‘வணிக வளாகங்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது’

‘பெரும் வணிக வளாகங்களில் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது’ என நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

சென்னை கொசப்பேட்டையைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர், சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை திருமங்கலத்தில் உள்ள பெரும் வணிக வளாகமான வி.ஆர். மாலில் கடந்த 26.4.2023 அன்று எனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை நிறுத்தினேன். ஒரு மணி நேரம் 57 நிமிடங்கள் வாகனத்தை நிறுத்தியதற்காக ரூ.80 பார்க்கிங் கட்டணமாக பெற்றனர். தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகள்படி பெரும் வணிக வளாகங்களில் போதுமான வாகன நிறுத்துமிடம் செய்து தர வேண்டியது அவசியம், வாகன நிறுத்துமிடம் என்பது வணிக வளாகத்தின் ஒரு பகுதியாகும். இதற்காக தனியாக கட்டணம் வசூலிக்க முடியாது.என்னிடம் பார்க்கிங் கட்டணம் வசூலித்தது நியாயமற்ற வர்த்தகம் ஆகும். எனவே, எனக்கு இழப்பீடாக ரூ.1 லட்சமும், வழக்கு செலவுக்காக ரூ.50 ஆயிரமும் வழங்க வி.ஆர். மால் உரிமையாளருக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது வி.ஆர். மால் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதி, வணிக வளாகங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட வேண்டும் என கூறினாலும், அங்கு வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை. நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி பார்க்கிங் கட்டணம் வசூலிக்க எந்த தடையும் இல்லை’ என கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பெரும் வணிக வளாகங்களில் கழிப்பறை, எஸ்கலேட்டர், லிப்ட் போன்றவை அடிப்படை வசதிகள் என்ற வரிசையில் உள்ளபோது வாகன நிறுத்துமிடமும் அடிப்படை வசதிகள் என்ற பட்டியலில் வருமா? என்ற கேள்வி உள்ளது. சட்டப்பூர்வமாக ஒழுங்குபடுத்தப்பட்டால் மட்டுமே வாகன கட்டணம் வசூலிக்க முடியுமா? என்ற மற்றொரு கேள்வியும் எழுகிறது. இந்த கேள்விகளுக்கு தமிழ்நாடு கட்டிட விதிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் மட்டுமே விடை காண முடியும். ஆனால், அதற்கு இந்த ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. இதனால், அதில் தலையிட விரும்பவில்லை.

அதேவேளையில், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கலாம் என்பது தொடர்பான விதிகள் எதையும் வணிக வளாக நிர்வாகம் தாக்கல் செய்யவில்லை. இதன்மூலம், மனுதாரரிடம் வாகன கட்டணம் வசூலித்தது நியாயமற்ற வர்த்தகம் என்ற முடிவுக்கு இந்த ஆணையம் வருகிறது.திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மால், தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து வாகனங்களை நிறுத்துவதற்காக கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது. வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.நியாயமற்ற வர்த்தகம் மூலம் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக திருமங்கலம் வி.ஆர்.மால் உரிமையாளர் இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.2 ஆயிரமும் மனுதாரருக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!