பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் செலுத்தினார் எட்வர்ட் ஜென்னர் சிறு வயதிலிருந்தே எதையும் கூர்ந்து கவனிப்பார். ’கௌபாக்ஸ்’ என்பது மாடுகளின் மடிகளில் ஏற்படக்கூடிய கொப்புளம். பால் கறக்கும் பெண்களுக்கு அந்த நோய் பரவும். ஆனால், அவ்வளவாகத் தொந்தரவு செய்யாது. கௌபாக்ஸ் வந்தால் பெரியம்மை நோய் வராது என்பது கிராம மக்களின் நம்பிக்கை. எனவே பெரியம்மை வராமலிருக்க கௌபாக்ஸை வலிந்து ஏற்படுத்திக் கொண்டனர். இந்தக் கருத்தை மருத்துவர்கள் பாமரத்தனம் என ஏற்க மறுத்தனர். ஆனால், சிறு வயதிலிருந்து இந்த நம்பிக்கையை அறிந்த ஜென்னர், அதில் உண்மை இருக்குமா என்று ஆராயத் தொடங்கினார். ஓரிரண்டு ஆண்டுகள் அல்ல தொடர்ந்து 20 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தார். கிராம மக்களின் நம்பிக்கை உண்மை என்று கண்டறிந்தார். ஆனால், அதை நிரூபித்தாக வேண்டும். 1796, மே 16 இல் ஜேம்ஸ் ஃபிப்ஸ் என்கிற 8 வயது சிறுவன் மீது சோதனை செய்தார். பண்ணையில் வேலை செய்த ஒரு பெண்ணின் கௌபாக்ஸ் கொப்புளத்திலிருந்து எடுத்த நீர்மத்தை ஜேம்ஸின் உடலுக்குள் செலுத்தினார். எதிர்பார்த்தது போல் அந்தச் சிறுவனுக்கு கௌபாக்ஸ் வந்தது. ஒரு வாரத்தில் குணமானார். சில வாரங்கள் கழித்து அதே சிறுவனின் உடலில் பெரியம்மை நீர்மத்தை ஊசி மூலம் செலுத்தினார். உயிரோடு விளையாடுவதாக மற்ற மருத்துவர்கள் குற்றம் சாட்டினர். ஆனால், அந்தச் சிறுவனுக்குப் பெரியம்மை ஏற்படவில்லை. உலகத்துக்குப் பெரியம்மைக்கான தடுப்பூசி கிடைத்தது. பரவலாக இந்தத் தடுப்பூசியை ஏற்கவில்லை. எதிர்ப்புகள் கிளம்பின.பசுக்களிடமிருந்து வந்த கிருமிகள் என்று மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினர். விலங்கு பொருள்களால் சிகிச்சை அளிக்க மாட்டார்கள் என்றனர். மத அடிப்படையில் பெரியம்மைக்கான தடுப்பூசியை எதிர்த்தனர். ஆனால், இதுதான் பாதுகாப்பான முறை என்று அரசு பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் அங்கீகரித்தது. ராணுவத்திலும் கடற்படையிலும் அம்மை குத்துவது கட்டாயமாக்கப்பட்டது. அதன் பிறகுதான் அம்மை குத்தும் முறை விரைவாகப் பரவியது. தனது கண்டுபிடிப்புக்கு ஜென்னர் காப்புரிமை பெறவில்லை. ஏழைகளுக்கு இலவசமாக வழங்கினார். ஒவ்வொரு நாளும் அவர் வீட்டின் முன் 300 பேர் வரை தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்தச் சேவையைப் பாராட்டி அரசு ஜென்னருக்கு 1802இல் பத்தாயிரம் பவுண்டு பரிசு கொடுத்தது. நான்காண்டுகள் இடைவெளியில் மீண்டும் இருபதாயிரம் பவுண்டு சன்மானம் அளித்தது. இதை வைத்து 1808இல் தேசியத் தடுப்பூசிக் கழகத்தைத் தோற்றுவித்தார் ஜென்னர். தன் ஆராய்ச்சிகளை ’அம்மை நோயின் காரணங்களும் விளைவுகளும்’ என்கிற நூலாக வெளியிட்டார். லத்தீன் மொழியில் பசுவுக்கு ’வக்கா’ என்று பெயர். வக்காவிலிருந்து தடுப்பூசி வந்ததால் ’வக்காசீன்.’ அதுவே பின்னர் ’வாக்சீன்’ ஆக மாறியது. அம்மையை ஒழித்தவர் என உலகம் பாராட்டியது. பிரான்ஸ் உள்பட அடுத்தடுத்த நாடுகளில் இம்முறை பரவியது. இந்தக் கண்டுபிடிப்பால் மாவீரன் நெப்போலியன் ஜென்னர் மீது மிகுந்த மரியாதை கொண்டார். இதை வைத்து ஜென்னர் தன் நாட்டுக் கைதிகள் சிலரை நெப்போலியனிடமிருந்து விடுவித்தார். 1823, ஜனவரி 26 அன்று 73 வயதில் ஜென்னர் காலமானார்.
பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெதினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார். ஆம்.. லீனா மெதினா (Lina Medina) என்ற 5 வயது, 7 மாதம் மற்றும் 21 நாட்கள் பருவத்தில் உள்ள பெண் குழந்தை, உலகின் இளைய தாய் என்ற சாதனை படைத்தார். இவர் பெரு நாட்டைச் சேர்ந்தவர். முக்கிய தகவல்கள்: பிறப்பு: செப்டம்பர் 23, 1933 (பெரு). குழந்தை பிறப்பு: 1939 மே 14, சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தை (2.7 கிலோ எடை) பிறந்தது. குழந்தையின் பெயர்: ஜெரார்டோ (அவரது மருத்தரின் பெயரிடப்பட்டது). காரணம்: பாலியல் முதிர்ச்சி வராத நிலை (Precocious Puberty) எனப்படும் ஒரு அரிய மருத்துவ நிலை காரணமாக, அவரது உடல் வயதுக்கு முன்னதாகவே பருவமடைந்தது. மருத்துவ ஆய்வு: லீனாவின் வயிறு வீங்கியதால், பெற்றோர் முதலில் ஒரு பேயைச் சேர்ந்தது என்று நினைத்தனர். மருத்துவர்கள் ஆரம்பத்தில் கட்டி என்று நினைத்தனர், ஆனால் பின்னர் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது. அவரது மாதவிடாய் 3 வயதிலேயே தொடங்கியது, மேலும் அவரது ஹார்மோன் அளவுகள் வயது வந்த பெண்களைப் போல இருந்தன. பின்னணி: குழந்தையின் தந்தை பற்றி எந்த உறுதியான தகவலும் இல்லை (சில குறிப்புகள் லீனாவின் தந்தை கைது செய்யப்பட்டதாகக் கூறுகின்றன). லீனா பின்னர் மற்றொரு குழந்தைக்கு தாயானார். அவரது மகன் ஜெரார்டோ 1979இல் (40 வயதில்) இறந்தார். லீனா இன்றும் உயிருடன் இருக்கிறார் (2024 நிலவரப்படி, 90 வயது). இந்த வழக்கு மருத்துவ வரலாற்றில் மிகவும் வினோதமான மற்றும் விபரீதமான நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் ஹார்மோன் கோளாறுகள் பற்றிய விவாதங்களையும் உண்டாக்கியது. குறிப்பு: இந்த நிகழ்வு உண்மை என்றாலும், இது மிகவும் சிக்கலான மற்றும் சர்ச்சைக்குரிய விஷயமாகும்.
ஸ்கைலேப் என்ற ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் விண்ணுக்கு ஏவப்பட்டது. உங்களில் எத்தனைப் பேருக்கு நினைவிருக்கிறது? இந்த ஸ்கைலேப் ஆயுள் முடிந்த நிலையில் பூமியை நோக்கி வீழ்ந்து கொண்டிருந்தது. அதை வைத்து மாலை முரசு போன்ற நாளிதழ்கள் அந்தந்த ஊரில் விற்பனை குறைந்த ஏரியாக்களின் மேப்பை போட்டு இங்கே எல்லாம் ஸ்கைலேப் வெடித்து சிதறி விழ வாய்ப்புண்டு என்று செய்தி போட்டு பீதியை கிளப்பியது ஆம்.. 1979 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி, அமெரிக்காவின் முதல் விண்வெளி ஆய்வு நிலையமான ஸ்கைலேப் (Skylab) அதன் ஆயுள் முடிந்து பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்து, இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் உடைந்து விழுந்தது. இந்த நிகழ்வு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, குறிப்பாக இந்தியாவில், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மக்கள் மத்தியில் அச்சம் பரவியது. விழுப்புரத்தில், ஜூலை 11, 1979 அன்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி ஒரு முழு ஊரடங்கு போன்ற நிலை அறிவிக்கப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை, பள்ளிகள் மற்றும் கடைகள் மூடப்பட்டன. இந்திய அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள், ஸ்கைலேப் விழுந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன. உதாரணமாக, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காவல்துறை உஷார் நிலையில் வைக்கப்பட்டது, மேலும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை முக்கியமான மணி நேரங்களில் விமானங்களைத் தடை செய்ய திட்டமிட்டது. ஊடகங்களின் பங்கு: இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், ஊடகங்கள் ஸ்கைலேப் பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு, மக்களிடையே பயத்தை அதிகரித்தன. உலகளவில், ஸ்கைலேப் எங்கு விழும் என்ற ஊகங்கள் பரவியதால், இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இது ஒரு பெரும் பேசுபொருளாக மாறியது. நம்நாட்டில், மக்கள் வானத்தை அவதானித்து, எதாவது விழுந்தால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருந்தனர். அப்பேர்பட்ட ஸ்கைலேப் ஏவப்பட்ட தினமின்று.
எச். ரைடர் அக்கார்ட் காலமான தினம் எச். ரைடர் அக்கார்ட் (H. Rider Haggard, முழுப்பெயர்: சர் ஹென்றி ரைடர் அக்கார்ட்) என்ற பிரபல பிரிட்டிஷ் நாவலாசிரியர் 1925 மே 14ஆம் தேதி காலமானார். அவர் அட்வென்ச்சர் மற்றும் ஃபேண்டசி இலக்கியத்தின் முன்னோடி ஆவார். புகழ்பெற்ற படைப்புகள்: “கிங் சாலமன்ஸ் மைன்ஸ்” (King Solomon’s Mines, 1885) – அலன் குவாட்டர்மெய்ன் என்ற கதாநாயகனின் சாகசங்கள். “ஷீ” (She: A History of Adventure, 1887) – “அமரத்துவ பெண்” பற்றிய கற்பனைக் கதை. தாக்கம்: அவரது படைப்புகள் இண்டியானா ஜோன்ஸ், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் போன்ற பல பிரபலமான கதைகளுக்கு ஈர்க்கப்பட்டுள்ளன. இலக்கியப் பங்களிப்பு: இழந்த நாகரிகங்கள், ரகசியங்கள், அதிசய இடங்கள் பற்றிய அவரது எழுத்துக்கள் அட்வென்ச்சர் இலக்கிய வகையை வளப்படுத்தின. அவரது படைப்புகள் காலனிய ஆபிரிக்கா மற்றும் புராணக்கதைகளின் கலவையாக அமைந்தன. அவர் இன்றும் சாகச படைப்புகளின் முன்னோடியாக நினைவுகூரப்படுகிறார்.
அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் இவர் வழக்கறிஞரும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினரும் ஆவார். மேலும் 1929 முதல் 1944 முடிய சென்னை மாகாண அரசின் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றியவர். சென்னை மாகாணத்தின், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் 1883இல் பிறந்த அல்லாடி கிருஷ்ணசாமியின் தந்தை ஏகாம்பர சாஸ்திரி ஒரு கோயில் பூசாரி ஆவார். 1899இல் பள்ளிப் படிப்பை முடித்த கிருஷ்ணசாமி சென்னை கிறித்தவக் கல்லூரியில் வரலாறு படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் வழக்கறிஞர் படிப்பை, சென்னை சட்டக் கல்லூரியில் முடித்தவர். 1929 முதல் 1944 முடிய சென்னை மாகாண அரசின் தலைமை அரசு வழக்கறிஞராக 18 ஆண்டுகள் திறம்பட பணியாற்றினார். ஜவஹர்லால் நேரு அழைப்பின் பேரில் இவர் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் பொறுப்பேற்றார், இந்திய அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக இவர் ஆற்றிய பணியினை டாக்டர் அம்பேத்கார் பாராட்டியுள்ளார். இவர் தனது ஓய்வுக் காலத்தை சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள அவருடைய வீட்டில் கழித்தார் 1953 ஆம் ஆண்டு அக்டொபர் மாதம் 3 ஆம் நாள் மரணமுற்றார். இவரது மகன் மற்றும் பேரன் அனைவரும் வழக்குரைஞர்களாக பணியாற்றினார்கள்.
இப்போ அக்லீயாகிக் கொண்டு வரும் மூஞ்சு புத்தகத்தின் (FaceeBook) நயினா மார்க் சக்கர்பெர்க்-க்கு ஹேப்பி பர்த் டே… ஃபேஸ்புக் மூலம் உங்கள் சொந்த தகவல் திருடு போகுது என்பதைக் கூட ஃபேஸ்புக் வழியாக சொல்லும் / அறிந்து கொள்ளும் அளவுக்கு அடிக்ட் ஆக்கி விட்ட ஃபேஸ்புக்கின் பிதாமகர் மார்க் சக்கர்பெர்க் 1984-ம் ஆண்டு இதே மே 14 அன்றுதான் பிறந்தார் . அவரோட அப்பா எட்வர்ட் சக்கர்பெர்க், ஒரு பல் டாக்டர். அவருடைய மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை வரிசைப் படி, சிகிச்சைக்கு அழைக்க ஒரு அப்ளிகேஷனை உருவாக்கிய போது அவருக்கு வயது ஜஸ்ட் 12. பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே, ‘மெர்ஸி’ கல்லூரியில் சேர்ந்து பட்டப் படிப்பை முடித்துவிட்டார். மார்க்கின் புரோகிராமிங் திறமையை வளர்க்கப் பெற்றோரால் நியமிக்கப்பட்ட ஆசிரியர், இவரது திறமையைப் பார்த்து ’மார்க் ஒரு மேதை’ என்று குறிப்பிட்டார். 2004-ம் வருசம், தான் படித்துகொண்டிருந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தூங்கும் அறையிலிருந்து விளையாட்டாக ஆரம்பித்ததுதான் ஃபேஸ்மேஷ். கல்லூரி மாணவர்கள் தங்களுக்கிடையே உரையாடிக் கொள்ளவும், தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும் மட்டுமே தொடங்கப்பட்டது. அப்போது அவருக்கே தெரிந்திருக்கவில்லை இதன் வீரியம் உலகை ஆளப் போகிறது என்று. இதற்காகக் கல்லூரி டேட்டா பேஸைத் திருடி தண்டனையும் பெற்றார். ஆனாலும் தொடர்ந்து அதன் ஆராய்ச்சியிலேயே இருந்ததால் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப் பட்டார். உலகின் புகழ்பெற்ற பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறியதும் அவருக்கு புரோகிராமிங் ஆராய்ச்சியே முழுநேர வேலை யாகிப் போனது. ‘தி ஃபேஸ்புக்’ உருவானது. சிவப்பு, பச்சை நிறத்தைப் பிரித்தறிய முடியாத நிறக்குருடு நோய் காரணமாக நீல நிறத்தில் உருவாக்கினார். இன்னிக்கு ஃபேஸ்புக்கை 170 கோடிக்கும் மேலானோர் பயன்படுத்துகின்றனர். ஒருசில நாடுகளில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்டிருந்தாலும் மறை முகமாக அந்நாட்டு மக்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள். ஃபேஸ்புக் வலை தளத்தை ஹேக் செய்ய ஒரு நாளுக்கு 8 லட்சம் முயற்சிகள் நடக்கின்றன. 2006-ல் ஃபேஸ்புக்கை ஹேக் செய்த கிரிஸ் புட்னாமை தனது நிறுவனத்திலேயே வேலைக்கு எடுத்துக்கொண்டார் மார்க். ஆனால் அதற்குப் பின் யாராலும் ஃபேஸ்புக்கை ஹேக் செய்ய முடியவில்லை. சராசரியாக ஒவ்வொரு ஃபேஸ்புக் யூசரும் நாள் ஒன்றுக்கு 50 நிமிடமாவது ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள். ஃபேஸ்புக்கில் மாதம் ஒன்றுக்கு சுமார் 280 கோடி போட்டோக்கள் அப்லோட் செய்யப்படுகிறது. வீடியோக்கள் தற்போது ஃபேஸ்புக்கில் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஃபேஸ்புக் மெருகேறி வளர்ந்து கொண்டிருக்கிறது. கணினி மற்றும் இணைய உலகில் ஜாம்பவான்களாக இருக்கும் பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் இருவரின் சாதனைகளை எல்லாம் முறியடித்துக் கொண்டிருக்கிறார் மார்க். பில் கேட்ஸ் மைக்ரோ சாஃப்ட்டை தொடங்கும்போது வயது 20. மார்க் ஃபேஸ்புக்கை தொடங் கும்போது வயது 19. மார்க் 23 வயதிலெல்லாம் பில்லினியர் என்ற தகுதியைப் பெற்றார். ஆனால், பில்கேட்ஸ் 30 வயதாகிய நிலையிலும் பில்லினியர்் என்ற நிலையை அடையவில்லை. பில்கேட்ஸ் 30 வயதில்தான் ஐபிஓ வெளியிட்டார். ஆனால் மார்க் 28 வயதிலேயே ஐபிஓ வெளியிட்டு விட்டார். மார்க் 2010-ல் தனது 26 வயதில் டைம் இதழின் ‘பர்சன் ஆஃப் தி இயர்’ என்றப் பட்டத்தை பெற்றார். ஆனால், பில்கேட்ஸ் தனது 50 வயதில்தான் அந்த இடத்தைப் பிடித்தார். ஆனா சமீபகாலமா பல்வேறு நாடுகளின் சட்டத் திட்டங்களால் நொந்து நூடுல்ஸாகி அக்லியாகிக் கொண்டு வருது ஃபேஸ் புக் ஆனாலும் இப்படியாப்பட்ட ஜாம்பவான் மார்க்-க்கு பொறந்த நாள் பொக்கே குடுக்கரது தப்பே இல்லை
