உலக சிறுநீரக தினம் இன்று. ஆண்டு தோறும் மார்ச் இரண்டாம் வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது. சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கிய பணியைச் செய்கின்றன உடலின் கழிவுத் தொழிற்சாலை என்று அழைக்கப்படுகிற சிறுநீரகங்கள், நம் வயிற்றின் பின்பக்கம், கீழ் முதுகுப் பகுதியில், முதுகுத்தண்டின் இருபுறமும், அவரை விதை வடிவத்தில் அமைந்துள்ளன. சிறுநீரகம் ஒவ்வொன்றும் சுமார் 10 செ.மீ. நீளமும், 5 செ.மீ. அகலமும், 150 கிராம் எடையும் உடையது. ஒவ்வொன்றிலும் பத்து லட்சம் நெப்ரான்கள் (Nephrons) உள்ளன. நெப்ரான்கள் என்பவை ரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுகின்ற நுண்ணிய முடிச்சுகள். அதாவது, சிறுநீரகத்தின் உயிர்மூச்சுகள்! வீட்டுக்குக் கழிவறை எப்படி அவசியமோ அதுமாதிரி நம் உடலுக்கு சிறுநீரகம் அவசியம். சிறுநீரகங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 190 – 200 லிட்டர் ரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன. இதில், கிட்டத்தட்ட 1.8 லிட்டர் சிறுநீராக வெளியேறுகிறது. மீதம் உள்ளவை மீண்டும் உடலுக்குள் செலுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இப்படிப் பிரிக்கப்படும் சிறுநீரானது சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்படுகிறது.சிறுநீரகத்தை பாதுகாப்பதற்கு தினமும் 8-10 கோப்பை தூய நீர் அருந்த வேண்டும். இதுவே வெயிலில் நின்று பணியாற்றும் போது குடிநீரை அதிகமாக பருக வேண்டும். கொதித்த நீர், வடிகட்டிய நீர் போன்றவற்றை பயன்படுத்துவது நன்மை பயக்கும். இயற்கையான பானங்களும் பருகுவதற்கு ஏற்றவை. ரீஃபைண்டு கார்போஹைட்ரேட் எனப்படும் மைதா, சர்க்கரை, போன்றவையும் சிறுநீரகத்தைப் பாதிக்கும். இவற்றின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
மகாத்மா காந்தி வெள்ளையரின் உப்பு சட்டத்தை முறியடிக்கும் நோக்கோடு தண்டி யாத்திரையை துவக்கிய நாள் உப்பு சத்தியாகிரகம் அல்லது தண்டி யாத்திரை (Salt March) என்பதுகாலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும். மார்ச்சு 12, 1930 இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது. 1930 ஜனவரி 30 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்த முழு விடுதலை என்ற விடுதலைப் பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாகச் செய்யப்பட்ட முதல் நடவடிக்கையாகும். காந்தி தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து 23 நாள்கள் 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு நடை பயணத்தை வழி நடத்தினார், உப்பை உற்பத்தி செய்வதற்கு விதித்த தடையை மீறி வழியில் அவருடன் இந்தியர்கள் பெருமளவு எண்ணிக்கையுடன் இணைந்தனர்’ காந்தியின் தொலைநோக்குப் பார்வை எப்போதும் இந்தியாவின் சமூக வரலாற்றை உயிர்ப்பித்து, அதற்கு நிகழ் காலத்தில் செயல் வடிவம் கொடுப்பதாக இருந்தது.அவருடைய தண்டி யாத்திரையும் அத்தகையதுதான்.
கோகா கோலா முதன் முதலாக பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட நாள் மார்ச் 12. சிறப்பு என்னவென்றால், அதை முதலில் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்தது கோக் நிறுவனமல்ல என்பதுதான்! 1886இலேயே கோகா கோலா பானம் உருவாகிவிட்டாலும், அக்காலத்தில், சோடா ஃபவுண்டன் என்றழைக்கப்படும் (தற்போதைய மால்களிலும், திரையரங்குகளிலும் சோடா பானங்களை, பாட்டில் இல்லாமல் நேரடியாக வழங்கும்) அமைப்பு மூலமே விற்பனை செய்து வந்தனர். மிசிசிப்பியில் மிட்டாய்க்கடை வைத்திருந்த ஜோசஃப் பைடன்ஹான் என்பவர், அவரது கடையில் சோடா ஃபவுண்டன் அமைத்து கோக் விற்பனை செய்தார். மக்களிடம் மிக அதிக வரவேற்பு இருந்ததைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய அவர், கடைக்கு வெளியிலும், அதாவது நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விற்பனை செய்தால் விற்பனை அதிகமாகும் என்று கருதினார். அதனால், அவரே ஒரு புட்டியில் நிரப்பும் எந்திரத்தை வாங்கி, நிரப்பி விற்பனை செய்தார். இதற்குக் கிடைத்த வரவேற்பே கோகா கோலாவைப் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யக் காரணமாக அமைந்தது. பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யத் தொடங்கியதாலேயே, 1886இல் ஒரு நாளைக்கு 9 கிளாஸ் மட்டுமே விற்பனையான கோக், தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 190 கோடி கிளாஸ் விற்பனையாகிறது. ஒரு சாதாரண புட்டியில் அவர் தொடங்கினாலும், கோக் போன்ற தோற்றத்தில் போட்டி பானங்கள் வந்ததால், 1915இல் தனிப்பட்ட புட்டியை கோகோ பழத்தின் தோற்றத்தையொட்டி வடிவமைத்து, 1916இல் அதற்குக் காப்புரிமையும் பெற்றது கோக். இந்தக் காப்புரிமை 1923, 1937, 1951 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டபின் மேலும் புதுப்பிக்க வாய்ப்பில்லாத நிலையில், அந்தப் பாட்டிலின் வடிவத்தை கோக்-கின் வணிகச்சின்னமாக (ட்ரேட் மார்க்) அங்கீகரிக்க வேண்டும் என்ற கோக்-கின் விண்ணப்பம் 1961இல் ஏற்கப்பட்டது. நூறாண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாத இந்தப் புட்டி கடந்த இருநூறாண்டுகளின் மிகச்சிறந்த வணிகச்சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் தலைகராக கான்பெரா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, நகரின் கட்டுமானப் பணிகள் தொடங்கின நாள் மார்ச் 12. ஆங்கிலேயர்கள் 1788இல் ஆஸ்திரேலியாவில் வந்திறங்கிய இடம் சிட்னி. 1800களின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவிலிருந்த ஆறு குடியேற்றங்களும் தன்னாட்சிப் பெற்றன. இவை (இங்கிலாந்து ஆளுகைக்குட்பட்ட) ஒரு பொதுநலவாய(காமன்வெல்த்) கூட்டமைப்பாகி ஆஸ்திரேலியா நாடு உருவானது. நியூ சவுத் வேல்சுக்குள்ளிருந்த சிட்னியே 1840வரை மிகப்பெரிய நகரமாகவும், அந்தக் குடியேற்றத்தின் நிர்வாக மையமாகவும் இருந்தது. 1850களில் தங்கம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, விக்டோரியாவிலிருந்த மெல்போர்ன் சிட்னியைவிட மிகப்பெரிய நகரமாக வளர்ந்தது. அதனால், கூட்டமைப்பின் தலைநகராக சிட்னியை விக்டோரியாவினர் ஏற்கவில்லை. இறுதியில், நியூ சவுத் வேல்ஸ் குடியிருப்பின் எதிர்பார்ப்புக்கிணங்க அவர்களது எல்லைக்குள்ளும், விக்டோரியா குடியிருப்பினருக்கு மனநிறைவளிப்பதற்காக சிட்னியிலிருந்து 100 மைல்களுக்குக் குறையாத தொலைவிலும் தலைநகரை அமைப்பது என்று முடிவுக்கு வந்தனர். பொதுவான இடத்துக்கான தேடலில், இரு குடியேற்றங்களின் எல்லையிலமைந்திருந்த ஆல்புரி-யைத் தேர்ந்தெடுப்பதற்கான 1898 வாக்கெடுப்பில் ஆல்புரி பெரும்பான்மை பெற்றாலும், நியு சவுத் வேல்ஸ் மக்கள் வாக்களிக்காததால் வெற்றிபெறவில்லை. வேறுபல இடங்கள் பரிசீலிக்கப்பட்டாலும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. ஒருவழியாக டால்கெட்டி என்று 1904இல் முடிவுக்குவந்து, அரசுத் தலைமையிடத்துக்கான சட்டத்தையும் பாராளுமன்றம் இயற்றிவிட்டாலும், அங்கு தேவையான அளவு இடத்தைத்தர நியூ சவுத் வேல்ஸ் மறுத்துவிட்டது. இறுதியாக டால்கெட்டியைவிட சிட்னிக்கு அருகாமையிலிருந்த யாஸ்-கான்பெரா பகுதியைத்தர ஒப்புக்கொண்டது. 11 இடங்கள் குறிப்பிடப்பட்டு 1908இல் நடந்த வாக்கெடுப்பில், முதல் 7 சுற்றுகளில் டால்கெட்டியே முன்னணிவகித்தாலும், கடைசி இரு சுற்றுகளில் கான்பெரா வெற்றிபெற்றுவிட்டது. இதைத் தொடர்ந்து நகரத்தின் கட்டுமானத்திற்கான திட்டத்திற்கு நடத்தப்பட்ட போட்டிக்கு 15 நாடுகளிலிருந்து 137 திட்டங்கள் வந்தன. அமெரிக்காவின் சிக்காகோவைச் சேர்ந்த கட்டிடக்கலை வல்லுனர் வால்ட்டர் க்ரிஃபின் சமர்ப்பித்த திட்டம் வெற்றிபெற்றது. 21 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பே மக்கள் வசித்த பகுதி கான்பெரா. கான்பெரா என்றால் கூடுமிடம் என்று ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் மொழியில் பொருள்!
சாகித்ய அகாடமி விருது உருவாக்கப்பட்ட தினம் சிறந்த இலக்கிய படைப்புகளுக்காக வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருது இந்திய அரசினால் மார்ச் 12, 1954ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ்விருதுக்கான பரிசுத்தொகை ரூபாய் ஒரு லட்சமும், பட்டயமும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் 24 மொழிகளில் நாவல், சிறுகதை உள்ளிட்ட சிறந்த இலக்கிய படைப்புகளை உருவாக்கும் எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும், ஊக்குவிக்கவும் இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையை நிர்மூலமாக்கும் வகையில் பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்ட நாள் மார்ச் 12. இதில் 257 பேர் உயிரிழந்தனர். 713 பேர் படுகாயமடைந்தனர். மதியம் 1.33 மணியில் இருந்து 3.40 மணிவரை அடுத்தடுத்து இந்த குண்டு வெடிப்புகள் நடந்து மும்பையை அதிர வைத்தது. மும்பை ஸ்டாக் எக்சேஞ்ச், கதா பஜார், சேனாபவன், செஞ்சுரி பஜார், மாகிம், ஏர் இந்தியா கட்டிடம், ஜவேரி பஜார், ஓட்டல் சீராக், பிளாசா தியேட்டர், ஜாகு ஓட்டல், விமான நிலையம், விமான நிலைய ஓட்டல் ஆகிய இடங்கள் தாக்குதலுக்கு ஆளானது. இந்த தாக்குதலில் தான் முதல் முறையாக சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ் வகை வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டன.. இந்த பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் தாவூத் இப்ராஹிம் மற்றும் டைகர் மேமன் உள்ளிட்டோர் இந்தியாவை விட்டு தப்பி ஓடி பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கின்றனர்.
உலக கண் அழுத்த நோய் தினமின்றுWorld Glaucoma Day கிளாகோமா என்றால் என்ன? கண்ணின் நீர் அழுத்தம் அதிகமாவதால், அது பார்வை நரம்பை (optic nerve) கொஞ்சம் கொஞ்சமாகப் பாதித்துக் கண் பார்வை இழப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் எந்தவித முன் அறிகுறிகள் தென்படாமல் நம் பார்வை முழுவதையும் ரகசியமாகத் திருடிவிடும் கண்ணின் நீர் அழுத்த நோயே கிளாகோமா என்று அழைக்கப்படுகிறது. கொஞ்சம் விரிவாக சொல்வதானால் கண் நீர்அழுத்த நோய்க்கு ‘ஓசையின்றிப் பார்வையைத் திருடும் நோய்’என்று ஒரு பெயரும் இருக்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட வேண்டும். பொதுவாகவே 30 வயதைக் கடந்தவர்கள் வருடத்துக்கு ஒருமுறை கண்களைப் பரிசோதித்துக்கொண்டால் இந்த நோய் இருப்பது தெரிந்துவிடும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி யாருக்காவது கண் நீர்அழுத்த நோய் இருந்தால், குடும்பத்தில் உள்ள அனைவரும் 30 வயதுக்கு மேல் வருடத்துக்கு இரண்டு முறை கண் நீர்அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். இந்த நோயின் தொடக்கத்தில் எந்தவொரு அறிகுறியும் வெளியில் தெரியாது. திடீரெனக் கண்பார்வை குறைவது, இதன் முதல் அறிகுறி. இந்த நிலைமையில் டாக்டரிடம் வரும்போது, நோயாளிக்குப் பார்வை நரம்பில் 30 முதல் 50 சதவீதம்வரை பாதிப்பு ஏற்பட்டுவிடும். இந்தப் பாதிப்பைச் சரிசெய்ய முடியாது. இதைத் தொடர்ந்து, இன்னும் சில அறிகுறிகள் ஏற்படும். எரியும் மின்விளக்கைப் பார்க்கும்போது, அதைச் சுற்றி வட்டவட்டமாக வண்ண வளையங்கள் அல்லது புள்ளிகள் தெரியும். இவர்கள் அடிக்கடிக் கண்ணாடியின் ‘பவரை’ மாற்றுவார்கள். தியேட்டர்களில் சினிமா பார்த்துவிட்டு இருட்டிலிருந்து வெளியே வரும்போது கண்களைச் சுற்றிக் கனமாகத் தெரியும். இரவில் பார்வை மங்கலாக இருக்கும். இருட்டுக்குக் கண்கள் பழகத் தாமதமாகும். பகலில் ஒரு பொருளைப் பார்த்தால், அந்தப் பொருளின் நடுப்பகுதி நன்றாகத் தெரியும். ஆனால், பக்கப்பார்வை இருக்காது. நடுப்பார்வை நன்றாகத் தெரிவதால், தங்களுக்கு உள்ள நோயை முன்கூட்டியே உணர்ந்துகொள்ள இவர்கள் தவறிவிடுகின்றனர். ஆனால், நாளாக ஆக நடுப்பகுதிப் பார்வையும் குறைந்துவிடும். கண்ணைச் சுற்றி ஒரு மந்தமான வலி, எப்போதும் இருக்கும். இரண்டாம் வகை கண் நீர்அழுத்த நோய் உள்ளவர்களுக்குத் திடீரென்று கடுமையான கண்வலியும் தலைவலியும் ஒரே நேரத்தில் உண்டாகும். வாந்தி வரும். கண்கள் சிவந்துபோகும். கண்களில் நீர் வழியும். பார்வை மங்கும். கண்கள் கூசும். விளக்கைச் சுற்றி வளையங்கள் தெரியும். மூன்றாவது வகை பிறவியிலேயே குழந்தைகளுக்கு ஏற்படுவது. இதுதான் கொடூரமானது. குழந்தையின் கண் மாட்டுக்கண் போல, பெரிதாக இருக்கும். கண்களில் நீர் வடிந்துகொண்டே இருக்கும். வெளிச்சத்தைப் பார்க்க முடியாத அளவுக்குக் கண்கள் கூசும். பார்வை குறைந்திருக்கும். இந்த நோய்க்கு மருந்து சிகிச்சை, லேசர் சிகிச்சை, அறுவை சிகிச்சை என மூன்றுவித சிகிச்சைகள் இருக்கின்றன. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவத்தே இத்தினத்தின் நோக்கம்!
‘ட்ரூமேன் கோட்பாடு’ என்று குறிப்பிடப்படும், அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டை, குடியரசுத்தலைவர் ஹாரி ட்ரூமேன் அறிவித்த நாள் சோவியத்துடனான பனிப்போர்க் காலத்தில், சோவியத்துக்கான அரசியல் ஆதரவைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டது. புரியும்படிச் சொன்னால், சோவியத்தின் பொதுவுடைமை அரசின் செயல்பாடுகளால், அல்லது சோவியத் ஒன்றியம் செய்யும் உதவிகள் முதலானவற்றால் ஈர்க்கப்பட்டு, சோவியத் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய வாய்ப்பிருக்கிற நாடுகளுக்கு, கூடுதல் உதவிகளை அளித்து, சோவியத்துக்கு ஆதரவாக மாறிவிடாமல் தடுப்பதே நோக்கம்! நேச நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஜெர்மெனியை நிர்வகிப்பதில் முரண்பாடுகள் ஏற்பட்டு, தங்கள் பகுதியை கிழக்கு ஜெர்மெனியாக சோவியத் மாற்றியதைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப்போரில் ஃபாசிசத்துக்கெதிரான (அமெரிக்காவின்) கூட்டணி நாடு என்ற நிலையிலிருந்த சோவியத் ஒன்றியத்தின்மீதான பார்வை மாறி, ஜார்ஜ் கென்னன் அனுப்பிய நீளத் தந்தியைத் தொடர்ந்து, எச்சரிக்கையுடன் அணுகவேண்டிய (எதிரி!) நாடாகியிருந்தது. ஏஜியான் கடல், மத்தியதரைக் கடல் ஆகியவற்றை கருங்கடலுடன் இணைக்கும் துருக்கிய(சானக்கேல், இஸ்த்தான்புல்) நீரிணைகளில், அப்பகுதியைச் சாராத நாடுகளின் கடற்படைக் கலங்களை அனுமதிப்பதில்லை என்பதை, அப்பகுதிக்கு அருகிலிருந்த சோவியத் ஒன்றியம் எதிர்த்தது. கிரீசில் ஆட்சிக்கெதிராக கம்யூனிஸ்ட் கட்சி போராடிக்கொண்டிருந்தது. ஸ்டாலின்-சர்ச்சில் இடையே (ரகசியமாக) ஏற்பட்டிருந்த ‘சதவீத ஒப்பந்தத்தால்’ கிரேக்கக் கம்யூனிஸட்டுகளுக்கு சோவியத் உதவவில்லை என்றாலும், அப்போதுதான் போதுவுடைமை நாடாகியிருந்த யூகோஸ்லாவியா உதவியது. இந்தப் பின்னணியில்தான், சோவியத்தின் பலம் அதிகரித்து, பொதுவுடைமை பிற நாடுகளுக்கும் பரவலாம் என்ற அச்சத்தில் ட்ரூமேன் இக்கோட்பாட்டை அறிவித்தார். துருக்கிக்கும், கிரீசுக்கும் உதவிக்கொண்டிருந்த இங்கிலாந்து, தங்கள் நாட்டில் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளால் உதவிகளை நிறுத்திக்கொண்டது. சோவியத்தின் ஆதிக்கத்தைத் தடுக்க, துருக்கிக்கு ராணுவ உதவியுடன் 10 கோடி டாலர்கள் பொருளாதார உதவியும் அளித்தது அமெரிக்கா. கம்யூனிஸ்ட்டுகளின் கட்டுப்பாட்டில் கிரீஸ் சென்றுவிட்டால், துருக்கி நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாது, அது அப்பகுதி முழுவதிலும் கம்யூனிசத்தை வளரச்செய்துவிடும் என்று அமெரிக்க நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ட்ரூமேன் ஆற்றிய உரையைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு மேலும் 40 கோடி டாலர்கள் பொருளாதார, ராணுவ உதவிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. பொதுவுடைமையின்பால் திரும்பிவிடாமல், நிதி முதலான உதவிகள்மூலம், நாடுகளைத் தடுப்பது அமெரிக்காவின் வழக்கமாகவே மாறியது.
“ஆளுமை வளர்ச்சி ஆசான்” என புகழ் பெற்ற ஏர்ல் நைட்டிங்கேல் பிறந்த தினம். இவர் 1921ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார்.பேர்ல் ஹார்பர் (Pearl Harbor) போர் முடிந்த பிறகு வானொலியில் வேலை பார்க்கத் தொடங்கினார். 1949-ல் நெப்போலியன் ஹில் எழுதிய திங்க் அன்ட் க்ரோ ரிச் புத்தகத்தைப் படிக்க நேர்ந்து, அதனால் கவரப்பட்டார். 1956-ல் தி ஸ்ட்ரேஞ்ஜஸ்ட் சீக்ரட் என்ற ஒரு ஒலித்தட்டை உருவாக்கினார். ‘திங்க் அன்ட் க்ரோ ரிச்: தி எசன்ஸ் ஆஃப் இம்மார்ட்டல் புக் பை நெப்போலியன் ஹில், நேரேட்டட் பை ஏர்ல் நைட்டிங்கேல்’ என்ற தலைப்பில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட இது முதல் முதலாக கோல்ட் ரெகார்ட் தரத்தை அடைந்தது. 1960-ல் லியோட் கனன்ட் என்பவருடன் இணைந்து நைட்டிங்கேல் கனன்ட் (Nightingale-Conant) கார்ப்பரேஷனை நிறுவினார். 1976-ல் டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பு இவருக்கு கோல்டன் கேவல் விருது வழங்கியது. 1980ஆம் வருட மத்தியில் ஏர்ல் நைட்டிங்கேல்ஸ் கிரேட்டஸ்ட் டிஸ்கவரி என்ற தனது முதல் புத்தகத்தை எழுதினார். இதற்கு இவருக்கு இலக்கிய சேவைக்கான நெப்போலியன் ஹில் கோல்டு மெடல் வழங்கப்பட்டது. ஏராளமான மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்த சாதனையாளரான இவர், 1989-ல் தனது 68-வது வயதில் மறைந்தார்.
படிகங்களின் அமைப்பு மற்றும் எக்ஸ் கதிர் நிறமாலையைமானி கண்டுபிடித்தத, இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற சர் வில்லியம் ஹென்றி பிராக் நினைவு தினம் பிராக் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞான விரிவுரையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். 1935 இலிருந்து ராயல் சொசைட்டி தலைவராக இருந்தார். இயற்பியல் நோபல் பரிசு (1915), பர்னார்டு பதக்கம் (1915), மேட்டூசி மெடல் (1915), ரம்ஃபோர்ட் பதக்கம் (1916), கோப்ளி மெடல் (1930), ஃபாரடே மெடல் (1936), ஜான் ஜே. கார்டி விருது (1939) போன்ற விருதுகளை பெற்றுள்ளார். சர் வில்லியம் ஹென்றி பிராக் தனது 79 வது வயதில் லண்டன், இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 12 அன்று, உலகம் முழுவதும் உள்ள மக்கள் உலக சைபர் தணிக்கை எதிர்ப்பு தினத்தைக் கடைப்பிடிக்கின்றனர். 2008 ஆம் ஆண்டு அரசு சாரா அமைப்பான (NGO) எல்லைகளற்ற நிருபர்கள் (RSF) நிறுவனத்தால் நிறுவப்பட்ட இந்த நாள், கட்டுப்பாடற்ற ஒற்றை இணையத்திற்கு ஆதரவாக மக்களை ஒன்றிணைக்க முயல்கிறது. கூடுதலாக, அனைவரும் இணையத்தை அணுக முடியும் என்பதை இந்த அமைப்பு உறுதி செய்ய விரும்புகிறது.