல்லாமல் நமது முன்னோர்கள் அரிசியை பெரும்பாலும் உட்கொள்ளவில்லை அவர்கள் திணை வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டனர். நமது முன்னோர்கள் இயற்கையில் கிடைக்கும் உணவையே பெரும்பாலும் உட்கொண்டனர் நமது முன்னோர்கள் போறினால் மட்டுமே அதிகமாக இறந்தனர் நோயினால் அல்ல ஆனால் இன்றைய காலகட்டத்தில் மனித இனம் பெரும்பாலும் நோயினால் பாதிக்கப்பட்டு மரணம் அடைகிறார்கள் ஆதலால் நாம் நோயின்றி வாழ வேண்டும் எனில் உழைப்பு, உடற்பயிற்சி, உணவு, உறைவிடம், மற்றும் உறங்கும் நேரம் மிக அவசியமானதாகும். சிலர் துரதிஷ்ட வசமாக எந்த வித தீய பழக்க வழக்கங்களும் இல்லாமலே புற்று நோய்க்கு பலியாகிறார்கள் ஆதலால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டவுடன் நாம் மருத்துவரை அணுகி உடல் பரிசோதனை செய்து கொள்வது புற்றுநோய் போன்ற கொடிய நோய்களிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும்.
திவன்யா பிரபாகரன்

