இன்றைய முக்கிய நிகழ்வுகள் (சனவரி 30)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (சனவரி 30)

காந்தியடிகள் மறைந்த தினமின்று:

1948 ஜனவரி 30ந்தேதி வெள்ளிக்கிழமை, வழக்கம்போல அதிகாலை 3.30 மணிக்கு தூக்கம் கலைந்து எழுந்தார், காந்தியடிகள். சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார். எலுமிச்சை ரசமும், தேனும் கலந்த வெந்நீர் பருகினார். பின்னர் தன் அறைக்குள்ளேயே சிறிது நேரம் உலாவினார். 8 மணிக்கு தன் உதவியாளர் பியாரிலாலை அழைத்து, காங்கிரஸ் கட்சியின் விதிகளில், தான் செய்ய உத்தேசித்திருந்த மாறுதல் களைக் கொடுத்துப் படித்துப் பார்க்கச்சொன்னார். பிறகு பத்திரிகைகள் படித்தார். இந்தக் காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில் (பழைய சென்னை மாகாணம்) கடும் உணவுத் தட்டுப்பாடு நிலவியது.அதுபற்றி பியாரிலாலிடம் பேசினார். “தென்னை, பனை, வேர்க்கடலை, வாழை ஆகியவற்றையும், பலவிதமான கிழங்குகளையும் தமிழ்நாட்டுக்கு இயற்கை வழங்கியிருக்கிறது. அப்படியிருக்க அங்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கது. இயற்கை வளங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை மக்களுக்குத் தெரிவித்தால், அவர்கள் பட்டினி கிடக்கவேண்டிய அவசியம் இருக்காது” என்றார். உணவுப்பிரச்சினையைச் சமாளிப்பது எப்படி என்பது பற்றி குறிப்பு தயாரிக்கும்படி தன் செயலாளரிடம் கூறி விட்டுக் குளிக்கச் சென்றார். குளித்துவிட்டு வந்தபின், 9.30 மணிக்கு வங்காளி மொழிப் பாடங்களை கற்கலானார். உணவு பின்னர் காலை உணவாக 12 அவுன்ஸ் ஆட்டுப்பால், பச்சை முள்ளங்கி, தக்காளிப் பழப் பச்சடி, ஆரஞ்சு ரசம், வேக வைத்த காய்கறிகள், இஞ்சிச் சாறு ஆகியவற்றை அருந்தினார். பியாரிலால், காங்கிரஸ் விதிகளில் மாற்றம் செய்வது பற்றி தன் கருத்துக்களை எழுதிக் கொடுத்தார். அதைக் காந்திஜி ஆழ்ந்து பரிசீலனை செய்தார். பிறகு படுத்துத் தூங்கினார். பகல் 12 மணிக்கு எழுந்து, தேன் கலந்த வெந்நீர் குடித்தார். டெல்லியைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்களுக்கு பேட்டி அளித்தார். தனக்கு வந்திருந்த கடிதங்களைப்படித்துப் பதில் எழுதினார். பிற்பகல் 2.15 மணிக்கு காந்தி வழக்கம்போல பேட்டிகள் அளிக்கத் தொடங்கினார். இலங்கை பிப்ரவரி 14_ந்தேதி சுதந்திரம் பெறுவதால், சுதந்திர தினச்செய்தி வாங்கிச் செல்வதற்காக இலங்கையிலிருந்து டாக்டர் டி.சில்வா வந்திருந்தார். உடன் வந்திருந்த அவருடைய மகள், காந்தியிடம் கையெழுத்து வாங்கினாள். மகாத்மா போட்ட கடைசிக் கையெழுத்து இதுதான். மாலை 4 மணிக்கு சர்தார் பட்டேல் வந்தார். அவரும், காந்தியும் தனியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பட்டேலுடன் அவர் மகள் மணிபென் பட்டேலும் இருந்தார். 4.30 மணிக்கு பேத்தி ஆபா காந்தி, மாலை உணவைக் கொண்டு போய்க் கொடுத்தார். 12 அவுன்ஸ் ஆட்டுப்பால், 12 அவுன்ஸ் காய்கறி சூப், ஆரஞ்சு ரசம், வேக வைத்த காய்கறிகள் ஆகியவற்றை காந்திஜி அருந்தினார். மாலை 5 மணி, வழக்கமாக பிரார்த்தனைக் கூட்டத்தில் இருக்க வேண்டிய நேரம். பட்டேல், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவருக்கும், நேருவுக்கும் கருத்து வேற்றுமை இருந்து வந்தது. காந்திஜி அவ்வப்போது தலையிட்டுச் சமாதானப்படுத்தி வந்தார். பட்டேல் ராஜினாமாச் செய்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தார். அவரைக் காந்தி சமாதானப்படுத்தினார். பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி ஆகிய இருவருடைய தோள்களில் சாய்ந்தபடி நடந்து சென்றார். ஆபா காந்தியுடன் அவர் நகைச்சுவையாக பேசியபடி சென்றார். பிரார்த்தனைக் கூட்டத்திற்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். 10 நிமிடம் தாமதமாகி விட்டதால் காந்தி சற்று வேகமாக நடந்தார். கூடியிருந்தவர்களில் பலர் எழுந்து நின்று, வழி விட்டபடி வணங்கினர். காந்தியும் பதிலுக்குக் கை கூப்பி வணங்கினார்.திடீர் என்று ஒரு இளைஞன், இடது பக்கத்திலிருந்து கூட்டத்தை விலக்கியபடி வந்தான். அவன் காந்தியின் பாதங்களைத் தொட்டு வணங்குவதற்கு வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலில் விழுவதை காந்தி விரும்புவதில்லை. எனவே மனு காந்தி, “வேண்டாம். பாபு விரும்பமாட்டார்” என்று தடுத்தார். அந்த இளைஞன், மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளி விட்டான். மனுவின் கையிலிருந்த காந்தியடிகளின் நோட்டுப் புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக, மனு காந்தி கீழே குனிந்தார். கண் மூடிக்கண் திறப்பதற்குள் அந்த இளைஞன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, காந்திஜிக்கு எதிரே இரண்டு அடி தூரத்திலிருந்து மூன்று முறை சுட்டான்.மூன்று குண்டுகளும் காந்தியின் மார்பில் பாய்ந்தன. அவற்றில் இரண்டு குண்டுகள் உடலை ஊடுருவிச்சென்று விட்டன. ஒரு குண்டு, இதயத்துக்கு உள்ளேயே இருந்து விட்டது. முதல் குண்டு பாய்ந்ததும், காந்திஜியின் கால் தடுமாறியது. வணங்கியபடியிருந்த கைகள், கீழே சரிந்தன. இரண்டாவது குண்டு பாய்ந்ததும், அவருடைய உடையில் ரத்தக்கறை படிந்தது. அவர் “ஹே… ராம்” என்று இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும், தரையில் ஈர மண்ணிலும், புல் தரையிலும் விழுந்தார். ஒரு சிலர், காந்தி அதே இடத்தில் இறந்தார் என்றும் மேலும் சிலர், அவர் படுக்கையறைக்குக் கொண்டுசெல்லப்பட்டு 30 நிமிடங்கள் கழித்து இறந்தார் என்றும் தெரிவிக்கின்றனர். இப்படி காந்தியின் இறப்பு குறித்து முரண்பாடான சில தகவல்கள் இன்னமும் விவாதத்தில் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் ‘ஹே ராம்’ பிரச்னை. காந்தியை கோட்சே துப்பாக்கியால் சுட்டபோது அவர், ‘ஹே ராம்’ என்று சொல்லிவிட்டு இறந்துபோனதாக ஒரு சாரார் இன்றும் விவாதம் செய்கின்றனர். இதை அடிப்படையாகவைத்தே கமல்ஹாசன், ‘ஹே ராம்’ என்று தன் படத்துக்கு தலைப்பு வைத்ததாகவும் சொல்லப்படுவதுண்டு.காந்தி இறந்தபோது, அதை உலகம் முழுக்கவே ஃப்ளாஷ் செய்த நிருபர், ஜேம்ஸ் மைக்கேல்ஸ். அதன்பிறகு, 1997ல் புகழ்பெற்ற ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியராக ஜேம்ஸ் இருந்தபோது, மும்பையில் நடந்த ஒரு லெக்சரின்போது, இந்த ‘ஹே ராம்’ சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார். காந்தி சுடப்பட்டபோது மிகவும் அருகிலிருந்து பார்த்தவர் அவர். அந்தச் செய்தியையும் உலகுக்குச் சொன்னவர். அவர்”அதிகாரபூர்வமான செய்திகள், ‘ஹே ராம்’ என்று காந்தி மகான் சொன்னதாக வந்தது. ஆனால், அவ்வளவு உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை! இறப்பதற்கு முன் அவர் எந்த வார்த்தையும் சொல்லவில்லை என்பதே எனக்கு ஞாபகம்!” என்று சொன்னார். கூடவே “காந்திஜி சுடப்படும்போது, ரொம்பப் பக்கத்தில் இருந்தேன். அவர் சுடப்பட்டவுடன், டியூட்டியில் இருக்கும் ஒரு பத்திரிகையாளர் செய்யத் தேவையில்லாத ஒரு காரியத்தைச் செய்தேன். ஆம். வாய்விட்டுக் கதற ஆரம்பித்துவிட்டேன்!” என்றும் குறிப்பிட்டார். அப்போது மணி 5.17. காந்தியின் உடலை, பிர்லா மாளிகைக்கு எடுத்துச் சென்றனர். தகவல் அறிந்து வல்லபாய் பட்டேல் விரைந்து வந்தார். காந்தியின் நாடியைத் தொட்டுப் பார்த்தார்.இலேசாக நாடி துடிப்பது போலத்தோன்றியது. இதற்குள் டாக்டர் டி.பி.பார்க்கவா வந்து சேர்ந்தார். அவர் பரிசோதித்து விட்டு “காந்திஜி உயிர் பிரிந்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டன” என்று தெரிவித்தார். இதற்கிடையே, காந்தியடிகளை சுட்டுக் கொன்றவனை போலீசார் கைது செய்தனர். அவன் தப்பி ஓட எவ்வித முயற்சியும் செய்யவில்லை. துப்பாக்கியுடன் நின்ற அவனை, கூட்டத்தினர் ஆவேசத்துடன் தாக்கினர். அந்த தாக்குதல் நீடித்திருந்தால், கொலையாளி கொல்லப்பட்டிருக்கலாம். போலீசார் தலையிட்டு அவனை மீட்டு, துப்பாக்கியை கைப்பற்றினர். கொலையாளி பாதுகாப்புடன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு போகப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் அவன் பெயர் நாதுராம் விநாயக் கோட்சே என்றும், 37 வயதான அவன் புனா நகரை சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது.

சிட்னி ஷெல்டன் (Sidney Sheldon)காலமான தினமின்று:

20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரிவர் சிகாகோ நகரில் (1917) பிறந்த இவர் இளம் வயதில் மன உளைச்சலால் அதிகம் பாதிக்கப் பட்டிருந்தார். மன அழுத்தம் காரணமாக கல்லூரிப் படிப்பையே பாதியில் நிறுத்திவிட்டவராக்கும். இரண்டாம் உலகப் போரின்போது ராணுவத்தில் பைலட்டாகப் பணியாற்றினார். 1937-ல் ஹாலிவுட்டில் குடியேறினார். அங்கு திரைக்கதை, வசனங்களை மதிப்பீடு செய்தும், திரைக்கதைகள் எழுதியும் வந்தார். எம்ஜிஎம், பாரமவுன்ட் ஸ்டுடியோஸ் நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றினார். ‘தி பேச்சுலர் அண்ட் தி பாபி சாக்ஸர்’ என்ற திரைப்படத்துக்கு முதல்முறையாக திரைக்கதை எழுதினார். அந்த திரைப்படம், சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றது. தொலைக்காட்சித் தொடர்களை எழுதத் தொடங்கினார். தொடர்ந்து 20 ஆண்டுகள் இதில் பணிபுரிந்தார். மூன்றே ஆண்டுகளில் 78 தொடர்களுக்கான கதைகளை எழுதி சாதனை படைத்தவர். பிரபல எம்மி, டோனி விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் 1969-ல் எழுதிய ‘நேக்கட் ஃபேஸ்’ என்ற முதல் நாவலே விற்பனையில் சாதனை படைத்தது. அடுத்த நாவலான ‘தி அதர் சைட் ஆஃப் தி மிட்நைட்’ மிக அதிக அளவில் விற்பனையாகி பல விருதுகளைக் குவித்தது. நியூயார்க் டைம்ஸ் விற்பனையில் சாதனை படைத்த நூல்கள் பட்டியலில் தொடர்ந்து 52 வாரங்கள் முதலிடம் பெற்று, அதுவரையிலான அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. கிட்டத்தட்ட இவரது அனைத்து நாவல்களுமே நியூயார்க் டைம்ஸின் மிக அதிகமாக விற்பனையாகும் நூல்கள் பட்டியலில் இடம்பெற்றன. தொடர்ந்து ‘எ ஸ்ட்ரேஞ்சர் இன் தி மிரர்’, ‘பிளட்லைன்’, ‘ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸ்’, ‘மாஸ்டர் ஆஃப் தி கேம்’, ‘இஃப் டுமாரோ கம்ஸ்’ உள்ளிட்ட நாவல்களும் விற்பனையில் பல சாதனைகளைப் படைத்தன. இவரது நாவல்களின் கதை சாதுர்யமான ஒரு பெண் பாத்திரத்தை மையமாகக் கொண்டிருக்கும். எனவே, இவருக்கு ஆண் வாசகர்களைவிட பெண் வாசகர்கள் எண்ணிக்கையே அதிகம். ‘திரைப்படம், தொலைக்காட்சித் தொடர், நாடகம் எழுதினாலும், நாவல் எழுதுவதுதான் மிகவும் பிடிக்கும். அதில்தான் முழு சுதந்திரமாக செயல்பட முடியும். என் நாவல்களில் எனக்கு நன்றாகத் தெரிந்த, நான் போய் வந்த ஒரு இடத்தைப் பற்றிதான் எழுதுவேன். நான் சுவைத்துள்ள உணவு குறித்துதான் விவரிப்பேன். அனுபவத்தின் அடிப்படையில் எழுதுவதையே விரும்புகிறேன்’ என்று கூறுவார். 1997-ல் உலகம் முழுவதும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாசிரியர் என கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றார். மொத்தம் 18 நாவல்களை எழுதியுள்ளார். ஏறக்குறைய 30 கோடி நூல்கள் விற்பனையாகின. ‘தி அதர் சைட் ஆஃப் மீ’ என்ற சுயசரிதையை 2005-ல் எழுதினார்.

தியாகிகள் தினம்

1948-ஆம் ஆண்டு, ஜனவரி 30-ஆம் தேதி நாதுராம் கோட்சேவினால் தேசத் தந்தையான மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கும் விதமாகவும், அவருக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் தினம் கொண்டாடப்படுகின்றது..

மறைந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தியாகிகள் தினத்தன்று, பகல் 11 மணி அளவில் இரு நிமிட மௌன அஞ்சலி நாடு முழுவதும் அனுசரிக்கப்படும்.

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய இராமலிங்க அடிகளார் ஜோதியான நாளின்று:

வள்ளலார் வகுத்த தினப்படி வாழ்க்கைமுறை!

சூரியோதயத்துக்கு முன்னால் தூக்கம் நீங்கி எழுந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் அமர்ந்து, கடவுளைத் தியானம் செய்யவேண்டும்.

இயற்கைக் கடன்களைக் கழித்தபின் செவிகள், கண்கள், நாசி, வாய், தொப்புள் இவற்றில் அழுக்கு, பீளை, சளி, ஊத்தை என்கிற அசுத்தங்களையும் கை, கால் முதலிய உறுப்புகளில் உள்ள அழுக்குகளையும் வெந்நீரால் தேய்த்துச் சுத்தமாகக் கழுவ வேண்டும். பின் வேலங்குச்சி, ஆலம் விழுது கொண்டு பல் தேய்த்து, அதன்பின் கரிசலாங்கண்ணி கீரைத் தூள் கொண்டு, உள்ளே சிறிது சாறு போகும்படி பல்தேய்த்து வாய் கழுவ வேண்டும்.

அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கையிலை சேர்ந்த கலவை கால்பங்கு, சீரகம் கால்பங்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடி யாகத் தயாரித்து வைத்துக்கொண்டு, அந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்துத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம். அத்துடன் ஒரு டம்ளர் பாலையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, இரண்டு டம்ளர் திரவம், ஒரு டம்ளராகச் சுண்டியபின், அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.

காலை வெயில் உடல்மேல் படாதவண்ணம் மேற்சட்டை அணியவேண்டும்.

ஒன்றரை மணி நேரம் கழித்து, வெயிலில் மிதமான உடற்பயிற்சிகள் செய்யவேண்டும். பின், இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும். சற்று நேரம் கடவுளை வணங்க வேண்டும்.

பசி எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது அள்ளிப் போட்டுக் கொள்ளக்கூடாது. மிக நிதானமாகவும் (சோம்பேறித்தனத்துடன்) உண்ணக்கூடாது. சாப்பிட்டபின் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்த வேண்டும்.

கிழங்கு வகைகளை உண்ணக்கூடாது. ஆனால், கருணைக்கிழங்கை உண்ணலாம். பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். பதார்த்தங்களில் புளி, மிளகாய் ஆகியவற்றைக் குறைவாகவும் மிளகு, சீரகம் ஆகியவற்றை அதிகமாகவும் சேர்க்க வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பைக் குறைவாகச் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது. தாளிப்பதற்கு நல்ல எண்ணெய் உபயோகிக்கலாம். அல்லது பசு வெண்ணெயால் தாளிக்கலாம்.

கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், புடலங்காய், கொத்தவரைக்காய் இவற்றை கறி செய்வதற்கு உபயோகப்படுத்தலாம். முருங்கை, கத்தரி, பேயன் வாழைக்காய் ஆகியவற்றை அடுத்தடுத்து கறி செய்யலாம். மற்றவற்றை எப்போதாவது பயன்படுத்த வேண்டும்.

சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் போன்ற சித்திரான்னங்களை அடிக்கடி சாப்பிடக்கூடாது. எப்போதாவது சாப்பிடலாம்.

புளித்த தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.

பருப்பு வகைகளில் துவரம்பருப்பை அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். மற்ற பருப்பு வகைகளை எப்போதாவது சேர்த்துக் கொள்ளலாம்.

விருந்து உணவு என்றாலும், சற்றுக் குறைவாகவே புசிக்க வேண்டும்.

வெந்நீரையே குடிக்கவேண்டும்.

மாலை வெயில் உடலில் படுமாறு சற்று உலாவ வேண்டும். காற்று அதிகமாக இருந்தால் உலாவக் கூடாது. கடும் வெயில், பனி, மழை இவை தேகத்தில் படுமாறு உலவக்கூடாது.

இரவின் தொடக்கத்தில் முகம், கை, கால் ஆகியவற்றைக் கழுவிச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின் தியானம் செய்யலாம். மந்திரங்கள் சொல்லிக் கடவுளை வணங்கலாம். புத்தகங்களைப் படிக்கலாம். வீட்டு விவகாரங்களைப் பற்றிப் பேசலாம்.

பிறகு இரவு உணவு. பகல் உட்கொண்டதில் அரைப்பங்கு அளவே இரவு உண்ண வேண்டும்.

இரவில் கீரை, தயிர் மற்றும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவு வகைகளைச் சேர்க்கக்கூடாது. இரவில் சூடான பதார்த்தங்களையே உண்ண வேண்டும்.

இரவுச் சாப்பாடு முடிந்து இரண்டு மணி நேரத்துக்குப் பின் பசும்பாலைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.

பெண்களுடன் உறவு கொள்ளும் நாட்களில், உறவு செய்வதற்கு அரைமணி நேரம் முன்னிருந்து உடலுறவைப் பற்றி எண்ணாமல், அதன்பின் உறவு கொள்ளவேண்டும். ஒருமுறைக்கு மேல் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது | ஒரே இரவில்.

உடலுறவு முடிந்தபின் உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு கடவுளைத் தியானம் செய்து, பின் உறங்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைத்துக்கொள்வது அதமம். எட்டு தினங்களுக்கு ஒருமுறை என்றால் மத்திமம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என்றால் உத்தமம்.

படுக்கும்போது இடதுகைப் பக்கமாகவே உறங்க வேண்டும். அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்குமேல் உறங்கக்கூடாது.

கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் போன்றவை கூடாது.

உரத்துப் பேசுதல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்குப் போடுதல், சண்டையிடுதல் போன்றவை கூடாது.

பதற்றம் மிகுந்தால் பிராணவாயு அதிகமாகச் செலவாகும். எனவே, பதற்றம் கூடாது.

நான்கு நாட்களுக்கு ஒருமுறை நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு, வெந்நீரில் குளிக்க வேண்டும். அல்லது, வாரத்துக்கு ஒருமுறையாவது காய்ச்சிய நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு முழுக வேண்டும்.

புகை, கஞ்சா, கள், சாராயம் போன்றவை கூடாது.

மூன்று மாதத்துக்கு ஒருமுறை அல்லது ஆறு வாரத்துக்கு ஒருமுறை பேதிக்கான மருந்தை உட்கொள்ள வேண்டும்.

1661 – ஆலிவர் க்ராம்வெல் என்ற இங்கிலாந்து அரசின் தலைவர், இயற்கையாக இறந்து இரண்டாண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்குப்பின் தூக்கிலிடப்பட்ட நாள்

கிறித்தவத்தில், இறந்தவர்கள் தீர்ப்பு நாளன்று உயிர்த்தெழுவார்கள் என்பதான ஒரு நம்பிக்கை உண்டு. கடவுளை நோக்கி உயிர்த்தெழ வசதியாக, உடல் கிழக்கு நோக்கி புதைக்கப்படும். அவ்வாறு உயிர்த்தெழ முடியாமல் உடலைச் சேதப்படுத்துதல் பெரிய தண்டனையாகக் கருதப்பட்டது. மேலும், இறப்பதனால் நீதியிடமிருந்து தப்பிவிட முடியாது என்று காட்டவும் இத்தகைய தண்டனைகள் வழங்கப்பட்டன.

1653இலிருந்து 1659 வரை இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகியவை இணைந்த கூட்டமைப்பு (காமன்வெல்த்) ஒரு காப்பாட்சியின்கீழ் (ப்ரொடெக்டொரேட்) இருந்தது. முடியாட்சிக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளால் 1643முதல் 1651 வரை நடைபெற்ற இங்கிலாந்து உள்நாட்டுப்போரின் இறுதியில் மன்னர் முதலாம் சார்லஸ் 1649 ஜனவரி 30 அன்று சிரச்சேதம் செய்து கொல்லப்பட்டார். முடியாட்சியை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றிய க்ராம்வெல் இந்தக் காப்பாட்சியின் காப்பாளர் ஆனார். மலேரியா, சிறுநீரகக் கல் ஆகியவற்றால் 1659 செப்டம்பர் 3 அன்று அவர் இயற்கையாக மரணமுற்றதைத் தொடர்ந்து மகன் ரிச்சர்ட் க்ராம்வெல் காப்பாளர் ஆனார். இரண்டாம் சார்லஸ் அந்த ஆட்சியைக் கவிழ்த்து மீண்டும் முடியாட்சியை நிறுவி மன்னரானதும், ஆலிவர் க்ராம்வெல்-லுக்கும் அவருக்குத் துணையாக இருந்த இரு தளபதிகள், முதலாம் சார்லசுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி ஆகியோருக்கும் மரண தண்டனை விதித்தார். நால்வருமே ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டு, 12 ஆண்டுகளுக்குமுன் முதலாம் சார்லசின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாளிலேயே, காலையிலிருந்து பிற்பகல் வரை தூக்கில் தொங்கவிடப்பட்டன. பின்னர் தலைகள் வெட்டப்பட்டு, வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கிற்கு எதிரே கம்பங்களில் குத்தி வைக்கப்பட்டன. இதற்கு முன்பே, அரச விசுவாசிகளால் அழிக்கப்படலாம் என்ற அச்சத்தில் க்ராம்வெல்லின் உடல் பலமுறை தோண்டியெடுக்கப்பட்டு வேறு வேறு இடங்களில் புதைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்ஸ்டர் ஒப்பந்தம் ஏற்பட்ட நாள்

எண்பதாண்டு போர் என்று குறிப்பிடப்படும் டச்சுப் புரட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, சுதந்தர டச்சுக் குடியரசை உருவாக்கிய முன்ஸ்டர் அமைதி ஒப்பந்தம், ஒருங்கிணைந்த நெதர்லாந்து மாநிலங்களின் தலைவர்களுக்கும், ஸ்பெயின் அரசுக்குமிடையே, தற்போதைய ஜெர்மெனியில் உள்ள முன்ஸ்டர் நகரில் எட்டப்பட்டது. இந்த எண்பதாண்டுப் போர் என்பது, 1568இல் தொடங்கி, 1648இல் முடிவடைந்தது. தற்போது நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க் ஆகிய நாடுகளாக இருக்கிற பகுதிகள், அப்போது டச்சு மாநிலங்களாக, புனித ரோமப் பேரரசில், ஸ்பானிய நெதர்லாந்து என்ற பெயரில் ஸ்பெயினின் ஆட்சிக்குட்பட்டிருந்தன. அமெரிக்க விடுதலைப் போரைப்போலவே, பிரதிநிதித்துவம் இல்லாத வரிவிதிப்பு மிக அதிகமாகவும், வணிகத்துக்கு அனுமதி வழங்க எடுத்துக்கொள்ளப்பட்ட நீண்ட காலம் டச்சு வணிகர்களுக்கு இடையூறாகவும் இருந்ததே இப்புரட்சிக்கு அடிப்படைக் காரணமாகும். ப்ராட்டஸ்டண்ட், அனபாப்டிசம் ஆகிய பிரிவுகள் இப்பகுதியில் பரவ, அவற்றின் தலைவர்கள் இருவருக்கு ரோமன் கத்தோலிக்க ஸ்பானிய அரசால் மரண தண்டனை வழங்கப்பட்ட 1568 ஜூன் 5இல் இந்தப் புரட்சி தொடங்கியது. புரட்சியைத் தொடக்கத்தில் ஸ்பெயின் அரசு கட்டுப்படுத்தினாலும், 1581இல் நெதர்லாந்தின் ஏழு வடக்கு மாநிலங்கள் அறிவிக்கப்படாத சுதந்தரத்தை அடைந்துவிட்டன. அக்காலத்திலேயே பிற நாடுகளுடனான வணிகம், பிற நாடுகளில் டச்சுக் குடியேற்றங்களை உருவாக்குதல் ஆகியவையும் தொடங்கிவிட்டன. இருதரப்பிலும் நிதி நெருக்கடிகள் உள்ளிட்ட காரணங்களால் 1609இலிருந்து 12 ஆண்டுகள் போர் நிறுத்தமும் ஏற்பட்டு, மீண்டும் போரும் தொடர்ந்தது. ஆனாலும் தென்பகுதி மாநிலங்களிலிருந்து ஸ்பெயினை வெளியேற்ற முடியாத நிலையில் ஃப்ரான்ஸ் உதவிக்கு வந்தது. ஸ்பெயின் அரசர் நான்காம் ஃபிலிப்பின் மகளை, ஃப்ரான்ஸ் அரசர் பதினான்காம் லூயிக்கு மணமுடித்து, ஃப்ரான்சை தனக்கு ஆதரவாக மாற்ற ஸ்பெயின் முயற்சித்ததில், ஸ்பெயினுக்கு பதிலாக, ஃப்ரான்சின் முடியாட்சியின்கீழ் நெதர்லாந்து இருக்க நேரிடும் என்பதால், இந்த 7 மாநிலங்கள் மட்டும் கொண்ட டச்சுக் குடியரசின் சுதந்தரத்தை அதிகாரபூர்வமாக ஏற்கச் செய்து எண்பதாண்டுப்போர் முடித்துக்கொள்ளப்பட்டது.

கோவைக்கு பெருமை சேர்த்த பாரத் ரத்னா சி.சுப்பிரமணியம் பிறந்ததினம். இந்தியா விடுதலை பெற்ற பிறகு, அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்பினராக தேர்தெடுக்கப் பட்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதில் முக்கிய பங்காற்றிய சி. சுப்பிரமணியம் அவர்கள் விடுதலைப் பற்று உள்ளவர். இவர், இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையெனவும் போற்றப்படுகிறார்.

1975 – உலகின் மிகஅதிகம் விற்பனையாகியுள்ள விளையாட்டுப் புதிர், விளையாட்டுப் பொம்மை ஆகிய பெருமைகளைப் பெற்றிருக்கிற ‘ரூபிக்’ஸ் க்யூப்’-க்கான ஹங்கேரிய காப்புரிமைக்கு, அதை உருவாக்கிய ஹங்கேரிய சிற்பியும், கட்டிடக்கலைப் பேராசிரியருமான எர்னோ ரூபிக் விண்ணப்பித்த நாள் ஜனவரி 30. கட்டிடத்தின் வடிவமைப்பில், தனித்தனியாகப் பகுதிகளை நகர்த்தும் போது ஒட்டுமொத்த அமைப்பும் விழுந்துவிடும் சிக்கலுக்குத் தீர்வுகாணும் ஆய்வில் அவர் இதனை உருவாக்கினார். முதன்முறை அதனைக் கலைத்தபின் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுவதிலான சிரமத்தை சந்தித்தபோதுதான், தான் ஒரு சிக்கலான புதிரை உருவாகியிருப்பதே அவருக்குப் புரிந்தது. அதைத் தொடர்ந்து, மேஜிக் க்யூப் என்ற பெயரில் அதற்கு இந்நாளில் காப்புரிமைக்கு விண்ணப்பித்தார் ரூபிக். 1970இலேயே லேரி நிக்கோல்ஸ் என்ற அமெரிக்கர் இரண்டிரண்டு க்யூப்களைக் கொண்ட, காந்தத்தால் பிணைக்கப்பட்ட ஒரு சிறிய புதிரை உருவாக்கி காப்புரிமை பெற்றிருந்தார். விளையாட்டுக் கருவியாகவே உருவாக்கப்பட்ட அது, ரூபிக்கின் க்யூபைப்போல சிறந்த புதிராக இல்லை. காந்தத்தால் இணைக்கப்பட்ட நிகோல்ஸின் புதிர் எளிதாகத் துண்டுகளாகப் பிரிந்து விடுவதாக இருந்த நிலையில், ஒன்றோடொன்று மாட்டியதான ப்ளாஸ்ட்டிக் துண்டுகளாலான மேஜிக் க்யூப் பிரிக்க முடியாததாகவும் இருந்தது. ரூபிக்கிடமிருந்து இதன் உரிமையை ஐடியல் டாய் கார்ப்பரேஷன் வாங்கி தயாரித்தது. 1977இல் ஹங்கேரியின் தலைநகரான புடாப்பெஸ்ட் நகர பொம்மைக் கடைகளில் விற்பனைக்கு வந்த இது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அருகாமை நாடுகளுக்குப் பரவியது. புகழ்பெற்ற பொம்மை உற்பத்தி நிறுவனமான செவன் டவுன்ஸ்-ன் நிறுவனர் டாம் க்ரெமர் இதை கவனித்து, உலகம் முழுவதும் விற்பதற்கான ஒப்பந்தத்தை ஐடியலிடம் செய்துகொண்டார். ரூபிக்கை கவுரவப்படுத்தவும், பெயரை மற்றவர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், மேஜிக் க்யூப் என்ற பெயர் ரூபிக்’ஸ் க்யூப் என்று மாற்றப்பட்டது. 1980 மே மாதத்தில் உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்த இதன் வெற்றி, வேகமாக விடுவிப்பதற்கான ஸ்பீட்க்யூபர்ஸ் சேம்ப்பியன்ஷிப் என்ற போட்டியை 1981 மார்ச்சில், கின்னஸ் உலக சாதனை நிறுவனம் நடத்துமளவுக்கு இருந்தது. இடையில் சற்றே தொய்வடைந்தாலும், பின்னர் புத்துயிர்பெற்று, இதன்மீது நிலவும் ஈர்ப்பு, 2004இல் வர்ல்ட் க்யூப் அசோசியேஷன் தொடங்கப்படக் காரணமாயிற்று. இந்தப் புதிரை விடுவிக்கும் வேகம், அறிவுத்திறனை அளப்பதற்குரியதாகவே கருதப்படுகிறது. ஆனால் இதனை உருவாக்கிய ரூபிக்குக்கு, முதல்முறை இதை விடுவிக்க ஒரு மாதம் ஆனதாக்கும்!

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...