பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் – பட்ஜெட்டில் அறிவிப்பு..!

கடைக்கோடி ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

பூவிதழ் எங்கும் பனித்துளிகள்

காற்றசைவில் வீழ்ந்திடாமல்.

மெல்ல அசைந்தாடும் மணப்புல் மலர்கள்

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் மட்சுவோ பாஷோவின் அழகியல் ததும்பும் இக்கவிதை வரிகள், இயற்கையின் படைப்புகளுக்கு இடையே காணப்படும் ஆழமான பிணைப்பை மனிதர்களுக்கு உணர்த்திச் செல்கிறது.

இயற்கையினையும் உள்ளடக்கிய உலக உடன்பிறப்பு நேயத்தை உள்வாங்கி உருவாக்கப்பட்டதுதான் முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம். இத்திட்டத்தின் கீழ், தற்போது மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைக்கோடி ஏழைக் குடும்பங்களையும் கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளது.

ஆதரவற்றோர். தனித்து வாழும் முதியோர். ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள். பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள். மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின்கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமன்றி அரசு நலத்திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.

முதற்கட்டமாக. மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 50,000 குடும்பங்களில் குழந்தைகள் தங்களின் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வருவது தெரியவந்துள்ளது. தாயுமானவரின் கரங்கள் இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் இக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியை தொடர. மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!