வக்பு மசோதாவின் 14 திருத்தங்கள் பெரும்பான்மை வாக்கு அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதற்காக வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக வக்பு சட்டம்-1995ல் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இந்த மசோதாவை மக்களவையில், சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
அதன்படி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக்குழு உறுப்பினர்கள் இந்த மசோதாவின் அம்சங்கள் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். இன்று நடைபெற்ற கூட்டத்தின் நிறைவில், மசோதா இறுதி செய்யப்பட்டுள்ளது. 14 திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதபற்றி கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் கூறுகையில், “மொத்தம் 44 திருத்தங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன. 6 மாதங்களாக நடந்த விரிவான விவாதங்களில், அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் திருத்தங்களை கேட்டிருந்தோம். இன்று நடைபெற்றது இறுதி ஆலோசனைக் கூட்டம். இன்றைய கூட்டத்தில், 14 திருத்தங்கள் பெரும்பான்மை வாக்கு அடிப்படையில் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எதிர்க்கட்சிகளும் திருத்தங்களை பரிந்துரைத்தன. ஒவ்வொன்றும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. அவர்களுடைய திருத்தங்களுக்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 16 வாக்குகளும் கிடைத்தன” என்றார்.
ஆலோசனையின்போது தங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.