உலக தேனீ தினம் மனிதர் ஒவ்வொருவருக்கும் எல்லா வகையிலும் முன்னோடியாக இருப்பது தேனீக்கள் தான் என்றால் நம்ப முடியாது. நம்ப முடியவில்லை என்றாலும் அதுதான் உண்மை. விரிவாக சொல்வதானால் தேன்கூடு அறுங்கோண வடிவ அறைகளாக இருக்கும். அதில்தான் தேனை தேனீக்கள் சேமிக்கிறது. இன்றைக்கும் கூட்டு வாழ்க்கையை சரியாக கடைபிடிப்பது தேனீக்கள் மட்டும் தான். தேனீக்களின் வாழ்க்கை முறையை பார்த்தாலே நாம் எல்லாம் ஆறறிவு படைத்தவர்களா என்று சொல்வதற்கே யோசிப்போம். ஒரு கூட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான தேனீக்களில்ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு குழுவை அமைத்து மனிதர்களைவிட அபாரமாக செயல்படுபவை இந்த தேனீக்கள். கூட்டில் இருந்து எந்த திசையில், எவ்வளவு தூரத்தில், எந்த பூவில் தேன் இருக்கிறது என்பதை பார்த்து விட்டு வந்து, அதை நடன மொழியில் சொல்வதற்காக உள்ளது தான் தகவல் தொடர்பு குழு.அந்த தகவலை புரிந்து கொண்டு அவை சொன்ன திசையில் போய் தேனை எடுத்து வரும் தேனீக்கள் தான் பொருள் சேகரிக்கும் குழு. தேனை எடுக்க போய் குறிப்பிட்ட பூவில் அமர்ந்ததுமே அதில் இருக்கிற ஏதாவது ஒரு விஷத்தால் (ரசாயனங்கள் உள்ளிட்ட) உடல் நிலை சரியில்லாமல் போகும் தேனீக்களுக்கு வைத்தியம் பார்க்க மருத்துவக்குழுவும் உள்ளது. மருத்துவம் பலனின்றி இறந்து போகும் தேனீக்களை கூட்டிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான துப்புரவுக்குழு, இளம் தேனீக்களைப் பராமரிக்கும் தாதிக்கள் குழு, என ஒரு கூட்டு வாழ்க்கையை தேனீகள் வாழ்கின்றன என்றால் அது வியப்பு தரும் உண்மை. ஒரு கூட்டில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் இருந்தாலும், ராணி தேனீ, ஒரே ஒரு ஆண் தேனீயுடன் ஒரே ஒருமுறை மட்டுமே கூடி, வாழ்நாள் முழுவதும் முட்டையிடும். ராணியுடன் கூடிய அந்த ஆண் தேனீ உறவு முடிந்ததும் இறந்து விடும். அதன் பிறகு அந்த ராணி தேனீ வேறெந்த ராஜாவோடும் கூடாது. இப்படியொரு ஒழுங்கு, ஒழுக்கம் தேனீக்களின் வாழ்க்கையில இருக்கிறது. இப்படியெல்லாம் கட்டுப்பாட்டுடன் வாழும் தேனீக்கள் கூட்டம், முழுக்க முழுக்க தனக்காக இல்லாமல் ஊருக்காக, உலகத்திற்காக வாழ்கின்றன. பல்வேறு ஜீவராசிகளுக்காக வாழ்கிறது. அயல் மகரந்த சேர்க்கை மூலம் தாவர இனங்கள் வாழ வழி செய்கிறது என்பதை எல்லாம் நினைவூட்டவே இந்த தினம், அதிலும் இந்த மே 20 என்பது , தேனீ வளர்ப்பில் பல புதுமையான முறைகளை அறிமுகப்படுத்திய, குறிப்பாக தேனீ கூடுகளை எவ்வாறு கட்டுவது, தேனீ வளர்ப்பின் அடிப்படைகள் மற்றும் தேனீக்களின் வாழ்க்கை முறையை எவ்வாறு புரிந்துகொள்வது போன்ற விஷயங்களை விலாவாரியாக சொன்ன அன்டன் ஜன்சா பிறந்த நாள் என்பது கூடுதல் தகவல் .
உலகப் புகழ்பெற்ற கடற்பயண ஆய்வாளர் கொலம்பஸ் நினைவு நாளின்று இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற கடற்பயணி கொலம்பஸ். இவர் 1492-ல் அமெரிக்க நிலப்பரப்பை கண்டுபிடித்து பெரும்புகழ் பெற்றார். ஜெனோவா என்ற இடத்தில் பிறந்தார். அவரது அனைத்து கடல் பயணங்களும் ஸ்பெயின் ராணி இசபெல்லா மற்றும் அவரது கணவர் ராஜா பெர்டினான்ட் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டது. ராஜ குடும்பத்தின் கட்டளைக்கேற்ப அவர் புதிய நிலப்பரப்புகளை தேடி ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். கொலம்பஸ், இந்தியாவுக்கு சென்றடையும் புதிய கடல் வழியை கண்டுபிடிக்கும் நோக்கத்துடன்தான் பயணம் மேற்கொண்டார். அவர் ஒரு நிலப்பரப்பை சென்றடைந்துவிட்டு அது இந்தியா என்றும், அங்குள்ளவர்களை இந்தியர்கள் என்றும் குறிப்பிட்டு அழைத்தார். அப்போது அவர் சென்றடைந்த நிலப்பரப்பு அமெரிக்கா ஆகும். அங்கு வசித்த பழங்குடியினர், இன்றும் செவ்விந்தியர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். கொலம்பஸ் தனது கடற்பயணத்தில் பல்வேறு நிலப்பரப்புகளை கண்டுபிடித்துள்ளார். கியூபா, ஹிஸ்பேனியோலா (இதுதான் தற்போது ஹைதி தீவு மற்றும் டொமினிக் குடியரசு என அழைக்கப்படுகிறது), விர்ஜின் தீவுகள், போர்டோ ரிகோ, ஜமைக்கா, டிரினிடாட் ஆகியவையும் கொலம்பஸ் கண்டுபிடித்த நிலப்பரப்புகளே. அமெரிக்கா வளர்ச்சி கண்ட நாடாக விளங்குவதால், கொலம்பஸின் கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கதாக அமெரிக்கா குறிப்பிடப்படுகிறது. அடிசினல் ரிப்போர்ட்: ஸ்பெயினில் தங்கியிருந்த கொலம்பஸ் 1506ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் நாள் 55 வயதில் காலமானார். தனது கடைசி மூச்சு வரை இந்தியாவைக் கண்டுபிடித்துவிட்டதாகவே நம்பியிருந்தார் கொலம்பஸ். இறந்த பிறகு தனது உடலை, தான் முதன் முதலில் கண்டுபிடித்த பகுதியிலேயே புதைக்க வேண்டும் என்று உயில் எழுதிவிட்டு கொலம்பஸ் 1506ஆம் ஆண்டு இறந்துபோனார். அந்தக் காலக்கட்டத்தில் அமெரிக்காவில் தகுந்த தேவாலயங்கள் இல்லை. எனவே, அவரது உடல் ஸ்பெயின் வல்லாடோலிட்டில் புதைக்கப்பட்டது. சில நாள்கள் கழித்து அவரது உடல் கல்லறையில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு, சிவைல் மடாலயத்துக்கு மாற்றப்பட்டது. 1542ஆம் ஆண்டு, மீண்டும் அந்த உடல் அங்கிருந்து எடுக்கப்பட்டு ஹிஸ்பனியோலா என்கிற இடத்துக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகு அது தற்போது டொமினிகன் குடியரசின் தலைநகராக இருக்கும் சான்டோ டொமின்கோவில் புதைக்கப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் முடிவில், ஸ்பெயின் ஹிஸ்பானியோலாவின் மேற்குப் பகுதிகளை பிரான்சிடம் இழந்தது. அதன் காரணமாக கிறிஸ்டோபர் கொலம்பஸ்சின் உடல் கியூபாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 1898ஆம் ஆண்டு கியூபா சுதந்திரம் அடைந்த பிறகு, கொலம்பஸின் உடல் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடைசி முறையாகக் கடந்து, சீவைலில் இருக்கும் தேவாலயத்துக்குக் கொண்டு வந்து புதைக்கப்பட்டது.
மாலுமி வாஸ்கோட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்த நாள் போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோ டா காமா கப்பல் பயணம் மூலம் இந்தியாவின் கோழிக்கோடு (கலிகட்) துறைமுகத்தை அடைந்தார். இது ஐரோப்பியர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையே கடல் வழியான நேரடி வணிகத் தொடர்பை ஏற்படுத்திய மாபெரும் நிகழ்வாகும். வாஸ்கோ டா காமாவின் பயணத்தின் முக்கியத்துவம்: கடற்கோள் பாதையின் கண்டுபிடிப்பு: ஆப்பிரிக்காவைச் சுற்றி இந்தியாவுக்குச் செல்லும் கடல் வழியை அவர் முதன்முதலில் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார். ஐரோப்பிய காலனித்துவத்தின் தொடக்கம்: இந்தப் பயணம் பின்னர் போர்த்துகீசியர் மற்றும் பிற ஐரோப்பிய சக்திகளின் இந்தியா மீதான ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது. மசாலா வணிகத்தில் புரட்சி: இந்திய மசாலாப் பொருட்கள் நேரடியாக ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன, இது உலக வணிகத்தை மாற்றியமைத்தது. நினைவுகூரல் இன்று (மே 20) வாஸ்கோ டா காமா கோழிக்கோடு வந்து 526 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவரது பயணம் உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருந்தாலும், அதன் விளைவுகள் (காலனித்துவம், கலாச்சார மோதல்கள்) சிக்கலானவை. இந்தியா மற்றும் ஐரோப்பாவின் வரலாற்றை இணைத்த இந்த நாளை நினைவுகூர்வோம்!
திரைப்படத் தொழில்நுட்பத்தின் மைல்கல்! ஆம்., இதே நாளில்தான், தாமஸ் ஆல்வா எடிசன் தனது “கைனெடோஸ்கோப்” (Kinetoscope) என்ற முதல் உடல் அசைவு ஒளிப்படக் கருவியை (motion picture viewer) வெற்றிகரமாகக் காட்சிப்படுத்தினார். இந்தக் கண்டுபிடிப்பு திரைப்படத் தொழிலின் அடித்தளத்தை அமைத்தது! எடிசனின் கைனெடோஸ்கோப்பின் முக்கியத்துவம்: முதல் திரைப்படக் கருவி: ஒரு பார்வையாளர் தனியாகப் பார்த்து, அசைவூட்டப்பட்ட படங்களைக் காண முடிந்தது. ஒலியில்லா குறும்படங்கள்: முதலில் சிறிய (சில வினாடிகள்) நீளமுள்ள படங்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. திரைப்படத் தொழிலின் துவக்கம்: இந்த தொழில்நுட்பமே பின்னர் உலகளாவிய சினிமாவாக வளர்ச்சியடைந்தது. வரலாற்று நிகழ்வு: எடிசனின் ஆய்வகத்தில் (நியூ ஜெர்சி, அமெريكا) இந்த காட்சிப்படுத்தல் நடந்தது. 1894-இல் முதல் பொது கைனெடோஸ்கோப் பார்வையிடும் நிலையம் (Kinetoscope parlor) நியூயார்க்கில் திறக்கப்பட்டது. இன்று, திரைப்படங்களின் வரலாற்றில் இந்த நாள் ஒரு முக்கியமான திருப்புமுனையாக கருதப்படுகிறது! எடிசனின் கண்டுபிடிப்பு இல்லையென்றால், இன்றைய ஹாலிவுட், கோலிவுட், அல்லது OTT தளங்கள் எல்லாம் இருக்குமா?
இந்திய சுதந்தர போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின் முன்னாள் பிரதமருமான பிரகாசம் நினைவு நாள் கோபாலகிருஷ்ணன் – சுப்பம்மா தம்பதிகளுக்கு, குண்டூர் அருகிலுள்ள கனபருத்தி கிராமத்தில் 1872ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி, ஆந்திர கேசரி பிரகாசம் பந்துலு பிறந்தார். ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவர் ஹனுமந்தராவ் நாயுடு என்ற ஆசிரியரின் உதவியால் கல்வி பயின்றார். பின்னர் மதராசபட்டினத்துக்கு வந்து, சட்ட படிப்பை முடித்தார். ராமச்சந்திர ராவ் என்ற ஜமீன்தார் பண உதவி செய்ய முன்வந்ததால், பிரகாசம் லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார். 1907ம் ஆண்டு மதராசபட்டினத்துக்கு புலம் பெயர்ந்து, தொழிலில் மேன்மையுற்று செல்வம் சேர்த்தார். கல்கத்தா காங்கிரஸ் செஷனில் பங்கேற்ற போது அவரது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. மதராசபட்டினம் திரும்பியவுடன், காந்தியடிகளின் விடுதலைப் போராட்ட அழைப்பை ஏற்று, தனது நல்ல தொழிலை விட்டு விட்டு, இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபடும் முயற்சியில் இறங்கினார். பிரகாசம் ஆங்கிலேயருக்கு எதிராக ‘ஸ்வராஜ்யா’ என்ற ஆங்கிலப் பத்திரிகை ஆரம்பித்து நடத்தினார். பின்னர் மதராசபட்டினத்து காங்கிரஸ் தலைவராகப் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1927ம் ஆண்டு சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் முன் மார்பைக்காட்டி ‘முடிந்தால் என்னைச் சுடு’ என்றார். அன்றிலிருந்து பிரகாசம் ஆந்திர கேசரி (சிங்கம்) என்றழைக்கப்பட்டார். 1930ம் ஆண்டு உப்பு சத்தியாக்கிரகத்தில் பிரகாசம் பங்கேற்றதால் ராஜாஜியுடன் சேர்த்து சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் ராஜாஜியின் மந்திரிசபையில் வருவாய்த்துறை மந்திரியாக பதவியேற்றார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். 1946ம் ஆண்டு மதராஸ் ராஜதானியின் இடைக்கால அரசுக்கு பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கங்கிரசுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக பிரஜா என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். பின்னர் காங்கிரசுக்கு திரும்பிய பிரகாசம் ஆந்திர மாகாணம் உருவானபோது அதன் முதல் முதல்வராக பதவியேற்றார். இறுதியில் பிரகாசம் பந்துலு அவர்கள் 1957ம் ஆண்டு, மே 20ம் தேதி காலமானார்.
சா. தருமாம்பாள் அம்மையார் அவர்களின் நினைவு நாள், சா. தருமாம்பாள் அம்மையார் யார், அவர் நமது சமூகத்திற்கு என்ன செய்தார் ஏன் நாம் அவரைக் கொண்டாட வேண்டும் என்பதை பார்ப்போம். சா.தருமாம்பாள் என்கிற சரஸ்வதி என்ற இயற் பெயருடைய அம்மையார் பாப்பம்மாள் மற்றும் சாமிநாதன் தம்பதியினருக்கு மகளாக 1890 ஆம் இன்றைக்கு கருந்தட்டான்குடி என்றழைக்கப்படும் கருந்திட்டைக்குடியில் பிறந்தார். இளம்வயதில் தனது தாய் தந்தையரை இழந்த அம்மையார் இலக்குமி அம்மையாரின் அரவணைப்பில் வளர்ந்தார், நாடகத்தில் ஈடுபாடும் நாட்டமும் உடைய இவர், குடியேற்றம் முனுசாமி நாயுடு என்ற நாடக நடிகரை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாள மொழிகளில் தேர்ச்சி பெற்ற இவர் சித்த மருத்துவம் பயின்று மருத்துவச் சேவை செய்தார். நீதிக்கட்சி துவங்கிய காலத்தில் அதில் ஒரு முதன்மையான தலைவர்களில் ஒருவராக விளங்கியர், திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக்கழகத்தில் உறுப்பினராக பணியாற்றிவர். ஆதரவற்ற பெண்களுக்கு வேலை வாய்ப்பினை அமைத்து தருவது, கைம்பெண்கள் திருமணம் என்று பல சமூக சீர்திருத்தங்களில் ஈடுபட்டவர். 1938 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முதன்மையான பங்காற்றியவர் சா. தருமாம்பாள் அம்மையார், அதேப்போல் தஞ்சையில் கருந்தட்டாங்குடியில் இருந்த அவரது வீட்டை தஞ்சையின் கரந்தை தமிழ்ச்சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். அம்மையார் அவர்களின் பெயரில் கைம்பெண்களின் மறுவாழ்விற்காக டாக்டர் சா.தருமாம்பாள் நினைவு கைம்பெண் திருமண உதவித்திட்டத்தை அரசு நடத்தி வருகின்றது…சாரி.. நடத்தி வந்தது.. தஞ்சை கரந்தையில் அம்மையார் அவர்களின் பெயரில் அரசு பாலிடெக்னிக் இயங்கி வருகின்றது, அதேப்போல் சென்னை மாநகராட்சி அம்மையார் அவர்களின் பெயரில் ஒரு பூங்கா ஒன்றை பராமரித்து வருகின்றது.
தமிழ் சினிமாவின் மகத்தான கலைஞன், ஒளியையும் உணர்வையும் கேமராவில் பதிவு செய்த பாலு மகேந்திராவின் பிறந்தநாள்! இலங்கையின் மட்டக்களப்பு அருகே அமிர்தகழியில் 1939-ல் பிறந்து, இந்திய சினிமாவில் தனித்துவமான தடம் பதித்தவர் அவர். ‘மூடுபனி’யின் மென்மையான மௌனமாகவும், ‘மூன்றாம் பிறை’யின் ஆழமான காதல் கவிதையாகவும், ‘வீடு’வின் யதார்த்தமான வாழ்வியல் காட்சிகளாகவும், ‘சந்தியாராகம்’மாக உலக சினிமாவின் உயரத்தில் நின்றவர். அவரது கேமரா ஒரு கவிஞனின் கண்ணாக, ‘Available lights’ என்னும் இயற்கை ஒளியில் உணர்வுகளை செதுக்கியது. ‘ரெட்டைவால் குருவி’யின் கலகலப்பிலும், ‘சதிலீலாவதி’யின் இயல்பான நகைச்சுவையிலும், ‘அழியாத கோலங்கள்’ போல மறக்க முடியாத காட்சிகளை பதித்தவர். ஒவ்வொரு ஷாட்டிலும் காதல், சோகம், மௌனம் என உணர்ச்சிகளை உயிர்ப்பித்து, தமிழ் பெண்களை ஒப்பனையின்றி அழகாக காட்டியவர். ‘கதை நேரம்’ தொலைக்காட்சி தொடரில் சிறுகதைகளை திரையில் உயிர்ப்பித்து, தமிழ் குடும்பங்களின் மனதை கவர்ந்தவர். சத்யஜித் ரேயின் ஒளிப்பதிவாளர் சுப்ரதா மித்ராவால் பாராட்டப்பட்டவர்; மணிரத்தினம் போன்ற இயக்குநர்களுக்கு ஒளிப்பதிவில் வழிகாட்டியவர். பாலு மகேந்திரா, நீங்கள் ஒரு ‘வண்ண வண்ண பூக்கள்’ பூத்த கலைத் தோட்டம்! உங்கள் ‘நீங்கள் கேட்டவை’ இன்னும் எங்கள் இதயங்களில் ஒலிக்கிறது. உங்கள் கனவுகளும், காட்சிகளும் எங்களுக்கு என்றும் ‘நவநீதன்’ ஆக விளங்கும்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், கலைஞனே!
அயோத்தி தாசர் பிறந்த நாளின்று அயோத்தி தாசர் தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி , சமூக சேவகர், தமிழ் அறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் மக்களின் முன்றேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவரமாக செயற்பட்டார். அவரது இயற்பெயர் காத்தவராயன். பெரும் கல்விப்புலம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர் , இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன்தான் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளை தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர் , அதன்பின் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது இவர் இயற்றிய நூல்கள் :
- அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம
- அம்பிகையம்மன் சரித்திரம
- அரிச்சந்திரன் பொய்கள்
- ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம
- இந்திரர் தேச சரித்திரம
- இந்திரர் தேச பௌத்தர்கள் பண்டிகை விவரம
- கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
- சாக்கிய முனிவரலாறு
- திருக்குறள் கடவுள் வாழ்த்து
- திருவள்ளுவர் வரலாறு
- நந்தன் சரித்திர தந்திரம்
- நூதன சாதிகளின் உள்வே பீடிகை
- புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி
- புத்த மார்க்க வினா விடை
- பூர்வ தமிமொளியாம் புத்தாது ஆதி வேதம்
- மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம்
- முருக கடவுள் வரலாறு
- மோசோயவர்களின் மார்க்கம்
- யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
- விபூதி ஆராய்ச்சி
- விவாஹ விளக்கம்
- வேஷ பிராமண வேதாந்த விவரம்
- பூர்வ தமிமொழியாம் புததரது ஆதிவேதம்
- இந்திரர் தேச சரித்திரம்
- சாக்கிய முனிவரலாறு
- வேஷபிராமண வேதாந்த விவரம்
- யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
- மோசோயவர்களின் மார்க்கம்
- ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம்
- மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம்
- நூதன சாதிகளின் உற்சவ பீடிகை
- அம்பிகையம்மன் சரித்திரம்
- இந்திரர் தேச பெயத்தர்கள் பண்டிகை விவரம்
- விவாஹ விளக்கம்
- அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம்
- நந்தன் சரித்திர தந்திரம்
- முருக கடவுள் வரலாறு
- கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
- விபூதி ஆராய்ச்சி
- திருக்குறள் கடவுள் வாழ்த்து
- அரிச்சந்திரன் பொய்கள்
- திருவள்ளுவர் வரலாறு
- புத்தமார்க்க வினா விடை.
