இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 07)

தத்துவ மேதை அரிஸ்டாட்டில் நினைவு தினம் இன்று(கி.மு.322) அரிஸ்டாட்டில் கி.மு.384இல் பிறந்தார். இவர் பண்டைய உலகின் தத்துவஞானி, விஞ்ஞானி மற்றும் பல்துறை வல்லுநர் ஆவார். இவர் 170 புத்தகங்களுக்குமேல் எழுதிக் குவித்த ஒரு சிறந்த எழுத்தாளர். அரிஸ்டாட்டில் என்றால் சிறந்த நோக்கம் என்று பொருள். அவருடைய நூல்கள் அவர் காலத்தில் அறிவியல் செய்திகள் அடங்கிய கலைக்களஞ்சியமாகத் திகழ்ந்தன. வானவியல், விலங்கியல், கருவியல், புவியியல், இயற்பியல், உடலியல் ஆகியவை குறித்தும், பண்டைய கிரேக்கர்கள் அறிந்திருந்த அறிவுத்துறைகள் அனைத்தையும் பற்றி இவர் எழுதியிருந்தார்.அத்துடன் கவிதை, நாடகம், இசை, தர்க்கம், சொல்லாட்சி, மொழியியல், அரசியல்,ஒழுக்கவியல் ஆகியவையும் இவரின் எழுத்துகளில் இடம் பெற்றிருந்தன. பூமி உருண்டை வடிவமானது என்பதை தனது ஆய்வின் மூலம் கூறியவர் அரிஸ்டாட்டில். விலங்கியல் அறிவியலைப் பொருத்தவரை துல்லியமாக இருப்பதை 19 ஆம் நூற்றாண்டில் சில அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் நவீன முறைப்படி 19 ஆம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டன.மாவீரன் அலெக்சாண்டர் அவர்கள் அரிஸ்டாட்டிலின் மாணவராவார்.அரிஸ்டாட்டில் ஏதென்ஸ் நகரில் உலாப் பள்ளியை நிறுவினார். “நம்முடைய நற்பண்புகளுக்கும், நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும்”__ அரிஸ்டாட்டில்

ஜெர்மானிய வானியலாளரும் வழக்குரைஞரும், வரைபடவியலாளரும் ஜோஹன் பாயர் (Johann Bayer) மறைந்த தினம் -இன்று.1625 இதே மார்ச் .7 ஜெர்மானிய வானியலாளரும் வழக்குரைஞரும், வரைபடவியலாளரும் ஜோஹன் பாயர் (Johann Bayer) மறைந்த தினம் -இன்று.1625 இவர் 1572இல் செருமனியில் உள்ள ரைன் நகரில் பிறந்தார். தனது இருபதாவது வயதில் 1592 இல் இங்கோல்ஸ்டாடிட் பல்கலைகழகத்தில் தத்துவம் மற்றும் சட்டம் படித்தார். பின்னர் ஆக்ஸ்பர்க் நகருக்கு குடிபெயர்ந்தார். 1612 இல் நகராண்மைக் கழக வழக்குரைஞராக ஆனார். தொழில்முறையில் வழக்குரைஞரான பாயர் தொல்லியல் அகழ்வாய்வு, கணிதம், வானியல் போன்ற பல துறையிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார். ஆயினும் இவரது வானவியல் ஆய்வால் குறிப்பாக விண்மீன் குழுவின் நிலைகளை ஆய்வு செய்ததால் தான் பெரிதும் அறியப்படுகிறார். இறுதி வரை திருமணமே செய்யாது வாழ்ந்த பாயர் 1625 இல் இறந்தார். இவர் 1603இல் முன்-தொலைநோக்கிக் கால வானியல் அட்டவணையை வெளியிட்டார். அதில் இவர் டைக்கோ பிராகி 1602இல் வெளியிட்ட அட்டவணையில் உள்ளதைவிட கூடுதலாக 1000 விண்மீன்களையும் 12 விண்மீன்குழுக்களையும் சேர்த்தார். இவர்தான் விண்மீன்களைக் கிரேக்க எழுத்துப் பெயரிட்டு அழைக்கும் முறையை உருவாக்கினார். உயர்பொலிவுள்ள விண்மீன்களை ஆல்ஃபா எனவும் அடுத்த தரநிலைப் பொலிவுள்ள விண்மீன்களை பீட்டா எனவும் இவரிட்ட பெயரீடு இன்றளவும் வழக்கில் உள்ளது. இதன்படி அக்குவிலா விண்மீன்குழுவில் உள்ள உயர்பொலிவுள்ள விண்மீன் ஆல்ஃப் அக்குவிலா என்று அழைக்கப்படுகிறது. நிலவின் குழிப்பள்ளம் ஒன்று பாயார்க் குழிப்பள்ளம் என இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. இவர் 1572இல் செருமனியில் உள்ள ரைன் நகரில் பிறந்தார். தனது இருபதாவது வயதில் 1592 இல் இங்கோல்ஸ்டாடிட் பல்கலைகழகத்தில் தத்துவம் மற்றும் சட்டம் படித்தார். பின்னர் ஆக்ஸ்பர்க் நகருக்கு குடிபெயர்ந்தார். 1612 இல் நகராண்மைக் கழக வழக்குரைஞராக ஆனார். தொழில்முறையில் வழக்குரைஞரான பாயர் தொல்லியல் அகழ்வாய்வு, கணிதம், வானியல் போன்ற பல துறையிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார். ஆயினும் இவரது வானவியல் ஆய்வால் குறிப்பாக விண்மீன் குழுவின் நிலைகளை ஆய்வு செய்ததால் தான் பெரிதும் அறியப்படுகிறார். இறுதி வரை திருமணமே செய்யாது வாழ்ந்த பாயர் 1625 இல் இறந்தார். இவர் 1603இல் முன்-தொலைநோக்கிக் கால வானியல் அட்டவணையை வெளியிட்டார். அதில் இவர் டைக்கோ பிராகி 1602இல் வெளியிட்ட அட்டவணையில் உள்ளதைவிட கூடுதலாக 1000 விண்மீன்களையும் 12 விண்மீன்குழுக்களையும் சேர்த்தார். இவர்தான் விண்மீன்களைக் கிரேக்க எழுத்துப் பெயரிட்டு அழைக்கும் முறையை உருவாக்கினார். உயர்பொலிவுள்ள விண்மீன்களை ஆல்ஃபா எனவும் அடுத்த தரநிலைப் பொலிவுள்ள விண்மீன்களை பீட்டா எனவும் இவரிட்ட பெயரீடு இன்றளவும் வழக்கில் உள்ளது. இதன்படி அக்குவிலா விண்மீன்குழுவில் உள்ள உயர்பொலிவுள்ள விண்மீன் ஆல்ஃப் அக்குவிலா என்று அழைக்கப்படுகிறது. நிலவின் குழிப்பள்ளம் ஒன்று பாயார்க் குழிப்பள்ளம் என இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

தஞ்சாவூரில் புகழ்பெற்ற சரஸ்வதி மஹால் நூலகத்தை கட்டிய இரண்டாம் சரபோஜி மன்னர் காலமான தினமின்று! மராத்திய பாரம்பரியத்தில் வந்த சரபோஜி மன்னர் கல்வியிலும், மிகுந்த ஆர்வமுடையாவராக இருந்தார். பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், இலத்தீன், வடமொழி தெலுங்கு, தமிழ் முதலிய மொழிகளில் தேர்ச்சியுடையவரானார். 1805 ஆம் ஆண்டில் தேவநாகரி எழுத்தில் இயங்கவல்ல ஓர் அச்சகத்தைத் தஞ்சையில் முதலில் ஏற்படுத்தினார். பிறகு, ஆங்கில அச்சகத்தை நிறுவினார். நெப்போலியனை ஆங்கிலேயர்கள் வென்றதன் நினைவாக சாளுவநாயகப்பட்டினத்தில் மனோரதம் என்ற அழகிய கோபுரத்தை அமைத்தார். தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு பல அணிகலன்களையும், வெள்ளிப் பாத்திரங்களையும் தானமாக அளித்ததுடன் பல திருப்பணிகள் செய்ததுடன் பல்வேறு இடங்களில் பல அன்ன சத்திரங்களையும் கட்டினார். சரபோஜி ராஜா, கோட்டைக்கு வெளியில் இருந்த’ செவ்வப்ப நாயக்கர் குளத்தை’ பழுது பார்த்தார். மேலும் கோட்டைக்குள்ளிருந்த, சிவகங்கை குளத்தை பாதுகாத்தார். இவர் காலத்தில், பெரிய குளத்தில் இருந்த தண்ணீர், சிறிய குளங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இது ஜலசுஸ்த்திரம் என்று அழைக்கப்பட்டன. கோட்டையிலிருந்து கழிவுநீரை வெளியேற்ற, தஞ்சாவூர் தெருக்களில், கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. சரபோஜி ராஜா, சிறந்த தமிழ் நூல்களை பிறமொழிகளில் மொழியாக்கமும் செய்தார். அதேபோல், மருத்துவம் சம்பந்தமான பிறமொழியின் சிறந்த நூல்களை தமிழிலும் மொழி பெயர்த்தார். நூல்களை வெளியிடுவதற்காக தனியாக ஒரு அச்சுக்கூடத்தையும் தஞ்சையில் நிறுவினார் சரபோஜி. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், உலகின் பல்வேறு நாடுகளின் பிரசித்திபெற்ற இடங்களை ஓவியங்களாகத் தீட்டி அவற்றை மக்கள் பார்வைக்கு வைத்தார். தமிழ் புலவர்கள் பலருக்கும் தமது அவையில் உரிய இடமளித்து சிறப்புச் செய்தார். கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் சரபோஜி மன்னரின் அவையில் தலைமைப் புலவராக இருந்தார். இவரது காலத்தில்தான் அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியை எழுதினார் என்றும் கூறுவார்கள். சரபோஜி மன்னர் 1832 ஆம் ஆண்டு, இதே மார்ச் மாதம் 7ஆம் தேதி, இறந்தபோது, சரஸ்வதி மகால் நூலகத்தில், சீவகசிந்தாமணி காப்பியம் உள்பட 29 ஆயிரம் ஓலைச்சுவடிகளும், பல்வேறு மொழிகள் சார்ந்த 25 ஆயிரம் நூல்களும் இருந்தன. தமிழ் மொழியின் தொன்மையை உலகறியச் செய்ய பாடுபட்ட சரபோஜி ராஜாவை கவுரவிக்கும் விதமாக ஆங்கிலேயர்கள், சரபோஜி ராஜாவுக்கு, முழு உருவச்சிலை அமைத்தனர். உலகின் தலைசிறந்த சிற்பியான இத்தாலி நாட்டின் பிளாக்ஸ்மேன் இந்தச் சிலையை வடித்தார். சிலையையும் பீடத்தையும் அமைப்பதற்கான பளிங்குக்கல் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. சிற்பி பிளாக்ஸ்மேன் சரபோஜி மன்னரின் உயரம், அகலம், கை, கால் நகங்கள் ஆகியவைகூட மிகச் சரியாக இருக்குமாறு சிலையை செதுக்கினார். மன்னரின் காலணி, தலைப்பாகை உள்ளிட்டவைகளை மிகத்துல்லியமாக வடிவமைத்திருக்கிறார் சிற்பி. சட்டை மடிப்பு, சுருக்கங்கள் உள்ளிட்டவைகள்கூட அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. சரபோஜி சிலையின் இடுப்பில் மாட்டியிருக்கும் உடைவாள் உறையிலிருந்து வாளை எடுத்துவிட்டு மீண்டும் செருக முடியும். அதேபோல், மன்னரின் தலைப்பாகையையும் தனியாக கழற்றி மாட்டும்படி மிக நுட்பமாக சிலையை செதுக்கியிருக்கிறார் பிளாக்ஸ்மேன். சரபோஜி மன்னர் இறந்து பல ஆண்டுகள் கடந்தாலும், தஞ்சாவூர் மக்கள் இன்னமும் அவரை நெஞ்சில் வைத்திருக்கிறார்கள். அதனால் தான் இப்போதுகூட தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு சரபோஜி என்று பெயர் வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைபேசியை கண்டு பிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் அவரது கண்டுபிடிப்புக்கான காப்புரிமை (Patent Rights ) பெற்ற தினமாகும். இது நடைபெற்றது 1876ம் ஆண்டு. காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமே, அவரை தொலைபேசியைக் கண்டுபிடிக்கத் தூண்டியது. ஒருவர் பேசுவதை மின்சக்தி மூலம் இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியுமா என்று ஆராயத் தொடங்கிய அவரது ஆராய்ச்சி இறுதியில் தொலைபேசியைக் கண்டுபிடித்தன் மூலம் வெற்றியடைந்தது கிரஹாம் பெல் அன்று கண்டு பிடித்த அந்த தொலைபேசி சிறிது சிறிதாக முன்னேற்றம் கண்டு இன்று பலப் பல வசதிகள் கொண்ட அதி நவீன தகவல் தொடர்பு சாதனமாக உருவெடுத்துள்ளது.

கவியோகி சுத்தானந்த பாரதியார் நினைவு நாளின்று! ‘’நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழில் ஒழுகும்” என்று துவங்கும் நமது தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி எல்லோருக்கும் தெரியும். அதை எழுதியவர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள். சிறந்த கவியோகியும், பன்மொழிப் புலவரும், ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் சிறந்து விளங்கியவருமான சுத்தானந்த பாரதியார் அவர்களும் அருமையான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒன்றை இயற்றியிருக்கிறார். ‘’காது ஒளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின் மீது ஒளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பு ஆர் இன்பப் போது ஒளிர் பூந்தாமரையும் பொன்முடிச் சூளாமணியும் பொலியச் சூடி நீதி ஒளிர் செங்கோலாய் திருக்குறளைத் தாங்கும் தமிழ் நீடு வாழ்க!’’ சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி என்னும் ஐம்பெரும் காப்பியங்களும், சூளாமணி முதலிய ஐஞ்சிறு காப்பியங்களும், உலகப்புகழ் பெற்ற புகழ் திருக்குறளும் தமிழன்னைக்கு அணிகலன்களாக அமைந்திருப்பதை இந்தப்பாடல் சொல்கிறது. உலகப் பொதுமறையாம் திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர் சுத்தானந்த பாரதியார் அவர்கள். 1968- ம் ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த பதிப்புக் கழகத்தாரால் வெளியிடப்பட்டது. 1984 ல் தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகமும் நிறுவிய மாமன்னன் இராஜராஜன் பெயரால் வழங்கப்படும் படைப்பிலக்கிய விருதை இவரது ‘பாரத சக்தி’ நூலுக்கு முதன் முதலில் பெற்றவர் கவியோகி சுத்தானந்த பாரதி. சுப்பிரமணிய பாரதியைப் போலவே, இவரும் பல மொழிகள் கற்றுத்தேர்ந்து, தேசியச் சிந்தனைகளைத் தூண்டும் பல பாடல்களை இயற்றியுள்ளார். தமிழ் தவிர சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளிலும் நூல்கள் இயற்றியுள்ளார். சிறந்த மொழிபெயர்ப்பாளர். கவிதைகள், உரைநடை, பயணநூல், இலக்கணம், கீர்த்தனைகள், நாடகம், திறனாய்வு, சிறுகதை, அறிவியல், வாழ்க்கை வரலாறு ஆகிய பல துறைகளிலும் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிக் குவித்தார். திலகர், காந்திஜி, நேதாஜி, உ.வே.சு. ஐயர் ஆகியோருடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். கிராமப் பணி, கதர்ப்பணி, மது ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் மறுவாழ்வு ஆகிய சீர்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டார். யோகி அரவிந்தரின் தொடர்பால் இவரது வாழ்வில் புதிய திருப்பம் ஏற்பட்டது. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரித்தது. இவர் புதுவை அரவிந்தர்ஆசிரமத்தில் இருபது ஆண்டு காலங்கள் மவுன விரதம் இருந்து வந்தார். சமய ஒற்றுமையைப் போற்றியவர். கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய சமய நூல்களைக் கற்று அவை காட்டும் நெறிகளையும் பின்பற்றி வந்தவர். ‘ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே ஆன்மநேயர் நாம்’ என்பதை உலகுக்கு உணர்த்தியவர். உலகம் முழுவதும் ஆன்மிகப் பயணங்கள் மேற்கொண்டார். சோவியத் யூனியன், பிரான்ஸ், சீனா, ஜப்பான், அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளுக்கும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். ‘‘அகவாழ்வு சிறந்திட யோகம்; புறவாழ்வு சிறந்திட அறிவியல் இவை இரண்டும் இணைந்தால், மனித வாழ்வு அமரத்துவம் பெறும்; மண்ணில் விண்ணரசு தோன்றும்’ என்பதுதான் இவர் உலகுக்கு அளித்த செய்தி. இன்றைக்கு டமில் பேசுகிறவர்கள், மூக்கினாலே முக்கி முக்கிப் பேசுகிறவர்கள், எலும்பைக் கடிப்பது போல வார்த்தைகளைக் கடித்துக் குதறிப் பேசுகிறவர்கள் தான் தமிழ்,தனித் தமிழ் என்று மேடையில் பேசுவது ஒன்றே தமிழுக்குச் செய்யும் சேவை என்றிருக்கும் நிலையில், உண்மையாகவே தமிழ் வளர்த்த பெரியோர்களை மறந்து போனதும், அவர்களுக்கு உரிய மரியாதை செய்யத் தோடர்ந்து தவறிக் கொண்டிருப்பதும் ஒரு கேவலமான அரசியலாகவே ஆகிக் கொண்டிருக்கிறது. அதற்கு உதாரணம் இந்த கவியோகியை நினைவு கூறுவோர் யாருமில்லாமல் போனதே.

பரமஹம்ச யோகானந்தர் மறைந்த தினமின்று! 1893-ம் ஆண்டு பிறந்த பரமஹம்ச யோகானந்தர் இந்தியாவைச் சேர்ந்த யோகி, துறவி மற்றும் குரு ஆவார். பல்வேறு விரிவுரைகள் மற்றும் கற்பித்தலின் மூலமாக இந்தியாவின் தொன்மையான பழக்கவழக்கங்களையும், தியானத்தின் பாரம்பரியத்தையும் உலகெங்கும் பரப்பினார். இவரது யோகியின் சுயசரிதை என்னும் நூல் சிறந்த ஆன்மீக வழிகாட்டுதல் நூலாகக் கருதப்படுகிறது. நான்கு மில்லியன்களுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையான இந்நூல், 21-ம் நூற்றாண்டின் நூறு மிகச்சிறந்த ஆன்மிக நூல்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் யோகா ஆசிரியராக தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்த முதல் இந்தியர் இவரே. தன் மரணத்துக்கு முன்னரே அதுபற்றி சில நாட்களாகவே குறிப்பிட்டு வந்த யோகானந்தர் 1952-ம் ஆண்டு மறைந்தார். அதாவது ஶ்ரீ பரமஹம்ச யோகானந்தா தன் உடலை விடும்பொழுது, அவர்முன் 700 பேர் இருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார். தான் உடலை விடும் முன்பே, ‘நான் உடலை விடப்போகிறேன்’ என்று அவர் அறிவித்திருந்ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர். வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு, ‘இப்போது என் உடலை நான் விடப்போகிறேன்’ என்று சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து, தன் உடலை நீத்தார். மருத்துவர்கள் எத்தனை சோதனை செய்தாலும் அவர்களுக்கு புலப்படாத ஒரு விஷயமிது. ஏனெனில், மருத்துவ அறிவியலைப் பொருத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்று நம்பப்படுகிறது. இதயமோ, நுரையீரலோ, வேறு எதோ ஒன்று கெட்டுப்போனால் உயிர் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கை. நன்றாக, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், ‘இப்போது நான் போகப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு, தன் உடல் நீப்பதை அவர்கள் எங்கும் பார்த்திருக்கவில்லை. அதுமட்டுமில்லை, பரமஹம்ச யோகானந்தா உடலை விடும்போது, ‘33 நாட்களுக்கு பிறகுதான் இவ்வுடல் அடக்கம் செய்ய வேண்டும் அழிந்து போகாத இவ்வுடலை அப்படியே வைத்துக் கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டு உடலை நீத்தார். உடலில் தேவையான அளவிற்கு ‘வியானப் பிராணா’வை அவர் தக்கவைத்துச் சென்றதால், அத்தனை நாட்களுக்கு உடல் நன்றாக இருக்கும். இதைச் செய்வதற்கு அவருக்கு எவ்வித அவசியமும் இல்லை. ஆனால், அவர் உயிரோடு இருக்கும்போது, காரண அறிவை மட்டுமே பயன்படுத்தும் மனிதர்கள் பலர், அவருக்கு அதிகளவில் தொல்லைகள் தந்தனர். அதனால் போகும்போது, அவர்களுக்கு கொஞ்சம் விளையாட்டுக் காட்டிவிட்டுச் செல்லலாம் என்று அவர் முடிவு செய்தார். காரண அறிவை மட்டுமே பயன்படுத்தி அவரைப் பற்றி இல்லாததை எல்லாம் பேசிய விஞ்ஞானிகளுக்கு, புரியவைத்துப் போகலாம் என்றெண்ணி, 30 நாட்கள் உடல் அப்படியே இருக்கும், அனைத்து சோதனைகளையும் நன்றாக செய்யுங்கள் என்று சொல்லி, உடலை விட்டுப் போனார் அவர். அவர் உடல் (U.S.A) லாஸ் ஏஞ்சல்ஸில் இன்றும் அவர் உடல் அழிவில்லாமல் அப்படியே இருக்கிறது. அவர் சிந்தனைத் துளிகளில் சில நினைவஞ்சலியாக தோல்வியின் பருவமே வெற்றியின் விதைகளை விதைப்பதற்கான சிறந்த காலமாகும். நமக்குள் எப்போதும் இரண்டு சக்திகள் ஒன்றுக்கொன்று எதிராக போரிட்டுக்கொள்கின்றன. உண்மையான நண்பர்களை ஈர்க்கும் ஒரு காந்தம் உங்கள் இதயத்தில் உள்ளது. நடுநிலை தன்மையுடன் இருப்பது என்பது புத்திசாலித்தனமான ஒன்று. அனைத்து நேர்மையான பணிகளும் சிறந்த பணியே; இது சுய மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் திறன் கொண்டது. நீங்கள் தோல்வியடையும் போதெல்லாம், எழுந்து மீண்டும் முயற்சிக்கவும். உங்கள் வாழ்க்கையை நீங்கள் சாதாரண வழியில் இயங்கவிடக் கூடாது. கிண்டலான வார்த்தைகள், பார்வைகள் அல்லது பரிந்துரைகளால் மற்றொரு ஆத்மாவை காயப்படுத்துவது வெறுக்கத்தக்கது. ஒவ்வொரு கணத்தின் அதிசயத்தையும் அழகையும் முழுமையாக அனுபவியுங்கள். நீங்கள் மகிழ்வதற்கும் மகிழ்விப்பதற்குமே பூமிக்கு வந்திருக்கிறீர்கள். நிறைவேறாத ஆசைகளின் சக்தியே அனைத்து மனிதர்களின் அடிமைத்தனத்திற்கான வேர். முடிவுகள் தவிர்க்கமுடியாதவை என்று விடாமுயற்சி உத்தரவாதம் அளிக்கிறது. தற்போதைய தருணத்தில் புத்திசாலித்தனமாகவும் ஆர்வத்துடனும் வாழ்வதே மனம் மற்றும் உடல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தின் ரகசியம். ஒவ்வொரு நாளைய தருணமும் ஒவ்வொரு இன்றைய தருணத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் (Joseph Nicephore Niepce) பர்த் டே உலகின் முதலாவது ஒளிப்படத்தை கண்டுபிடித்த ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் 1765ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிரான்ஸில் சாவோன் எட் லொய்ரேயில் உள்ள சாலோன் சர் சாவோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் 1825ஆம் ஆண்டு மனிதனையும், குதிரையொன்றையும் காட்டும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் ஒன்றை ஒளிப்படமாக எடுத்தார். இவர் ‘இருட்டறை” (Camera Obscura) என அழைக்கப்பட்ட ஒரு வகை இருட்டாக்கப்பட்ட அறையில் ஒரு பக்கத்தில் வெளிக்காட்சிகளின் விம்பத்தை விழச் செய்து அதையொட்டிக் கோடுகளை வரைந்து படங்களை உருவாக்கினார். இவர் படங்களை வரையும்போது கைகள் உறுதியாக இல்லாததால், விம்பங்களை நிலையாக இருக்குமாறு செய்வதற்கு வேறு ஏதாவது வழியை கண்டுபிடிக்க 1793ல் ஆராய்ச்சி செய்தார். பிறகு 1824ஆம் ஆண்டிலேயே நிலைத்திருக்கக்கூடிய ஒளிப்படத்தை இவர் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. 1829ஆம் ஆண்டு லூயிஸ் டாகுரே என்பவருடன் சேர்ந்து பிசோட்டோவகை எனப்பட்ட ஒளிப்பட முறையொன்றை உருவாக்கினார். 2002ஆம் ஆண்டில் இவர் 1825ஆம் ஆண்டில் எடுத்ததாகக் கருதப்படும் உலகின் முதல் ஒளிப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு ஏலத்தில் 450,000 யூரோக்களுக்கு விற்கப்பட்டது. ஒளிப்படவியல் துறையின் முன்னோடி ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் தனது 68வது வயதில் (1833) மறைந்தார்.

பேராசியர் அன்பழகனார் நினைவு நாளின்று! இப்போது தமிழகத்தில் ஆல்போல் தழைத்து விட்ட திராவிட இயக்கத்தில் பெரியார் என்றால், அறிஞர் என்றால், கலைஞர் என்றால், நாவலர் என்றால் எப்படி ஒரே ஒருவரைத்தான் குறிக்குமோ அதேபோல் பேராசிரியர் என்றால் அது பேராசிரியர் அன்பழகனை மட்டும்தான் குறிக்கும். அண்ணாவின் அழகுத்தமிழும் பெரியாரின் அறச்சீற்றமும் கலந்தது பேராசிரியரின் பேச்சு. ‘பகுத்தறிவும் சுயமரியாதையும் இல்லாமல் தமிழர்கள் இருக்கிறார்களே’ என்ற ஆதங்கத்தைப் பெரியாரைப் போலவே தன் உரைகளில் சூடாகப் பதிவு செய்பவர் அன்பழகன். தமிழகத்தில் நல்ல பேச்சாளர்கள் பலர் இருந்தாலும் பேச்சுக்கலை பற்றி எழுதியவர்கள் குறைவு. அந்தவகையில் அன்பழகனின் ‘நீங்களும் பேச்சாளர் ஆகலாம்’ புத்தகம், பேச்சாளர்களுக்கு முக்கியமான கையேடு. வாழ்க திராவிடம், வகுப்புரிமைப் போராட்டம், தமிழர் திருமணமும் இனமானமும் என்று அவர் எழுதிய நூல்கள் அனைத்தும் திராவிட இயக்கக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அப்பேர்பட்ட பேராசிரியர் அன்பழகன் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்ட காலங்களில் அவர் செயல்படுத்திய பல திட்டங்கள் இன்றும் நினைவுகூரத்தக்கவை.அரசுப் பள்ளிகளில் கணினிப் பாடம் தொடங்கப்பட்டது முதல் உயர்கல்வியில் தமிழைப் பயிற்று மொழியாக்குவது வரை அவர் முன்னெடுத்து செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம். இப்போதைய ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ஒரு நாட்டில் அடிப்படை வளர்ச்சிக்கு வித்திடும் கல்வித் துறைக்கு ஒரு கத்துக்குட்டி அமைச்சர் அமர்ந்து அகங்காரப் பார்வை பார்க்கும் சூழலில் அவர் கல்வி அமைச்சராக இருந்த காலங்களில் அவர் ஆற்றிய பணிகள் நினைவு வருகிறது கல்விச் செலவு 1990-91 கல்வியாண்டில் பொறியியல் கல்லூரியில் சேரும் கிராமப்புற மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வில் ஐந்து மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறையை கொண்டு வந்தவர் பேராசிரியர் அன்பழகன். இதேபோல் 1996 – 2000 காலகட்டத்தில் 965 தொடக்கப் பள்ளிகளை புதிதாகத் தொடங்கியதோடு, பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களது உயர் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டவர். கம்ப்யூட்டர் சயின்ஸ் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழக இளைஞர்கள் பலர் இன்று உலகம் முழுவதும் கொடிக்கட்டி பறக்கிறார்கள் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் பேராசிரியர் அன்பழகன். அவர் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தான் 666 பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் முதல்முறையாக தொடங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கப்பட்டன. உயர்கல்வித்துறை 1997 ஆம் ஆண்டில் தான் உயர்கல்வித்துறை தனியாக உருவாக்கப்பட்டது. 1997-98ல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைகளில் ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டது அன்பழகன் அமைச்சராக இருந்த போது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் திருநெல்வேலியில் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டதும் திருச்சியில் கி.ஆ.பெ. விசுவநாதம் பெயரில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டதும் அன்பழகன் கல்வி அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் தான் என்பது கவனிக்கத்தக்கது. பெரியார் பல்கலைக் கழகம் இதேபோல் சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. உயர்கல்வியில் தமிழைப் பயிற்றுமொழியாக்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது. இவையெல்லாம் பேராசிரியர் க.அன்பழகன் தமிழக அரசின் கல்வித் துறை அமைச்சராக இருந்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்னும் போது இப்போதைய இளைய சின்னவர் ஆட்சியின் போக்கு குறித்து வேதனைதான் மிஞ்சுகிறது.

உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன்- இதே நாள்தான் ஞாயிற்றுக்கிழமையை ஐரோப்பாவில் ஓய்வு நாளாக அறிவித்தார். உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன், கி.பி. 321ஆம் ஆண்டில், ஞாயிற்றுக்கிழமையை அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் அதிகாரப்பூர்வமான ஓய்வு நாளாக அறிவித்தார். அவர் கூறிய அரசாணையின் படி, வேலைக்கும், வணிகத்திற்கும் ஓய்வு அளிக்கப்பட்டு, மக்களுக்குப் பக்தியுடன் இறைவனை வழிபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இது, கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சியிலும், ஐரோப்பாவில் ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறப்பு நாளாக பரவுவதிலும் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தியது. கான்ஸ்டன்டைன் தான் முதலில் கிறிஸ்தவ மதத்தை அனுசரித்த உரோமைப் பேரரசராகவும், கிருத்துவர்களுக்கான முக்கியமான உரிமைகளை வழங்கிய அரசராகவும் இருந்தார்.

1971 – பங்களாதேஷின் அடையாளப்பூர்வாமான விடுதலை அறிவிப்பாகவே கருதப்படும், புகழ்பெற்ற உரையை, ஷேக் முஜிபுர் ரஹ்மான் ஆற்றிய நாள் மார்ச் 7. வரலாற்றில் மிகுந்த தாக்கம் ஏற்படுத்திய உரைகளுள் ஒன்றாக இந்த 19 நிமிட உரை குறிப்பிடப்படுவதுடன், யுனெஸ்கோவின், ‘உலகின் நினைவுகள் பதிவேட்டிலும்’ பாதுகாக்கப்படுகிறது. விடுதலையின்போது, பல்வேறு சமயங்களும்கொண்டதாக உருவாகி, ஒப்பீட்டளவில் பாகிஸ்தானைவிட சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ள இந்தியாவில், தற்போது, சமயத்தை முக்கிய அளவுகோலாகக்கொண்ட குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டு, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கிற பின்னிணியில், சமயம் ஒன்றாகவே இருந்தாலும், விடுதலைக்குப் போராட நேர்ந்த பங்களாதேஷின் வரலாறு கூர்ந்து நோக்க வேண்டியதாக உள்ளது. இன்று இந்தியாவில் நாம் காணும், மொழி, பண்பாடு ஆகிய வேறுபாடுகள் மட்டுமின்றி, ஒரு பகுதியின் வல்லாதிக்கமும் அந்த நாடு பிரியக் காரணமாக இருந்தது. கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து, பாகிஸ்தானின் முதன்மை அமைச்சர்களாக(பிரதமர்) நியமிக்கப்பட்ட கவாஜா நஸீமுதீன், முகம்மது அலி போக்ரா, ஹுசேன் சாகீத் சுராவார்டி உள்ளிட்டோர் நீண்டகாலம் ஆட்சிபுரிய அனுமதிக்கப்படவில்லை. 1970 டிசம்பரில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில், கிழக்கு பாகிஸ்தானின் கிட்டத்தட்ட அனைத்து இடங்களையுமே கைப்பற்றியிருந்த அவாமி லீக், மொத்த பாகிஸ்தான் பாராளுமன்றத்திலும் அறுதிப் பெரும்பான்மையும் பெற்றிருந்தாலும், முஜிபுர் ரஹ்மான் பிரதமராக பாகிஸ்தான் மக்கள் கட்சியும், அதன் தலைவர் ஜுல்ஃபிகர் அலி புட்டோவும் அனுமதிக்காமல், இருவரும் ஒவ்வொரு பகுதிக்குப் பிரதமராக இருக்கலாம் என்றார். ஏற்கெனவே, கிழக்கு, மேற்குப் பகுதிகளுக்குத் தன்னாட்சியும், பாதுகாப்பு, வெளியுறவு மட்டுமே மத்தியக் கூட்டரசின் கட்டுப்பாட்டிலும் இருக்கவேண்டுமென்ற 6 அம்சக் கோரிக்கையை 1966இல் முஜிபுர் ரஹ்மான் எழுப்பியபோது, தேசத்துரோகக் குற்றச்சாட்டில் சிறையலடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதனால், ‘இம்முறை எங்கள் விடுதலைக்காகப் போராடுகிறோம்’ என்று பேசிய அவர், ஒத்துழையாமை இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தார். 20 லட்சம் பேர் முன்னிலையில் அவர் ஆற்றிய இவ்வுரையை தொலைக்காட்சியிலும், வானொலியிலும் ஒலிபரப்ப மேற்குப் பாகிஸ்தான் நிர்வாகம் மறுத்துவிட்ட நிலையில், பதிவு செய்யப்பட்டு, இசைத்தட்டுகளாக 3,000 பிரதிகள் உருவாக்கப்பட்டு, உலகம் முழுவதும் அனுப்பப்பட்டது. 18 நாட்களில், ஆப்பரேஷன் சர்ச்லைட் என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவம் வேட்டையைத் தொடங்க, பங்களாதேஷ் விடுதலைப் போராட்டம் தொடங்கியது.

இன்று ஸ்ரீ முலம் திருநாள் மஹாராஜா நினைவு நாள்….!1924 குமரியின் பெருமைக்குரிய பேச்சிப்பாறை அணையை உருவாக்கிய திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள். தனது ஆட்சி காலத்தில் மக்கள் நல பணிகள் பல செய்த மாமன்னரின் நினைவு நாள் இன்று. இந்தியாவில் முதல் முதலாக ஆட்சி அதிகாரத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு பங்களிப்பை வழங்கிய மன்னர். தபால், கல்வி, சட்டம், சிவில் சர்வீஸ் துறைகளில் மிகப் பெரிய வளர்ச்சியை உருவாக்கியவர். பெண்கள் கல்விக்கும், அனைத்து தரப்பு மக்களும் கல்வி கற்கவும் வழிவகை செய்தவர். ஆயுள் காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்தவர். முதலாவதாக பொது போக்குவரத்தை துவக்கி வைத்தவர். திருவனந்தபுரத்திற்கு இணையாக நாகர்கோவிலையும் வளர்ச்சியடைய செய்தவர். திற்பரப்பு பகுதியில் கோதையாற்றின் மேல் இரும்பு பாலம், பரளியாற்றின் மேல் திருவட்டாறு பாலம் உட்பட நம் பகுதிகளிலும் வளர்ச்சி திட்டங்கள் பல இவர் ஆட்சி காலத்தில் உருவானது. மக்கள் நலன் மட்டுமல்ல உழைப்பவர்களுக்கு தகுந்த மரியாதையும் வழங்கியவர். பேச்சிப்பாறை அணை கட்டுமானத்தில் திறமையுடன் உழைத்த பொறியாளர் அலக்ஸான்டர் மிஞ்சன் அவர்களின் மறைவிற்கு பின், அணை வளாகத்திலே உடல் அடக்கம் செய்து, கல்லறை எழுப்பி மரியாதை செலுத்தியது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. நல் ஆட்சி தந்த மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் 1924ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் நாள் மரணமடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!