நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்..!
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும்.
மத்தியில் பாஜக 3வது முறையாக ஆட்சியமைத்தபின் தாக்கல் செய்யப்படும் 2வது பட்ஜெட் இதுவாகும். முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்த பாஜக கடந்த ஜுலை மாதம் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தது. தற்போது, 2வது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் 2025-26ம் நிதியாண்டிற்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.