இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 15)

சர்வதேச குடும்பங்கள் தினமின்று! மனித வாழ்க்கையின் அஸ்திவாரமே குடும்பம் தான். பழங்காலத்தில் கூட்டுக்குடும்ப முறையில் வாழ்ந்து வந்தோம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அத்தை, சித்தப்பா என தடுக்கி விழுந்தால் கூட குடும்ப உறுப்பினர் மேலதான் விழ வேண்டும். அப்படி ஒரு கூட்டுக்குடும்ப வாழ்க்கை சொர்க்கமாய் இருந்து வந்தது. காலங்கள் மாறின. தொழில் முறை, தனிமையை விரும்புதல் உள்ளிட்ட காரணங்களால் புதுமணத்தம்பதி தனிக்குடித்தனம் போவது சகஜமாகி விட்டது. தாத்தா மடியில் உட்கார்ந்து அறட்டை அடிப்பது, பாட்டி ஊட்ட நிலாச்சோறு சாப்பிட்டு கதை கேட்பது உள்ளிட்ட எத்தனையோ மகிழ்ச்சியான தருணங்களை, இன்றைய கால குழந்தைகள் இழந்து நிற்கின்றன. அதனால்தான் கோபம், கட்டுப்பாடின்மை, பொறுமையின்மை என ஒருவிதமான மனநோய்களுக்கு ஆட்பட்டது போல குழந்தைகள் வாழ்கின்றனர். முன்னெல்லாம் குடும்பங்களே கோயில்களாய் இருந்த தேசம், நம் தேசம். ஆனால் இன்றைக்கு அழிந்து போன சிட்டுக் குருவிகள் போல குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து போய் விட்டது. தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா என்ற உறவுப் பெயர்கள் எல்லாம் மறைந்து கொண்டு இருக்கின்றன. சித்தியோ, அத்தையோ ஆன்ட்டி தான் பெயர். சித்தப்பாவோ, மாமாவோ அங்கிள் தான் பெயர். சித்தியை சின்ன அன்னையாகப் பார்த்த தலைமுறைகள் கடந்து போய் விட்டன. பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளை அண்ணன் என்றழைத்த மரபுகளைக் கடத்தி கஸின் பிரதர் என்ற நாகரீக வார்த்தையில் அழைக்கும் நவீன யுகமாகிப் போனது இன்று. நம் கிளைகள் எங்கெங்கு பரவினாலும் அதன் ஆணி வேர் குடும்பங்கள் தானே.. கூடுகளாய் இருந்த மனம் கூண்டுகளுக்குள் சிக்கிக் கொண்டது. இயந்திர மயமாகிப்போன உலகில் இதயங்களுக்கு வேலை இல்லை.இது ஒருபுறமிருக்க… வேலை நிமித்தமாக வெளிநாடில் வசிப்பவர்கள், தமிழ்நாட்டிலேயே கிராமங்களை விட்டு விட்டு நகர்ப்புறங்களில் வாழ்பவர்கள், அனைவரையும் ஒரு நாளில் சந்திக்க வைத்து மனம் விட்டு பேச வைக்கும் ஒரு நாள்தான் உலக குடும்ப தினம். அதுதான் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. எப்போது ஆரம்பித்தது இந்த தினம் என்று பார்க்கலாமா? ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த 1993ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் மே 15ம் தேதியை உலக குடும்ப தினமாக கொண்டாட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு தினங்கள் எத்தனையோ வரலாம். ஆனால், குடும்ப தினம் கொண்டாடும் சூழல் ஆரோக்கியமானதா? என்று யோசித்து பார்க்கும்போது, பிரிந்து கிடக்கும் உறவுகள் ஒரு நாளாவது கூடித் திளைக்கட்டுமே… அதற்காகவாவது ஒரு நாள் இருப்பது சந்தோஷம்தானே…! இதில் இன்னொரு விஷயத்தை நாம் யோசித்து பார்க்க வேண்டும். இன்றைய சூழலில் ஒரு விடுமுறை பொழுது எப்படி கழிகிறது. அப்பா வாட்ஸ் அப்பே கதியென கிடப்பார். அம்மா யாரிடமாவது போனில் பேசிக்கொண்டே இருப்பார். பிள்ளைகள் பேஸ்புக்கில் மூழ்கி கிடப்பார்கள். வீடு அமைதியாகி விட்டது. பணி நேரத்திலும் கூட வீட்டிற்கு வந்தவுடன் உறங்க செல்வதை வழக்கமாகி கொண்டு விட்டோம். சந்தோஷமாக கூடி பேசுவது என்பது தனிக்குடித்தன வாழ்க்கையில் வெகுவாக குறைந்து விட்டது. சுற்றுலா சென்றாலும் அதை யாரும் அனுபவிப்பதில்லை. செல்பி எடுப்பது, குரூப் போட்டோ எடுப்பது என ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையை வாழ்கின்றனர். குடும்பத்தோடு அமர்ந்து பேசுவது தற்போது வெகுவாக குறைந்து விட்டது. முன்னொ சமயம் இந்த தினம் ஏன் என துவக்கத்தில் விவாதமாக்கப்பட்டது. இப்போது அது அவசியம்தான் என எண்ணத்தோன்றுகிறது. இந்த நிலை மாற வேண்டும். தனிக்குடித்தனம் இருந்தாலும் வாரம் ஒருமுறை உறவுகளை சந்தித்து பேசுங்கள். தாத்தா, பாட்டிகளுடன் குழந்தைகளை கொஞ்ச விடுங்கள். அவர்களை வீட்டிற்கு அடிக்கடி அழைத்து மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள். குடும்பத்துடன் கூடி களிப்பதை விட இந்த உலகத்தில் சொர்க்கமான தருணங்கள் எதுவுமே இல்லை.

மெர்க்குரி கடவுளுக்கான கோயில் பண்டைய ரோம் நகரில் அமைக்கப்பட்டது. மெர்குரி கடவுள் மற்றும் அவரது கோயில்: மெர்குரி (Mercurius): ரோமானிய மதத்தில் வணிகம், வியாபாரம், தகவல் தொடர்பு, பயணம், எல்லைகள், அதிர்ஷ்டம் மற்றும் திருட்டு ஆகியவற்றின் கடவுளாக மெர்குரி வணங்கப்பட்டார். அவர் கடவுள்களின் தூதராகவும், இறந்தவர்களின் ஆன்மாக்களை பாதாள உலகிற்கு அழைத்துச் செல்பவராகவும் கருதப்பட்டார். கிரேக்க கடவுளான ஹெர்மீஸுடன் ரோமானியர்கள் இவரை ஒப்பிட்டனர். கோயிலின் உருவாக்கம்: கிமு 495 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி அவென்டைன் மலையில் (Aventine Hill) மெர்குரிக்கான கோயில் கட்டப்பட்டது. இது ரோம் நகரின் பழமையான கோயில்களில் ஒன்றாகும். காரணம்: இந்த கோயில் வணிகம் மற்றும் வர்த்தகத்தின் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. வணிக நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த சாதாரண மக்களுக்காகவும், வணிகர்களுக்காகவும் இந்த கோயில் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. அவென்டைன் மலை வணிக நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பகுதியாக இருந்தது. விழா: ஒவ்வொரு ஆண்டும் மே 15 ஆம் தேதி, மெர்குரியின் கோயிலை நிறுவிய நாளைக் கொண்டாடும் வகையில் மெர்குராலியா (Mercuralia) என்ற திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த நாளில், வணிகர்கள் போர்ட்டா கேபெனா (Porta Capena) அருகே இருந்த அவரது புனித கிணற்றிலிருந்து தண்ணீரை தங்கள் தலைகளில் தெளித்து வணங்கினர். முக்கியத்துவம்: மெர்குரியின் கோயில் பண்டைய ரோமானிய சமூகத்தில் வணிகத்தின் முக்கியத்துவத்தையும், கடவுள்களின் மீதான அவர்களின் பக்தியையும் பிரதிபலித்தது. இந்த கோயில் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை இருந்ததாக அறியப்படுகிறது.

குமுதினி படுகொலை இன்று நினைவேந்தல் நாள் இலங்கை குறிகட்டுவான் துறைமுகத்திற்கும் நெடுந்திவிற்க்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 தமிழஎகளை ஸ்ரீலங்கா கடற்படை ஈவிரக்கமின்றி காட்டுமிராண்டித் தனமாக வெட்டிப் படுகொலை செய்த அந்த கொடூரத்தின் அந்த ரணங்கள் தமிழீழக் கடலில் ஆறாத ஈரநினைவு நாள் இன்று. அதாவது 1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் காலை ஏழு மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினிப்படகு அரை மணி நேர பயணத்தின் பின் ஸ்ரீலங்கா கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டது. இரு சிறிய பிளாஸ்டி படகில் வந்த கடற்படையினர் குமுதினிப் படகை நிறுத்தச்சொல்லி அதை நிறுத்தியபின்னர் 6 கடற்படையினர் முக்கோணக் கூர்க்கத்திகள், கண்டங் கோடாரிகள், இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினிப்படகில் ஏறினர். படகின் பின்புறம் இருந்த பயணிகளை படகின் முன்பக்கம் செல்லுமாறும் மிரட்டினர் அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். படகின் பின்புறம் இரு புற இருக்கைகளுக்கு நடுவே இயந்திரத்திலிருந்து பின்புறம் புறப்புளருக்குச் செல்லும் ஆடுதண்டுப்பகுதி மூடப்பட்டிருந்த பலகைகளை படையினர் கழற்றி (இருக்கைகளிலிருந்து 4 அடி ஆழம் உள்ளதாக இது இருந்தது) அதன் பின் படகுப் பயணிகள் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். குமுதினி இருபக்க வாசல்களிலும் உள்ளும், வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக வந்த பயணிகளை அழைத்து கத்தியால் குத்தியும் கண்டம் கோடரிகளால் வெட்டியும் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டும் அந்த படகின் நடுப்பள்ளத்தில் போடப்பட்டனர். கொல்லப்பட்டவர் போக குற்றுயிராய்ப் போனவர்கள் குரல் எழுப்ப முடியாது செத்தவர்கள்போல் கிடந்த மக்களும் உண்டு. இச்சம்பவத்தில் தக்க குரல் எழுப்பியவர்கள் அதிகாரிகளால் தாக்கப்பட்டு இறந்ததாக உறுதிசெய்யப்பட்டு போடப்பட்டு உள்ளே பள்ளமாக இருந்த பகுதியில் மக்களைப் போடப்பட்டதால் முன்புறமிருந்து செல்லும் பயணிகளுக்கு ஒவ்வொருவராக சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. ஒருவர் நுழைவாயினிலே சென்றவுடனே கடலில் குதித்துக் கொண்டார். அதன் பின் படகில் இருந்து ஏனையோரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட படையினரின் துப்பாக்கிகளால் சுடப்பட்டுச் சிலர் கொல்லப்பட்டனர். ஏழு மாதக் குழந்தைமுதல் வயோதிபர்களைவரை ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டனர். ஆறா வடுவை ஏற்படுத்திய கண்ணீர் நாளின்று.

எமிலி டிக்கின்சன் நினைவு நாள் அமெரிக்காவைச் சேர்ந்த சில முக்கியமான மற்றும் பிரபல கவிஞர்களில் ஒருவர் தான் எமிலி டிக்கின்சன் (Emily Dickinson). மேலும் இவர் தனது வாழ்நாளில் ஆயிரத்து எண்ணூறு கவிதைகளை எழுதியுள்ளார். எமிலி டிக்கின்சன் வாழ்ந்த காலத்தில் அவரது ஒரு சில கவிதைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. இவர் மறைந்து பல வருடங்களுக்குப் பிறகே இவரது கவிதைகள் வெளியாகி மக்களிடமும் வரவேற்பைப் பெற்றன. அன்னாரின் பொன்மொழிகளில் சில உண்மை மிகவும் அரிதானது, ஆகவே அதைச் சொல்வது மிகவும் மகிழ்ச்சிகரமானது. கற்றுக் கொண்டே இருக்கும் வரை உங்களால் இளமையாக இருக்க முடியும். தொலைதூரம் பயணம் செய்வதற்கு, ஒரு புத்தகத்தை விட சிறந்த கப்பல் இங்கே இல்லை. மாலுமியால் வடக்குத் திசையை அறிய முடியாது, ஆனால் திசைகாட்டியால் அறிய முடியும் என்று அவருக்குத் தெரியும். இந்த உலகில் ஒரு வார்த்தைக்கு நிகரான சக்திமிக்க எதையும் எனக்குத் தெரியாது. இந்த வாழ்க்கை இனி ஒருபோதும் வராது என்பதுதான் வாழ்க்கையை மிகவும் இனிமையாக்குகிறது. அழகான பூக்கள் என்னை சங்கடப்படுத்துகின்றன. நான் தேனீயாக இல்லை என்று என்னை வருத்தப்பட வைக்கின்றன. எப்போது விடியல் வரும் என்றே தெரியாமல் நான் ஒவ்வொரு கதவையும் திறக்கிறேன். முதுமை திடீரென்று வருகிறது, நாம் நினைப்பது போல் படிப்படியாக அல்ல. காயப்பட்ட மான் மிக உயரமாகப் பாய்கிறது. நடத்தை என்பது ஒரு மனிதன் என்ன செய்கிறான் என்பதே, அவன் என்ன நினைக்கிறான், என்ன உணர்கிறான் அல்லது எதை நம்புகிறான் என்பதல்ல. அதிர்ஷ்டம் தைரியமானவர்களுடன் நட்புக் கொள்கிறது. நீங்கள் சிறிய விசயங்களைக் கவனித்துக் கொண்டால், பெரிய விசயங்கள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளும். சிறிய விசயங்களில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மீது அதிக கட்டுப்பாட்டைப் பெறலாம். மூளை வானத்தை விட விசாலமானது. கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள், இருந்தும் நாங்கள் எப்போதும் அவரை ஏதோ ஒரு தனிமனிதனாகவே நினைக்கிறோம். ஒருபோதும் வெற்றியடையாதவர்களால் வெற்றி என்பது இனிமையாகக் கருதப்படுகிறது. ஒரு புத்தகத்தைப் போன்ற போர்க்கப்பல் இங்கே இல்லை. ஒரு பட்டறைக்கல்லாக இருப்பதை விட ஒரு சுத்தியலாக இருப்பது சிறந்தது. சொல்லப்பட்டவுடன் ஒரு வார்த்தை இறந்துவிடுகிறது என்று சிலர் சொல்கிறார்கள். அது அன்றிலிருந்துதான் வாழத் தொடங்குகிறது என்று நான் சொல்கிறேன். என் நண்பர்களே என் சொத்து.

ஜெர்மானிய கணிதவியல் நிபுணரான ஜொஹெனஸ் கெப்ளர் தனது புகழ்பெற்ற மூன்றாவது கோள் இயக்க விதியை, நிரூபித்த தினம் இன்று சூரியனிலிருந்து, வெளிப்படும் விசைகளினால் கோளங்களின் இயக்கங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை கெப்ளர் தம் நுண்ணறிவால் ஊகித்துக் கூறினார். கோளங்களின் இயக்க விதிகளை வகுத்ததுடன், வானியலின் வேறு பல சிறிய கண்டுபிடிப்புகளையும், கெப்ளர் செய்தார். ஒளியியல் கோட்பாட்டுக்கும் அவர் அருந்தொண்டு புரிந்துள்ளார். ஒரு கோளின் சுற்றுப்பாதை, கதிரவன் ஒரு குவியத்தில் அமைந்திருக்கும் ஒரு நீள்வட்டமாகும், என்பதே கெப்ளரின் முதலாவது விதியாகும். . கெப்ளரின் இரண்டாவது விதி, கோளையும், கதிரவனையும் இணைக்கும் நேர்கோடு, கோளின் சமகால இடைவெளி நகர்வில் சம பரப்பைத் தடவிச்செல்லும், என்கிறது கோள்களின் ஒரு முழுசுற்றுக்கால அளவின் இருபடி, அவற்றின் நீள்வட்டச் சுற்றுப்பாதையின் பெரிய அச்சின் பாதியின் (semi-major axis) முப்படிக்கு நேர் சார்புடையது (நேர் விகித சமனாகும்). மேலும் நேர்சார்புக் கெழு (மாறிலி) எல்லாக் கோளுக்கும் ஒரே மதிப்பு கொண்டதாகும். என்பது கெப்ளரின் மூன்றாவது விதியாகும். ஐசாக் நியூட்டனுடைய பின்னாளைய கண்டுபிடிப்புகளான, நியூட்டனின் இயக்கவிதி மற்றும் புவியீர்ப்பு தொடர்பான விதிகள் என்பவற்றின் உருவாக்கத்துக்குக் கெப்ளரின் கண்டுபிடிப்பு அடிக்களமாக (ஆதாரமாக) அமைந்தது எனலாம்.

எழுத்துச்சித்தர் பாலகுமாரன் காலமான நாள் நான் சென்னை வந்த 1982 வாக்கில் விழி என்ற பெயரில் ஒரு கையெழுத்து பத்திரிகை நடத்தினேன்.. அதற்காக ஒரு பேட்டி வேண்டும் என்று புரசைவாக்கத்தில் அப்போது இருந்த பாலகுமாரன் வீட்டிற்கே போய் அப்பாயின்மென்ட் கேட்டேன்.. அச்சமயம் என்னிடம் ஓரிரு கேள்விகள் கேட்டு விட்டு இரண்டு நாட்கள் கழித்து மாலை ஆறரை மணிக்கு வரச் சொன்னார். அவர் சொன்ன நேரத்தில் என் கையெழுத்து பத்திரிகை வாசகர்கள் மூவரை கையோடு அழைத்து போய் இரண்டரை மணி நேர நேர்காணல் நடத்தினேன்.. அதையும் ஒரு டிரங்க் பெட்டி சைசில் இருந்த டேப்பில் பதிவு செய்து கொண்டேன் இரண்டு வாரம் கழித்து அப்பேட்டி வந்த இதழுடன் அவரை சந்தித்து படிக்கக் கொடுத்தேன்.. வாங்கிய பாலகுமாரன் தன் பேட்டியை தவிர அதில் இருந்த அத்தனை பக்கங்களையும் அணுஅணுவாக பார்த்து படித்து விட்டு வாசகர் கருத்துக்கான இடத்தில் தன் மதிப்புரையை எழுதி கொடுத்தார்..ஆனால் அவ்விதழில் இடம் பெற்ற அவர் பேட்டியை கடைசிவரை படிக்கவில்லை ஏன் அதை மட்டும் படிக்கவில்லை என்று நானும் கேட்க இல்லை.. அவரும் சொல்ல வில்லை.. ம்.. மஹான்.. எழுத்துச் சித்தர்.. சாதனைப் படைத்த தமிழ் எழுத்தாளன்.

ATM ஏ.டி.எம் இயந்திரத்தை கண்டுபிடித்த #ஜான்_ஷெப்பர்ட் நினைவு நாள் “ஜான் ஷெப்பர்ட் பேரோன்”. இவரால் ஏ.டி.எம் இயந்திரம் உருவான கதை சுவராஸ்யமானது. ஒருமுறை வங்கியில் இருந்த தனது பணத்தை எடுக்க முடியாமல் தடுமாறியபோது ஷெப்பர்டுக்கு மிகவும் வேதனை உண்டானது. வங்கியின் வேலை நேரம் முடிந்து விட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை.… தன்னுடைய பணத்தை தான் விரும்பிய நேரத்தில் எல்லாம் எடுப்பதற்கு ஒரு வழி இருந்தால் என்ன என்று அவர் அப்போது சிந்தித்தார். அந்த சிந்தனையின் பயனாக சாக்லேட் கட்டிகளை வழங்கும் இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு,,,அதேபோல பணத்தை வழங்கும் ஏடிஎம் எனப்படும் தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தின் மாதிரியை உருவாக்கினார். 1967ம் ஆண்டு இவர் உருவாக்கிய ஏ.டி.எம். எந்திரம் இங்கிலாந்தின் வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. 1967-ம் ஆண்டு ஜூன் 27 அன்று வடக்கு லண்டனில் “பார்கிளேஸ் வங்கியில்” பாரன் உருவாக்கிய ஏடிஎம் முதல் முதலில் நிறுவப்பட்டது. இந்த தன்னியக்க காசளிப்பு இயந்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது உள்ளது போல ஏடிஎம் அட்டைகள் உருவாக்கப்படவில்லை. அதற்கு பதிலாக தனிச்சிறப்பான காசோலைகள் பயன்படுத்தப்பட்டன. காசோலைகளை இயந்திரத்தில் வைப்பதற்கு முன்பாக அடையாள எண்ணை தெரிவிக்க வேண்டும். முதலில் ஷெப்பர்டு 6 இலக்கம் கொண்ட அடையாள எண்ணை உருவாக்கினார்.ஆனால் அவற்றை நினைவில் கொள்ள முடியவில்லை என்று மனைவி புகார் கூறியதையடுத்து 4 இலக்கம் கொண்ட எண்ணாக மாற்றினார். இன்று வரை அதுவே தொடர்கிறது.காலப்போக்கில் ஏடிஎம் இயந்திரங்கள் மிகவும் பிரபலமாகி உலக அளவில் 20 லட்சத்துக்கும் மேலான ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன. அத்தனிக்கும் மூல காரணமாவரின் நினைவு நாளின்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!