மகளிர் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான பல திட்டங்களை 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களின் வளர்ச்சியை அதிகப்படுத்த பல திட்டங்களை திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது. சமூகத்திலும், குடும்பத்திலும் அனைத்து இடங்களிலும் பெண்களின் பங்கை சம அளவு உறுதி செய்திட பல முயற்சிகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில் தற்போதும் பெண்களின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025-26-ல் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அவற்றை இங்கு காண்போம்.
- அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக மாற்றிடும் பெருந்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 20 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெறலாம். இதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.225 கோடி ஒதுக்கப்படும்.
- இதுவரை மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத, தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.13807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்திட ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 10 ஆயிரம் புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். அதன்படி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.37,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படும்.
- தோழி மகளிர் விடுதிகள் காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மேலும் 10 இடங்களில் 800 பெண்கள் பயன்பெறும் வகையில் ரூ.77 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ. 275 கோடியில் மாணவியருக்கு 3 விடுதிகள் அமைக்கப்படும். இதில் ஆதிதிராவிடர், சிறுபான்மையினருக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும்.
- புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் மூன்றாம் பாலினத்தவருக்கும் விரிவுப்படுத்தப்படும்.
- மூன்றாம் பாலினத்தவருக்கு போக்குவரத்து மேலாண்மை, திருவிழாக் காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் உரிய பயிற்சி வழங்கி, ஊர்க்காவல் படையில் அவர்களை ஈடுபடுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
- முதற்கட்டமாக 50 மூன்றாம் பாலினத்தவரை கொண்டு சென்னை, தாம்பரம், ஆவடி மாநகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
- இவர்களுக்கான மதிப்பூதியம், பயிற்சி, சீருடை போன்றவை ஊர்க்காவல் படையினருக்கு சமமான வகையில் வழங்கப்படும்.