“சனாதன சம்பிரதாயங்களும் விஞ்ஞான விளக்கங்களும்” – வேதா கோபாலன்

தங்கத்தாமரை பதிப்பகம் வெளியீடாக அம்மா வேதாகோபாலன் அவர்கள் எழுதிய சனாதன சம்பிரதாயங்களும் விஞ்ஞான விளக்கங்களும்…. டிஸ்கவரி புக் பேலஸில் மாலை 5.30 க்கு சரியாக நிகழ்வு தொடங்கப்பட்டது. சரியான நேரத்திற்கு முடிக்கப்பட்டது. சிறிய அரங்கம் எனினும்….எழுத்துலக வாசக நட்சத்திரங்களினால் ஜொலித்தது. 160 பக்கங்களில் 174 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூலில் முதலில் தென்படுவது அத்தியாயத் தலைப்புகளின் நகைச்சுவைதான். தலைப்புகளில் நகைச்சுவை இருப்பினும், புத்தகத்தில் விளக்கங்கள் அதிகம். அதன் எழுத்து சாதுர்யம் பலரையும் கட்டிப்போடும் என்பது நிஜம்.

இறைவணக்கம் பாடி திருமதி. வைஜெயந்தி அவர்கள் தொடங்கி வைத்தார். இனிமையான குரலில் பக்தியின் ரசம் சொட்டியது.

அதன் பிறகு, புத்தக வெளியீடு. ஓவியர் திரு. ஷ்யாம் அவர்கள் புத்தகத்தை வெளியிட , சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டார்கள். நாம் செய்யும் செயல் மற்றவர்களை பாதிக்காமல் இருப்பது எவ்வளவு நல்லதோ. அதேபோல் நாம் செய்யும் செயலை நமக்கே பாதிப்பு வராமல் இருப்பதை எடுத்துக்காட்டாய் விளங்குகிறது இந்தப் புத்தகம்.

முதல் பேட்ஸ்மேனாய் களம் இறங்கியவர் திரு.ரமணன் அவர்கள் சால்வை போர்த்துவது என்பது ஒரு சம்பிரதாயம். ஒருவரை கௌரவிக்கும் முறை. நேற்று நடந்த வேதா கோபாலனின் புத்தக வெளியீட்டு விழாவில் ‘கல்கி’ வி.எஸ்.வி.ரமணன் இதை அழகாய் விளக்கினார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில், நம்ம ஊர் மாதிரி தலையில் சதுரத் தொப்பி மாட்டாமல், சால்வை அணிவித்து கௌரவிக்கிறார்களாம். ‘அந்தக் காலத்தில் புலவர்களைப் போற்றும் விதமாக மன்னர்கள் பட்டுப் பீதாம்பரங்களைப் போர்த்தி கௌரவிப்பார்கள். அதுதான் பின்னர் பளபள சால்வை போர்த்துவது, பயனாடை போர்த்துவது என்று மாறி வந்திருக்கிறது’ என்றார் ரமணன். ஆகவே, விழாக்களில் மரியாதைக்குரியவரை சால்வை போர்த்தி கௌரவிப்போம். அதில் அவருக்கும் ஒரு சந்தோஷம்; நமக்கும் ஒரு திருப்தி! என அரு​மையான உ​​ரை​யை வழங்கினார்.

ரவிபிரகாஷ் அவர்கள் வீட்டில் பாட்டி, பெண் பிள்ளைகளுடன் பேசினால் காது அறுந்துவிடும் என்ற சொல்லி சொல்லி வளர்த்ததால் கல்லூரி முடித்து, சாவி அலுவலகத்தில் பணிபுரியும் காலம் வரை பெண்களிடம் முகம் கொடுத்து பேச பயந்த கதையை சொல்லி கலகலப்பூட்டினார். அவர் சொன்ன கொள்ளி வாய்பிசாசு கதையும் சிறப்பாய் இருந்தது. அது போன்ற பல கதை களுக்கு விளக்கங்கள் இந்த புத்தகத்திலிருப்பதையும் சொன்னார்.

திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள், சனாதனம் என்பதில் அந்தந்த காலத்திற்கு ஏற்ற வகையில் எது சரியோ அதை கடைபிடித்தால் போதுமானது என்றார். அவர் பேசிய எவர்சில்வர் பாத்திர உதாரணம் வெகு அருமை. எதையும் சமாளிக்கும் துணிவும் கூட சனாதானம்தான். வெகு ஆழமான ரசனையான உரை. கண்ணதாசன், நா.பார்த்தசாரதி, சுவாமி கமலாத்மானந்தா, ஜெயகாந்தன், பிரபஞ்சன் என அனைவரையும் தம் பேச்சுக்குள் கொண்டு வந்துவிட்டார்.

புத்தக வெளியீடு அதன் தலைப்பிற்காகவே இடம் மாறியிருக்கிறது என்றும், சனாதானம் தற்போது காலங்களில் எடுத்துக் கொள்ளப்படும் அர்த்தங்களையும், அனர்த்தங்களையும் சுவைபட கூறியிருந்தார். அரசியலும் நையாண்டியும் ஹாஸ்யமும் கலந்து அவர் பேசிய விதம் சிரிப்போடு கூடிய சிந்தனையை விதைத்தது. வேதாகோபாலன் அவர்களுக்கும் தனக்கும் உள்ள நட்பின் ஆழத்தை தன் பேச்சிலேயே உணர வைத்தார். அதிலும் குளிக்கும்போது வடக்கு பார்த்து நிற்க வேண்டும் வடக்கு எது என்று அவர் மனைவி விளக்கிய விதத்தையும், அதற்கு அவர் அளித்த பதிலும் நகைச்சுவையின் உச்சம்.

திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் பேச்சின் போது, பதிப்பாளர் பாலா மற்றும் புத்தக ஆசிரியர் வேதாகோபால் அவர்களின் நட்பின் ஆழம் குறித்து குறிப்பிட்டார். இன்றைய இளம் தலைமுறையினருக்கு தேவையான விளக்கங்கள் இந்த புத்தகத்தில் இருக்கிறது என்றும், இதை ஆங்கிலப் பதிப்பாக கொண்டு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டார். நம்பிக்கை பற்றிய அவரின் விளக்கம் அருமையாக இருந்தது.

நன்றியுரையும், ஏற்புரையும் ஒருசேர பேசி அசத்தினார் புத்தக ஆசிரியர். விழா நாயகி திருமதி. வேதாகோபாலன். மேடையில் வீற்றிருந்த அத்தனை ஆளுமைகளுடன் தன்னுடைய நட்பு, குடும்ப உறவுகள் போன்றவற்றை அழகாக எடுத்துரைத்தார். புத்தகம் வெளியான விதம், அதை எழுத நேர்ந்த விதம் என்று வந்திருந்த அத்தனை பேருக்கும் நன்றியை நவிலும்போது முகத்தில் ஏற்பட்ட அலாதியான அன்பும் திருப்தியும். ஒரு குடும்ப விழாவைப் போல உணரவைத்தது.

திரு. கணேஷ்பாலா மற்றும் லதாசரவணன் இருவரும் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்கள்.

நிகழ்வின் புகைப்படங்கள் சில…,

‘குங்குமம்’ கே.என்.சிவராமன், ரவி நவீனன், கே.ஜி.ஜவஹர், டி.என்.ராதாகிருஷ்ணன், க்ளிக் ரவி, கண்ணன் கோபாலன், சின்னக்கண்ணன், பொன்.காசிராஜன், மடிப்பாக்கம் வெங்கட், விஜி ஆர். கிருஷ்ணன், தயாளன்,, இயக்குநர் மணிபாரதி, குமுதம் ஜெயாப்ரியன், எழுத்தாளர் சுரேஷ் மற்றும் பதிப்பாளர் பாலா. தங்கத்தாமரை பதிப்பம் ஹேமா, திரு.ராஜேஷ்குமார் அவர்களின் மகன் கார்த்திக் அவர்கள் இன்னும் பல பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டார்கள்.       –கட்டுரை எழுதியவர் P.திவன்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!