இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை..!

போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்தது. இந்த போரை நிறுத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. அதன் அடிப்படையில், காசா முனையில் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. அதேபோல், காசாவில் தாக்குதலை நிறுத்தவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

போர் நிறுத்தம் மொத்தம் 3 கட்டங்களை கொண்டது. போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. இந்த போர் நிறுத்தம் நேற்று மதியம் 12 மணிக்கு (இஸ்ரேல் நேரப்படி காலை 8.30 மணிக்கு) அமலுக்கு வரவிருந்தது.

போர் நிறுத்தத்தின் முதல் நாளில் இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டும். அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள் 90 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும். அதேவேளை, ஒப்பந்தப்படி இரு தரப்பும் விடுதலை செய்யப்பட உள்ள நபர்களின் பெயர் விவரங்களை 24 மணிநேரத்திற்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்.

அதன்படி, இஸ்ரேல் விடுதலை செய்ய உள்ள 90 பாலஸ்தீனியர்களின் பெயர் விவரத்தை நேற்றே வெளியிட்டுவிட்டது. ஆனால், ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்ய வேண்டிய இஸ்ரேலிய பணய கைதிகளின் விவரங்கள் நேற்று மதியம் 2 மணிவரை (இஸ்ரேல் நேரப்படி 10.30 மணி) வெளியாகவில்லை. இதனால், போர் நிறுத்தம் அமலுக்கு வராமல் இருந்தது. இதையடுத்து, காசா முனையில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 108 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே கடும் இழுபறிக்கு பிறகு, 3 பெண் பணயக்கைதிகளின் பெயர் விவரங்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் அமைப்பு வழங்கியது. அதன்படி ரோமி கோனென் (வயது 24). எமிலி டமாரி, (28) மற்றும் டோரன் ஸ்டெய்ன்பிரெச்சர் (31) ஆகிய பெண் பணயக்கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்தது. இதனையடுத்து சுமார் 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு காலை 11.15 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 2.45 மணி) போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இதன் மூலம் 15 மாதங்களுக்கு பிறகு காசாவில் அமைதி திரும்பி உள்ளது. போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததை காசா மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாடினார். இளைஞர்கள் பாலஸ்தீன கொடிகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்று தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதே வேளையில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கைகளில் துப்பாக்கிகளுடன் கார்களில் அணிவகுந்து போர் நிறுத்தத்தை கொண்டாடினர்.

முன்னதாக போர் காரணமாக வீடுகளை விட்டுவிட்டு பாதுகாப்பு தேடி இடம் பெயர்ந்த பாலஸ்தீன மக்கள் நேற்று காலை முதலே தங்களின் வீடுகளுக்கு திரும்ப தொடங்கினர். இதனிடையே இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் காரணமாக நீண்ட காலமாக எகிப்து எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிவாரண பொருட்களுடன் கூடிய லாரிகள் நேற்று முதல் காசாவுக்குள் நுழைய தொடங்கின.

இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தின் படி முதற்கட்டமாக இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதன்படி மேற்குக் கரை நகரமான ரமல்லாவிற்கு அருகிலுள்ள இஸ்ரேலின் ஓபர் சிறைச்சாலையிலிருந்து கைதிகளை ஏற்றிக் கொண்டு பஸ் ஒன்று புறப்பட்டது. பாலஸ்தீன அதிகாரசபையின் கைதிகள் விவகார ஆணையத்தின் கூற்றுப்படி, விடுவிக்கப்பட்ட அனைவரும் பெண்கள் அல்லது சிறார்களாவர். கற்களை வீசுவது முதல் கொலை முயற்சி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் வரை பாதுகாப்பு தொடர்பான குற்றங்களுக்காக இஸ்ரேல் அவர்களைக் கைது செய்திருந்தது.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் நம்பிக்கை அளித்துள்ளநிலையில், ஆரம்ப ஆறு வார காலத்திற்குப் பிறகு சண்டை மீண்டும் தொடங்குமா என்பது குறித்து கவலைகள் நீடித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!