இன்றைய முக்கிய நிகழ்வுகள் (சனவரி- 23)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (சனவரி- 23)

சென்னை மாநிலத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது

திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையானது, செம்மொழியுமான தமிழ் 1957 ஆம் ஆண்டு இதே நாளில்தான் சென்னை மாநிலத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிகளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. ஒரு மொழியை தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் தமிழ் மொழி உள்ளது.

அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் நினைவு நாள்

இன்று கர்நாடக இசையில் ஒரு தனிப்பாணியைத் தனக்கென வகுத்துக் கொண்ட இசை மேதை அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் நினைவு நாள் (ஜனவரி 23, 1967). கர்நாடக சங்கீதத்தில் மிக பெரிய வித்வான். 1890 பிறந்தவர். ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதரிடம் பாட்டு கற்றவர் அரியக்குடி யிலிருந்து ஶ்ரீரங்கம் குடியேறியதும் தினமும் விடியர் காலை கோவில் சென்று உரத்த குரலில் சாதகம் செய்வார் இவர் மிருதங்கத்திற்க்கு முக்கியத்துவம் கொடுப்பவர் இவருடன் பாலக்காடு மணி அய்யர் என்ற மிருதங்க வித்வான் கூட வாசிப்பார் இவர்கள் கூட்டணி 1950 வாக்கில் மிகவும் பேச பட்டு நாடெங்கும் புகழ் பெற்றார்கள் எழுத்தாளர் கல்கி இவருடைய பரமரசிகர் “தெலிசி ராமசிந்தனதோ” என்ற தியாகராஜர் பாடலை இவர் குரலில் பாடி, கேட்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சபைக்கு வருவார்கள் என்று வரலாறு கூறுகிறது.

சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளின்று!

நம் நாட்டை 200 ஆண்டு காலம் ஆண்டு அடிமைபடுத்திய பிரிட்டீஷ்காரர்களை எதிர்த்து இராணுவ ரீதியாக போராடிய ஒப்பற்ற இந்தியத்தலைவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அடிமைதனத்தை ஒழிப்பதற்கு அஹிம்சை போராட்டம் எவ்வளவு தூரம் உதவியதோ அதேபோல் நம் நாட்டில் நேதாஜி அவர்களின் ஆயுதம் ஏந்திய ராணுவம் அமைத்து போராடியதும் நமக்கு உதவியது. இந்திய விடுதலைக்கு போரடிய மாபெரும் தலைவரின் பிறந்த நாளில் அவரின் நினைவுகளில் அவர் ஆற்றிய எழுச்சி உரைகளில் சில வரிகள் அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால், அந்த அடர்ந்த காடுகளு க்கும் பின்னால், நம் கண்களில் படும் அந்த மலைகளுக்கும் பின்னால் நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது-எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ – அந்த பூமியை நோக்கி நாம் திரும்பு கிறோம். புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது… ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது. கிளர்ந் தெழுங்கள், உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை அடிமை க்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம் அல்லது இறைவனின் சித்தம்வேறானால் வீரர்களுக் குரிய தியாக மரணத்தை தழுவுங்கள். நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டு விட்டுச் சாவோம். டெல்லிக்கு செல்லும் பாதை, விடுதலை நோக்கிய பாதை…. சலோ டெல்லி :” மற்றொரு எழுச்சி உரை: ”நமது சரித்திரத்தில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத சிக்கலான வேளையில் உங்களுக்கு ஒன்றை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் துவண்டுவிடாதீர்கள். உங்கள் உணர்வுகளை தளரவிடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் விதியில் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்காதீர்கள். இந்தியாவை அடிமைத் தளை யிலேயே வைத்திருக்கும் சக்தி இந்த உலகில் எதற்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல… விரைவில் இந்தியா விடுதலை பெறும். ஜெய்ஹிந்த்.” ஈடுஇணையற்ற மாபெரும் தலைவரின் இந்த பிறந்த நாளில் புது சபதம் ஏற்போம்.நாட்டை நல்வழிபடுத்த உறுதுணையாக இருப்போமா?

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி நினைவு நாள்.

இதே ஜனவரி 23 (1947) -வீரத் தியாகி விடுதலைப் போராட்ட வீரர் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி நினைவு நாள். தாயகத்து உரிமையை மதித்து அதனை நிலைநாட்ட முனைந்ததற்காக தமது 49 ஆண்டுகால வாழ்வில் ஏறத்தாழ சரிபாதி 24 ஆண்டுகளை, அந்நியர் சிறையில் கழித்து மறைந்தவர் வீரத் தியாகி விடுதலைப் போராட்ட வீரர் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி இந்திய வரலாற்று நூல்களில், 1857ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகம் இந்திய தேசத்தின் விடுதலைக்கான முதல் சுதந்திர போராட்டமாக வர்ணிக்கப்படுகின்றது. சிப்பாய் கலகம் நடைபெறுவதற்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தில், குறிப்பாக அன்றைய காலத்தில் இராமநாதபுரம் சீமையில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிரான போரட்டத்திற்கு வித்திட்டவர் விடுதலைப் போராட்ட வீரர் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் ஆவார். மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் 30.03.1760 அன்று பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே இராமநாதபுரம் சீமையில் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டு எண்ணிலடங்காத அறப்பணிகளையும், தமிழ் வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டார்.இன்றைய இராமநாதபுரரம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற இராமேசுவரம் இராமநாதபுரம் சுவாமி திருக்கோவில் மூன்றாம் பிரகாரத்தைக் கட்டி முடித்தவர். அன்றைய காலகட்டத்தில் இராமநாதபுரம் சீமையில் அதிகளவிலான கைத்தறி நெசவுகளை நிறுவி, ஆங்கிலேயர்களிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகளைத் தவிர்த்திட இந்திய மக்களை ஊக்கப்படுத்தியவர். ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து கப்பம் கட்டவேண்டுமென்ற ஆணையினைத் துச்சமென நினைத்து கப்பம் கட்ட மறுத்தவர். ஆங்கிலேயர்களின் அடக்குமுறை களையும், வணிகங்களையும எதிர்த்து போராடிய மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களை அன்றைய ஆங்கிலேய அரசு கட்டுப்படுத்திட எண்ணி, அவர் 12வயதாக இருந்த காலகட்டத்தில் ஆங்கிலேயர் படை இராமநாதபுரம் கோட்டையினை சுற்றி வளைத்து போரிட்டது. இப்போரில் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் கைது செய்யப்பட்டு திருச்சியிலுள்ள கோட்டையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து 10 ஆண்டுகாலம் சிறையில் கழித்தார். 1782ஆம் ஆண்டு பல்வேறு நிபந்தனைகளுடன் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி விடுதலை செய்யப்பட்டு மீண்டும் இராமநாதபுரம் சீமையில் ஆட்சிப் பொறுப்பேற்றார். சிறிதுகாலம் பொறுமையாக இருந்த மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி தனது உள்ளத்தில் ஊறிய சுதேசி சிந்தனையின் காரணமாக மீண்டும் ஆங்கிலேயர்களை எதிர்த்தார். ஆங்கிலேயர்களின் வணிகத்திற்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி முடக்கினார். இதன் காரணமாக 1795-ஆம் ஆண்டு வெள்ளையர் மற்றும் நவாப்புகளின் கூட்டுப்படை மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி மீண்டும் கைது செய்து திருச்சிக் கோட்டையில் சிறை அடைத்தது. திருச்சி சிறையில் சில நாட்கள், அதன்பின்பு சென்னை ஜார்ஜ் கோட்டையில் தனது வாழ்நாள் இறுதி மூச்சு வரை இந்திய தேசத்தின் விடுதலைக்காகப் போராடி இதே 23.01.1809 அன்று சென்னை ஜாhஜ் கோட்டையில் உயிர் நீத்தார். மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி இந்திய தேசத்தின் விடுதலைக்காக செய்த தியாகங்களை கொளரவிக்கும் விதமாக தமிழ்நாட்டரசு அவரது பிறந்த நாளான மார்ச் 30-ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் அருகே ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் 8 அடி உயர வெண்கலச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

1556 – உலகவரலாற்றில் நிலநடுக்கத்தால் மிக அதிக உயிர்ப்பலி ஏற்பட்ட நிலநடுக்கம் சீனாவில் ஏற்பட்ட நாள்

ஜனவரி 23 சுமார் 8,30,000 பேர் இதில் உயிரிழந்தனர். இதன் நிலநடுக்க மையம் ஷாங்சி மாகாணத்தில் இருந்ததால், பொதுவாக 1556 ஷாங்சி நிலநடுக்கம் என்றும், மிங் வம்சத்தின் ஜியாஜிங் பேரரசர் காலத்தில் ஏற்பட்டதால் சீன வரலாற்றில், ஜியாஜிங் பெரும் நிலநடுக்கம் என்றும் இது குறிப்பிடப்படுகிறது. நிலநடுக்க மையம் இருந்த ஷாங்சி மாகாணத்தில் எதுவுமே மிச்சமின்றி அனைத்துக் கட்டிடங்களும் தரைமட்டமாயின. சில பகுதிகளில் புவியில் வெடிப்பு ஏற்பட்டு, 60 அடிக்கும் அதிக ஆழமுள்ள பள்ளங்கள் உருவாயின. அக்காலத்தில் மண்மேடுகளான லோயஸ் பீடபூமி போன்ற பகுதிகளில் யோங்டாங் என்னும் செயற்கைக் குகைகளில் ஏராளமான மக்கள் வசித்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் இவை முற்றிலுமாக அழிந்தது உயிரிழப்பு அதிகரிக்கக் காரணமாக அமைந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில், மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் உயிரிழந்தனர். சீனப் பேரரசுக்குள் இருந்த 97 நாடுகள் பாதிக்கப்பட்டன. நிலநடுக்க மையத்திலிருந்து சுமார் 500 கி.மீ. சுற்றளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தால் பீஜிங்கில்கூட கட்டடிங்கள் லேசாகச் சேதமடைந்தன. அடுத்த 6 மாதங்களுக்கு இதன் தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கம் குறித்துப் பதிவு செய்யப்பட்டிருந்த தகவல்களிலிருந்து, இது 8 ரிக்டர் அளவு இருந்திருக்கும் என்று நவீன அறிவியல் கணக்கிட்டுள்ளது. ஆனாலும் உலகில் ஏற்பட்ட பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கங்களில் இது மிகப்பெரியதல்ல! 1960இல் சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.4-9.6 ரிக்டர் ஆகும்! அதைப்போலவே, மிக அதிக உயிரிழப்பு ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களிலும் இது மூன்றாமிடத்தையே பெறுகிறது. 1931இல் சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 40 லட்சம் பேர் வரையும், 1887இல் சீனாவின் மஞ்சள்நதி வெள்ளத்தில் சுமார் 20 லட்சம்பேர் வரையும் உயிரிழந்தனர்.

1960 – புவியின் மிக ஆழமான கடற்படுகையான, சேலஞ்சர் டீப்-புக்கு முதன்முறையாக மனிதர்கள் சென்ற நாள்

ஜனவரி 23. பசிஃபிக் கடலின் மேற்குப் பகுதியிலுள்ள, இதன் ஆழம் 35,856 அடிகள்! அதாவது, கடலின் நீர்மட்டத்திலிருந்து சுமார் 11 கி.மீ. ஆழம்! இது அமைந்துள்ள, ஆழமான கடற்பகுதியின் பெயர் மரியானா ட்ரெஞ்ச். மரியானா தீவுகளுக்கருகே அமைந்துள்ளதால் இப்பெயர். உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட்டை இப்பகுதியில் கவிழ்த்து வைத்தால், அது மூழ்கிவிடுவதுடன், அதற்கு மேலே சுமார் ஆறாயிரம் அடிகளுக்கு(கிட்டத்தட்ட 2 கி.மீ.!) கடல் நீர் இருக்கும்! கடலியல்(ஓஷனோக்ராஃபி) என்ற துறை உருவாவதற்கு அடித்தளமிட்ட, சேலஞ்சர் எக்ஸ்ப்பெடிஷன் என்ற 1872-76 ஆய்வுப் பயணத்தின்போது, அது மேற்கொள்ளப்பட்ட சேலஞ்சர் கப்பலிலிருந்து, உலகம் முழுவதும் 492 ஆழமான பகுதிகளை அளவிட்டபோது இது கண்டுபிடிக்கப்பட்டதால், சேலஞ்சர் டீப் என்றே பெயரிடப்பட்டது. இந்த அளவீடுகளுக்கு அப்போது ‘டெப்த் சவுண்டிங்’ என்ற முறை பயன்படுத்தப்பட்டது. உண்மையில் இம்முறைக்கும் ஒலிக்கும் தொடர்பில்லை. நீச்சல், நீர் முதலான பொருள்களைக் கொண்ட, பழைய ஆங்கிலச் சொல்லான ‘சுண்ட்’ என்பதிலிருந்து இப்பெயர் உருவானது. இம்முறையில், கூரிய முனையுடைய குண்டுடன் கூடிய கயிற்றை(குண்டு-நூல் போன்று!) நீருக்குள் மூழ்கச்செய்துதான் இந்த அளவீடுகள் செய்யப்பட்டன. இதற்கு முக்கால் நூற்றாண்டுக்குப்பின், 1951இல் இரண்டாம் சேலஞ்சர் கப்பலின் உலகைச் சுற்றிய பயணத்தின்போது, சிறிய குண்டுவெடிப்பைச் செய்து, அந்த ஒலியின் எதிரொலியைப் பயன்படுத்தி அளக்கப்பட்டது. ஆனால், அக்கப்பலின் ஆழத்தை அளவிடும் திறனுக்கும் அதிகமான ஆழமாக இருந்ததால், 35,400 அடிக்கும் அதிகம் என்றுதான் அளக்க முடிந்தது. இவ்வாறு அளவிடும் துறை ஆழ்கடல் அளவியல்(பேத்திமெட்ரி) என்றழைக்கப்படுகிறது. ஆழத்தைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான பேத்தஸ் என்பதிலிருந்து இச்சொல் உருவானது. குளிப்பதையும், குளியலறை, குளியல் தொட்டிகளையும் குறிக்கும் பேத் என்ற சொல், பேட் என்ற டச்சு, ஜெர்மன் சொல்லிலிருந்து வந்தது. ஆழமான கடற்பகுதியின் அழுத்தத்தை வழக்கமான நீர்மூழ்கிகள் போன்றவற்றால் தாங்க முடியாது. அதனால், ஆழமான பகுதிகளுக்குச் செல்வதற்காகவே உருவாக்கப்படுபவை பேத்திஸ்கேஃப் என்றழைக்கப்படுகின்றன. ட்ரீஸ்ட்டி என்ற பேத்திஸ்கேஃபில் பயணித்த டான் வால்ஷ், ஜேக்கஸ் பிக்கார்ட் ஆகியோருக்கு, கடல் நீர்மட்டத்திலிருந்து, சேலஞ்சர் டீப்பின் தரையை அடைய 4 மணி, 47 நிமிடங்கள் ஆனதாம்!

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...