அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ் தினந்தோறும் ஒரு லட்சம் பேர் பயனடைந்து வருவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-
கடந்த நான்கு ஆண்டுகளில் 2.662 திருக்கோவில்களில் திருப்பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 777 திருக்கோவில்களில் நடைபெறும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ் தினந்தோறும் சராசரியாக ஒரு லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.
திருக்கோவில் பாதுகாப்பதற்கு சொத்துகளையும் உடைமைகளையும் இந்த அரசு எடுத்த பெருமுயற்சிகளின் பயனாக, 7,327 ஏக்கர் நிலங்களும். 36.38 இலட்சம் சதுர அடி மனைகளும், 5.98 இலட்சம் சதுர அடி கட்டடங்களும் திருக்கோவில் வசமாக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 7.185 கோடி ரூபாய் ஆகும்.
84 திருக்கோவில்களில் திருக்குளங்களைச் சீரமைக்க 72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்துசமய அறநிலையத் துறையின் பதிப்பகத் துறை மூலமாக 216 க்கும் மேற்பட்ட அரிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளன.
2025-26 ஆம் நிதியாண்டில், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோவில்களில் திருப்பணிகள் செய்திட 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.