10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
அதன்பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றியதாவது:-
1.50 லட்சம் தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்படும். 10 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி வங்கி கடன் உதவி வழங்கப்படும். கலைஞர் கைவினை திட்டத்தில் 19,000 கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ரூ.74 கோடி ரூபாய் மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் செமி கண்டெக்டர் இயக்கம் செயல்படுத்தப்படும். கோவை மற்றும் பல்லடத்தில் செமி கண்டக்டர் தொழிற் பூங்கா அமைக்கப்படும். மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும். திருச்சியில் பொறியியல் தொழில் பூங்கா அமைக்கப்படும். ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும்.
சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.