இன்றைய முக்கிய நிகழ்வுகள் (சனவரி 29)
கவிதாயினி சாரா டீஸ்டேல் காலமான தினம்
அமெரிக்க பெண் கவிஞர் Sara Teasdale 29 இதே ஜனவரி 1933ம் ஆண்டு தனது 49வது வயதில் தற்கொலை செய்து மரணத்தை ஏற்றுக்கொண்டார். அமெரிக்காவின் சிறந்த பெண் கவிஞர்களுள் ஒருவர் .1918-ம் ஆண்டு கவிதைக்கான புலிட்சர் விருதை பெற்றவர். சாரா டீஸ்டேலின் கவிதைகள், ஒரு பெண்ணின் தீவிரமான அகவுணர்வை வெவ்வேறு நிலைகளில் பிரதிபலிப்பவை.
ஜனவரி 29: இந்திய செய்தித்தாள் தினம் இன்று… செய்தி நிறுவனங்கள் மற்றும் செய்தித்துறையினரால் இன்றைய தினம் கவுரவிக்கப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக பெங்கால் கெஜெட் என்கிற வார இதழ் ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கீ என்பவரால் கல்கத்தாவில் வெளியிடப்பட்டது. 1780ஆம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி இந்த இதழ் வெளியிடப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. இந்த இதழில், அரசியல் மற்றும் வர்த்தக ரீதியிலான செய்திகள் மட்டுமின்றி, உலக நாடுகளின் போர்ச் செய்திகளும் வெளியானது. இது மக்களிடையே பெரும் வரவற்பை பெற்றது. அந்த பத்திரிகையை கவுரவிக்கும் நோக்கில், ஆண்டுதோறும் ஜனவரி 29ந்தேதி இந்திய செய்தித்தாள் தினம் கொண்டாடப்படுகிறது.
காப்பாற்றுவதற்கென்றே முதன்முதலாக வடிவமைக்கப்பட்ட உயிர்காக்கும் படகு இங்கிலாந்தின் டைன் ஆற்றில் சோதித்துப் பார்க்கப்பட்ட நாள் .
உயிர்காக்கும் படகை வடிவமைப்பதற்காக நடத்தப்பட்ட போட்டியில், ஹென்றி கிரேட்ஹெட் வடிவமைத்த படகு வெற்றி பெற்றது. ஏற்கெனவே, லயனல் லூக்கின் என்பவர், 1784ல் ஒரு வழக்கமாக 20 அடி நீளப் படகை, மூழ்காத உயிர்காக்கும் படகாக மாற்றியமைத்து, அதற்குக் காப்புரிமையும் பெற்றிருந்தார். 1789இல் வில்லியம் உட்ஹேவ் என்பவரும் ஓர் உயிர்காக்கும் படகை வடிவமைத்திருந்தார். ஆனாலும், கிரேட்ஹெட் வடிவமைத்த படகே உயிர்காக்கும் படகாக ஏற்கப்பட்டதுடன், 32 படகுகள் தயாரிக்கப்பட்டு உயிர்காக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டன.
துடுப்பால் இயக்கப்படும் இந்த உயிர்காக்கும் படகு, ஆபத்துக் காலங்களில் நீரில் தவிப்பவர்களைக் காப்பாற்றச் செல்லும் படகு ஆகும். இவை உள்நாட்டு (ஆறு, ஏரி முதலானவற்றில் காப்பாற்றுவதற்கு), கரையோர, நடுக்கடல் உயிர்காக்கும் படகுகள் என்று வகைப் படுத்தப்படுகின்றன. தொடக்கத்தில், விபத்துகளின்போது தப்பிப்பதற்கு கப்பலிலேயே உயிர்காக்கும் படகுகள் இல்லை. கப்பலிலிருந்து கரைக்கும், பிற கப்பல்களுக்கும் பயணிகள், சரக்குகள் ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்காக வைத்திருக்கும் படகுகளில்தான் தப்பிக்கவேண்டும். காற்று நிரப்பிப் பயன்படுத்தும் படகுகள் 1840களில் உருவாக்கப்பட்டன. உண்மையில், மிகப் பண்டைய காலத்திலேயே, மிருகங்களில் தோலில் காற்று நிரப்பி மனிதர்கள் மிதந்து செல்வதாக செதுக்கப்பட்ட படிவங்கள் கிடைத்துள்ளன. 1880 இல் மரியா பீஸ்லி உயிர்காக்கும் மிதவையைக் கண்டுபிடித்துக் காப்புரிமை பெற்றார். ஆனாலும், 1912இல் டைட்டானிக் மூழ்கும் வரை, உயிர்காக்கும் படகுகள்மீது பெரிய அக்கறை பிறக்கவில்லை. 3330 பயணிகளைக் கொண்டிருந்த டைட்டானிக்கில், 1178 பேர் தப்பிக்குமளவுக்குத்தான் உயிர் காக்கும் படகுகள் இருந்தன. குளிரான பகுதிகளில் உயிர்காக்கும் படகுகளில் தப்பிப்பவர்கள், சில மணி நேரத்துக்குள் காப்பாற்றப்படவில்லையெனில் இறந்துவிடுவது, இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவுக்கு அருகில் அட்லாண்ட்டிக் கடலில்தான் உணரப்பட்டது. இதைத் தொடர்ந்து, மூடப்பட்ட, மூழ்காத, எப்படி விழுந்தாலும் நேராகத் திரும்பிக்கொள்ளக்கூடிய உயிர்காக்கும் படகுகள் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டன.
பிற நாடுகளின் விவகாரங்களை வேவு பார்க்கும் நோக்கத்தோடு (USA) ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப் (Central Intelligence Group) ஜனாதிபதி டுரூமென் அவர்களால் அமைக்கப்பட்ட நாள் .
இந்த அமைப்புக்கு அடுத்த ஆண்டே CIA என்று பெயர் மாற்றப்பட்டது. இதுவே பின்னர் பிற நாடுகளில் சதி வேலைகளை அரங்கேற்றும் நிறுவனமாகியது.
ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகம் முதன்முதலாக அரங்கேறிய நாள்
ஆங்கிலக் கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும், உலகின் மிகப் புகழ் வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் குறிப்பிடப்படுபவர். இவரது படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், 2 நெடும் விவரிப்பு கவிதைகள் மற்றும் பல பிற கவிதைகளும் அடங்கும். இவருடைய நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இவர் இயற்றிய ரோமியோ ஜூலியட் என்ற துன்பியல் நாடகம் 1595-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் முதன்முதலாக அரங்கேற்றப்பட்டது. ரோமியோ ஜூலியட் நாடகம் பாலியல் எண்ணம் செறிந்த, பருவகால வயது, காதல் மற்றும் மரணம் இவற்றினாலான புகழ்பெற்ற காதல் வீரத் துன்பியல் நாடகம். இந்த நாடகத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான கெம்பே பீட்டர் எனும் வேலைக்காரன் வேடம் ஏற்றிருந்தார். ரோஜாவை எந்தப் பெயரில் அழைத்தால் என்ன? அது ரோஜாதான்’ -வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற வசனம் இது. ஆலயமணி (1962) என்ற திரைப்படத்தில் கவியரசர் கண்ணதான் எழுதிய பாடல் ஒன்றைக் கேட்டிருப்பீர்கள். ‘தூக்கம் கண்களைத் தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே. அந்த தூக்கமும் அமைதியும் நானானால் உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்’ என்று அந்தப்பாடல் உங்களை பலமுறை தாலாட்டியிருக்கும். அந்தப் பாடலில் வரும் வரிகள் கூட, ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகத்தில் இடம்பெற்ற வரிகள்தான். ‘Sleep dwell upon thine eyes Peace in thy breast Would I were sleep and peace..’ நாடகமேதை வில்லியம் ஷேக்ஸ்பியருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில் எழுதிய அதே வரிகளை கச்சிதமாக தமிழில் கையாண்டு, ஷேக்ஸ்பியரை கனப்படுத்தியிருப்பார் நமது கவியரசர் கண்ணதாசன். ரோமியோ ஜூலியட் நாடகம் பற்றி சொல்ல நிறைய நிறைய இருக்கிறது. கொரோனா காலத்தில் குவாரண்டைன் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தினோம் நினைவிருக்கிறதா? அந்த குவாரண்டைன் என்ற சொல்லை ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன்பே ரோமியோ ஜூலியட் நாடகத்தில் பயன்படுத்தி விட்டார் ஷேக்ஸ்பியர்.ரோமியோ ஜூலியட் நாடகத்தில் காதலைப்பற்றி சில வர்ணனைகளை உதிர்ப்பான் ரோமியோ. ‘காதல் என்பது கவலையான மகிழ்ச்சி. தீவிரமான முட்டாள்தளம், காதல் என்பது கனமான இலகு, வெளிச்சமான புகையிருட்டு, சூடான குளிர்ச்சி, நோயுள்ள நலம். காதல் என்பது விழித்திருக்கும் உறக்கம்’ ஆங்கில மொழியில் மட்டுமல்ல உலக அளவில் இன்றுவரை மிகச்சிறந்த காதல் காவியம் ரோமியோ ஜூலியட்தான். இன்னும் அறியஎளிய, பிரிய , துள்ளல் நடைக்கு சொந்தகாரரான மோகன ரூபனின் நூலை வாங்கி வாசிக்கலாம்..
ஓவிய, இசை மேதை சுந்தரம் ராஜம் அவர்களின் நினைவு தினம்.
எஸ். ராஜம் என்று பரவலாக அறியப்பட்ட சுந்தரம் ராஜம் , ( பிப்ரவரி 10, 1919 – ஜனவரி 29, 2010) தமிழக ஓவியர், திரைப்பட நடிகர் மற்றும் கர்நாடக இசைக்கலைஞர் ஆவார். இவர் பாபநாசம் சிவனின் மாணவரும், திரைப்பட இயக்குனர் வீணை எஸ். பாலசந்தரின் தமையனும் ஆவார். 1934 இல் வெளியான சீதா கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். சில திரைப்படங்களில் மட்டும் நடித்த இவர் பின் முழு நேர ஓவியர் மற்றும் இசைக்கலைஞரானார். அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். இசை மும்மூர்த்திகள் குறித்த இவரது ஓவியங்கள் பரவலாக அறியப்படுகின்றன. கோடீஸ்வர ஐயரின் இசைப் படைப்புகளை பிரபலப்படுத்தியதிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. சென்னை இசை அகாதமியின் இசை வல்லுனர் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1991 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
இங்கிலாந்துப் பிரதமர் மார்கரெட் தாட்சருக்கு கவுரவ (டாக்டர்) பட்டம் அளிக்க முடியாது என்று ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மறுத்த நாள். அடிப்படைக் கல்வித் தகுதி, வருகைப் பதிவு, தேர்வுகளில் தேர்ச்சி முதலானவை தேவைப்படாமல் ஒருவருக்கு அளிக்கப்படுவது கவுரவ பட்டம் என்றழைக்கப்படுகிறது. கவுரவிப்பதற்காக என்ற பொருளுடைய ஹானரிஸ் காசா அல்லது அட் ஹானரம் என்ற லத்தீன் சொற்றொடரால் இது குறிப்பிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட துறையிலோ அல்லது சமூகத்துக்கோ ஒருவரின் பங்களிப்பை அங்கீகரிக்க வழங்கப்படும் இந்த நடைமுறையில், பின்னாளில் ஆயராக(பிஷப்) ஆன லயோனல் உட்வில்லி என்பவருக்கு 1470இல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வழங்கியதே உலகின் முதல் கவுரவ டாக்டர் பட்டம். டாக்டர் பட்டமும், முதுகலை பட்டமும்(மாஸ்ட்டர் ஃஆஃப் ஆர்ட்ஸ்) இவ்வாறு கவுரவப் பட்டங்களாக வழங்கப்படுகின்றன. ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகங்களுக்கு அரசவையினர்(அரசர், பிரபுக்கள்) வரும்போது, அவர்களுக்கு கவுரவப் பட்டமளிப்பது 16ஆம் நூற்றாண்டில் வழக்கமாகவே இருந்தது. கவுரவ டாக்டர் பட்டம் பெறுபவர்கள் பெயருக்கு முன்னால் Dr. என்று குறிப்பிடாமல் Dr.h.c. என்றோ, பெயருக்குப் பின்னால் ஹானரரி அல்லது ஹானரிஸ் காசா அல்லது h.c. என்றோ குறிப்பிட வேண்டும் என்பது மரபாக உள்ளது. வேறு பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்றவர்கள் தங்கள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களாகும்போது, அவர்களின் பட்டத்திற்கிணையான தங்கள் பட்டத்தை அளிக்கும் அட் யூண்டம்(அல்லது ஜ்யூர் அஃபிஷி) என்ற நடைமுறை சில பல்கலைக்கழகங்களில் உள்ளது. இவை அவர்களது கல்வித்தகுதிக்குரிய பட்டங்கள்தான் என்பதால் கவுரவப் பட்டங்களல்ல. ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் பெண்களுக்கு பட்டமளிக்கத் தயாராக இல்லாததால், அங்கு பயின்ற பெண்களுக்கு 1907வரை அட் யூண்டம் பட்டங்களை டப்லின் பல்கலைக்கழகம் வழங்கியது. மேலும் இங்கிலாந்தின் பிரதமர் ஆக்ஸ்ஃபோர்டில் பயின்றவராக இருந்தால் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது ஆக்ஸ்ஃபோர்டின் நடைமுறையாக இருந்தாலும், கல்விக்கான நிதியை தாட்சர் குறைத்ததால், அவருக்குப் பட்டமளிக்கும் முன்மொழிவை எதிர்த்து இந்நாளில் 738(ஆதரித்து 319) பேர் வாக்களித்ததைத் தொடர்ந்து, அவருக்குப் பட்டமளிக்க முடியாது என்று ஆக்ஸ்ஃபோர்ட் அறிவித்தது. இதனிடையே கவுரவ பட்டங்களே அளிப்பதில்லை என்பதை மாசாச்சூசெட்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கார்னெல், ஸ்டான்ஃபோர்ட், ரைஸ், வர்ஜீனியா உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் கொள்கையாகவே கடைப்பிடிக்கின்றன. முத்தாய்ப்பாக… 150க்கும் அதிகமான கவுரவப் பட்டங்களைப் பெற்றவரான இந்தியாவிலுள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்த பாதிரியார் தியோடார் ஹெஸ்பர்க்-தான் உலகிலேயே அதிக கவுரவப் பட்டங்களைப் பெற்றவர்!
முதல் நடைமுறை சாத்தியமான, பெட்ரோலில் இயங்கும் உள்ளெரி என்ஜின் கொண்டதும், முதலில் வணிகரீதியில் உற்பத்தி செய்யப்பட்டதுமான மூன்று சக்கரம் கொண்ட காருக்கு, கார்ல் பென்ஸ் காப்புரிமை பெற்ற நாள் குதிரைகள் இல்லாமேலேயே நீண்டதூரப் பயணங்கள் சாத்தியம் என்று நிரூபிப்பதற்காக, பென்ஸின் மனைவி பெர்த்தா பென்ஸ், இரு மகன்களுடன், 104 கி.மீ. தொலைவிலுள்ள தன் சொந்த ஊருக்கு, இந்தக் காரை ஓட்டிச் சென்று திரும்பினார். இந்தப் பயணம்தான் உலகின் முதல் நீண்ட தொலைவு சாலைவழிப் பயணம் என்பதால், இந்தப் பாதை, பெர்த்தா பென்ஸ் நினைவுப் பாதை என்ற பெயரில் சுற்றுலா இடமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பயணத்தின் வெற்றிக்குப்பின்னரே, 1888இல் பென்ஸ் காரின் வணிகரீதியான உற்பத்தி தொடங்கியது. 1672இல் சீனப் பேரரசருக்காக உருவாக்கப்பட்ட ஒரு நீராவி வாகனம், மனிதர்கள் பயணிக்கும் அளவு இல்லையெனினும், அதன் சாத்தியத்தை நிரூபித்தது. தொடர்ந்து, நீராவியிலும், பின்னர் மின்சாரத்திலும் இயங்கும் வாகனங்கள் பல நாடுகளிலும் உருவாக்கப்பட்டாலும், பேருந்துகள் நீராவியில் இயங்கத் தொடங்கினாலும், சிறிய வாகனத்துக்கான தேடல் தொடர்ந்தது. ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலவையில் இயங்கும் உள்ளெரி என்ஜின்கள்கூட உருவாக்கப்பட்டன. 1870இல் ஆஸ்திரியாவின் மார்க்கஸ் என்பவர் பெட்ரோலில் இயங்கும் ஓர் உள்ளெரி என்ஜினை கையால் இழுக்கும் வண்டியில் பொருத்தி வெற்றி கண்டார். 1883இல் குறைந்த மின்னழுத்தத்தில் இயங்கும் மேக்னெட்டோவை உருவாக்கி காப்புரிமை பெற்ற இவர் 1888இல் உருவாக்கிய நான்கு சக்கரம் கொண்ட காரில் அதைப் பயன்படுத்தி தானாக ஸ்டார்ட் செய்யும் வசதி உட்பட செய்திருந்தார். பென்ஸின் காரைவிடப் பலவிதங்களிலும் மார்க்கசின் கார் மேம்பட்டிருந்தாலும் அதற்குக் காப்புரிமை பெறவோ, உற்பத்தி செய்யவோ அவர் முயற்சிக்கவில்லை. மேலும், அவர் ஒரு யூதர் என்பதால், ஹிட்லர் காலத்தில், அவரது பெயர் வரலாற்றுப் பாடங்களிலிருந்து நீக்கப்பட்டு, ஜெர்மானியரான பென்ஸ் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டது.