இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 13)

கேம்பிரிட்ஜ் கல்லூரி, ஜான் ஹார்வர்ட் நினைவாக ஹார்வர்ட் கல்லூரி என்று பெயர்மாற்றம் செய்யப்பட்ட நாள்~ இதுவே தற்போதைய ஹார்வர்ட் பல்கலைக்கழகம்! மாசாச்சூசெட்ஸ் வளைகுடா குடியேற்றத்தின் நிர்வாக அவை, உயர்கல்வி நிறுவனம் தேவை என்று தீர்மானித்ததைத் தொடர்ந்து 1636இல் இந்தக் கல்லூரி நியூடவுன் என்ற இடத்தில் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டபோது, கல்லூரிக்குக் கட்டடிடம், ஆசிரியர், மாணவர் என்று எதுவுமே இல்லை! 1637இல் முதல் பேராசிரியராக நேதனியேல் ஈட்டன் நியமிக்கப்பட்டார். (வட)அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேயர்கள் அங்குள்ள இடங்களுக்கு, தங்கள் நாட்டில் உள்ள இடங்களின் பெயர்களையே சூட்டினர். அவ்வாறே, இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பெருமையைக் குறிக்க, நியூடவுன் 1638இல் கேம்பிரிட்ஜ் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1638இன் தொடக்கத்தில், கல்லூரிக்கான முதல் நிலம், மாட்டுக்கொட்டில் வரிசை என்ற இடத்தின் கோடியில் வாங்கப்பட்டு, கல்லூரிக் கொட்டில் என்று பெயரிடப்பட்டு, வகுப்புகள் நடந்தன. இங்கிலாந்திலிருந்து 1638இல் இக்கல்லூரிக்கு வரவழைக்கப்பட்ட அச்சு இயந்திரம்தான் அமெரிக்காவின் முதல் அச்சு இயந்திரமாகும். மதபோதகரான ஜான் ஹார்வர்ட் 1638இல் இறந்தபோது, அவரது சொத்தின் பாதி இந்தக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. எழுதப்பட்ட உயில் எதுவும் இல்லையெனினும், அவர் சொல்லியிருந்தபடி 779 பவுண்டுகளும் (தற்போதைய இந்திய மதிப்பில் ரூ.1.6 கோடிக்;கும் அதிகம்!), அவரது 400 நூல்களும், அவர் மனைவியால் கல்லூரிக்கு வழங்கப்பட்டன. இதனாலேயே கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. ஹார்வர்ட், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் என்பது வியப்புக்குரிய தொடர்பு! அமெரிக்காவின் முதல் உயர்கல்வி நிறுவனம், உலகின் சூப்பர் பிராண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 6 பல்கலைக்கழகங்களுள் ஒன்று என்பதையெல்லாம் தாண்டி, உலகின் மிகஅதிக (ரூ.2.6 லட்சம் கோடி!) சொத்துடைய பல்கலைக்கழகமாக இன்று ஹார்வர்ட் விளங்குகிறது. 79 நூலகங்களையும், 1.8 கோடி நூல்களையும் கொண்ட இதன் நூலக அமைப்பே உலகின் மிகப்பெரிய கல்வி தொடர்பான தனியார் நூலகமாக விளங்குகிறது.

யுரேனஸ் கண்டுபிடிக்கப்பட்ட நாள் 1781-ஆம் ஆண்டு இதே நாளில் யுரேனஸ் கோளை இங்கிலாந்தைச் சேர்ந்த வானியலாளர் வில்லியம் ஹர்ஸ்செல் என்பவர் கண்டறிந்தார். சூரியக் குடும்பத்தின் ஏழாவது கோளான யுரேனஸ், விட்டத்தின் அளவில் மூன்றாவது பெரிய கோளாகும். இதற்கு கிரேக்கக் கடவுள் யுரேனஸ் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. மிகப்பெரிய வாயுக்கோளமான இதில் ஹைட்ரஜன், ஹீலியம், மீத்தேன் போன்ற வாயுக்கள் நிறைந்துள்ளன. மிகவும் குளிர்ச்சியான கோளான இதன் வெப்பநிலை மைனஸ் 224 டிகிரி ஆகும். இக்கோள் சூரியனைச் சுற்றிவர 84 புவி ஆண்டுகளும், தன்னைத் தானே சுற்றி வர 17 மணி 14 நிமிடங்களும் ஆகும். இக்கோளைச் சுற்றிலும்11 பெரிய வளையங்கள் உள்ளன.

மறவாதீர் இன்று திருநெல்வேலி எழுச்சி தினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலி எழுச்சி தினம் பலரால் நினைக்கப்படாமலே கடந்து போகிறது. இந்த தினத்தின் முக்கியத்துவம் குறித்து இளைய தலைமுறையினருக்கு உணர்த்தப்படாமல் இருப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலையும் வெட்கமும் பட வேண்டும் அதாவது சுதந்திரப் போராட்ட வீரர் விபின் சந்திரபால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதியை, `சுயராஜ்ய நாளாக’ சுதந்திரப் போராட்ட வீரர்கள் கொண்டாடினர். திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றங்கரையில் தடையை மீறி இந்த விடுதலை விழா நடந்தது. இதுபோல் தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுவிட்டு திருநெல்வேலிக்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர், 1908-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி கைது செய்யப்பட்டனர். நெல்லை கிளர்ச்சி இதன் எதிரொலியாக திருநெல்வேலியில் ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். அடுத்த நாள் (மார்ச் 13) அடித்தட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்த கிளர்ச்சியில் திருநெல் வேலி சந்திப்பில் தற்போதுள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில், அப்போது செயல்பட்ட ம.தி.தா. இந்து கலாசாலை மாணவர்களும் முக்கிய பங்கு வகித்தனர். இந்த கிளர்ச்சியில் பொதுச்சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. நிலமையை கட்டுக்குள் கொண்டுவர ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அடக்கு முறையைக் கையாண்டனர். திருநெல்வேலியில் சாதி, சமய வேறுபாடுகள் இல்லாமல் மக்கள் கிளர்ந்தெழுந்த இச்சம்பவம்தான் வரலாற்றில் `திருநெல்வேலி எழுச்சி நாளாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெற்ற இந்த கிளர்ச்சியை குறித்து, இளைய தலைமுறைக்கு சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு ஆண்டிலும் மறக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தின் முக்கியத்துவம் குறித்து இளைஞர்களுக்கு தெரிவிக்காமல், தங்கள் கடமையிலிருந்து பல்வேறு சமூக அமைப்புகளும், இலக்கிய அமைப்புகளும் தவறி வருவது சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது. 1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர். 2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலைஉயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர். ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர். ‘என்னை மதிக்காத இந்தியர்களுக்கு நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தான் ஜெனரல் டயர்..இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை ஜெனரல் டயரை ‘வெற்றி நாயகன்’ என்று பாராட்டி எழுதியது..! ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது. அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று, உத்தம்சிங் என்ற இளைஞன் சபதம் செய்தான்…சொன்னபடியே சரியாக 21 ஆண்டுகள் காத்திருந்து இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி, கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கி 1940-ம் ஆண்டு இதே மார்ச் 13-ம் தேதி கவர்னர் ஓ டயரைச் சுட்டுத் தள்ளினார் உத்தம் சிங். …!உத்தம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் விடுதலைப் போராட்டத்தை அகிம்சைவழியில் கொண்டு செல்ல உறுதியேற்றிருந்த மகாத்மா மற்றும் பண்டித நேரு ஆகியோர் இதைக் கண்டித்தனர். “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறினார் காந்தியடிகள். பண்டித நேரு, மகாத்மா காந்தி ஆகிய இருவருமே இச்செயலினால் தமது இயக்கம் பிரிட்டிஷ் அரசிடம் நடத்திக்கொண்டிருக்கும் அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். பஞ்சாப் காங்கிரஸ் அரசு உதம் சிங்கின் செயலைக் கண்டித்தும் ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் இயற்றியது. இந்நிலையில் காங்கிரஸ் பிதாமகர்களால் ஓரங்கட்டப்பட்டு அதனை விட்டு விலகிச் சென்று பாரத விடுதலைக்குப் போராடத் தீர்மானித்திருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மட்டுமே உத்தம் சிங்கை வெளிப்படையாகப் பாராட்டினார்.

பொருளாதாரப் பெருமந்தத்தின்போது, அரசு உத்தரவுப்படி அமெரிக்கா முழுவதும் மூடப்பட்ட வங்கிகள், இன்று திறக்கப்பட்ட நாள் . 1929இல் அமெரிக்கப் பங்குச்சந்தையின் வீழ்ச்சிதான் பெருமந்தத்தின் தொடக்கமாகக் குறிப்பிடப்பட்டாலும், உண்மையில், 1920களின் இடைப்பகுதியிலிருந்தே நிலவிய பின்னடைவுகள் காரணமாக, தொடர்ச்சியாக வங்கிகள் மூடப்பட்டன. வங்கிகள் தொடங்குவதற்கான மூலதனம் குறைக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால், நாடு முழுவதும் செயல்படும் தேசிய வங்கிகளே வரைமுறையற்று வளர்ந்து, 1921இல் 31,000மாக உச்சத்தை எட்டியிருந்தன. இவற்றால், அளவுகடந்த நம்பிக்கையில் வழங்கப்பட்ட கடன்களுடன், கட்டுமானம், சுரங்கம், கப்பல் கட்டுதல் உள்ளிட்ட பல தொழில்துறைகளிலும் ஏற்பட்ட வீழ்ச்சி, விவசாயம் பொய்த்தது முதலானவை, இழப்பினை ஏற்படுத்தி, 1921-30 காலத்தில் 505 வங்கிகள் மூடப்பட்டிருந்தன. தகவலே இன்றி பல வங்கிகள் காணாமல் போனமை, வங்கித் துறையின்மீதே நம்பிக்கையின்மையை உருவாக்கியிருந்த நிலையில், 1929இல் ஏற்பட்ட பங்குச்சந்தை வீழ்ச்சி மிகப்பெரிய பாதிப்பைத் தொடங்கிவைத்து. வங்கியிலிருந்த பணத்தை மக்கள் அனைவரும் எடுக்கத் தொடங்க, மூடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 1933இல் 9,000 ஆகியது. பதற்றத்தைத் தணிக்க, அமெரிக்க மாநிலங்கள் 5 நாள், 8 நாள் என்று வங்கிகளுக்கு விடுமுறையளித்தாலும், பிரச்சினை தீரவில்லை. இந்நிலையில்தான் மார்ச் 4இல் குடியரசுத் தலைவரான ஃப்ராங்க்ளின்-டி-ரூஸ்வெல்ட், மார்ச் 6இல் அமெரிக்கா முழுவதும் வங்கிகளுக்கு 4 நாள் விடுமுறையை அளித்தார். வங்கிகள் திறக்கப்படும்போது, மக்களுக்குத் திருப்பியளிக்கும் அளவுக்கு நாணயத்தாள்களை அச்சடிக்க உத்தரவிட்டதுடன், வங்கியிலிருக்கும் பணத்திற்கு 100 சதவீதம் காப்பீடு வழங்குவதாகவும் உறுதியளித்த, வங்கித்துறை அவசரச் சட்டத்தை மார்ச் 9இல் நிறைவேற்றினார். காங்கிரசின்(கீழவை) உறுப்பினர்களுக்கு வழங்கக்கூட பிரதிகள் தயாரிக்க நேரமின்றி, ஒரேயொரு பிரதியைப் படித்துக்காட்டியே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. நான்கு நாட்களுக்குப்பின் சனி, ஞாயிறு முடிந்து, மார்ச் 13இல் வங்கிகள் திறக்கப்பட்டபோது, அனைவருக்கும் பணம் திருப்பியளிக்கப்பட்டதால் ஏற்பட்ட நம்பிக்கையில், இரண்டு வாரங்களுக்குள் எடுத்த பணத்தில் பாதியை மக்கள் மீண்டும் வங்கியிலேயே செலுத்தினர் என்பது தனிக்கதை. அவ்வாண்டின் ஜூன் மாதத்திலேயே அவசரச் சட்டத்திற்கு மாற்றான வங்கித்துறைச் சட்டம் இயற்றப்பட்டு, வங்கியிலுள்ள நிதிக்குக் காப்பீடு அளிக்கும் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனும் தொடங்கப்பட்டது. பெருமந்தத்தின் விளைவுகள் தொடர்ந்தபோதும்கூட, வங்கித்துறையில் நிலைத்தன்மை ஏற்பட இந்நடவடிக்கைகள் உதவின.

எண்பதாண்டுப் போர், அல்லது டச்சு சுதந்திரப் போர் ஆரம்பமானது.(1568–1648), ஹப்ஸ்பர்க் நெதர்லாந்தின் இறையாண்மையைக் காப்பாற்ற, ஸ்பெயினின் பிலிப் 2 மன்னருக்கு எதிராக பதினேழு மாகாணங்களின் கிளர்ச்சியாக ஆரம்பித்தது ஆரம்ப காலத்தில், பிலிப் 2 தனது படைகளின் மூலம் எதிர்த்த பல மாகாணங்களின் மீதான தனது கட்டுப்பாட்டைத் திரும்பப் பெற்றார். எனினும் வடக்கு மாகாணங்கள் நாடு கடத்தப்பட்ட வில்லியம் தி சைலண்ட் என்பவரின் தலைமையில் கீழ் தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து காட்டி வந்தனர், மேலும் ஹப்ஸ்பர்க்ன் படைகளைச் சமாளித்து வெளியேற்றியதோடு, ஏழு ஐக்கிய நெதர்லாந்தின் குடியரசை உருவாக்கினர். குடியரசின் மையப்பகுதி அச்சுறுத்தலுக்கு ஆளாக விட்டாலும், அடுத்தடுத்து தொடர்ந்து போர் நடைபெற்றது. 1648ல் இந்தப் போர் முன்ஸ்டர் அமைதி எனும் உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது, அப்போது டச்சுக் குடியரசு சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டது.

உலகின் மிக நீளமான கடலடி சுரங்க ரயில்பாதையான செய்கான் சுரங்கப்பாதை திறக்கப்பட்ட நாள் ஜப்பானில் அமைந்துள்ள இரட்டை ரயில்பாதைச் சுரங்கமான இது, ஹோன்ஷு, ஹொக்கைடோ ஆகிய தீவுகளை சுகாரு நீரிணைக்கு அடியில் இணைக்கிறது. 53.85 கி.மீ. நீளமுள்ள இந்தச் சுரங்கப்பாதையின் 23.3 கி.மீ. கடலுக்கடியில், கடல் மட்டத்திலிருந்து 790 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. கடற்படுகைக்கும் 330 அடி கீழே அமைக்கப்பட்டுள்ள இதில், 140 கி.மீ. வேகத்தில் ரயில்கள் செல்கின்றன. தோணிப் போக்குவரத்து மட்டுமே இணைத்த இந்த இரண்டு தீவுகளுக்கிடையே நிரந்தரப் போக்குவரத்து வசதி அமைப்பது குறித்து 1910 வாக்கிலேயே பரிசீலிக்கப் பட்டாலும் செயல்படுத்தப்படவில்லை. 1946இல் மதிப்பீடுகள் மட்டும் செய்யப்பட்டன. 1954இல் ஒரு சூறாவளியில் 5 தோணிகள் கவிழ்ந்து 1,430 பேர் பலியாயினர். 1955-65 காலத்தில் ஆண்டுக்கு 40 லட்சம் பயணிகளும், 62 லட்சம் டன் சரக்குகளுமாக இத்தீவுகளுக்கிடையேயான போக்குவரத்து உயர்ந்ததைத் தொடர்ந்து, 1971இல் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 1988இல் முடிவடையும்போது, திட்டமிட்டதைவிட 12 மடங்கு அதிகமாக (இன்றைய மதிப்பில் சுமார் ரூ.94 ஆயிரம் கோடி) செலவாகியிருந்தது. ஆனாலும், விமானக் கட்டணம் குறைந்ததால் 90 விழுக்காடு பயணிகள் விமானத்திலேயே பயணிக்கின்றனர். நீளமான கடலடி சுரங்கப்பாதை என்று செய்கான் குறிப்பிடப்பட்டாலும், இங்கிலாந்தில் அமைந்துள்ள 50.45 கி.மீ. நீளமுள்ள சேனல் சுரங்கப்பாதையில், 37.9 கி.மீ. கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. இதுவே கடலுக்கடியில் அதிக நீளம் கொண்ட சுரங்கப்பாதையாகும். கடல் மட்டத்திலிருந்து 380 அடி ஆழத்திலேயே அமைந்துள்ள இதில் 160 கி.மீ. வேகத்தில் ரயில்கள் செல்கின்றன. சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்கடியில், 8,040 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள 57.09 கி.மீ. நீளமுள்ள கோதார்ட் பேஸ் சுரங்கப்பாதையே உலகின் மிக நீண்ட, மிக ஆழமான சுரங்க ரயில் பாதையாகும். இதில் 250 கி.மீ. வேகத்தில் ரயில்கள் பயணிக்கின்றன.

1979 – ஐரோப்பிய நாடுகளின் நாணய மதிப்புகளில் பெரிய அளவிலான ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுதைத் தவிர்த்து, பொருளாதார நிலைப்புத் தன்மையை உருவாக்க, ஐரோப்பிய நிதி அமைப்பு(மானிட்டரி சிஸ்ட்டம்) என்பது உருவாக்கப்பட்டு, ஐரோப்பிய நாணய அலகு(கரன்சி யூனிட்) என்பதும் நடைமுறைக்கு வந்த நாள் இது நாணயமாகப் பயன்படுத்தப்படவோ, ஐரோப்பிய நாடுகளின் நாணயத்துக்கு மாற்றாகச் செயல்படவோ இல்லையென்றாலும், பன்னாட்டு பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்பட்டது. ஐரோப்பிய நாடுகளிடையே பொருளாதார ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக, ஐரோப்பிய பொருளாதாரச் சமூகம்(இஇசி) என்ற அமைப்பு, 1957 மார்ச்சில், ஃபிரான்ஸ், இத்தாலி, மேற்கு ஜெர்மெனி, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் ஆகிய 6 நாடுகளின் பங்கேற்புடன் ரோமில் நடைபெற்ற மாநாட்டில் கையெழுத்தான ‘ரோம் ஒப்பந்தத்தின்படி’ உருவாக்கப்பட்டு, 1958 ஜனவரி 1இல் செயல்படத் தொடங்கியது. 1960இல் ஹேக் நகரில் இஇசி கூடியபோது, ஒற்றை ஐரோப்பியப் பொருளாதாரத்தை உருவாக்குவதை நோக்கிச் செல்ல முடிவெடுத்தது. 1969இல் கூடியபோது, 1980இலிருந்து செயல்படும் வகையில் நிதி ஒன்றியத்தை உருவாக்கத் திட்டமிட்டது. லக்சம்பர்கின் பிரதமரும், நிதியமைச்சருமான பியரி வெர்னர் தலைமையிலான குழு, இதற்கான முன்மொழிவை 1970இல் உருவாக்கியது. 1971இல் டாலருக்கு பதிலாக தங்கம் தர முடியாது என்று தன்னிச்சையாக அறிவித்து, ப்ரட்டன் உட்ஸ் திட்டத்தை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவந்துவிட்ட பின்னணியில், 1972இல் சுரங்கத்திற்குள் பாம்பு(ஸ்னேக் இன் த டன்னல்)’ என்ற பெயரில் இஇசி இதை இறுதி செய்தது. ஒவ்வொரு நாட்டின் நாணய மதிப்பின் ஏற்றத்தாழ்விற்கும் வரம்பு நிர்ணயிக்கும் வகையில், பாம்பு சுரங்கத்திற்குள்(குழாய்க்குள் என்று வைத்துக்கொள்வது எளிமையாகப் புரியும்) இருக்கும்போது, குறைந்த அளவாக பாம்பு வரையும், அதிக அளவாக சுரங்கத்தின்(குழாயின்) சுவர் வரையும் மாறலாம் என்பதற்காக இப்பெயர் சூட்டப்பட்டது. 1978 டிசம்பரில் ப்ரசல்ஸ் நகரில் இஇசி கூடியபோது இதை நடைமுறைப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1973இல் இணைந்திருந்த டென்மார்க், அயர்லாந்து ஆகியவற்றுடன் சேர்த்து 8 நாடுகளுக்கான நாணய அலகாக இந்நாளில் நடைமுறைக்கு வந்தது. 12 நாடுகளின் பங்கேற்புடன் 1992இல் உருவான மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தம், பொதுவான குடியுரிமை, அயலுறவு, பாதுகாப்புக் கொள்கைகள் ஆகியவற்றை நீண்டகாலத் திட்டமாக அறிவித்தபோது, பொதுவான நாணயத்திற்கான திட்டத்தையும் அறிவித்தது. அதன்படி, 1995இல் மாட்ரிட் நகரில் கூடியபோது யூரோ என்ற பெயர் அறிவிக்கப்பட்டு, 1999இல் நடைமுறைக்கு வந்தது.

இந்திய தொழிலதிபர், இந்திய தோல் தொழில் முன்னோடி பத்மஸ்ரீ ஏ.நாகப்பச் செட்டியார் நினைவு நாள் ஏ. நாகப்பச் செட்டியார் (A. Nagappa Chettiar) தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் மேலசிவபுரியில் ஆகஸ்ட் 6, 1915ல் பிறந்தார். இவர் ஈடுபட்ட தோல் வியாபாரம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஒரு பெரிய வணிகக் குழுமமாக வளர்ந்தது. வெளிநாட்டு தோல் ஏற்றுமதியில் ஈடுபட்ட இந்தியாவிலிருந்த இடைத்தரகர்களை நீக்குவதற்கு இவரது முயற்சிகள் பெரிதும் உதவின. பாதியாக இறுதி செய்யப்பட்ட தோல் பொருட்களை ஏற்றுமதி செய்வதை பிரதானமாக கருதியக் காலத்தில், முழுமையாக இறுதி செய்த தோல்பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டும் என்ற கருத்துமுறையில் நாகப்பச் செட்டியார் முன்னோடியாக விளங்கினார். மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆதரவுடன் இவர் முன்நின்று ஏற்பாடு செய்த வருடாந்தர தோல் கண்காட்சி ஆசியாவிலேயே மிகப்பெரிய தோல் பொருட்கள் கண்காட்சியாக வளர்ச்சியடைந்தது. இந்தியாவின் தோல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் நாகப்பச் செட்டியார் இருந்தார். சமுதாயத்திற்கு இவர் ஆற்றிய தொண்டுகளை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய அரசாங்கம் 1967 ஆம் ஆண்டு நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கியது. ஓர் இந்திய தொழிலதிபராகவும், இந்திய தோல் தொழில் முன்னோடிகளில் ஒருவராகவும் இருந்த நாகப்பச் செட்டியார் இதே மார்ச் 13,1982ல் இயற்கை எய்தினார்.

ஜோசப் பிரீஸ்ட்லி பிறந்த நாள் ஆக்சிஜனைக் கண்டறிந்த அறிவியலாளர் ஜோசப் பிரீஸ்ட்லி 1733-ஆம் ஆண்டு இதே நாளில் இங்கிலாந்தில் பிறந்தார். தத்துவம், அறிவியல், பல்வேறு மொழிகள் உள்ளிட்டவற்றைக் கற்றுத் தேர்ந்த அவர், சிறந்த ஆசிரியராகவும் திகழ்ந்தார். 1765 முதல் அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்ட அவர், நைட்ரிக் ஆக்ஸைடு, நைட்ரஜன் டையாக்ஸைடு, சல்பர் டையாக்ஸைடு, நைட்ரஜன், கார்பன் மோனாக்ஸைடு உள்பட 10 வாயுக்களைக் கண்டறிந்தார். இக்கண்டுபிடிப்புகளுக்காக 1773-ல் அவருக்கு ராயல் சொசைட்டி சார்பில் விருது வழங்கப்பட்டது. பேச்சு சுதந்திரம் உள்ளிட்டவற்றை அவர் வலியுறுத்தி வந்ததால், நெருக்கடிகளுக்கு ஆளானார். இதனால் இங்கிலாந்தில் இருந்து வெளியேறி அமெரிக்காவுக்குச் சென்ற ஜோசப் பிரீஸ்ட்லி 1804-ஆம் ஆண்டு காலமானார்.

பண்டிதர் கா. நமச்சிவாய முதலியார் (Pandit C. R. Namasivaya Mudaliar ) நினைவு நாள் தமிழகத்தின் சிறந்த புலவராக, தமிழறிஞராக , தமிழ்ப் பேராசிரியராக,புரட்சியாளராக வாழ்ந்தவரிவர் தமிழ்நாடு வட ஆற்காடு மாவட்டம் காவேரிப்பாக்கம் என்ற ஊரில் ராமசாமி முதலியார்-அகிலாண்டவல்லி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தந்தை ராமசாமி முதலியார் காவேரிப்பாக்கத்தில் நடத்தி வந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நமச்சிவாயர் தம் இளமைக்கால கல்வியைக் கற்றார். நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், விவேக சிந்தாமணி முதலிய நூல்களைக் கற்றுத் தேர்ந்த இவர், தமது பதினாறாவது அகவையில், காவேரிப்பாக்கத்தை விட்டு நீங்கி, சென்னை தண்டையார்பேட்டையில் தங்கி, அங்கிருந்த ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியேற்றார். தமிழாசிரியராகப் பணியாற்ற விரும்பிய நமச்சிவாயருக்குத் தொடக்க காலத்தில் அப்பணி எளிதில் கிட்டவில்லை. 1895-இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு சிறிய வேலையில் சேர்ந்தார். ஓராண்டுக்குப் பிறகு அதிலிருந்து நீங்கி, சென்னை செயிண்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் சேர்ந்தார். பின்னர், ராயபுரத்தில் இருந்த “நார்த்விக்’ மகளிர் பாடசாலையிலும் அதன்பிறகு “சிங்கிலர்’ கல்லூரியிலும் தமிழ்ப் பணியாற்றினார். 1902 முதல் 1914 வரை சென்னை வேப்பேரியில் இருந்த எஸ்.பி.ஜி. உயர்நிலைப் பள்ளியில் (தற்போது புனித பால்ஸ் பள்ளியில்) தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1914-ஆம் ஆண்டில் பெண்களுக்கென அரசினரால் இராணி மேரிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டபோது அங்கு தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார். 1917 இல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்க் குழுவில் தலைமைத் தேர்வாளராகத் தெரிவு செய்யப்பட்டார். சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பண்டிதர் ஈ. வி. அனந்தராம ஐயர் இறந்ததை அடுத்து அவரது இடத்திற்கு நமச்சிவாய முதலியார் நியமிக்கப்பட்டு, 1920 முதல் 1934 வரை பணியாற்றினார். உ.வே.சாமிநாதய்யர், மறைமலை அடிகளார், திரு.வி.க., ஆகியோர் நமச்சிவாயர் காலத்து வாழ்ந்த சான்றோர்களாவர். சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, சென்னை விவேகானந்தா கல்லூரி தமிழ்த்துறை மேனாள் தலைவர் சி.ஜெகந்நாதாசாரியார், உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் பி.எஸ்.கைலாசம், மேனாள் மத்திய அமைச்சர் ஓ.வி.அளகேசன்,நீதிபதி அழகிரிசாமி,முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் எஸ்.ராமசாமி ஆகிய பெருமக்கள் பேராசிரியர் கா.நமச்சிவாயரிடம் பயின்ற மாணாக்கர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவரது காலத்தில், ‘தமிழ் வித்துவான்’ தேர்வை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். அதற்கு முன், வடமொழி பயில்வோருக்கு மட்டுமே பல்கலைக்கழகத் தேர்வு இருந்து வந்தது. மேலும், பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் பெறவும், ஊதிய உயர்வு வழங்கிடவும் இவர் பாடுபட்டார்.[5] மாணவர்கள் தமிழ் இலக்கணத்தை விரும்பி கற்கும் வகையில் ‘தமிழ்ச் சிற்றிலக்கணம்’ எனும் அரிய நூலை எழுதி வெளியிட்டார். ‘தமிழ்ப் புலவர் சங்கம்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்து அதன் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். தை முதல் நாளைத் தமிழ்த் திருநாளாகக் கொண்டாட வழி செய்தார். திருவள்ளுவருக்கு முன் – திருவள்ளுவருக்குப் பின் என தமிழகத்துக்கு ஒரு சகாப்தகால அளவு கிடைக்க வழிவகுத்தவரும் இவரே. 1905 வரை மாணாக்கர் தமிழ்ப் பாடங்களைப் படிக்க ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாடநூல்களையே படிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அக்குறையைப் போக்க நமச்சிவாயரே தமிழ்ப்பாட நூல்களை எழுதத் தொடங்கினார். எஸ்.எஸ்.எல்.சி, இன்டர் மீடியட், பி.ஏ., ஆகிய வகுப்புகளில் இவரது பாட நூல்களே இடம்பெற்றன.[4] அச்சமயம் பள்ளிப்பாட நூல்கள் அரசுடமை ஆகவில்லை. நமச்சிவாயரின் நூல்களைப் பல பள்ளிகள் விரும்பிப் பயன்படுத்த ஆரம்பித்தன. ஏற்கனவே தமிழ்ப்பாடநூல்கள் எழுதிப் பிழைத்து வந்த ஆங்கிலேயர், நமச்சிவாயர் எழுதிய பாடநூல்களை ’பாடநூல் குழு’ ஏற்காதபடிச் செய்ய நெருக்கடி தந்தார்.ஆனால் பாடநூல் குழு நமச்சிவாயரின் நூல்களை ஒப்புக்கொண்டது. மேலும் அந்த ஆங்கிலேயர், நமச்சிவாயர் பணிபுரிந்த புனித பவுல் உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்திற்கு நெருக்கடி தந்து நமச்சிவாயரை பள்ளியிலிருந்து வேலைநீக்கம் செய்யச் சொன்னார். அதைத் தொடர்ந்து, பள்ளிநிர்வாகம் அடுத்த கல்வியாண்டிலிருந்து நமச்சிவாயரின் பணி தேவையில்லை என்று அவருக்கு அறிவித்தது. இச்செய்தி மாணவர்களுக்கு எட்டவே மாணவர்கள் தாமாகவே வேலைநிறுத்தம் செய்தனர். நிர்வாகமும் தொடர்ந்து பணியாற்ற நமச்சிவாயருக்கு ஆணை வழங்கியது. சிறந்த குழந்தைக் கவிஞராகவும் திகழ்ந்த நமச்சிவாயர், ஆத்திசூடி, வாக்குண்டாம், நல்வழி முதலான நீதி நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார். “நன்னூல் காண்டிகை’ என்னும் இலக்கண நூலுக்கும் உரை கண்டார். “தமிழ்க்கடல்’ என்ற பெயரில் அச்சகம் ஒன்றை நிறுவி, தணிகை புராணம், தஞ்சைவாணன் கோவை, இறையனார் களவியல், கல்லாடம் முதலான நூல்களைப் பதிப்பித்தார்.

நவீன செவிலியர் பணியின் முன்னோடியும் அமெரிக்க செஞ்சிலுவை செவிலியர் சேவையைத் தொடங்கியவருமான ஜேன் ஆர்மிண்டா டெலானோ (Jane Arminda Delano) பிறந்த தினம் இன்று. அமெரிக்காவின் மான்டுர் ஃபால்ஸ் கிராமத்தில் (1862) பிறந்தவர். உள்ளூரில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, நியூயார்க்கில் உள்ள பெலவ்யூ மருத்துவமனையின் நர்ஸிங் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார். 1886-ல் பட்டம் பெற்றார்.புளோரிடா ஜாக்சன்வில் மருத்துவமனையில் 1888-ல் பணிக்குச் சேர்ந்தார். அங்கு மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கவனித்து வந்தார். அவர்களை கொசுக்களிடம் இருந்து பாதுகாக்க கொசுவலை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார். கொசுக்களால் நோய் பரவும் என்பது கண்டறியப்படாத காலகட்டம் அது. செவிலியரின் பணிகளில் பல புதுமையான, பயனுள்ள வழிமுறைகளைக் கொண்டு வந்தார். பிறகு அரிசோனாவில் உள்ள பிஸ்பீ என்ற இடத்தில் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகள் சேவை செய்தார். பிலடெல்பியாவில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 1898-ல் அமெரிக்க ஸ்பெயின் போரின்போது, நியூயார்க் நகரின் அமெரிக்க செஞ் சிலுவை அமைப்பின் உறுப்பினரானார். செஞ்சிலுவை அமைப்புக்கு செவிலியர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டது. தான் படித்த பெலவ்யூ செவிலியர் பயிற்சிப் பள்ளியின் தலைவராக 1902-ல் நியமிக்கப்பட்டார். 1909-வரை அங்கு பணிபுரிந்தார். பிறகு அமெரிக்க ராணுவ செவிலி யர் அமைப்பின் கண்காணிப்பாளராக செயல்பட்டார். செவிலியர் பணியில் இவரது சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக அமெரிக்க செவிலியர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்பதவியை 3 முறை வகித்தார். செவிலியர் துறையில் சிறந்து விளங்கிய இன்னொரு நர்ஸ் இசபெல் மெக்ஐஸக்குடன் சேர்ந்து, அடிப்படை சுகாதாரம் மற்றும் நோயாளிகள் பராமரிப்பு பற்றிய புத்தகத்தை எழுதினார். அமெரிக்க தேசிய செஞ்சிலுவை செவிலியர் சேவைக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனி ஒருவராகப் பாடுபட்டு, அமெரிக்க செஞ்சிலுவை செவிலியர் அமைப்பை உருவாக்கினார். இவரது முயற்சியின் பலனாக, பேரிடர் நிவாரணம் மற் றும் அவசரகாலத் தேவைக்கான குழுக்கள் அமைக்கப் பட்டன. 8 ஆயிரத்துக்கும் அதிகமான செவிலியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. முதல் உலகப் போரில் அமெ ரிக்கா களம் இறங்கிய தருணத்தில் ராணுவத்தினருக்கு உதவ இவர்கள் அனைவரும் தயாராக இருந்தனர். போரின்போது, இவரது முயற்சியால் செஞ்சிலுவை அமைப்பில் இணைந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள், காயமடைந்த போர் வீரர்களுக்கு ஆற்றிய சேவை குறிப்பிடத்தக்கது. ஐரோப்பாவில் 1918-ல் இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அங்கு சென்று நோயாளிகளுக்கு சேவையாற்றினார். ஏற்கெனவே கடும் உழைப்பினால் சோர்ந்துபோயிருந்த இவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இறுதிமூச்சு வரை தன்னலம் கருதாமல் பிறருக்காக சேவைபுரிந்த ஜேன் டெலானோ 57 வயதில் (1919) மறைந்தார்.

மர்மக் கிரகம் என்ற வாதத்தை முதலில் முன்வைத்த அமெரிக்க கணிதவியலாளர், வானியலாளர் பெர்சிவால் இலாரன்சு உலோவெல் பிறந்த நாள் 1855). பெர்சிவால் இலாரன்சு உலோவெல் (Percival Lawrence Lowell) மார்ச் 13, 1855ல் மசாசூசட்டின் கேம்பிரிட்ஜ் நகர் ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். இவரது தந்தையார் அபாட் இலாரன்சு, தாயார் அமி உலோவெல் சகோதரர் உலோவெலின் ஆவார். இவர் அப்போதே செவ்வாயில் கால்வாய்கள் அமைந்துள்ளன எனக் கூறினார். இவர் அரிசோனாவில் உள்ள பிளாகுசுடாஃபில் உலோவெல் வான்காணகத்தை நிறுவினார் . இது இவர் இறந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு புளூட்டோவைக் கண்டறியும் முயற்சியைத் தொடங்கி வைத்தது. நிபிரு (Nibiru) என்பது நாசா நிறுவனம் அனுப்பிய கபுள் (Hubble) என்ற செயற்கைக் கோள் தொலைநோக்கியால் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கருஞ்சிவப்புக் கோள் ஆகும். இருப்பினும் இதற்கான போதிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை. நிபிரு கோளானது பிளானட் எக்சு (Planet-X) எனவும் அறியப்படுகிறது. இது பூமியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாகவும் அது 2012 இல் பூமியை நெருங்கும் எனவும் சொல்லப்பட்டது. இது ஒளியற்ற கோள் என்பதால் நம் கண்களுக்கு தெரிவதில்லை என்றும் நம்புகின்றனர். மர்மக் கிரகம் (Planet X) எனவும் அழைக்கப்படும் இது சூர்யக் குடும்பத்தில் உள்ள தேடப்படும் கிரகமாகும். இது நெப்டியூன் கிரகத்தைத் தாண்டி (புளூட்டோ தவிர்த்து) இருக்கிறது. மர்மக் கிரகம் என்ற வாதத்தை முதலில் பெர்சிவால் உலோவெல் 1846ஆம் ஆண்டு முன் வைத்தார். யுரேனஸ், நெப்டியூன் போன்ற கிரகங்கள் சில சமயங்களில் தன் ஓடுபாதையிலிருந்து சிறிது விலகி பயணிக்கிறது. இந்நிகழ்வு வேறொரு கிரகத்தின் அதிக ஈர்ப்பு விசையால் நிகழ்கிறது என்று அனுமானித்தார். இதற்கு வியாழன் அளவு நிறை இருக்கலாம். இக்கிரகம் உண்மையில் இருந்தால் கூட, இது சூரியனைச் சுற்றி வர 1000 ஆண்டுகள் ஆகலாம். அதனால் இதைத் தேடி தொலைநோக்கியைத் திருப்ப வேண்டுமென்றால் எல்லாப் பக்கத்திலும் எல்லாக் கோணங்களிலும் வைக்க வேண்டும். இந்த இடத்தில் தான் இது தற்போது கடந்திருக்கிறது என வைத்துக்கொண்டால் அக்கிரகம் மீண்டும் அந்த இடத்திற்கு வர மீண்டும் 1000 ஆண்டுகள் ஆகும். இதுதான் மர்மக் கிரகம் கண்டுபிடிக்க முடியாததற்கு காரணம். புளூட்டோவின் உலோவெல் வட்டாரம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது. உலோவெல் நவம்பர் 12, 1916ல் தனது 61 அகவையில் பிளகுசுடாஃப், அரிசோனா, ஐக்கிய அமெரிக்காவில் காலமானார்.

பழந்தமிழ் இலக்கியங்களுக்கு முறையான பதிப்புகள் வெளியிட வேண்டுமென்று ‘சாந்தி சாதனா’ அறக்கட்டளையைத் தொடங்கின மர்ரே-ராஜம் அவர்கள் நினைவு நாள் சாந்தி சாதனா. இந்தப் பெயரை பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அமரர் எஸ்.இராஜம் அவர்கள் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் நிறுவிய நிறுவனம். “வரலாற்று முறைத் தழிழ் இலக்கியப் பேரகராதி” என்ற பெயரில் அற்புதமான ஒரு அகராதியை இவர்கள் கொண்டு வந்துள்ளார்கள். வரலாற்று முறை அகராதி – Etymological Dictionary – அதாவது ஒரு சொல்லுக்கு நாம் விருப்பத்துக்கேற்பச் பொருள் காணாமல், இலக்கியத்தில் எந்தெந்த இடத்தில் அச்சொல் வருகிறது, அதற்கு அந்த இடத்தில் என்ன பொருள், அதற்குப் பழைய உரையாசிரியரின் ஆதாரம் உண்டா, காலப் போக்கில் அச் சொல்லின் பொருள் எவ்வாறு மாற்றம் அடைந்து வந்த்துள்ளது என்பவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளும் பொருட்டு விரிவான, முழுமையான, தரமான ஒர் அகராதி.மொத்தம் ஐந்து தொகுதிகள், 131 இலக்கியங்கள், 70814 வார்த்தைகள், எல்லாவற்றிருக்கும் மேலாக தழிழ் பேரறிஞர் பலருடைய 40 ஆண்டு கால கடின உழைப்பைக் கொண்டு இது வெளிவந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் சாக்கையில், கோபால அய்யங்கார் – கோமளம் தம்பதிக்கு மகனாக, 1904 ஆம் ஆண்டில் இதே நாளில் பிறந்தவர் ராஜம். கணக்குத் தணிக்கையாளரான இவர், பிரிட்டிஷாரின், ‘மர்ரே’ நிறுவனத்தில் பணிபுரிந்தார். நாடு விடுதலை அடைந்த பின் அந்த நிறுவனத்தை வாங்கி நடத்தினார். இதனால், மர்ரே ராஜம் என்று அழைக்கப்பட்டார். முதுமையில், அதை உறவினரிடம் ஒப்படைத்து விட்டு, அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அறச்செயல்களைச் செய்தார். 1940 களில் பெ.நா.அப்புசாமி, இவருக்குத் தமிழறிஞர் வையாபுரி பிள்ளையை அறிமுகப்படுத்தினார்.அவர், தமிழ் இலக்கியங்களைச் சந்தி பிரித்து வெளியிட வலியுறுத்தினார். வையாபுரி பிள்ளை, பெ.நா.அப்புசாமி, மு.சண்முகம் பிள்ளை, வி.மு.சுப்பிரமணிய அய்யர், பி.ஸ்ரீ ஆச்சார்யா, கி.வா.ஜகந் நாதன், தெ.பொ.மீனாட்சிசுந்தரம், ரா.பி.சேதுப்பிள்ளை உள்ளிட்ட தமிழறிஞர்களை ஆசிரியர் குழுவாக்கி, நுால்களை வெளியிட்டார். இதற்காக, ‘சாந்தி சாதனா’ அறக்கட்டளையையும் நிறுவினார். ‘தமிழ் கல்வெட்டுச் சொல்லகராதி, வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி, ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட நுால்களை வெளியிட்டார்.இவர், 1986 மார்ச், 13இல் தன், 82 ஆவது வயதில் காலமானார். பழந்தமிழ் இலக்கியங்களை சந்தி பிரித்து, ஓவியத்துடன் மலிவாய் வெளியிட்ட, பழம்பொருள் ஏலதாரர் மர்ரே ராஜம் மர்ரே எஸ் ராஜம் அவர்களைப் பற்றிய எழுத்தாளர் “கடுகு ” அவர்களின் கட்டுரையொன்றைப் படிக்க நேர்ந்தது.அதை அப்படியே பகிர்வதில் மகிழ்வடைகின்றேன். “கடுகு தாளிப்பு” – மர்ரே எஸ் ராஜம். ஐம்பதுகளில் தமிழ்ப் புத்தக பதிப்புலகில் ஒரு புதிய அலை வீசியது. மலிவுப் பதிப்பு புத்தகங்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளியாயின. பாரதியார் பாடல்கள், திருக்குறள் ஆகியவை இவற்றில் முதலிடம் பிடித்தன. இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம், திடீரென்று ராஜாஜியின் ‘சக்கரவர்த்தித் திருமகன்’ புத்தகத்தை ஒரு ரூபாய் விலையில் வெளியிட்டு, பதிப்பகங்களை சற்று உலுக்கி விட்டது. தொடர்ந்து ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’ புத்தகத்தையும் வெளியிட்டது. இதைப் பார்த்த மற்ற பதிப்பகங்க்கள் — பிரேமா பிரசுரம், அருணா பதிப்பகம் போன்றவை — மதனகாமராஜன் கதைகள், மகா பக்த விஜயம், சித்தர் பாடல்கள் போன்றவற்றையும், புலியூர் கேசிகன் உரையுடன் கூடிய பல சங்க இலக்கியங்களையும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் விலைக்குப் பிரசுரித்தன. இதில் முக்கியமாகக் குறிப்பட வேண்டியது மர்ரே கம்பெனி ராஜம் அவர்கள் செய்த பணி. மிகுந்த ஈடுபாட்டுடன், இலக்கியங்களை தமிழ் வல்லுனர்களைக் கொண்டு, பதம் பிரிக்கச் செய்து, தரமான அச்சில் பல புத்தகங்களை மாதாமாதம் வெளியிட ஆரம்பித்தார். இவை யாவும் அற்புதமான பதிப்புகள். ஒரு ரூபாய், இரண்டு (?) ரூபாய் விலையில் வந்த ரத்தினங்கள். வில்லி பாரதம், கம்ப ராமாயணம், தொல்காப்பியம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்று தொடர்ந்து ராஜம் வெளியிட்டார். அவை எல்லாவற்றையும் நான் சற்று சிரமப்பட்டுதான் வாங்கினேன். காரணம் சில சமயம் நான்கு, அல்லது ஐந்து புத்தகங்களை ஒரே சமயம் ராஜம் வெளிட்டு விடுவார். ஐந்து ரூபாய் என்பது சற்று அதிகமான தொகைதான்! இந்த புத்தகங்களின் மற்றொரு சிறப்பு இவைகளின் அட்டைப் படங்களை கோபுலு சிறப்பாக வரைந்து இருப்பார். அதுவும் கம்ப ராமாயண புத்தகங்களுக்கு – 9 பாகங்கள்- அவர் வரைந்த படங்களில் அழகும் தெய்வீக ஜொலிப்பும் மிளிரும்.(சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கம்பன் கழகம் தனது ஆண்டு விழாவில் கோபுலுவைக் கௌரவித்தது. அப்போது இந்த அட்டைப் படங்களை எல்லாம் டிஜிட்டல் பேனராக பெரிய அளவில் அச்சடித்து விழா ஹாலில் வைத்திருந்தார்கள். கண்கொள்ள காட்சியாக இருந்தது!) ராஜம் அவர்கள் எழுத்தாளர் தேவனின் நண்பர். (ஆகவே அவர் கோபுலுவின் நண்பரும் கூட!) தேவன் தனது நாவலில் ராஜம் அவர்களையே ஒரு கேரக்டராக்கி விட்டார், திரு. ராஜம் அவர்கள்தான், ’ராஜத்தின் மனோரத’த்தில் வரும் ஜயம் என்ற கதாபாத்திரம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஒரு விதத்தில் ராஜம் அவர்கள் மற்றொரு உ.வே.சா தான். தமிழுக்கு அவர் செய்த தொண்டு அளவிட முடியாதது. (அவருடய புகைப்படம் எங்கு தேடியும் கிடக்கவில்லை. படம் கேட்டு மர்ரே கம்பனிக்கு எழுதி உள்ளேன். கிடைத்தால் போடுகிறேன்.(இந்தப் பதிவைப் பார்த்து விட்டு புரொஃபசர் பசுபதி அவர்கள் ( கனாடா) அனுப்பிய புகைப்படத்தை இப்போது இங்கு சேர்த்துள்ளேன். புரொஃபசர் சார், நன்றி.) + + + மர்ரே ராஜம் அவர்களைப் பற்றி, பதிப்புக் குழுவிலிருந்த பேராசிரியர் அ, ச. ஞானசம்பந்தன் அவர்கள் எப்போதோ எழுதிய கட்டுரை ஒன்றை சமீபத்தில் பார்க்கக் கிடைத்தது. அதை இங்கு தருகிறேன். =============== மர்ரே எஸ் ராஜம் — பேராசிரியர் அ, ச. ஞானசம்பந்தன். பழைய சாமன்களை ஏலம் விடும் மிக பெரிய நிறுவனம் மர்ரே அண்ட் கம்பெனி ஆகும். அரசாங்கத்தார் ஏலம் விடும் எதனையும் மர்ரே கம்பெனியார் மூலமாக்வே விடுவர். அப்படிப்பட்ட மர்ரே கம்பெனி உரிமையாளர் எஸ். ராஜம் ஆவார். 1945- வாக்கில் பெரும் செல்வராகிய திரு ராஜத்திற்கு ஒரு புதிய சிந்தனை. தோன்றிற்று. பிறப்பால் வைணவ பிராமண குலத்தில் தோன்றினாலும் பிரபந்தங்களிலோ தமிழ் இலக்கியங்களிலோ அவருக்குப் பயிற்சி ஏதுமில்லை அக்கால கட்டத்தில் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்பது பரிதாபமான காகிதங்களீல் பரிதாபமாக அச்சிடப்பெற்று, ஒரு சில இடங்களில் மட்டும் பரவி இருந்தது.. ராஜம், பல் பிரதிகளை ஒப்பு நோக்கி அடக்க விலைப் பதிப்பாக வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தார். பல்கலைச் செல்வர் தெ. பொ. மீ, சா. கணேசன், நான் ஆகிய மூவரும் இப்பெரும் பணிக்குப் பதிப்பாசிரியர் குழு என்ற பெயரில் இடம் பெற்றிருந்தோம். நீண்ட காலம் திரு. வையாபுரிப் பிள்ளை அவர்களிடம் இருந்து ஏடு பார்ப்பதிலும், பிரதிகளை ஒப்பு நோக்குதலிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த திரு. மு. சண்முகம் பிள்ளை பதிப்புப் பணிகளை முழு நேர பணியாக ஏற்றார். 1955-இல் திருவாய்மொழி முதலாயிரம் டெம்மி அளவில் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் அடக்கவிலைப் பதிப்பாக வெளிவந்தது. இந்தப் பதிப்பு வெளிவந்தவுடன் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி கோவிலில் இதனை வெளியிட முடிவு செய்தார். சி.பி. ராமசாமி ஐயர் அவர்களைக் கொண்டு இத்தனை வெளியிடுவது என்று முடிவு செய்தார். அவரிடம் சென்று கேட்டவுடன் ”எனக்கு என்ன தெரியும் பிரபந்தத்தில்? யாரையாவது தீவிர வைணவரைக் கொண்டு இதனை வெளியிடு” என்றார். ராஜம் விடுவதாக இல்லை.கடைசியாக சி.பி. அவர்கள், வந்து வெளியிடுவதாக ஒப்புக் கொண்டார். சி.பி. அவர்கள் பஞ்சக் கச்சம் வேட்டி கட்டி, ஒரு சட்டைஅணிந்து, மிகுந்த ஈடுபாட்டுடன் வந்து வெளியீட்டு உரையாக அற்புதமான ஒரு உரையை நிகழ்த்தினார்.. பல்கலைச் செல்வர் தெ. பொ.மீ அவர்களும், நானும், எஸ். ராஜம் அவர்களும் வியப்பின் எல்லைக்கே சென்று விட, அவ்வளவு அற்புதமாகச் சி.பி. அவர்கள் தமிழில் பேசியது அதைவிடப் புதுமை. இதன் பிறகு ராஜத்திற்கு சங்க இலக்கியங்கள். தொல்காப்பியம், கம்ப ராமாயணம், வில்லி பாரதம் ஆகிய அனைத்தையும் இதே முறையில் கொண்டு வரவேண்டும் என்ற விருப்பம் மிகுந்தது.. இப்பதிப்புகளுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அன்று வரை எந்த பழைய பாடலை எடுத்துப் படித்தாலும் சொற்களைப் பதம் பிரிக்காமல் சீர் ஒன்றின் அடிப்படையிலேயே அவை அச்சிடப் பெற்றிருக்கும். புதிதாகப் படிப்பவர்கள் படித்தால் ஒரு வரி கூட விளங்காது.. அந்த நிலையைப் போக்க வேண்டும் என்று நினைத்தார் ராஜம். எல்லாப் பாடல்களையும் சீர் பற்றிக் கவலைப் படாமல், தனித் தனிச் சொற்களாகப் பிரித்து, தாமே அச்சிட வேண்டுமென்று விரும்பினார், இந்த முறையில் முதலாயிரம் வெளிவந்தவுடன் பயங்கரமான எதிப்புகள் தோன்றின. ‘தமிழின் அருமை தெரியாதவர்கள், இப்படி அக்கு வேறு ஆணி வேறாகப் பாடலைப் பிய்த்து வெளியிடுவது தமிழுக்கு செய்யும், துரோகம்’ என்று. தமிழ் புலவர்கள் என்று சொல்லிக் கொள்வோர் பலர் ராஜத்திற்குக் கடிதம் எழுதினர். தமிழுக்குச் செய்யும் இக்கொடுமையில் தமிழ் கற்ற தெ.போ.மீ.யும் இடம் பெறுவது மேலும் கொடுமையானது என்றெல்லாம் கடிதம் வந்தன. வேறு ஒருவராக இருப்பின். ‘நமக்கு ஏன் இந்த வம்பு’ என்று சொல்லி, இந்தப் பணியையே உதறி விட்டிருப்பர். எதிர்ப்பு மிக மிக ராஜம் அவர்களின் உறுதியும் வலுப் பெற்றது. சங்க இலக்கியங்கலோடு நிறுத்திக் கொள்ளலாம் என்றிருந்த அவர்,தமிழ் இலக்கியம் முழுவதையும் இந்த முறையில் கொண்டுவர வேண்டும் என்று நினைத்து பத்து பதினைந்து புலவர்களை இதற்கென நியமித்தார், 12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய பெரிய புராணம் வரை இப்படிச் சொல் பிரித்து எழுதும் பணி தொடர்ந்தது. இதை விடச் சிறப்பு ஒன்று உண்டு,. சங்க இலக்கியங்களுக்கும் இராமாயணம், பாரதம் ஆகியவற்றிற்கும் அட்டைகளில் ஓவியம் இருக்கவேண்டும் என்று நினைத்தார். தலை சிறந்த ஓவியராக விளங்கும் கோபுலு அவர்களை இதற்கென ஏற்பாடு செய்தார். புறநானூறு போன்ற தொகுப்பு நூல்களுள் ஏதாவது ஒரு சிறந்த பாடலை அடிப்படையாக வைத்து ஓவியம் வரையப் பெற்ற கோட்டு வரைபடம் என்ற முறையில் கோபுலு அவர்கள் வியக்கத் தகுந்த ஓவியங்களை வரைந்து கொடுத்தார். சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போக சிலப்பதிகாரம், இராமாயாணம், மகாபாரதம், திருவாசகம் என்பவை வெளிவந்தன. அக்காலத்தில் பல இலட்ச ரூபாய்களை எவ்வித கைம்மாறும் கருதாது செலவழித்து இந்த மாபெரும் தொண்டை செய்தவர் ராஜம் ஆவார். அவர் நல்ல நேரத்தில் துவங்கியதால் போலும் இன்று வருகிற பதிப்புகள் எல்லாம் சொல் பிரித்து அச்சிடப் பெறுகின்றன. துரதிஷ்டவசமாக அவர் காலம்சென்ற பிறகு எஞ்சியுள்ள நூல்கள் சொல் பிரித்து எழுதப்பட்டிருப்பினும் அவற்றை வாங்கி வெளியிடுவார் இல்லாமல் போகவே, புதுவையில் உள்ள இண்டாலஜி நிறுவனத்தார் அச்சிடாத நூல்களையெல்லாம் எடுத்துச் சென்று விட்டனர். ஐம்பதுகளில் தமிழ் இலக்கியங்களை புதிய முறையில் சொல் பிரித்து அச்சிட்டு அடக்க விலைக்குத் தந்து தமிழ் மொழிக்குப் பெரும்பணி செய்த இவரை மாமனிதர் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!